26.7.19

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!


திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.

அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ;

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள்.  பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீரும்

ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார்.



நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து *செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.*
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good article. Some points like Adi Sankara were repeated. Otherwise good article. Vrry long. Only retired people like me will resc.

    ReplyDelete
  2. Good morning sir when ever i go to tiruchendur i used to get panner illai vibudhi nice information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் குருவே,
    அருளாளன் செந்தில்வேலன் பற்றியும், அருள்மிகு திருக்கோயில்
    திருச்செந்தூர் பற்றியும் தங்களது இன்றைய பதிவில் கண்டுள்ள அனைத்துத் தகவல்களும் மிகவும்
    அறி(ரி)யவை; படித்து உளம் மகிழ்ந்தேன்!
    .......
    தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்......
    இதைப் படிக்குங்கால் மெய் சிலிர்த்தது.
    இயற்கையிலேயே இருக்கும் எனது
    "சுவாமிநாதன்" பக்தி பன்னெடு மடங்கு அதிகரித்ததற்குத் காரணமான தங்களது பதிவிக்குத
    தலை வணங்கிப் பாராட்டுகிறேன்
    வாத்தியார் எனும் என் ஆசானே!👍👌💐😊

    ReplyDelete
  4. Sir,
    We should be VIP , then only we get this prasadam. Hindu temples are very worst and everything goes to VIP's nothing to ordinary people.
    God also for sales only.

    Olden days, Temples are built to maintain the religion and culture, now a days it is a business center.

    ReplyDelete
  5. ///////Blogger kmr.krishnan said...
    Good article. Some points like Adi Sankara were repeated. Otherwise good article. Vrry long. Only retired people like me will resc.//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!!

    ReplyDelete
  6. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir when ever i go to tiruchendur i used to get panner illai vibudhi nice information thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்ஊகசுந்தரம்

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    அருளாளன் செந்தில்வேலன் பற்றியும், அருள்மிகு திருக்கோயில்
    திருச்செந்தூர் பற்றியும் தங்களது இன்றைய பதிவில் கண்டுள்ள அனைத்துத் தகவல்களும் மிகவும்
    அறி(ரி)யவை; படித்து உளம் மகிழ்ந்தேன்!
    .......
    தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்......
    இதைப் படிக்குங்கால் மெய் சிலிர்த்தது.
    இயற்கையிலேயே இருக்கும் எனது
    "சுவாமிநாதன்" பக்தி பன்னெடு மடங்கு அதிகரித்ததற்குத் காரணமான தங்களது பதிவிக்குத
    தலை வணங்கிப் பாராட்டுகிறேன்
    வாத்தியார் எனும் என் ஆசானே/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!!

    ReplyDelete
  8. /////Blogger N.Lakshminarayanan said...
    Sir,
    We should be VIP , then only we get this prasadam. Hindu temples are very worst and everything goes to VIP's nothing to ordinary people.God also for sales only. Olden days, Temples are built to maintain the religion and culture, now a days it is a business center./////

    அன்பரே, நீங்கள் எழுதியுள்ளதைப் படிக்க வருத்தமாக உள்ளது. காலம் ஒரு நாள் மாறும். இந்தப் பிரச்சினைகளெல்லாம் தீரும். நன்றி!!!!!

    ReplyDelete
  9. "ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்..................

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com