25.7.18

ஞானம் பிறந்த கதை!


சிறுகதை

ஞானம் பிறந்த கதை!
SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்
-------------------------------------------------
அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில் இந்த மாதம் வெளியான சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்
-------------------------------------------------
அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன்
ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது.
அவனது ஆட்சியில் நாட்டு மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில்
சண்டைகள். சச்சரவுகள்.

வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத்
தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம்
விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி மக்களை
தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான். அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை.
செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக்
குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்
குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா
என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால், எல்லாப்பிரச்சினைகளும் ஓடிப்போய்
விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை
என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும்
சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ
நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச் சொன்னான். முதன்மந்திரியும்,
 நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான்
மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச்
சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய
வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான்
முக்கியம் கொடுப்பதில்லை என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்கவில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால்
நடைப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும்
வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார்.
அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும் கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு
தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற
முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு வாரங்கள் கழித்து அரசன் நினைவு
படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச் சொல்லி
மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை
நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில்
சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின்
மூளையும் அப்படியொரு வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு
வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும் முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான
ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத்
தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக
இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக்
கிடைத்தான்.

மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி
விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?

------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு
என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின்
பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது. மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான்.
அரண்மனை பல்லக்கு ஒன்று அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல்
மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

தொடர்ந்து படியுங்கள்

அரண்மனை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன், சுவாமிகளின் வரவை ஆவலுடன் எதிர்
நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான் அல்லவா மன்னன்?

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், இளம் துறவியை ஏற்றிக்கொண்டு வந்த பல்லக்கும் வந்து சேர்ந்தது.

இளம் துறவி பல்லக்கில் இருந்து இறங்கியவுடன், பட்டத்து யானையின் மூலம், பெரிய மலர்மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பெற்றது.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றை மன்னன் செய்தான்.

ஆமாம், திடீரென்று துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

மன்னனே காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்த அங்கிருந்த தேவியர்கள் முதலிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

முதன் மந்திரி முதல் யானைப்பாகன் வரை அங்கிருந்த மற்றவர்களும் விழுந்து வணங்கினார்கள்.

முதலில் அதிர்ந்து போய்விட்ட துறவி, சற்று சுதாகரித்துக் கொண்டு, "நமச்சிவாய" என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தினார்

மன்னன் எழுந்து வழிகாட்ட, துறவியார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடன் அரச குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டர்கள். முதல் மந்திரியும், அரண்மனைத் தலைமைக் காவலரும் உள்ளே சென்றார்கள். வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

பிரதான அரங்கத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பெற்று,
ஒரே ஒரு சிம்மாசானம் மட்டும் போடப்பட்டிருந்தது.

துறவியாரை, அதில் அமரும்படி கேட்டுக்கொண்டான் மன்னன்.

அவர் அமர்ந்தவுடன், அவர் அருகில், அவருடைய காலடி அருகே, தரையில், அதாவது ரத்தினக்கம்பளத்தின் மீது மன்னன்
அமர்ந்து கொண்டான்.

மற்ற அனைவரும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.
அந்தக் காட்சியைக் கண்ணுற்ற நமது துறவியாருக்குச் சற்று அச்சமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

பின்னே இருக்காதா? அரசனுக்கு 50 வயது. துறவிக்கோ இருபத்தியோரு வயதுதான். அதோடு பதவியில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். எல்லாம் விதியின் விளையாட்டுப்போலும் என்று துறவி மனதில் நினத்துக்
கொண்டார்.

உண்மை தெரிந்தால் தலை போகுமா? அல்லது கால் போகுமா? என்று தெரியாத  சூழ்நிலை. நடப்பது நடக்கட்டும் என்று தனது நாடகத்தைத் தொடர்ந்தார்.

மன்னன்தான் முதலில் பேசினான்.

"சுவாமி உங்களுக்குப் பாதபூஜை செய்ய விரும்புகிறோம்.
உத்தரவு கொடுங்கள்." என்றான்.

சுவாமிகள் கண்களினாலேயே சம்மதத்தைத் தெரிவித்தார்.

மன்னன் கையை உயர்த்த, தூரத்தில் நின்று கொண்டிருந்த
இரு தாதிப்பெண்கள் பெரிய வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக்குடத்தில் தண்ணீர், இன்னொரு தாம்பாளத்தில்,
பூஜைப் பொருட்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்கள்.

தேவியர் இருவரும் அருகில் வர, அவர்கள் துணையுடன்,
மன்னன் துறவிக்குப் பாத பூஜையைச் செய்து முடித்தான்.
அதோடு விழுந்தும் வணங்கினான்.

துறவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை சின்ன வயதில் முகத்தில் இப்படி ஒரு அருளா?

எல்லாவற்றையும் கொடுத்த இறைவன் இந்த நிர்மலமான
முகத்தை மட்டும் நமக்கு ஏன் தரவில்லை? அப்படி நினைத்த மாத்திரத்திலேயே மன்னன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. அதைக் கவனித்த தேவியர்கள் இருவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இருக்கத்தைக் குறைக்க விரும்பிய துறவியார், அருகில் தாம்பாளத்தில் இருந்த மலர்மாலை ஒன்றை எடுத்து, மன்னனுக்கு அணிவித்து, ஆசீர்வதித்தார்.

மீண்டும் தரையில் துறவியின் எதிரே அமர்ந்து கொண்ட
மன்னன், தன் அரச, மற்றும் குடும்ப வரலாறுகளை
பொறுமையாகச் சொன்னான். அதைவிடப் பொறுமையாகத் துறவியும் காது கொடுத்துக் கேட்டார்.

இறுதியில் மன்னன் தன் பிரச்சினைகளைச் சொல்லி,
அதற்குத் தங்களுடைய மேலான யோசனைகளைச்
சொல்லுங்கள் என்று துறவியைக் கேட்டுக் கொண்டான்.

துறவி நறுக்குத் தெரித்தார்ப்போல பேசினார்.

"உங்கள் துன்பங்களைக் கூட்டிக் கழித்தால் இரண்டு
சொல்லில் அடக்கிவிடலாம். ஒன்று கோபம், இன்னொன்று படபடப்பு, இல்லையா?" என்று கேட்டார்.

"ஆகா, அவையிரண்டும்தான் தலையாய பிரச்சினைகள்"
என்று மன்னன் பதில் சொன்னான்.

துறவி அவற்றிற்குப் பதில் சொன்னார்.

முதலில் அவனுடைய மனைவிகள் இருவரையும் தனித்தனி மாளிகைகளில் தங்கும்படி செய்ய வேண்டும் என்றார்.
அதோடு ஒவ்வொரு தேவியின் குழந்தைகளும், அவர்களுடனே தங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்றார். மன்னன்
மாதத்தில் முதல் பதினைந்து நாட்கள் மூத்தவள் வீட்டிலும்,
அடுத்த பதினைந்து நாட்கள் இளையவள் வீட்டிலும் தங்கி
வருவது நல்லது என்றார். மன்னனும் அது நல்ல தீர்வு என்று
சொல்லி மகிழ்ந்தான். பிரச்சினைகள் பாதியாகக் குறைந்து விடுமல்லவா?

இன்பம், துன்பம் ஆகிய இரண்டையுமே அவைகள் வந்து
சேரும் கணத்தில் ஏற்றுக் கொள்ளாமல், ஒரு நாழிகை
கழித்தே (அதாவது 24 நிமிடங்கள் கழித்தே) மனதிற்குள்
கொண்டு செல்ல வேண்டும் என்றார். அதாவது சட்டென்று
react செய்யக்கூடாது எனும் பொருள்படத் துறவியார் சொன்னார்.

இன்பம் வந்தால் உடனே துள்ளிக் குதிக்காதே! துன்பம் வந்தால் உடனே கோபப்பட்டு மற்றவர்களைப்ப் பிறாண்டதே! என்பதை மன்னனுக்குப் புரியும் வண்ணம் இரண்டு குட்டிக் கதைகள் மூலமாகப் பாடம் நடத்தினார். மன்னன் மகிழ்ந்து விட்டான்.

அப்படிச் செய்தால் கோபம் வராது என்பதை மன்னன் உணர்ந்தான்.

அடுத்து படபடப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் துறவி சொன்னார்.

மன்னனாக இருப்பதால், பல சோதனைகளைத் தாங்கும்
போது படப்படப்பு ஏற்படுவது இயற்கை என்றும், அந்தமாதிரி நேரங்களில், ஆறு குவளைகள் தண்ணீரை அடுத்துத்துக் குடித்துவிட்டு, சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

ஆறு குவளைகள் நீரைக்குடித்தால் என்ன ஆகும்?
வயிறு முட்டிப்போகும்.
அதோடு மஞ்சத்தில் ஓய்வெடுத்தால் என்ன ஆகும்?
தூக்கம் வரும்.
தூக்கம் வந்தால் என்ன ஆகும்?
படபடப்புப் போய்விடாதா?
அது பாட்டி வைத்தியம்.
அதை அறிந்திராத மன்னன் ஆகா அற்புதமான தீர்வு என்று தனக்குள் சொல்லி மகிழ்ந்தான்.
--------------------------------------------------------------------------------------------
துறவிக்குச் சிற்றுண்டியாகச் சர்க்கரைபொங்கலும், வெண்பொங்கலும் வழங்கப் பெற்றது. அதுவும் தங்கத்
தட்டுக்களில் வழங்கப்பெற்றது.

துறவியும் கிடைத்ததை மண்டிவைக்காமல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு மட்டும் சுவைத்து உண்டார்.

மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. துறவியும், "மன்னா நான் புறப்படுகிறேன். இறையருள் இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி எழுந்துவிட்டார்.

மன்னனும் கெஞ்சி ஒருவாரம் இங்கே தங்கிச் செல்லும்படி
வேண்டிக் கொண்டான்

ஒருவாரம் தங்கினால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த துறவி, சற்று நிதானித்துப் பதில் சொன்னார்.

தான் எங்கேயும் தங்குவதில்லை என்றும், ஊருணிக்கரைகளில் உள்ள மண்டபங்களில் மட்டுமே தங்கி ஓய்வெடுப்பது வழக்கம் என்றும் சொன்னார். ஒரு ஊரில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில்லை என்றும் சொன்னார். தன்னுடைய சீடர்கள்
இருவர் காத்துக் கொண்டிடுப்பார்கள் என்றும் சொன்னார்

அரை மனதுடன் அதற்குச் சம்மதித்த மன்னன், சமிக்கை
செய்ய, தேவியரில் மூத்தவள் எழுந்து விரைந்து சென்று
ஒரு தங்கத் தாம்பாளத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு வந்தாள். அது நிறையப் பொற்காசுகளும், வைர ஆபரணங்களும் இருந்தன. இன்றைய மதிப்பில் அவைகள்
பத்துக்  கோடிகளுக்குத் தேறும்.

அதைக் கையில் வாங்கிய மன்னன், துறவியிடம் நீட்டி,
"இந்த எளியவனின் காணிக்கையாக இதை ஏற்றுக்
கொள்ளுங்கள்" என்றான்.

துறவி புன்னகைத்து மறுத்துவிட்டார்.

"நான் முற்றும் துறந்த துறவி. எனக்கெதற்கு இதெல்லாம்?
ஏழை மக்களுக்குக் கொடுங்கள். எனக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும் அது மனித நேயம் மட்டுமே!"

மன்னன் விடவில்லை,"என் அரண்மனைக்கு வந்து விட்டு
நீங்கள் வெறும் கையுடன் போகக்கூடாது. வேறு என்ன
வேண்டும் கேளுங்கள். ஆசிரமம் அமைப்பதற்கு நூறு வேலி
இடம் தரட்டுமா?" என்றான்.

"ஆசிரமம் என்னை ஒரு இடத்தில் முடக்கிவிடும். அதுவும் வேண்டாம். ஏதாவது அவசியம் தர வேண்டும் என்று
நினைத்தால், அந்த மாம்பழத்தில் இரண்டைக் கொடுங்கள். அதுபோதும்!"

அதிர்ந்துவிட்ட மன்னன். இரண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தான். துறவி முகமலர்ச்சியுடன்
அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இதுவரை இங்கு வந்தவர்களில் இவரைவிட எளிமையானவர்
எவரும் இல்லை என்பதை உணர்ந்த மன்னன், அந்த எளிமையை வணங்கும் முகமாக அவரை மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்கிவிட்டுச் சொன்னான்.

"சுவாமி, இப்போதுதான் எனக்கு ஞானம் வந்ததுள்ளது.
ஆசையும், உடைமைகளும்தான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்."

புன்னகைத்த இளம் துறவி புறப்பட்டுவிட்டார். பல்லக்குத்
தூக்கிகள் அவரை ஏற்றிக் கொண்டு போய், புறப்பட்ட
இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள்

மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்ற மன்னன், முதன்
மந்திரியைப் பாராட்டி, அவரிடம் ஆயிரம் பொற்காசுகள் அ
டங்கிய பணமுடிப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினான்.
--------------------------------------------------------------------------------------
அன்று மாலை சூரிய அஸ்தமனமாகி மூன்று நாழிகைகள்
கழித்து, சற்று இருட்டிய நேரத்தில், முதன் மந்திரி, முத்தழகன் வீட்டிற்கு வந்தார்.

ஐந்து மணித்துளிகள் அவன் தந்தையுடன் பேசிவிட்டு, மகிழ்ச்சியுடன் முத்தழகன் இருந்த அறைக்குள் வந்தார்.

மரியாதை நிமித்தமாக எழுந்த முத்தழகனைக் கட்டித் தழுவி, பாராட்டினார்.

"அற்புதமாக நடித்தாய். என்னுடைய எதிர்ப்பார்ப்பையும்
பூர்த்தி செய்தாய். இந்தா இதை வைத்துக்கொள்" என்று
சொல்லி மன்னர் கொடுத்த ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தார்.

அதில் என்ன இருக்கும் என்றுணர்ந்த முத்தழகன் சொன்னான்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்"

மந்திரிக்கு ஆச்சரியமாகி விட்டது. "மன்னர் கொடுத்தை நீ வேண்டாம் என்று சொன்னதற்கு என்ன காரணம் என்று
என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை அவ்வளவு பணம் இருந்தால் ஆபத்து என்று நினைத்து நீ வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இதை ஏன் வேண்டாம் என்கிறாய்? இதை நான் அல்லவா உவந்து கொடுக்கிறேன்" என்று கேட்டார்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

மந்திரிக்குக் கோபம் வந்துவிட்டது."அட, புரியாதவனே, எதற்கு
இதை வேண்டாம் என்கிறாய்? அதைச் சொல்!"

"இன்று ஒரு நாளில் பல விஷயங்களைத் தெரிந்து 
கொண்டேன். ஒரு உண்மையான துறவிக்கு உள்ள 
மதிப்பைத் தெரிந்து கொண்டேன். எத்தனைபேர்கள் 
காலில் விழுகிறார்கள்!
 எத்தனை உள்ளங்களில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது? 
எத்தனை கண்களில் நீர் சுரக்கிறது? எத்தனை உள்ளங்களில் அமைதி குடிகொள்கிறது? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். 
அதில் ஒரு மகத்துவம் இருக்கிறது. அது என்ன என்பதை 
முழுதாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று 
முதல் நான் துறவியாகி விட்டேன். இந்தப் பாழாய்ப்போன பணத்தைக் காட்டி என் மனதைக் கெடுக்க 
முயற்சிக்காதீர்கள்
 (Don't try to pollute my mind by giving this money!)

"............................."

"மன்னனுக்குச் சொல்லியதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். இதை ஏழை மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய பசியை நிரந்தரமாகப் போக்குங்கள். நீங்கள் இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனில்லாது போகும். ஆகவே நீங்கள் செல்லலாம்"
என்று சொன்னவன் தரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

மந்திரிக்கு சம்மட்டியால் அடித்தைப் போன்று ஆகிவிட்டது. திகைத்துப்போய் விட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. செய்யவும் இயலவில்லை.

அங்கிருந்து கிளம்பித் தலைநகருக்குத் திரும்பினார்.

ஒரு உண்மையான துறவியை உருவாக்கிய மகிழ்ச்சி மட்டும் அவருடைய உள் மனதில் நீண்ட நாட்கள் குடிகொண்டது!
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது என்றால், அதன் பின்னணியில்
கேது இருப்பார். அவர்தான் ஞானகாரகன். ஞானம் ஒருவனுக்கு
எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

ஞானத்தைப் பெற்று ஒருவன் ஞானியாகி விட்டால், இந்த
வாழ்வியல் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அவன்
எந்த பாதிப்பிற்கும் உள்ளாக மாட்டான். அதற்கு ஒரு
கொடுப்பினை வேண்டும்.

ஒரே நாளில் அந்த இளைஞனுக்கு ஞானம் கிடைத்தது பாருங்கள், அதுவும் கொடுப்பினைக் கணக்கில்தான் வரும்!!!!!!
                   
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. கேதுவின் அருளால் இந்த கதையை படிக்கும் பாக்கியம் பெற்றேன் ஐயா.
    மிக்க மகிழ்ச்சி.30வயதில் ஞான கதைகளை பேசினாலே என்னை வித்தியாசமாய் பார்க்கும் லௌகீக (கலியுக) மார்க்கத்தில் இருந்து விடுபட கேதுவை விட்டால் வழி ஏது அய்யா?மிக்க நன்றி.த்வைத சித்தாந்த வழியில் பயணிக்கிறேன் அய்யா.

    ReplyDelete
  2. Good morning sir very excellent story, as you said Ketu is responsible for wisdom,in my horoscope ketu in fourth house in vargottama with the aspect of Jupiter makes me wisdom thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. அதிர வைத்த இளம் சன்னியாசி கதை, வேறு வடிவில். அருமை.

    ReplyDelete
  4. வணக்கம்.
    பழைய பதிவுதான், இருந்தாலும் புதியதைப் படிப்பது போல் உள்ளதென்றால் அதன் காரணம் உங்களின் எழுதும் திறமை.இந்த ஞானம் பற்றிய தலைப்பில் தாங்கள் எழுதிய பழைய பாடம் கீழே.

    எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?
    ஆம்.இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.
    இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.

    இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும்).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
    இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

    ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்).
    உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.
    இதைப் போல எல்லா பாடங்களும் பசுமரத்தாணிகள்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே,
    இதுபோன்ற கதைகள் இதுவரை தாங்கள் பதிவிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லையே!? சொல்லுங்கள்
    ஐயா!
    எதிர்பாராத முடிவு!கேது பகவானை
    முன்னிருத்தி கதைக் கருவை மிக
    ஆழமாக அரசர், மந்திரி மற்றும்
    எங்கள் மனதிலும் பதிய வைத்து
    வெற்றி கண்டுள்ளீர்கள் என்பது
    உண்மைதானே, வாத்தியாரையா!

    ReplyDelete
  6. Respected Sir,

    Pleasant morning... Excellent explanation through nice story of Kethu's character...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. Very interesting.

    Sir,

    You have narrated the very good story in a beautiful way.

    Thank you.

    ReplyDelete
  8. This story is from Sri Ramakrishna's short parables. There a thief starts acting as a sanyasi. He becomes real sanyasi when he finds many respect him. Nice story Sir.

    ReplyDelete
  9. /////Blogger saravanan vpn said...
    கேதுவின் அருளால் இந்த கதையை படிக்கும் பாக்கியம் பெற்றேன் ஐயா.
    மிக்க மகிழ்ச்சி.30வயதில் ஞான கதைகளை பேசினாலே என்னை வித்தியாசமாய் பார்க்கும் லௌகீக (கலியுக) மார்க்கத்தில் இருந்து விடுபட கேதுவை விட்டால் வழி ஏது அய்யா?மிக்க நன்றி.த்வைத சித்தாந்த வழியில் பயணிக்கிறேன் அய்யா.////

    உங்கள் பயணம் சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்! நன்றி!!!!

    ReplyDelete

  10. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story, as you said Ketu is responsible for wisdom,in my horoscope ketu in fourth house in vargottama with the aspect of Jupiter makes me wisdom thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  11. ///Blogger SELVARAJ said...
    அதிர வைத்த இளம் சன்னியாசி கதை, வேறு வடிவில். அருமை.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  12. //////Blogger venkatesh r said...
    வணக்கம்.
    பழைய பதிவுதான், இருந்தாலும் புதியதைப் படிப்பது போல் உள்ளதென்றால் அதன் காரணம் உங்களின் எழுதும் திறமை.இந்த ஞானம் பற்றிய தலைப்பில் தாங்கள் எழுதிய பழைய பாடம் கீழே.
    எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?
    ஆம்.இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.
    இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.
    இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும்).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
    இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.
    ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்).
    உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.
    இதைப் போல எல்லா பாடங்களும் பசுமரத்தாணிகள்.
    நன்றி அய்யா./////

    நல்லது. எனது பாடங்களை தன்னுள் பதிய வைத்திருக்கும் உங்கள் மனம் வாழ்க! நன்றி வெங்கடேஷ்!!

    ReplyDelete
  13. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    இதுபோன்ற கதைகள் இதுவரை தாங்கள் பதிவிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லையே!? சொல்லுங்கள்
    ஐயா!
    எதிர்பாராத முடிவு!கேது பகவானை முன்னிருத்தி கதைக் கருவை மிக ஆழமாக அரசர், மந்திரி மற்றும் எங்கள் மனதிலும் பதிய வைத்து வெற்றி கண்டுள்ளீர்கள் என்பது உண்மைதானே, வாத்தியாரையா! ////

    உண்மைதான். உங்களின் புரிதலுக்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  14. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... Excellent explanation through nice story of Kethu's character...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  15. ////Blogger C Jeevanantham said...
    Very interesting.
    Sir,
    You have narrated the very good story in a beautiful way.
    Thank you./////////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஜீவானந்தம்!!!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    This story is from Sri Ramakrishna's short parables. There a thief starts acting as a sanyasi. He becomes real sanyasi when he finds many respect him. Nice story Sir./////

    அப்படியா? எனக்குத் தெரியாது. முன்பு ஒருமுறை ரயிலில் பயணிக்கும் போது சாஸ்திரி ஒருவர் சொன்ன குட்டிக் கதை. அதை நினைவில் கொண்டு நான் என் வழியில் அதை விரிவாக்கி கற்பனையாக சில சம்பவங்களைக் கலந்து சுவாரசியத்துடன் கதையாகத் தொடுத்திருக்கிறேன். நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  17. I have seen this story from a movie sir... but you have told that you have written and published. By considering your age i admired that you are the writer of that movie scene....

    ReplyDelete
  18. ////Blogger Indian said...
    I have seen this story from a movie sir... but you have told that you have written and published. By considering your age i admired that you are the writer of that movie scene..../////

    என்ன படம் என்று சொல்லுங்கள்! நானும் பார்க்கிறேன். நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com