12.9.19

நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!


நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம், நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட, பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து, அடுத்த வருடம் இதே நாளில், என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் இராமசாமிக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அந்த அம்மையாரும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமியின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமியும் தன் மனைவியிடம் காலி  தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த அம்மையார் அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமியின் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி.

முதலாளி இராமசாமியிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி.

முதலாளி இராமசாமியைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமியை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு: நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா? அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கையை நீருபித்த இராமசாமிக்குக் கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!
-----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. Good morning Sir well said sir excellent post thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. /////Blogger Shanmugasundaram said...
    Good morning Sir well said sir excellent post thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Vety nice article,Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com