16.7.18

சகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்!


சகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்!

பரமாத்வாவின் வாய்மொழியால் நல்லவன் என்ற பெயரைப் பெற்ற சகுனி!

சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,

இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.

கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.

நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.

அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.

மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.

இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.

எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.

தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.

மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.

ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.

உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.

இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.

நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.

யாகம் தொடங்கலாமே...சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.

ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.

யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.

குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.

வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.

என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.

ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. ?. கேட்டான் அர்ஜுனன்.

அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.

போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.

அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.

என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.

கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.

பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.

இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.

துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.

இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...

தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.

என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.

அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.

கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.

தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?

போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.

பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.

பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன், எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.

பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.

கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.

பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.

யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.

சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.

அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.

என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.

அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.

"என்னை விரும்பி ஏற்பதோ.. விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.." என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்
-----------------------------------------------------
படித்து வியந்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. Respected Sir,

    Happy morning... Excellent explanation from Mahabharata...

    Thanks a lot for sharing. Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஆஹா!என் அருமையான தகவல்!
    சகுனி இத்தனை நல்லவரா? தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா!
    என்னவொரு உட்கதை!கடைசி வரை
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லாது
    மற்றொருவரும் அறியா வண்ணம்
    கதையை கொண்டு சென்று சகுனி இறந்தபின் நடந்தவற்றை விளக்கும்
    கிருஷ்ண பரமாத்மா இறுதியில் உதிர்க்கும் சொற்களுக்கு விலையுண்டோ!!...

    "என்னை விரும்பி ஏற்பதோ.. விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.." என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..."
    அம்மாயக் கண்ணனுக்கு கைகூப்பி
    ஒரு நமஸ்காரம்!

    ReplyDelete
  3. நன்றி ஐயா,
    அற்புதமான விளக்கம்..

    கணேசன்
    சாத்தூர்

    ReplyDelete
  4. Hello Sir,

    I am hearing about sakuni's famiy beig imprisoned by Bheeshma for the first time! i have read Rajaji's Mahabharatham, but i dont remember these things

    What is your source , if your dont mind

    ReplyDelete
  5. Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellent explanation from Mahabharata...
    Thanks a lot for sharing. Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆஹா!என் அருமையான தகவல்!
    சகுனி இத்தனை நல்லவரா? தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா!
    என்னவொரு உட்கதை!கடைசி வரை
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லாது
    மற்றொருவரும் அறியா வண்ணம்
    கதையை கொண்டு சென்று சகுனி இறந்தபின் நடந்தவற்றை விளக்கும்
    கிருஷ்ண பரமாத்மா இறுதியில் உதிர்க்கும் சொற்களுக்கு விலையுண்டோ!!...
    "என்னை விரும்பி ஏற்பதோ.. விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.." என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..."
    அம்மாயக் கண்ணனுக்கு கைகூப்பி ஒரு நமஸ்காரம்!/////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!

    ReplyDelete
  7. ////Blogger ganesh veera said...
    நன்றி ஐயா,
    அற்புதமான விளக்கம்..
    கணேசன்
    சாத்தூர்/////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. Blogger sarav said...
    Hello Sir,
    I am hearing about sakuni's famiy being imprisoned by Bheeshma for the first time! i have read Rajaji's Mahabharatham, but i dont remember these things
    What is your source , if your dont mind/////

    என் நண்பர் ஒருவர் எனக்கு அறியத்தந்தது. விக்கிபீடியாவிலும் இந்தச் செய்தி உள்ளது. Shakuni என்ற பெயரில் இணையத்தில் உள்ளது. படித்துப் பாருங்கள்!!!!
    Link: https://en.wikipedia.org/wiki/Shakuni

    ReplyDelete
  9. அருமை அருமை. பாரத தேசத்தின் அறிவு சுரங்கம் மகாபாரதம்.

    ReplyDelete
  10. /////Blogger SELVARAJ said...
    அருமை அருமை. பாரத தேசத்தின் அறிவு சுரங்கம் மகாபாரதம்.////

    உண்மைதான்! நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir./////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  12. அருமை அய்யா ! சகுனியை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  13. Super Explanation Sir...Never heared this story before.

    thank you Sir!!!

    ReplyDelete
  14. Very Nice Information Sir...Not heard this information before...

    ReplyDelete
  15. ////Blogger vassou devan said...
    அருமை அய்யா ! சகுனியை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  16. ////Blogger sankar said...
    Super Explanation Sir...Never heared this story before.
    thank you Sir!!!/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com