2.12.19

கண்ணதாசனை எதற்காகக் கூப்பிட்டார்கள்?


கண்ணதாசனை எதற்காகக் கூப்பிட்டார்கள்?

சொல்லடி அபிராமி

*கூப்பிடுங்கள் கண்ணதாசனை......*

இது நடந்தது *ஆதி பராசக்தி'* படத்திற்கான பாடல் எழுதும்போது.

'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.

இந்தக் காட்சிக்கு *அபிராமி அந்தாதி* பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில்  திட்டமிட்டிருந்தார்  இயக்குனர்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஆனால் அவர்  எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை.
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" என்றார்.
வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.

கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம்.
எழுதிக் கொள்ளுங்கள்."

கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் *"போதும் அபிராமி அந்தாதி"* என்றார்.

கண்களை மூடிக் கொண்டு மௌனமானார்  கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்:

"சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"

வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில்  வடித்துக் கொண்டார் உதவியாளர்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.

பாடலின் *இறுதி வரிகளாக* , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி  தரவில்லை.

மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள்.

அவள் துள்ளிக் குதித்து  பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.

*ஆம்.*

*திருக்குற்றாலக் குறவஞ்சி* பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.

(தென்காசியை அடுத்த மேலகரத்தில் 18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான்  திருக்குற்றாலக் குறவஞ்சி)

அந்த  குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி  வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி :

*வசந்தவல்லி பந்தடித்தல்*

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்  என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.

ரொம்ப ரொம்ப எளிமையான பாடல்.

வசந்த சௌந்தரி பந்து விளையாடியதைப் பற்றிய பாடல். சற்று வேகமாகப் படித்தால் பந்து துள்ளுவது போல் பாடல்

வரிகள் துள்ளும்...

இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.

இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி *மாற்றி முடித்தார்.*

"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ."

இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.

நிச்சயமாக  டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.

எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Good morning sir very interesting to hear great sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very interesting to hear great sir thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  4. இன்னும் எத்துனை காலம் தான் கண்ணதாசனை கூப்பிடுவீர்கள்...
    கீழே ஒரு பாடலின் சில‌ வரிகளை கொடுத்துள்ளேன், படித்துவிட்டு எப்படி உள்ளது என்று கூருங்கள்

    மேடை யேரக் கூடுமோ
    மீண்டும் நமது நாடகம்
    நீயும் நானும் சேர்வதால்
    யாருக்கென்ன பாதகம்.

    யாரைச் சொல்லி நோவது
    காலம் செய்த கோலம்
    உன்னை என்னை வாட்டுது
    காதல் செய்த பாவம்.
    ....
    ....
    .....
    ஜீவன் ரெண்டும் சேர்ந்தது
    தேவன் வகுத்த சாசனம்...
    காதல் எந்த நாளிலும்
    கவிதை போல சாஸ்வதம்...
    இன்று வந்த நேசமோ
    ....


    இப்படிக்கு,
    சிரித்து பழகி, கருத்தைக் கவரும் ரசிகன் (உங்களுக்காக இந்த வரி)

    ReplyDelete
  5. "சொல்லடி அபிராமி
    வானில் சுடர் வருமோ
    எனக்கு இடர் வருமோ?"

    தெய்வீகக்கவி ஐயா கண்ணதாசன் அவர்கள் மற்றும் ரி எம் எஸ் ஐயா மற்றும் எல்லோருக்கும் அம்பிகையின் அருள் நடந்தது அங்கே..............

    முத்து மாணிக்கங்களை தேடி தேடி பகிரும் தாங்களும் அம்பிகை அருள் பெற்றவரே அன்பும் நன்றியும் ஐயா.

    விக்னசாயி.

    ===========================

    ReplyDelete
  6. /////Blogger Mecherry said...
    இன்னும் எத்துனை காலம் தான் கண்ணதாசனை கூப்பிடுவீர்கள்...
    கீழே ஒரு பாடலின் சில‌ வரிகளை கொடுத்துள்ளேன், படித்துவிட்டு எப்படி உள்ளது என்று கூருங்கள்

    மேடை யேரக் கூடுமோ
    மீண்டும் நமது நாடகம்
    நீயும் நானும் சேர்வதால்
    யாருக்கென்ன பாதகம்.

    யாரைச் சொல்லி நோவது
    காலம் செய்த கோலம்
    உன்னை என்னை வாட்டுது
    காதல் செய்த பாவம்.

    ஜீவன் ரெண்டும் சேர்ந்தது
    தேவன் வகுத்த சாசனம்...
    காதல் எந்த நாளிலும்
    கவிதை போல சாஸ்வதம்...
    இன்று வந்த நேசமோ

    இப்படிக்கு,
    சிரித்து பழகி, கருத்தைக் கவரும் ரசிகன் (உங்களுக்காக இந்த வரி)//////
    ------------------------------------------
    நன்றாக உள்ளது
    நாளும் எழுதுங்கள்
    நாடு போற்ற - எந்
    நாளும் வாழுங்கள்!!!!

    ReplyDelete
  7. /////Blogger vicknasai said...
    "சொல்லடி அபிராமி
    வானில் சுடர் வருமோ
    எனக்கு இடர் வருமோ?"
    தெய்வீகக்கவி ஐயா கண்ணதாசன் அவர்கள் மற்றும் எம் எஸ் ஐயா மற்றும் எல்லோருக்கும் அம்பிகையின் அருள் நடந்தது அங்கே..............முத்து மாணிக்கங்களை தேடி தேடி பகிரும் தாங்களும் அம்பிகை அருள் பெற்றவரே அன்பும் நன்றியும் ஐயா.
    விக்னசாயி./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com