2.1.19

பள்ளிப் பாடப் புத்தகம் மட்டுமே வாழ்க்கையில்லை!!!!



பள்ளிப் பாடப் புத்தகம் மட்டுமே வாழ்க்கையில்லை!!!!

முரண் பட்ட வாழ்க்கை
ஒரு பாமரன் பேசுகிறேன்.

விநோதமான
விசித்திர உலகம் இது

தவறுகளையே  சரி என்னும்
தறுதலை உலகம் இது

ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்

குழந்தைகளை
முட்டி போட வைத்து விட்டு
சுதந்திரம் பற்றி
ஒருமணி நேரம்
நீதி போதனை செய்கிறார்
ஓர் ஆசிரியர்

வகுப்புக்கு வெளியே
வானம் பார்த்தவர்களை
பிரம்புகளால்
கை குலுக்கி விட்டு
கரும்பலகையில்
ஆகாயம் வரைகிறார்
ஒரு ஆசிரியை

பட்டாம்பூச்சிகளாக
பறந்து திரிய வேண்டிய
பாலகப் பூக்களைச்
சங்கிலியால் கட்டி விட்டு
நந்தவனங்களின்
சௌந்தர்யம் பேசுகிறார்
ஒரு போதகப் பிதா

அஞ்சு பைசாவுக்குப்
பயனில்லாத
அல்ஜீப்ரா...

வெக்டார் கால்குலேஷன்

டிஃபரன்ஷியேஷன்
கால்குலஸ்

அவன் வாழ்வதற்கான
ரூட்டை சொல்லித்தராமல்,
ரூட் த்ரி வேல்யூ
சொல்லித்தந்து பலனில்லை...

ப்ராபபல்டி போதித்து விட்டு
வீட்டின் பால்கணக்கிற்கு
கால்குலேட்டர் தேடச் சொல்கிறார்
ஒரு ராமானுஜர்...

கொள்ளையடிக்க வந்த
கஜினி முகமதை
கோரி முகமதை
கில்ஜி வம்சத்தை
தைமூர் பரம்பரையை
மொகல் மூஞ்சூறை
ஆங்கிலேய ரௌடிகளை
மனப்பாடம் செய்யச் சொல்லி
குழந்தை மூளையை
கெடவைக்கிறார்
ஒரு  வரலாற்று
வாஸ்கோடகாமா...

சும்மா கிடந்த
தவளையை
கொலைசெய்ய வைத்து
குழந்தையை
கொலைகாரன்
ஆக்குகிறார் ஒரு
விலங்கியல் வேதாந்திரி

செத்துப் போன
லத்தீன் பெயர்களை
எங்கள் ஊர்ப் பூக்களுக்குச்
சொல்ல செடிகளைத்
தற்கொலை செய்ய
வைக்கிறார் ஒரு
தாவரவியல் சாக்ரடீஸ்...

நிறுத்துங்கள்
எங்கள்
ஆசிரிய தெய்வங்களே

இந்த
இதயமற்ற அரசிடம்
இனியாவது பேசுங்கள்

பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யுங்கள்

அவனவனுக்கு எது வரும்
அதைக்
கற்றுக் கொடுங்கள்...

இவன் உயர் உயர்ந்த
ஜாதிகாரன் இவன்
தாழ்ந்த ஜாதிகாரன்
என்கின்ற மாயையை
கிள்ளி எறிய
கற்று காகொடுங்கள்...

அனைவரும்
சமம் என்பதை போதியுங்கள்...

வள்ளுவன் கையில்
ஜாவா திணிக்காதீர்கள்...

பில்கேட்ஸ் கையில்
தொல்காப்பியன்
செருகாதீர்கள்...

பிள்ளைகள்
மிருதுவானவர்கள்
அவர்களை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காதீர்கள்...

யாரையும்
யாரோடும் ஒப்பிடாதீர்கள்...

முதல் மதிப்பெண்
பெற்றவனே
மூளைக்காரன்
என்ற இந்த
முகவரி மாற்றுங்கள்...

மூன்றாம் பரிசு பெற்ற
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்னும் வாழ்கிறது...

முந்திய இரண்டைக்
காணவில்லை...

மூன்றுமணி நேரம்
தின்றதை வாந்தியெடுக்க
அவர்களுக்கு
இனிமா தராதீர்கள்...

புரியும்படி
சொல்லிக் கொடுங்கள்...

புரியும்வரை
சொல்லிக் கொடுங்கள்...

வீட்டுப்பாடம் என்ற பெயரில்
அவர்களைக்
காட்டுக் குரங்குகளாக
மாற்றாதீர்கள்...

ஒன்று கவனித்தீர்களா

காலையில் பள்ளிக்கூடம்
கவலையோடு வரும்
அதே குழந்தை தான்
மாலையில் எத்தனை
மகிழ்வோடு ஓடுகிறது
பாருங்கள்...

எங்கே பிழை...
எது சரியில்லை
கண்டுபிடியுங்கள்...

உங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினை...

மறுக்கவில்லை
மகான்களே...

இன்னும்
கரிசனையோடு அணுகுங்கள்
கனவான்களே...

பள்ளிக்கூடத்தால்
துரத்தி விடப்பட்டவன் தான்
எடிசன்...

ஆக
பாடப் புத்தகம் மட்டுமே
வாழ்க்கையில்லை...

சாக்ரடீஸ் என்பவன்
படித்தவனில்லை...

ஆனால்
புத்தகங்களுக்கே
ஆனா ஆவன்னா
சொல்லிக் கொடுத்தவன்...

ஐன்ஸ்டீன்
தன்
மரணப் படுக்கையிலும்
சூத்திரங்கள் எழுதியவன்...

பீத்தோவன்
காது கேளாதவர்
ஆனாலும்
செவிக்கினிய
புதிய புதிய
இசைக்குறிப்பு செய்தவன்...

கண் தொலைந்த பிறகும்
அணுவை ஆய்ந்தவள்
மேரி கியூரி...

உங்கள்
பாடப் புத்தகத்தை
பாராயாணம்
செய்தவர்களை விட
உலகம் உணர்ந்தவன்
வென்றிருக்கிறான்...

சரவணா ஸ்டோர்ஸ்
நிறுவியவன்
படித்தவனில்லை...

அவனிடம்
எம்பிஏக்கள்
க்யூவில் நிற்கிறார்கள்...

வாடகை வீட்டுக் கூரையில்
மெஸ் நடத்தியவன்
சரவண பவன்...

அவன் கிளை இல்லாத
தேசம் இல்லை....

கம்பன்
இளங்கோ
பாரதி
கண்ணதாசன்
எங்கே படித்தனர்...

அவர்கள் படைத்தவைகள்
பல்கலைக்கழகங்களுக்கே
பாடங்களாய்...

இந்த மண்
அறிவாளிகளின் மண்

இந்த மண்
ஞான மாணாக்கர்களின்
மண்

அவனவன்
நதி மாதிரி

அவனவனை
அவன் போக்கில்
விடுங்கள்

அப்போது தான்
இந்த
நிலம் செழிக்கும்
இந்த
வனம் செழிக்கும்

அவனவனின்
சுய சிந்தனை வளருங்கள்

இந்தத்
தேசத்தைக்
காதலிக்கச்
சொல்லிக் கொடுங்கள்

இந்த
மக்களை
அன்பு செய்யச்
சொல்லிக் கொடுங்கள்

சாதி மதம் என்கின்ற
பிரிவினை இல்லாத,
ஏழை பணக்காரன்
என்கின்ற பிரிவினை
இல்லாத,
வேறுபாடு இல்லாத
நேசத்தை  உருவாக்கிக்
கொடுங்கள்...

தாயை விட உயர்ந்தது
தாய்நாடு என்கின்ற 
தேசப்பற்றை கற்றுக்
கொடுங்கள்.

தேசத்திற்காக
உழைத்து உயிரை விட்ட வீரபாண்டியகட்டபொம்மன்,
வஉசிதம்பரனார்,
அம்பேத்கர்
நேதாஜி சுபாஷ் சந்திரபாபோஷ்,
பகத்சிங்,  திருப்பூர்குமரன்,
ஜான்சிராணி ஆகியாயோரைப் பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுங்கள்.

பகத்சிங் உணர்வுகள்
பாரெங்கும் பரவிவளரட்டும்.

எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல்  வளர
முயற்சியுங்கள்.

இதை உங்கள் கல்வியில்
உயிரெழுத்தாய்க் கொடுங்கள்

சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுங்கள்

பண்பாடு கலாச்சாரம்
பந்தி வையுங்கள்

பெண்களை
மரியாதையோடு பார்க்க
இளைய கண்களுக்கு
எழுதிக் கொடுங்கள்...

ஒவ்வொரு பெண்ணும்
தாய் என்று
உணர வையுங்கள்...

ஈவதை
எங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுங்கள்
பரம பிதாக்களே...

அதை விடுத்து
உங்கள் பிள்ளை
சரியில்லை என
மாதக் கூட்டத்தில்
ஒப்பாரிப் பத்திரம்
வாசிக்காதீர்கள்...

எங்களை விட அதிக நேரம்
உங்களிடமே இருக்கிறார்கள்
எங்கள் பிள்ளைகள்

எங்கள் குழந்தைகள்
பச்சை மூங்கில்
அதை
புல்லாங்குழலாக்குங்கள்

எங்கள் மழலைகள்
வெறும் நதிதான்
அதை
கடல் சேருங்கள்

நான் ஒரு பாமரன்.

நான் சொன்ன
எல்லாவற்றையும்
கணக்கில் எடுக்காதீர்கள்

எது தேவையோ
அதை மட்டும் எடுங்கள்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......

அதோ!
இந்தப் பாமரன்
போய்க்கொண்டே
இருக்கிறேன்
இந்தச் சமூகத்தைச்
சலவை செய்யும்படி...                       
(முகநூலில் நிருபர் பழனிவேல் என்பவர் எழுதிய கவிதை படித்தேன் பிடித்துது பகிர்ந்துள்ளேன் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி)
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. மன்னிக்கவும் டைப்பிங் பிழை. அவசரப்பட்டுவிட்டேன்.

    மிக மிக மிக அருமை.. ரசித்தேன்.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice Post...
    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. எழுதியவ்ர் ஆர் எஸ் எஸ்/ பி ஜே பி அபிமானி என்று தோன்றுகிறது.உலகில் சராசரி அறிவுள்ளா மனிதர்களே அதிகம். ஜீனியஸ் என்பது கோடியில் ஒருவர்தான். ஒரு ஐன்ஸ்டீனோ, பீதோவனோ பள்ளியில் படித்தாலும் படிக்காவிட்டாலும் உருவாகிவிடுவார்கள். ஆனால் முதல்தலைமுறை படிக்க வரும் மாணவர்களை முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் இல்லையெனில் இலக்கு இன்னதென்று தெரியாமல் திகைத்துவிடுவார்கள்.

    உற்பத்தி சார்ந்த, ஒழுக்கம் போதிக்கக்கூடிய, அறிவியல் தழுவிய கல்வி பள்ளிகளில் வேண்டும்

    ReplyDelete
  4. ////Blogger ஸ்ரீராம். said...
    மன்னிக்கவும் டைப்பிங் பிழை. அவசரப்பட்டுவிட்டேன்.
    மிக மிக மிக அருமை.. ரசித்தேன்.////

    நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice Post...Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    எழுதியவ்ர் ஆர் எஸ் எஸ்/ பி ஜே பி அபிமானி என்று தோன்றுகிறது.உலகில் சராசரி அறிவுள்ளா மனிதர்களே அதிகம். ஜீனியஸ் என்பது கோடியில் ஒருவர்தான். ஒரு ஐன்ஸ்டீனோ, பீதோவனோ பள்ளியில் படித்தாலும் படிக்காவிட்டாலும் உருவாகிவிடுவார்கள். ஆனால் முதல்தலைமுறை படிக்க வரும் மாணவர்களை முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் இல்லையெனில் இலக்கு இன்னதென்று தெரியாமல் திகைத்துவிடுவார்கள்.
    உற்பத்தி சார்ந்த, ஒழுக்கம் போதிக்கக்கூடிய, அறிவியல் தழுவிய கல்வி பள்ளிகளில் வேண்டும்//////

    நல்லது. நீங்கள் சொல்வதுபோல பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com