31.1.19

நிறைவான வாழ்க்கை எது?


நிறைவான வாழ்க்கை எது?

" Minimalism "- Fulfilment in real Life ! #

# "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! #

``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார்.
 வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு,
 கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.

ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது.
இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்
என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.
அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும்.
2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான்.

ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.
வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்  எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில்
`மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை
என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.

மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு?

நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே
அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.

``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு,
அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து.

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின்
வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன?

ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல் :-
- மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான்.
நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 -  குறைவான பொருள்களில் வாழ்வது :-
 - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் :-
- மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது :-
- எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன்
இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல்
இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது :-
- உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா.
மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும்.  கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும்.

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது!!!!

படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very useful tips for enjoyable life thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    சொல்லப்பட்டவை அனைத்தும் நிதர்சனமான யதார்த்தமான உண்மைகள்!இளைய தலைமுறையினர் இவற்றின் உண்மையை உணர்ந்து நடந்தால்
    அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே
    நல்லது!
    பூனைக்கு மணியை யார் கட்டுவது?!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice to post...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful tips for enjoyable life thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சொல்லப்பட்டவை அனைத்தும் நிதர்சனமான யதார்த்தமான உண்மைகள்!இளைய தலைமுறையினர் இவற்றின் உண்மையை உணர்ந்து நடந்தால் அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நல்லது!
    பூனைக்கு மணியை யார் கட்டுவது?!///////

    மணியை யாரும் கட்ட வேண்டாம். கால தேவன் ஒரு நாள் வலுக்கட்டாயமாக கட்டிவிடுவான். நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice to post..
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com