30.5.18

Short Story சிறுகதை: ஈரமண்


Short Story சிறுகதை: ஈரமண்

அன்புடையீர்
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை. அந்த இதழில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்
அன்புடன்
SP.VR. சுப்பையா, கோயமுத்தூர் - 641012
-------------------------------------------------------------
”ஈரமண்ணில் எதை வேண்டுமென்றாலும் விளைவிக்கலாம். அந்த மண் காய்ந்து போய்விட்டால் ஒன்றும் விளையாது. அதுபோல ஒரு பெண் ஈரமண்ணாக இருக்கும்போதே திருமணம் செய்தால், நாம் சொல்கின்ற மாப்பிள்ளைக்கு ஒன்றும் சொல்லாமல் கழுத்தை நீட்டுவாள். கல்யாணம் செய்து கொள்வாள். அதே பெண் சற்று வயதாகி காய்ந்த மண்ணாகி விட்டால் சிரமம். சிக்கல். அவள் கேட்கின்றபடிதான் நாம் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று சிவலிங்கம் செட்டியார் அடிக்கடி சொல்வார்

அதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கும் அவரே விளக்கம் சொல்வார்.

“பதினெட்டிலிருந்து  இருபதோரு வயதுவரைதான் பெண் ஈரமண்ணாக இருப்பாள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்துபோய் இருபத்தியேழு வயதிற்குமேல் சுத்தமாகக் காய்ந்த மண்ணாகி விடுவாள்.”

”இந்தக் காலத்துப் பெண்கள் படிக்க வேண்டும் என்கிறார்கள். படித்தவுடன் வேலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். பிறகு வேலையில் செட்டாக வேண்டுமென்கிறார்கள். செட்டாகி ஒரு நிலைக்கு வரும்போது நீங்கள் சொல்கின்ற இருபத்தேழு வயதாகி விடுகிறதே” என்றால் அதற்கும் பதில் சொல்வார் சிவலிங்கம் செட்டியார்:

”பெண்ணிற்கு கல்வி அவசியம். படிக்க வையுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிடுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? வேலைக்கு அனுப்புவதால்தான் பல கோளாறுகள்!”

"என்னவிதமான கோளாறுகள்?”

”தன் தந்தையைவிட அதிகம் சம்பளம் வாங்குகிறாள். பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கிறது. வெளியுலகக் கண்ணோட்டம் கிடைக்கிறது. தன்னுடன் வேலை பார்க்கும் அழகிய தோற்றமுள்ள இளைஞனைப் பார்க்கும்போது, அவனைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் உண்டாகிறது.
நமது பாராம்பரியம், கலாச்சாரம், வரலாறு எல்லாம் தெரியாத காரணத்தால், அதில் தவறில்லை என்ற சிந்தனையும் உண்டாகிறது.
பல பெண்கள் திசை மாறிச் செல்வதற்கு அதுவே காரணம். வீட்டிற்கு வந்து கண்ணைக் கசக்குவதால், பெற்றவர்களும் வேறு வழியில்லாமல் அவள் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அவள் விரும்பும் பையன் என்ன மொழிக் காரணாக இருந்தாலும், என்ன இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவளுக்குத் துணைபோக வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இது போன்று இன்னும் சில காரணங்கள் உள்ளன. அதனல்தான் சொல்கிறேன். படிக்க மட்டும் வையுங்கள். வேலைக்கு அனுப்பும்
தவறைச் செய்யாதீர்கள்!”

இவ்வாறாக தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியார் பலமுறை சொன்னதைக் கேட்டு, மனதில் பதிந்து விட்ட காரணத்தால், அவருடைய தம்பி சண்முகம் தன் மகள் சாலாவிற்கு, அவள் பி.காம் பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதிய உடனேயே திருமணம் செய்து வைத்து விட்டார்.

தன் மூத்த சகோதரி மீனாட்சி ஆச்சி மகன் விஸ்வநாதனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார். திருமணம் சென்ற சித்திரை மாதம் விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் மணமக்களின் ஜோடிப் பொருத்ததோடு, பெயர்ப் பொருத்தமும் சிறப்பாக அமைந்ததைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள
                 **************************************************************************
சென்னையில் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில் அருகில்தான் மீனாட்சி ஆச்சிக்கு வீடு. ஒரு கிரவுண்டு மனையில் தரையோடு கட்டப்பட்ட வீடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சியின் மாமனார் முன்னின்று கட்டிய வீடு. முன் பக்கம் செம்பருத்தி, நந்தியா வட்டை, பவளமல்லிச் செடிகளுடன் அம்சமாக இருக்கும்.

திருமணமான தம்பதிகள், திருமணமான ஐந்தாம் நாளே பல கனவுகளுடனும் மீனாட்சி ஆச்சியுடனும், ஆச்சியின் அன்புக் கணவர் சின்னய்யா செட்டியாருடனும் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

”நடக்குமென்பார் நடக்காது: நடக்காதென்பார் நடந்துவிடும்” என்ற கவியரசரின் பாடல் வரிகள் உள்ளதைப் போல மீனாட்சி சென்னைக்கு வந்து,  அத்தை வீட்டின் அழகை ரசித்து முடித்த மகிழ்ச்சி இரண்டு நாட்களுக்குமேல் நிலைக்கவில்லை.

தன் மகனையும், மருமகளையும் அழைத்த மீனாட்சி ஆச்சி, மெல்லிய குரலில் சொன்னார்:

”உங்கள் இருவருக்காகவும் பக்கத்துத் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறேன். கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர், தேவையான பாத்திரங்கள் எல்லாம் உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை நல்ல நாள், அங்கே பால் காய்ச்சி உங்களைக் குடிவைக்கலாம் என்று உள்ளேன்.”

உடனே விஸ்வநாதன் குறுக்கிட்டுப் பேசினான்:

”எதற்காக ஆத்தா, தனிக் குடித்தனம்? இத்தனை பெரிதாக நம் சொந்த வீடு இருக்கும்போது, எங்களை ஏன் தனிக் குடித்தனமாகப் போகச் சொல்கிறாய்?”

”நீங்கள் சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்குக் குடும்பப் பொறுப்பும் வரவேண்டும். அதற்காகத்தான்”

”மாதாமாதம் பதினெட்டாயிரம் அல்லது இருபதாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டுமே?”

”ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாயே - கொடுப்பதில் தப்பில்லை. பணம் பற்றவில்லை என்றால் என்னிடம் கேள் - நான் தருகிறேன். எனக்குத் திருமணமான போது, உங்கள் அப்பச்சி அப்போது பம்பாயில் இருந்தார். பைகுல்லா பகுதியில் வீடு பிடித்து வைத்திருந்தார். திருமணமான மூன்றாவது நாளே பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனோம். எல்லாம் புதிது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத் தனியாக அனுப்பி வைக்கிறேன்.”

அதற்குமேல் ஆச்சியின் மகன் ஒன்றும் சொல்லவில்லை. ஆச்சி அவர்கள் முடிவு செய்தபடியே புதுமணத் தம்பதிகள் இருவரும் தனிக் குடித்தனம் போய்விட்டார்கள்

                  ****************************************************************************

தனிக் குடித்தனம் போன பிறகுதான் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலை தூக்கின.

விசாலாட்சிக்கு சமைக்கவே தெரியாது. படிக்கின்ற காலத்தில் சமையலறைப் பக்கமே போக மாட்டாள். படித்து முடித்து முடிக்கவே  திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.

முதல் நாள் காலை, உப்புமா என்ற பெயரில், கோதுமை ரவையில் சாலா உப்புமா செய்து வைக்க, ஒரு வாய் சாப்பிட்ட விஸ்வநாதன், அதில் உப்பு கூடுதலாக இருக்க சாப்பிடாமல் எழுந்து விட்டான். கம்பெனி கேண்ட்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி, எழுந்து போய் விட்டான்.

சாலாவிற்கு மிகுந்த வருத்தமாகப் போய் விட்டது.

விஸ்வநாதன் தன் தாயாரின் சமையலில் அசத்தலாக சாப்பிட்டுப் பழகியவன். கத்தரிக்காய் கெட்டிக் குழம்பு, கருணைக் கிழங்கு மசியல், முருங்கைக்கீரை - வாழைப்பூ துவட்டல், புடலங்காய் கூட்டு என்று விதம் விதமாக சாப்பிட்டுப் பழகியவன்.

பதினோரு மணிக்கு, தன்னைப் பார்க்க வந்த தன் மாமியாரிடம், கண்ணில் கண்ணீரோடு சாலா விஷயத்தைச் சொல்ல
அவர்கள் ஆறுதலாகச் சொன்னார்கள்:

”நோ பிராப்ளம். இரவு தங்க மட்டும் இந்த வீட்டைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பெரிய வீட்டிற்கு இருவரும் வந்து விடுங்கள். மூன்று அல்லது நான்கு மாத காலம் நான் உனக்கு பயிற்சியாக சமையலைச் சொல்லித் தருகிறேன். அங்கேயே சாப்பிடுங்கள். உனக்கு நன்றாக சமையல் வரும்வரை வாத்தியார் வேலையை நான் செய்கிறேன். என்ன சரிதானே?”

தனக்கு சுத்தமாக சமைக்கத் தெரியாது என்பதைச் சொல்லாமல் இருந்ததற்காக தன் அத்தையிடம் மன்னிப்புக் கோரிய சாலா, அன்று முதலே தன் அத்தையிடம் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கினாள்.

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது.

*****************************************************************************

காலதேவனின் ஓட்டத்தில் ஆறு மாத காலம் போனதே தெரியவில்லை.

சாலா உண்டாகியிருந்தாள். பெண் மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்தார். அதற்குப் பிறகும் சாலாவின் பகற் பொழுது அவளுடைய மாமியார் வீட்டிலேயே தொடர்ந்தது.  ரம்மியமாகவும் கழிந்தது.

சாலா மாமியார் வீட்டில் வளைய வளைய வந்ததுடன், மாமியாரின் மீது அளவில்லாத அன்பைப் பொழிய, அவர்களும் அவளுடைய அன்பில் மயங்கி விட்டார்கள்.

சாலாவின் மீது இருந்த பிரியத்தின் காரணமாக, பிடித்திருந்த குடியிருப்பு வீட்டைக் காலி செய்து விட்டு, தன் மகனையும், மருமகளையும் தங்களோடு ஒன்றாக இருக்கச் சொல்லிவிட்டார் மீனாட்சி ஆச்சி. அவர்கள் இருவருக்கும் வீட்டில் தனி படுக்கை அறை ஒன்றையும் கொடுத்துவிட்டார்.

சாலாவின் மாமாவும் வங்கி ஒன்றில் பொது மேலாளர் பதவிவரை உயர்ந்து சென்று பின் பணி ஓய்விற்குப் பிறகு வீட்டோடுதான் உள்ளார். வீட்டில் இருந்தவாறே பங்கு வணிகத்தில் ஈடு பட்டிருந்தார். முன் பக்கத்தில் அவருக்கான பிரத்தியோக அறை இருந்தது. சாலாவின் அன்பான நடவடிக்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சாலாவும் சமையலைக் கற்றுக் கொண்டு அசத்தத் துவங்கி விட்டாள். கும்மாயம், வெள்ளைப் பணியாரம், கொழுக்கட்டை, பச்சைத் தேங்குழல் என்று இடைப் பலகாரம் வரை எல்லாம் செய்யத் துவங்கி விட்டாள். மேலும் இணையதள உதவியுடன், சைனீஷ் உணவுகளையும் செய்யத் துவங்கினாள். கோபி மஞ்சூரியன் செய்தால் சைனாக்காரனே அசந்துவிடுவான். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

சாலாவின் பெற்றோர்கள் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக சென்னைக்கு வந்திருந்தவர்கள், தாங்கள் எதிபார்த்ததைவிட சாலா அதிக சமர்த்தாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்த்துவிட்டு மிகவும் அதிசயத்துப் போனர்கள்.

அதைவிட அதிசயம் ஒன்றும் நிகழ்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர், தன் ஆச்சிக்கும், மகளுக்கும் தலா நான்கு பட்டு சேலைகளைக் கொண்டு வந்து கொடுத்ததோடு, தன் ஆச்சியிடம் மெதுவாக வினவினார்:

”ஆச்சி, சாலாவின் பிரசவத்தை நாங்கள் காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள்கிறோம்....”

மீனாட்சி ஆச்சியின் பதில் வியப்பாக இருந்தது.

”சாலாவைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. சாலா சென்னையிலேயே எங்களோடு இருக்கட்டும். சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். அவளுடைய பிரசவத்தை எனக்குத் தெரிந்த பெண் மருத்துவர் மூலம் நான் பார்த்துக்கொள்கிறேன். மருந்தீஸ்வரர் அருளால் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும். அவளைப் போலவே அது அழகாகவும், குணவதியாகவும் இருக்கட்டும். அதுதான் என் பிரார்த்தனையும், வேண்டுகோளும்”

அவர்களுடைய பேச்சு அத்துடன் நிறைவிற்கு வந்தது!

***********************************************************************

தங்கள் ஊர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்ற சண்முகம் அண்ணன், தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியாரைப் பார்த்து, சாலாவின் மேன்மையான வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு தன் சந்தேகத்தைக் கேட்டார்:

”அண்ணே, எத்தனை காலமானாலும், எந்த சூழ்நிலையானாலும், சில பெண்கள் மட்டும், காய்ந்து போகாமல் ஈர மண்ணாகவே இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?”

”தினமும் தண்ணீர் விடப்படடும் மண் காய்ந்து போகாமல் ஈரமாகவே இருக்கும். அதுபோல அன்பெனும் தண்ணீரை தொடர்ந்து ஊற்றுவதால், அந்தப் பாக்கியம் கிடைக்கப் பெற்ற பெண்கள் எப்போதும் ஈர மண்ணாகவே இருப்பார்கள்”

தன் சகோதரரின் நெஞ்சைத் தொடும் இந்தப் பதிலால் சண்முகம் அண்ணனின் கண்கள் பனித்துவிட்டன

**********************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. Good morning sir very excellent story,in your all story our beloved god lord Palaniyappan will enter in this story, amazing not to see our lord instead we see marundeeswarar, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. உண்மையான அன்பினால் பெண்கள் தெய்வமாக மாறிவிடுகின்றனர் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    இப்படிப்பட்ட குணவதியாக ஒரு மருமகளும், எல்லா நற்குணங்களும் பொருந்திய இக்கதையில் வருவது போன்ற மாமியாரும் எல்லோருக்கும்
    கிடைக்க இறைவன் பாலிக்க வேண்டுகிறேன்!
    தித்திக்கும் கதை! எழுதிய வாத்தியாருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com