Short Story: சிறுகதை: மனக்கசப்பு!!!
சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் வெளிவந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
திருமணமாகி மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்கு வந்த மருமகள், அடுத்து வந்த பதினைந்தாம் நாளிலேயே மனக்கசப்புடன் தன் தாய் வீட்டிற்குத் திரும்பிப் போய் விட்டாள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பார்ப்பவர்களைப் பரவசப்பட வைக்கும் அழகான பெண் அவள். பெயர் மகாலெட்சுமி. பெயருக்கு ஏற்றார்ப்போன்ற தோற்றமுடையவள். பெண் பார்க்கும் சமயத்தில் தோதைப் பற்றி கவலைப் பட்ட அவளுடைய பெற்றோர்களிடம், “ தோதைப் பற்றி நீங்கள் ஒன்றும் நினைக்க வேண்டாம். எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. உங்களால் முடிந்ததை உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று பையனின் தாயார் ரெங்கநாயகி ஆச்சி ஆறுதலாகச் சொல்லி விட்டார்கள்.
பெண்ணிற்கு வைரத் தோடு, வைரப் பூச்சரம், முப்பது பவுன் தங்க நகைகள் மட்டும்தான் அவளுடைய தாய் வீட்டில் போட்டார்கள்
சொன்னதைப் போலவே, மாப்பிள்ளையின் தாயார் ரெங்கநாயகி ஆச்சி திருமணத்தன்று, வைரத்தாலி, வைரத்தில் லாங் செயின், வைர வளையல்கள், தங்கத்தில் ஒட்டியாணம் என்று மருமகளை நகைகளால் அலங்கரித்து அசத்தி விட்டார்.
காரைக்குடியில் ஐந்து விளக்குகள் அருகே தர்ம நாராயணன் செட்டியார் தெருவில்தான் ரெங்கநாயகி ஆச்சிக்கு வீடு. பெண் வீட்டாரும் காரைக்குடிதான். முத்துப் பட்டணத்தில் வீடு.
“இரண்டு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை ஒன்றாக நடத்தி வைப்போம். அலைச்சல் இருக்காது” என்று சொல்லி ரெங்க நாயகி ஆச்சி பெரிய திருமண மண்டபத்தைப் பிடித்து, திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். எல்லா செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டு, பெண் வீட்டாரிடம் நீங்கள் ஒன்றும் தர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். ஆச்சியின் செல்வச் செழிப்புதான் அதற்குத் துணை செய்தது. எதிர்பார்த்தபடி அழகான மருமகள் கிடைத்த மகிழ்ச்சியில் ஆச்சியும் மனமுவந்து அதைச் செய்தார்கள்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் குலதெய்வக் கோவில், குன்றக்குடி என்று புதுமணத் தம்பதிகளை அழைத்து சென்றவர் நான்காம் நாள் அன்று தாங்கள் வசிக்கும் ஊரான திருச்சிக்கு கணவர், மணமக்கள், சகிதமாகப் புறப்பட்டு வந்து விட்டார்.
திருச்சிக்கு வந்த இரண்டாம் நாளிலேயே புது மருமகள் மகாலெட்சுமிக்கு இரண்டு விஷயங்கள் பிடிபட்டது. தன் கணவன் திருமணத்திற்கு முன்பு பார்த்து வந்த பெங்களூர் வேலையை உதறிவிட்டு வந்து விட்டான். இனிமேல் அவன் திருச்சியிலேயே அவன் தந்தையாரின் தொழிலுக்கு உதவியாக இருக்கப் போகிறான் என்பது தெரிய வந்தது. அத்துடன் தான் பார்த்து வந்த ஐ.டி கம்பெனி வேலையை பெங்களூக்கு மாற்றிக் கொண்டு வேலையில் தொடர்வது சாத்தியமில்லை என்பதும் தெரிய வந்தது.
அவளுடைய கனவுகள் எல்லாம் தகர்ந்து விட்டது. நிலை குலைந்து போய்விட்டாள். அவள் பொறியியல் படிக்கும் காலத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்வானவள். படித்து முடித்தவுடனேயே நல்ல நிறுவனம் ஒன்றில் கை நிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது. முனைப்புடன் வேலையைக் கற்றுக் கொண்டவளுக்கு அந்த நிறுவனத்தின் மேலதிகாரிகளிடமும் நல்ல பெயர் இருந்தது. திருமணத்திற்குப் பிறகும் வேலையில் தொடர வேண்டும் என்ற கனவும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது.
பெண் பார்க்கும் சமயத்தில், தனித்துப் பேசும்போது அதை பாலாஜியிடமும் சொல்லியிருந்தாள். அவனும் சரி என்று சொல்லியிருந்தான். திருமணத்திற்குப் பிறகு இப்போது அதைப் பற்றிக் கேட்டால், பொறுமையாக இரு திருச்சியிலேயே உனக்கு ஒரு வேலை பார்த்துத் தருகிறேன் என்கிறான். அவளுக்கு நம்பிக்கை இல்லை. திருச்சியில் எங்கே பெரிய ஐ.டி கம்பெனிகள் உள்ளன? எல்லாம் ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டாள்.
தில்லை நகரில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டாம் என்று நினைத்தால், திருவரங்கத்தில் எங்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளன. அங்கே போய்விடலாம் என்றும் சமாதானம் சொல்கிறான். கூட்டுக் குடும்பம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எனக்கு என் வேலை முக்கியம், அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டால், பொறுத்திரு. உன்னுடைய லீவை நீட்டித்து வை...பார்ப்போம் என்கிறான்.
அவளுக்கு நம்பிக்கை போய் விட்டது.
திருமணம் முடிந்த பதினைந்தாம் நாள் அவளைப் பார்க்க வந்த தன்னுடைய தந்தையுடன், இரண்டு நாளில் வருகிறேன் என்று மட்டும் இவர்கள் வீட்டில் சொல்லி விட்டு அவள் புறப்பட்டுப் போய் விட்டாள்.
போனவள் வரவில்லை. பிரச்சினையாகி விட்டது.
பிரச்சினையை முழுமையாகத் தெரிந்து கொள்ள, திருமணத்திற்கு முன்பு நடந்ததையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாருங்கள், அதைப் பார்ப்போம்!
******************************************************************************
ரியல் எஸ்டேட் ரெங்கநாதன் செட்டியார். திருச்சி நகரில், மிகவும் பிரபலமானவர். இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புக்களைக் கட்டி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.
சுமார் நூறு பணியாளர்கள் அவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். தன்மையாகத்தான் பேசுவார். எல்லோரிடமும் தன்மையாகத்தான் பழகுவார்.
ஒரு நாள், அவருடைய மனைவி ரெங்கநாயகி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக அவரிடம் அதிர்ந்து பேசவும் அவர் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.
“என்ன சொல்கிறாய் ரெங்கநாயகி?” என்று அவர் மீண்டும் கேட்கவும், ஆச்சி அவர்கள் தன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு மெதுவாகச் சொன்னார்கள்.
“எதற்காக நம் மகன் பாலாஜியை, பெங்களூர் வேலையை விட்டு விட்டு இங்கே வரச் சொல்கிறீர்கள்?”
“நானாக வரச் சொல்லவில்லை! அவன் வேலை பிடிக்கவில்லை. அதிகமான பணிச் சுமை. காலை ஒன்பது மணிக்குப் போனால் இரவு ஏழு மணிவரை வேலை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சனிக்கிழமைகளில் கூட வந்து வேலை பார்க்கச் சொல்கிறார்கள்.தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்களுக்கு ஒரு நாள்தான் விடுமுறை கொடுக்கிறார்கள் என்று சொன்னான்”
“ஆமாம். அவன் வேலை பார்ப்பது அமெரிக்கக் கம்பெனி. லெட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களே! வேலை பார்ப்பதில் என்ன தவறு? அவன் கூடப் படித்த பையன்கள் எல்லாம் முப்பதாயிரம், நாற்பதாயிரம் சம்பளத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு அறுபதாயிரத்தில் சேர்ந்தவனுக்கு இப்போது லெட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களே! அதற்காக சந்தோஷப் பட வேண்டாமா?”
“அத்துடன் பெங்களூரையும் பிடிக்கவில்லை என்கிறான். நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கவில்லை என்கிறான்.மேலும் அங்கே நிலவும் அதீதமான போக்குவரத்து நெரிசலில் வண்டி ஓட்ட முடியவில்லை என்கிறான். அங்கே, எங்கே பார்த்தாலும் பல இடங்களில் டிராஃபிக் ஜாமாகி விடுகிறதாம். அவன் குடியிருக்கும் மல்லேஷ்பாளையாவிலிருந்து மடிவாலா வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகிறதாம். நாம் ஊருக்கு காரை எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். ஓம்னி பஸ்ஸில்தான் வந்து திரும்ப வேண்டும். பெங்களூரில் பன்னிரெண்டு லெட்சம் கார்கள் உள்ளனவாம். ஓலா டாக்ஸி மட்டும் ஒரு லெட்சம் வண்டிகள் ஓடுகின்றனவாம். வீட்டை விட்டு வெளியே வந்தாலே சள்ளையாக இருக்கிறது என்கிறான். அதனால்தான் வேலையை விட்டு வந்து விடு என்றேன்”
“இங்கே வந்து என்ன செய்யப் போகிறானாம்?”
“என்னுடன் சேர்ந்து என்னுடைய தொழிலைப் பார்க்கட்டுமே! எனக்கும் நம்பிக்கையான உதவியாளர் ஒருவர் வேண்டியதிருக்கிறது. அதே சம்பளத்தை இங்கே மாதா மாதம் நான் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். வீட்டோடு தங்கிக் கொள்ளலாம் இல்லையா? யோசித்துப் பார்!”
"அதில் யோசிப்பதெற்கெல்லாம் ஒன்றும் இல்லை. அவனுக்கு ஒரு வருடமாகப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் அமைய மாட்டேன் என்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் பலவிதமாகக் கேள்வி கேட்கிறார்கள். வேலையில் இருக்கிறான். வெளியூரில் இருக்கிறான், என்றால் பெண் கிடைக்கும். சொந்தத் தொழில் - அப்பச்சியோடு சேர்ந்து செய்கிறான் என்றால் பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே திருமணம் முடியும்வரை அவன் வேலையில்தான் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். அதுவரை என் பேச்சைக் கேளுங்கள். உங்கள் அண்ணன் மகன் இவனைவிட இரண்டு வயது மூத்தவன். அவனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. ஏனென்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் கதை கதையாகச் சொல்வார்கள்”
தன் மனைவியின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர், அதற்குப் பிறகு பேசவில்லை. அவர்களின் உரையாடல் முடிவிற்கு வந்தது. இதுதான் திருமணத்திற்கு முன்பு நடந்தது.
சென்னையில் பெண்பார்த்து திருமணத்தைக் கெட்டி செய்து கொள்ளும் சமயத்தில், பெண் வீட்டாரிடம், திருமணத்திற்குப் பிறகு பையன் வேலைக்குச் செல்ல மாட்டான். திருச்சியில் எங்களோடுதான் இருக்கப்போகிறான் என்பதை இவர்கள் சொல்லவில்லை. அதே போல் தன்னிடம் தனித்துப் பேசும்போது, திருமணத்திற்குப் பிறகும் நான் வேலைக்குச் செல்வேன்.என்று பெண் தன்னிடம் சொன்னதை பாலாஜி, தன் பெற்றோர்களிடம் சொல்லாமல் விட்டு விட்டான். அதை அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுதான் காரணம். இப்போது அதுவே கோளாறாகப் போய் விட்டது.
பெண் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். “நான் வேண்டுமென்றால் என் கணவர் இங்கே வரட்டும். நான் திருச்சிக்குப் போய் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை. எனக்கு என் வேலை முக்கியம். நாளை முதல் நான் மீண்டும் வேலைக்குப் போகப் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னவள், அதைச் செயல் படுத்தவும் துவங்கி விட்டாள்!
*********************************************************************
ரெங்கநாயகி ஆச்சியின் மூத்த சகோதரர் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் மன இயல் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, இப்போது பணி ஓய்வில் இருக்கிறார். திருமணமாகும் தம்பதியர்களுக்குள் பிரச்சினை என்றால் சிறப்பாகப் பேசி, பிரச்சினைகளை சரி செய்து, தம்பதிகளுக்குள் ஏற்படவிருக்கும் மனமுறிவை சரி செய்து, விவாகரத்தில் முடியாமல், இருவரையும் சேர்த்து வைக்ககூடிய வல்லமை பெற்றவர் அவர். திருமண ஆலோசகர் (Marriage Counsellor)
தன் சகோதரி வீட்டில் பிரச்சினை என்பதைக் கேள்விப் பட்டவுடன், புறப்பட்டு வந்து விட்டார். இவர்களிடமும் பேசினார். சென்னைக்குச் சென்று பெண்ணிடமும், பெண் வீட்டாரிடமும் பேசினார்.
என்ன செய்தால், பிரச்சினை சரியாகும் என்பதைத் தெளிவாகச் சொன்னார்:
“அந்தப் பெண் மகாலெட்சுமி மிகுந்த மனக் கசப்போடு இருக்கிறாள். அவளுடைய மனக் கசப்பு நியாயமானது. அவள் படித்த படிப்பிற்கும், ஆர்வத்திற்கும் அவள் வேலைக்குச் செல்வது தவறில்லை. தவறெல்லாம் உங்கள் பக்கம்தான். திருமணத்திற்குப் பிறகு எங்கள் மகன் எங்களோடுதான் இருக்கப் போகிறான். பெங்களூருக்குச் செல்ல மாட்டான் என்பதை நீங்கள் மறைத்து விட்டீர்கள். அது முதல் தவறு. அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகும் நான் வேலைக்குச் செல்வேன் என்று சொன்னதை உங்கள் மகன் உங்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டான். அது இரண்டாவது தவறு. மனக் கசப்பிற்கு மருந்து கிடையாது. அந்த இரண்டு தவறுகளையும் சரி செய்வதுதான் முறையாகும். அதுதான் தீர்வும் கூட. தாமதிக்காமல் உடனே அதைச் செய்யுங்கள்”
“என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் அண்ணே” என்று ரெங்க நாயகி ஆச்சி இடை மறித்து சொல்லவும், அவர் தொடர்ந்து சொன்னார்:
“என்னிடம் படித்த மாணவர்தான் பாலாஜி வேலை பார்த்த கம்பெனியின் முதன்மை அதிகாரி- அதாவது சி.யி.ஓ. நான் அவரைப் பார்த்து பாலாஜி மீண்டும் வேலையில் சேர ஏற்பாடு செய்கிறேன். அத்துடன் அவர்களுடைய சென்னைக் கிளைக்கும் மாற்றல் வாங்கித் தருகிறேன். மகாலெட்சுமி வேலை பார்க்கும் நிறுவனம் திருவான்மியூரில் இருக்கிறது. பாலாஜி யின் கம்பெனிக் கிளையும் திருவான்மியூரில் ஓ.எம் மார் ரோட்டில்தான் உள்ளது. திருவான்மியூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருவரும் தங்கி வேலைக்குச் செல்வதற்கு வசதியாக வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தட்டும். உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”
தன் மூத்த சகோதரரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படியே அனைத்தையும் ரெங்கநாயகி ஆச்சி செய்தார்.
ஒரு ஆண்டு காலம் சென்றதே தெரியவில்லை.
திருவான்மியூரில் உறையும் மருந்தீஸ்வரர் அருளால், அடுத்த ஆண்டே மகாலெட்சுமி ஒரு பெண் மகவை ஈன்றாள்.
பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்ற தன் மாமியாரிடம் மகாலெட்சுமி மகிழ்ச்சியோடு சொன்னாள்
“அத்தை, இவளுக்கு ரெங்கநாயகி’ என்று பெயர் வைக்கலாம் என்று உள்ளேன்”
அதைக் கேட்ட ரெங்கநாயகி ஆச்சியின் கண்கள் பனித்தன!!!!
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
கதை இல்லை, வாழ்க்கைப் பாடம். அருமை.
ReplyDeleteGood morning sir very excellent story sir thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் ஐயா,பல பெற்றோர்கள் வீண் பிடிவாதத்தால் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கி விடுகிறார்கள்.பையனை பெற்றவர் என்ற
ReplyDeleteஈகோவில் இல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஆச்சியின் விவேகம்,பல பெற்றோருக்கு ஒரு பாடம்.நன்றி
As is usual your story is a positive one. Very nice
ReplyDeleteநல்ல கதை கரு....ஸூப்பர்
ReplyDeleteபரஸ்பரம் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பளித்து வாழ்க்கையை இனிதாக்க முயல்பவர்கள் தேவை. உயர்ந்த கருத்து நிரம்பிய கதை. வாத்தியார் அவர்கட்கு வாழ்த்துக்கள் .
ReplyDelete////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteகதை இல்லை, வாழ்க்கைப் பாடம். அருமை.////
நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very excellent story sir thanks sir vazhga valamudan////
நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,பல பெற்றோர்கள் வீண் பிடிவாதத்தால் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கி விடுகிறார்கள்.பையனை பெற்றவர் என்ற
ஈகோவில் இல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஆச்சியின் விவேகம்,பல பெற்றோருக்கு ஒரு பாடம்.நன்றி/////
உண்மைதான். நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteAs is usual your story is a positive one. Very nice////
நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
////Blogger sendil said...
ReplyDeleteநல்ல கதை கரு....ஸூப்பர்////
நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!!
////Blogger Thanga Mouly said...
ReplyDeleteபரஸ்பரம் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பளித்து வாழ்க்கையை இனிதாக்க முயல்பவர்கள் தேவை. உயர்ந்த கருத்து நிரம்பிய கதை. வாத்தியார் அவர்கட்கு வாழ்த்துக்கள் /////
நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!!!!!