டூரிங்க் டாக்கீஸ்களில் படம் பார்த்த காலம்!!!!!
டூரிங்க் டாக்கீஸ்
இன்றிலிருந்து 50 வருடங்களுக்கு முந்தைய காலம். பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு இருந்த காலம்.
அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டகை. விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர ஷெட். அதுதான் ப்ரொஜொக்டர் ரூம். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.
காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டி போகும். மாடு மகாதேவியை இழுத்துக் கொண்டு போகும். இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.
பஞ்சு மிட்டாய் கலரில் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.
நாராயணன் செட்டியார் கடையில் விளம்பர தட்டி வைத்திருப்பார்கள். அதற்காக தட்டி பாஸ் கொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் போகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன் ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம் வைத்திருப்பார்கள்.
ஆனால் கடைசி வரை செட்டியார் அந்த தட்டி பாஸ்களை மற்றவர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்ததே இல்லை.
என் அப்பா கடை வைக்காமல் ஏன் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு போகிறார் என்று எனக்கு கோபம் கோபமாக வரும்.
திடீரென்று ஒரு நாள் போஸ்டரின் மேல் 'இன்றே இப்படம் கடைசி' என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்.
இன்றைய கால கட்ட படங்களுக்கு ரிலீஸ் ஆன தேதியிலேயே இந்த ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள்.
மாலை ஆறு மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அது ஊர் முழுக்க கேட்கும்.
சினிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெமி பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள். வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் மாறிப் போயிருந்திருக்கும்.
தியேட்டரில் மொத்தம் பதினைந்து ரிகார்ட் தான் இருக்கும். அதே பாட்டை தான் தினமும் போடுவார்கள். வரிசை கூட மாறாது. ஆப்பரேட்டரின் play list ல் shuffle option கூட இருக்காது.
அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.
"பாட்டு உள்ளே போடறாங்க..." என்று தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே வரும்.
தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்லும். தியேட்டருக்குள் அவர்கள் ஆண் - பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.
தரை டிக்கெட் நாலணா. கீழே மணல் பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து அதை high chair ஆக்குவார்கள்.
ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது.கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை இருக்கும்.
ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய பல்லி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும்.
ஏகப்பட்ட வேட்டிகளை பக்கம் பக்கமாக நிற்க வைத்து மேலிருந்து கீழாக தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.
ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்க்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.
'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும்.
நள்வரவு என்று ஸ்லைட் போடுவார்கள். மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்.
அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு நல்லெண்ண விஜயம் போய் நாசருடன் கை குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏதோ ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் பேசுவார். கேமரா தப்பித் தவறிக் கூட விந்திய மலைக்கு கீழே வந்து விடாது.
படம் போட ஆரம்பிப்பார்கள்.
முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம்.
அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் கதைகள் தான்.
முதல் சீனிலேயே மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.
டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள்.
நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.
இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து கெட்ட செயல்கள் செய்து வருவார்கள்.
பிறந்த குழந்தையை கொல்லச் சொல்லுவார் நம்பியார். மகாராணி மசக்கையாக இருக்கும் போது மகாராணியை போட்டுத் தள்ளி விடலாம் என்று அந்த வீணாய்ப் போன வில்லனுக்கு தோன்றாது. ஒரு சுப தினத்தில் சுகப் பிரசவம் ஆகும் வரை காத்திருப்பார்.
குழந்தையை காட்டுக்கு எடுத்துப் போவார்கள்.
'Please drop your babies here' என்று ஒரு இடத்தில் போர்டு போட்டிருக்கும். அந்த இடத்தில் குழந்தையை போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
குழந்தை பெரியவனாகி காதலிக்க ஆரம்பிக்கும்.
கதாநாயகியைப் பார்த்து "கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" என்று பாடுவார் ஹீரோ.
அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும். கதாநாயகன் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பான்.
பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில் ஓடி மறைந்து விடும்.
அடுத்த நாள் மறுபடியும் "கனவின் மாயா லோகத்திலே" என்று ஆரம்பிக்கும் போது பல்லி மறுபடியும் "நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" என்று டூயட்டில் இணைந்து கொள்ளும்.
சமூகப் படங்களிலும் Template கதைகள் தான். ஹீரோவின் தங்கச்சி பாலாஜியிடம் ஏமாந்து போவார்.
ஏமாந்து போன தங்கச்சி வீட்டில் உட்கார்ந்து கூரையை பார்த்துக் கொண்டிருப்பார். அரளிச் செடி பக்கத்தில் போய் அழுவார். பாடுவார்.
பாலாஜியை குட் பாய் ஆக்கியே தீருவேன் என்று ஹீரோ உழைப்பார்.
இதற்காக சைக்கிளில் போய் சரோஜா தேவியை காதலிப்பார்.
படத்தில் மொத்தம் நான்கு இண்டர்வெல்.
டைரக்டர் தயவில் இரண்டு. ரீல் மாற்றுவதற்காக இரண்டு இண்டர்வெல்.
இண்டர்வெல் விட்டதும் " சோடாலேர்...வேகலே..." என்று பையன்கள் கத்திக் கொண்டு போவார்கள்.
சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை.
கோலி சோடாவை குடிப்பது தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட முடியாது. கவிழ்த்தால் கோலி வந்து மூடிக் கொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.
சாந்தி சில்க் ஹவுஸ்
முத்து ஹேர் கட்டிங் சலூன்
ராஜா டெய்லரிங்
காமதேனு காபி ஒர்க்ஸ்
என்று வரிசையாக வரும்.
காமதேனு காபி பொடி விளம்பரத்தில் கவுன் போட்டுக் கொண்டு ஒரு லேடி வருவார்.
படம் ஆரம்பிக்கும்.
சரித்திரக் கதையில் பி.எஸ். வீரப்பாவை கதாநாயகி மயக்கி ஏமாற்றுவார்.
வீரப்பா முன்னால் ஸ்பஷ்டமாக ஒரு பரத நாட்டியம் ஆடுவார் கதாநாயகி. அந்த செக்ஸி டான்ஸில் வீரப்பா கிறங்கிப் போவார்.
இந்த சமயத்தில் வீரப்பா கையிலிருக்கும் குடுவையில் மது பானத்தை ஊற்றுவார் கதாநாயகி. கொஞ்சூண்டு Cough syrup அளவுக்கு குடிப்பார் வீரப்பா. அதிலேயே மட்டையாகி விடுவார்.
பி.எஸ்.வீரப்பா இடுப்பு பெல்டில் பாதாளச் சிறை சாவியை வைத்துக் கொண்டு கீ.எஸ்.வீரப்பாவாக இருப்பார். வீரப்பா மட்டையானதும் கதாநாயகி சாவியை எடுத்து ஹீரோவை காப்பாற்றி விடுவார்.
கடைசியில் கத்திச் சண்டை நடந்து வீரப்பா கொதிக்கும் வெந்நீரில் விழுவதுடன் படம் முடியும்.
ஸ்டீம் பாத் எடுத்த வீரப்பா அடுத்த படத்தில் இன்னும் அதிக எனர்ஜியுடன் வருவது வேறு விஷயம்.
சமூகப் படமாக இருந்தால் வேறு மாதிரி போகும்.
அம்மா செந்தமிழில் அழுவார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து வாங்கிக் கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
திடீரென அம்மா செத்துப் போவார்.வாழை மரம் கீழே சாயும்.
அம்மாவுக்கு சிதை மூட்டி விட்டு ஹீரோ அங்கேயே ஒரு தத்துவப் பாட்டு பாடுவார்.
'பெத்த வயிறு பத்தி எரியுது' என அம்மா இன்னும் சீக்கிரமாக எரிவார்.
ஹீரோ ஹீரோயின் இலக்கணத் தமிழில் காதல் வசனம் பேசுவார்கள்.
"களங்கமில்லா உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது" என்பார் ஹீரோ.
இந்த சமயத்தில் தான் ஹீரோயின் முகத்துக்கு நேராக தேங்காய் சைஸுக்கு இருக்கும் ஸ்க்ரீன் கறை வரும்.
"உங்கள் கரங்களைத் தான் நான் முதன் முதலில் பற்றுகிறேன். என்னை கை விட்டு விடாதீர்கள்" என்பார் ஹீரோயின்.
திடீரென ஃபிலிம் கட் ஆகும்.
வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து ஹீரோயினை தேடுவார்கள்.
ஃபிலிம் ஒட்டியதும் படம் ஓடும்.
"உங்கள் கரங்களைத் தான் முதன் முதலில் பற்றுகிறேன்" என்று இரண்டாவது தடவை சொல்வாள் ஹீரோயின்.
அதன் பிறகு பல காட்சிகளில் ஹீரோவும் ஹீரோயினும் distance maintain செய்து லவ் செய்வார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது அவர்களுக்கு பதிலாக இரண்டு பூக்கள் தொட்டுக் கொள்ளும்.
கடைசி சீனில் பாலாஜி மனம் திருந்தி பேமெண்ட் வாங்கிக் கொண்டு போய் விடுவார்.
தங்கச்சி தலை நிறைய பூவுடன் சுபம் சொல்லுவார்.
படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும்.
பெண்கள் முகம் எல்லாம் அழுது அழுது உப்பி போயிருக்கும். அழுமூஞ்சி மனைவியை அரை இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் கணவர்கள்.
படம் முடிந்து போகும் போது கும்பலாக போக வேண்டும். சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.
இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம். கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.
பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது போலவே ஒரு உள்ளுணர்வு இருக்கும்.
வீடு பக்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் பார்த்தவுடன் தான் உயிர் வரும்.
அடுத்த நாள். பத்து பெண்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருப்பாள் மனைவி.
இனி அடுத்த படம் இரண்டு மாதம் கழித்தோ மூன்று மாதம் கழித்தோ தான்.
இதோ..இப்போது என் முன்னால் டி.வி ஓடிக் கொண்டிருக்கிறது. ரிமோட் ஒவ்வொரு சேனலாக நீந்துகிறது.
பதின்மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதையும் பார்க்காமல் அணைக்கிறேன்.
வாட்ஸ் அப் போகிறேன். அந்த மகானுபாவன் தன் தலைவரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். பார்க்கிறேன்.
என் சேனலில் சினிமா பாருங்கள் என்று டி.வியில் கூவுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். பிடிக்கவில்லை.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெஞ்சும்.
-------------------------------------------------------
படித்ததில் ரசித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே,
ReplyDeleteஅந்த நாள் ஞாபகம் வந்தது, வாத்தியாரே,
மிச அழகான தொகுப்பு, நகைச்சுவையுடன் நளினமான நடையுடன் கற்பனை வளத்துடன்
அழகாக உள்ளது.
தனிப்பாணி எழுத்தாள மாமன்னன்
சுஜாதா அவர்களை நினைவு படுத்தியது, ஐயா!
எனது மனமார்ந்த நன்றிகள், ஆசானே!👍😊
really good memories.
ReplyDelete:) naanum idhai kadanthu vanthirukkiren. Sabaash sariyaana potti enbaar oruvar. Hero, mananthaal magadevi illaiyel marana devi enbaar. Oru pen, poruthathu pothum pongi elu manogara enbaal. Ippadi ethaniyo...
ReplyDeleteஅழகான கனவு மீண்டு(ம்) வந்தது போல டூரிங்க் டாக்கீஸில் படம் பார்த்த காலம். என்றும் மனதை மகிழ்வித்த இனிமையான காலம் அது. அப்படி பார்த்து மகிழ்ந்த கடைசி தலைமுறை நாம்தான்.
ReplyDeleteஎன் மகளிடம் இதுபற்றி கேட்க அவள் அப்படின்னா? எனக் கேட்டாள். மீண்டும் படம் முதலில் இருந்து ஆரம்பித்தது.
Classic Sir,
ReplyDeleteWe can imagine the scenes....
Thirumbavamum andha kalam pol varada...
suuuuper குரு அப்படியே ஒன்றிபோயவிட்டேன் அனைத்தும் உண்மை நன்றி
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeletereally good memories./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger Sabarinaathan said...
ReplyDelete:) naanum idhai kadanthu vanthirukkiren. Sabaash sariyaana potti enbaar oruvar. Hero, mananthaal magadevi illaiyel marana devi enbaar. Oru pen, poruthathu pothum pongi elu manogara enbaal. Ippadi ethaniyo.../////
உணமைதான் உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!
/////Blogger Shanmuganandam said...
ReplyDeleteஅழகான கனவு மீண்டு(ம்) வந்தது போல டூரிங்க் டாக்கீஸில் படம் பார்த்த காலம். என்றும் மனதை மகிழ்வித்த இனிமையான காலம் அது. அப்படி பார்த்து மகிழ்ந்த கடைசி தலைமுறை நாம்தான்.
என் மகளிடம் இதுபற்றி கேட்க அவள் அப்படின்னா? எனக் கேட்டாள். மீண்டும் படம் முதலில் இருந்து ஆரம்பித்தது.//////
உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகானந்தம்!!!!!
////Blogger GAYATHRI said...
ReplyDeleteClassic Sir,
We can imagine the scenes....
Thirumbavamum andha kalam pol varada...//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!
////Blogger ஜானகிராமன் said...
ReplyDeletesuuuuper குரு அப்படியே ஒன்றிபோயவிட்டேன் அனைத்தும் உண்மை நன்றி/////
நல்லது.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
அந்த நாள் ஞாபகம் வந்தது, வாத்தியாரே,
மிச அழகான தொகுப்பு, நகைச்சுவையுடன் நளினமான நடையுடன் கற்பனை வளத்துடன்
அழகாக உள்ளது.
தனிப்பாணி எழுத்தாள மாமன்னன்
சுஜாதா அவர்களை நினைவு படுத்தியது, ஐயா!
எனது மனமார்ந்த நன்றிகள், ஆசானே!👍😊/////
நல்லது.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!!