8.5.19

மனிதர்களில் நல்லவர்கள் ...


மனிதர்களில் நல்லவர்கள் !!!!!

இன்று சென்னையிலிருந்து பல்லவனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்து கொண்டு வந்த போது ஒரு பெண்மணி தனியாக வந்து அவரிடம் சிக்கினார்.

மாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஒரே அழுகை. ஆன்லைன் புக்கிங் செய்த அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் தான்  இருந்தது. கன்ஃபர்ம் ஆகவில்லை. அவரது கணவர் வண்டியில் ஏற்றி விட்டு விட்டு வெயிட்டிங் லிஸ்டை டிடிஇ க்கு காண்பி அவர் ஏதாவது டிக்கெட் அட்ஜஸ்ட் செய்து தருவார் என்று கூறி பணம் கூட எதுவும் தராமல் சென்று விட்டாராம்.

இன்று சனிக்கிழமை ஆதலால் பல்லவன் முழுதும் நிரம்பி வழிய பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் ரூ 500 அபராதம் தந்தால் தான் ஆயிற்று இல்லை என்றால் விழுப்புரத்தில் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவேன் என்று கூறிவிட்டார்.

அந்த பெண்மணியின் கையில் நூறோ நூற்று ஐம்பதோ தான் வைத்திருக்கிறார். அவர் கணவனுக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார்.

அவள் கணவர் டிக்கெட் பரிசோதகரிடம் பேசியும் பலன் இல்லை. ஸ்குவாட் யாராவது வந்தால் நானும் மாட்டிக் கொள்வேன் என்கிறார் பரிசோதகர் .

அந்தப் பெண்மணி மிகவும் பயந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.

இதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் 500 ரூபாயை எடுத்து அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். இதைக் கட்டி விட்டு ஊர் போய் சேருங்கள் அழ வேண்டாம் என்கிறார்.

அந்த பெண்மணி அவருக்கு கால் பிடிக்காத குறையாக நன்றி சொல்லி  விட்டு டிக்கெட் பரிசோதகரை நோக்கி ஓடுகிறார். அபராதம் செலுத்த .

எனக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. நான் 500 ரூபாய் தரலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் எடுத்துத் தந்து விட்டார்!

நான் அவரிடம் சென்று அவர் கை பிடித்து பாராட்டினேன். விசாரித்த போது அவர் ஒரு ராணுவ வீரர் என்றும் விடுமுறைக்கு அரியலூர் பக்கம் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறினார். அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஒரு செல்பி எடுக்கலாமா எனக்கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டினேன். அதற்குள் அவரது சக நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நான் சீட்டிற்கு வந்து விட்டேன்.

சற்று நேரம் கழித்து வந்த அந்த பெண்மணி அவரிடம் அந்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.

அவர் ஏன் அபராதம் கட்டவில்லையா என்று விசாரிக்க அந்தப் பெண்மணி , இல்லை டிக்கெட் பரிசோதகர் - விருத்தாசலம் வரை தான் ஸ்குவாட் வர சான்ஸ் - இனி வர வாய்பில்லை. எனவே அபராதம் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகக் கூறினார்.

எங்கும் ஏமாற்றுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில் 500 ரூபாய் யோசிக்காமல் எடுத்துத் தந்த அந்த ராணுவ வீரர் ஒரு புறம், அந்த பெண்மணியின் பரிதாப நிலை கண்டு அபராதம் தவிர்த்த டிக்கெட் பரிசோதகர் ஒருபுறம் , அபராதம் வேண்டாம் என்றவுடன் அந்த பணத்தைத் தானே வைத்துக் கொள்ளாமல்  திரும்ப வந்து அழுகையுடன் நன்றி கூறி திரும்ப தந்த அந்த பெண்  ஒருபுறம்...

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னை நெகிழ வைத்த தருணங்கள் ...

ஊர், பெயர் அறியாத அந்த ராணுவ வீரருக்கு ஒரு சல்யூட்.. நன்றி
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே,
    இதமான தருணங்கள் எனக் கூறலாம, நெகழ்ச்சியுடன் நடந்த இந்த நிகழ்ழ்ச்சிகளைப் படிக்கும்போது!
    ஆம், நல்ல மனிதர்கள் இருப்பதால்
    மனிதநேயம் புலப்படுகிறது!!💐💐👌

    ReplyDelete
  2. மாந்தநேயம் வளர்ந்துகொண்டே போகட்டும்

    முருகன் புதுச்சேரியிலிருந்து

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com