11.1.19

Short Story சிறுகதை:பொங்கற் பானை!!!!


பொங்கற் பானை

இது எனது முதல் கதை 12 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. 
ஒரு மாத இதழில் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. இன்னும் 4 நாட்களில் பொங்கல் வரவுள்ளது. 

நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று அக்கதையை வலையில் ஏற்றியுள்ளேன்!!!!

அன்புடன்
SP VR சுப்பையா
=================================================================
தேனம்மைக்குக் கோபம் கோபமாக வந்தது. யாரிடம் அதை வெளிப்படுத்துவது?  ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை! அடக்கிக்  கொண்டாள்.

நடுத்தெருவில் கையைக் காட்டி நிறுத்திய கோலீஸ் அதிகாரியிடம் வாகன ஓட்டி கோபப்பட முடியுமா? அதே சூழ்நிலைதான் அவளுக்கும்.

திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது. கட்டா  கட்டியாக பொங்கலுக்குத் தேவகோட்டைக்கு வரும்படி சொல்லிவிட்டார்கள் பெரிய சுந்தரி ஆச்சி - அதாவது அவளுடைய மாமியார்.

அதனால் இவளையும் கூட்டிக்கொண்டு நான்கு நாட்கள்விடுப்பில் ஊருக்கு வந்து விட்டான் அவளுடைய அன்புக் கணவன் கண்ணன்.

நாளை மறுநாள் பொங்கல். பெங்களூரில் இருந்து பதினோறு மணிநேரம் பயணித்து வந்த களைப்பு நீங்கத் தூங்கியவன். எழுந்தவுடன் அருகில் இருந்த தேனம்மையிடம் சொன்ன செய்திதான் அவளைக் கோபப்பட வைத்தது.
ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகையை வரவழைத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள்.

எங்கள் அப்பச்சி வருகிறார்களா - எதற்கு? ”

உனக்குப் பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டுப் போகத்தான்!“

விளையாடாமல் சொல்லுங்கள் - எதற்கு வருகிறார்கள்?”   கவலையுடன் கேட்டாள்.

அவன் தெளிவாகச் சொன்னான். “பொங்கல் பானை, பொங்கல் முறையை யெல்லாம் கொடுத்துவிட்டுப் போவதற்காக  வருகிறார்கள்.

அதுதான் நம் திருமணத்தின்போதே மூன்று ஆண்டு முறையென்று உங்கள் தாயார் முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு விட்டார்களே - இப்போது இந்த அழிச்சாட்டியம் எல்லாம் எதற்கு? “

அவள் பாலக்காட்டில் படித்து வளர்ந்தவள். அதனால்  புதிது புதிதாக  சொற்கள் வந்து விழுந்தது. அவள் அப்பச்சிக்கு அங்கே ஒரு நூற்பாலையில் வேலை. உற்பத்தி மேலாளர்.

தேனம்மையின் கணவன் சாஃப்ட்வேர் இஞ்சினியர்.   பெங்களூரில் வேலை. மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். சரளமாகப்  பேசுவான்; வேடிக்கையாகவும் பேசுவான்.

வெப்சைட்டில் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் பிடித்துத் தன் தாயாரைச் சம்மதிக்க வைத்து, தேனம்மையைத் திருமணம் செய்து கொண்டான்தேனம்மை தேவயானி போல நல்ல அழகு. சிவந்த நிறம் வேறு.

பெரிய சுந்தரி ஆச்சிக்கு அவன் திருமணத்தில் மிகுந்த வருத்தம். ஆறும் மூன்றும் வாங்கலாம் என்று இருந்தவருக்கு, இரண்டும் ஒன்றும் வாங்கிக்கொண்டு முடிக்கும்படியாகி விட்டது

ஆனாலும் அவருடைய இயற்கைக்குணம் அவ்வப்போது தலைதூக்கும். கல்யாணத்தின்போது முறைக்கென்று பணமும் வாங்கிக்கொண்டு, சாஸ்திரம் என்று சொல்லி, உப்பு, புளி, வாளி, எவர்சில்வர் அண்டாவென்று தனியாக வேறு வாங்கிக் கடுப்படித்து விட்டார்.

அதெல்லாம் வடுக்களாகத் தேனம்மையின் மனதில் ஆழமாகப்  பதிந்து விட்டது. அப்பச்சிக்கு நான்கு பெண் குழந்தைகள். இவள் இரண்டாவது. கல்யாணத்தின்போது அப்பச்சி பட்ட கஷ்டங்கள், வாங்கியகடன்களெல்லாம் இவளுக்குத் தெரியும். அதனால்தான் வருத்தம்.

எங்கள் ஆத்தாவிற்கு கம்ப்யூட்டர் ப்ரெயின். அதற்குத் தனியாக சாஃட்வேர், யுட்டிலிட்டி புரோகிராம் எல்லாம் உள்ளது. அதைப் பயன்படுத்துவதற்கு எனக்கும் எங்கள் அப்பச்சிக்கும்தான் தெரியும். நீயும் பழகிக்கொள்.” என்று சொல்லியவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போய்விட்டான்

போகும்போது தன் கால்சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டுப்  போனான்.

அவள் கடிதத்தைப் படித்தாள். அது பத்து தினங்களுக்கு முன்பு  அவன் தாயார் எழுதியது. அவன் அலுவலக முகவரிக்கு எழுதப்பட்டிருந்தது.

அவனை தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு பொங்கலுக்கு  ஊருக்கு வரும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அவன் மாமனாருக்கு பொங்கற்பானை கொண்டு வரும்படி லிஸ்ட் அனுப்பிய விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஊரில் அவர்கள் வீட்டில் படைப்பாம். வளவில் எல்லோரும் வருவார்களாம். பங்காளி வீட்டாட்களும் வருவார்களாம். பெருமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கற்பானையாம்.

பொங்கற்பானையென்றால் வெறும் பானையல்ல. பதினைந்து கிலோ பச்சரிசி. மூன்று கிலோ உருண்டை வெல்லம். இரண்டு கிலோ நெய். முந்திரி. கிஸ்முஸ் பழம் தலா கால் கிலோ. இவையெல்லாம் எவர்சில்வர் சம்படங்களுடன் தேங்காய் பதினொன்று. வாழைப்பழம் மூன்று சீப்புகள். தலா இரண்டு கிலோ வீதம் ஏழுவகைக் காய்கறிகள். மஞ்சள் கொத்து. கரும்பு ஒரு பெரிய கட்டு என்று சிட்டை காணப்பட்டது.

சம்பந்தி செட்டியார் வந்து போகிற செலவையும் சேர்த்தால் ரூ.6,500/- வரை ஆகலாம். தேனம்மைக்கு மயக்கம் வராத குறைதான். மிகுந்த வருத்தத்திற்கு ஆளானாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்று மாலை ஐந்து மணி இருக்கும். சிட்டைப்படி எல்லாச் சமான்களையும் காரைக்குடியில் வாங்கிக்கொண்டு, ஒரு வாடகைக் கார் பிடித்து அங்கிருந்து வந்து சேர்ந்தார் தேனம்மையின் பரிதாபத்திற்குரிய அப்பச்சி. 

பருத்தித் துணியில் வெள்ளைச் சட்டை. நான்கு முளம் தட்டுச் சுற்று வேஷ்டி.எப்போதும்போல எளிமையான தோற்றம். முன்னிரவு பாலக்காட்டில் இருந்து .புறப்பட்டதாகச் சொன்னார்.

பெரிய சுந்தரி ஆச்சிவாங்கண்ணேஎன்று பலத்த குரலோடு, வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். வந்தவர் கால்மணி நேரத்திற்குமேல் இருக்கவில்லை. வெறும் காப்பி மட்டும் சாப்பிட்டு விட்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.

தேனம்மை மட்டும் அவருடன் வீட்டு வாசல்வரைக்கும் வந்தவள், தூரத்தில் நின்ற வாடகைக் காரை நோக்கித் தன் தந்தையார் நடக்கும்போது மெதுவாகக் கேட்டாள்.

அப்பச்சி உங்களுக்குத்தான் அலைச்சல். அநியாயத்திற்குச் செலவு வேறு. எவ்வளவு செலவாயிற்று? பணத்திற்கு என்ன செய்தீர்கள்..?”
அவர் புன்முறுவலிட்டார். “அதெல்லாம் ஒன்றுமில்லை ஆத்தா. நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும். வீட்டிற்குப்போ...” என்றார்

இல்லை அப்பச்சி சொல்லுங்கள்!”

போனவாரம் மாப்பிள்ளை என்னுடன் போனில் பேசினார் ஆத்தா. சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏழாயிரம் அனுப்பி வைத்தார். யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். உன்னிடம்கூட சொல்ல  வேண்டாம் என்றார். நல்ல மனுஷன். நீ உனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாதே! அவர் மனம் கோணாமல் நடந்து கொள். அவரை நன்றாக வைத்துக் கொள்!” என்று கூறிக்கொண்டே வந்தவர் விருட்டென்று காரில் ஏறிக்கொண்டார். வண்டியும் புறப்பட்டுச் சென்று விட்டது.

  தேனம்மை கண்ணில் நீர் மல்க ஒரு நிமிடம் நின்றாள்.

அவளுடைய அன்புக் கணவன் கண்ணன் இப்போது அவளுடைய கண்களிலும், மனதிலும் சாட்சாத் அந்தப் பரமாத்மா கண்ணனாகக் காட்சியளித்தான்.
       ********************************************************************

10 comments:

  1. Good morning sir excellent story thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    முன்பு ஒருமுறை இக்கதையைப் படித்த ஞாபகம்!
    ஆண்டுகள் பன்னிரண்டு முடிந்திருந்தாலும் கதை என்னவோ
    எக்காலத்தும் பொருந்தும் போல அசத்துகிறது!
    ஒற்றுமையான தாம்பத்தியத்துக்கு
    இதுவல்லவோ மந்திரம்!
    சிறுகதைக்குப் பெரும் பாராட்டுக்கள்
    வாத்தியாரையா!👍👌

    ReplyDelete
  3. செட்டி நாட்டு சுவையில் (தமிழ் நடை) உங்களின் இந்த சிறு கதை அழகோ அழகு.

    ReplyDelete
  4. very nice and touching story Sir. Thanks for sharing

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent story thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    முன்பு ஒருமுறை இக்கதையைப் படித்த ஞாபகம்!
    ஆண்டுகள் பன்னிரண்டு முடிந்திருந்தாலும் கதை என்னவோ
    எக்காலத்தும் பொருந்தும் போல அசத்துகிறது!
    ஒற்றுமையான தாம்பத்தியத்துக்கு
    இதுவல்லவோ மந்திரம்!
    சிறுகதைக்குப் பெரும் பாராட்டுக்கள்
    வாத்தியாரையா!👍👌//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. //////Blogger Madurai Veeran said...
    செட்டி நாட்டு சுவையில் (தமிழ் நடை) உங்களின் இந்த சிறு கதை அழகோ அழகு./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி மதுரை வீரன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    very nice and touching story Sir. Thanks for sharing//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. மிக அருமையான கதை.

    ReplyDelete
  10. ////Blogger palasu said...
    மிக அருமையான கதை.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com