7.3.18

தியாகி ‘தில்லையாடி வள்ளியம்மை’


தியாகி ‘தில்லையாடி வள்ளியம்மை

அந்தப் பெண்ணுக்கு 15 வயதுதான். படுக்கையில் அசைய முடியாமல் படுத்துக்கிடக்கிறார்.

உறவினர்கள் சுற்றிலும் உட்கார்ந்து இருக்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காக காந்தி வருகிறார். காந்தியைப் பார்த்ததும் எழுந்து உட்கார அந்தப் பெண் முயற்சிக்கிறார். முடியவில்லை...

அவரைத் தூக்கி உட்காரவைக்கிறார் காந்தி.

‘சிறைதானே உன் உடம்பை இப்படி ஆக்கிவிட்டது. சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா?’ என்று காந்தி கேட்டதுமே,

‘வருத்தமா? நிச்சயமாக இல்லை! இப்போது இன்னொரு தடவை கைதுசெய்யப்பட்டால் சிறைக்குச் செல்ல நான் தயார்!’ என்று அந்தப் பெண் சொன்னார்.

எழுந்து உட்காரக்கூட முடியாத அந்தப் பெண்ணின் நெஞ்சில் மட்டும் எழுச்சி இருப்பதை உணர்ந்து ஆச்சர்யப்பட்டார் காந்தி. ஒரே கேள்வியை வேறுவேறு மாதிரி கேட்பது காந்திக்கு வழக்கம். மறுபடியும் கேட்டார்.

‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்?’ என்று காந்தி கேட்ட கேள்விக்கு

அந்தப் பெண் பதில் சொன்னார்:

‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?’’

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, பார் போற்றும் மகாத்மா காந்தியாக மாற்றியது அந்த நொடிதான்!

‘எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்’ என்று காந்தி பாராட்டியது கோபால
கிருஷ்ண கோகலேவை அல்ல... பாலகங்காதர திலகரை அல்ல... தாதாபாய் நௌரோஜியை அல்ல... விபின் சந்திர பாலை அல்ல.
15 வயதே ஆன தமிழ்ப் பெண் வள்ளியம்மையைத்தான் அப்படிச் சொல்லி வணங்கினார்.

தில்லையாடி அவருக்குச் சொந்த ஊர் என்பதால், ‘தில்லையாடி வள்ளியம்மை’ என்று அழைக்கப்படுகிறார்.

லண்டனில் 1914-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார் காந்தி. முன்வரிசையில் லாலா லஜபதிராய், முகமது அலி ஜின்னா, கவிக்குயில் சரோஜினி தேவி போன்றவர்கள் உட்கார்ந்து
இருக்கிறார்கள். தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிச் சொல்லிவிட்டு, ‘‘இப்படிப்பட்டவர்களே இந்திய நாட்டை உருவாக்குவார்கள். இத்தகைய தியாகச் சுடர்களுக்கு முன்
நம்மைப் போன்றவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களே!’’
 என்று சொன்னார் காந்தி.

இந்தியாவுக்கு வந்த காந்தி, தமிழகம் வரத் துடித்தார். தமிழகம்
வந்த காந்தி, தில்லையாடிக்குப் போகத் துடித்தார். இந்தியாவை தனது கால்களால் அளந்த காந்தியை சீர்காழிக்குப் பக்கத்தில் சின்ன ஊரான தில்லையாடியை நோக்கி நகர்த்தியது வள்ளியம்மாளின் வீரமும் தீரமும்!

தென்னாப்பிரிக்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பூர்வகால பந்தமும் சொந்தமும் உண்டு. அங்குள்ள தங்கம், வைரச் சுரங்கங்களில் வேலை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து கூலிக்கு ஆட்களை
அழைத்துக்கொண்டு போவார்கள். இன்றைக்கு பீகாரில்
இருந்தும் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் அழைத்து வருகிறோம் அல்லவா, அதைப்போல!

தென்னாப்பிரிக்கா அப்போது பிரிட்டிஷார் ஆதிக்கத்தில் இருந்தது. இந்தியாவும் இருந்தது. ஓர் அடிமை தேசத்தில் இருந்து இன்னோர் அடிமை தேசத்துக்கு அழைத்துப் போனார்கள்.

பழவேற்காட்டிலும், நாகப்பட்டினத்திலும் சதுரங்கப்பட்டணத்திலும் இருந்து அழைத்துப் போய் தென்னாப்பிரிக்காவில் நியூகேப், நேடால், டிரான்ஸ்வால், ஆரஞ்சு ஆகிய மாகாணங்களில் குடியேற்றினார்கள். இங்கிருந்து கப்பலில் ஏற்றுவது; அங்கே போய் கொட்டுவது. 1860-ம் ஆண்டு, முதல் கப்பல் போனது. 1911-ம் ஆண்டு வரை இந்த ஆள்பிடிக்கும் வர்த்தகம் நடந்தது. தோராயமான கணக்கின்படி அந்த 50 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் தமிழர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் கொண்டு போகப்பட்டார்கள்.
கரும்புத் தோட்டத்திலும் சுரங்க வேலையிலும் தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் மூச்சுக்காற்றையும் விட்டார்கள். அதற்குப் பரிகாரமாக, குறைந்தபட்ச கூலி கிடைத்ததே தவிர, குறைந்தபட்ச மரியாதையும் உரிமையும் தரப்படவே இல்லை.

இப்படிப் போனவர்களில் ஒருவர்தான் தில்லையாடியைச் சேர்ந்த ஆர்.முனுசாமி. கையில்  கொஞ்சம் காசு வைத்திருந்ததால் காய்கறிக்கடை வைத்தார் முனுசாமி. ஜோகன்ஸ்பர்க்கில்
வாழ்ந்து வந்த ஜானகியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள்தான் வள்ளியம்மை.

உங்களுக்கு நினைவில் இருக்கும்... ரயிலில் முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கிப் பயணம் செய்த காந்தியை, அதில் இருந்து இறக்கி வெள்ளையன் ஒருவன் வெறிகொண்டு தள்ளிவிட்ட நிகழ்வு.

தென்னாப்பிரிக்காவுக்கு ஓராண்டு காலம் வேலைக்குப் போன காந்தியை 20 ஆண்டுகள் அங்கு தங்க வைத்ததற்குக் காரணம்,
இந்த தள்ளிவிட்ட நிகழ்வுதான். இதே காலகட்டத்தில்தான்
முனுசாமி உள்ளிட்ட தமிழர்கள் சேர்ந்து ‘டிரான்ஸ்வால் தமிழ் பெனிஃபிட் சொஸைட்டி’ என்ற நிறுவனத்தையும்,
‘இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பையும் தொடங்கினார்கள். இந்த அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார் காந்தி.

குறிப்பிட்ட இடத்தில்தான் இந்தியர்கள் வாழ வேண்டும், கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம் மட்டுமே செல்லும், இந்தியர்கள் அனைவரும் தலைவரி செலுத்த வேண்டும் என்ற மூன்று
சட்டங்களையும் கடுமையாக எதிர்த்தார்கள் இந்தியாவில்
இருந்து சென்றவர்கள். இந்த சட்டங்களை எதிர்த்து இந்தியர்கள் வாழும் இடங்களில் மாபெரும் பயணத்தை நடத்தினார் காந்தி. பெண்களும் அதிகமாக பெயர் கொடுத்ததால் கஸ்தூரிபாய் தலைமையில் பெண்கள் அணியே உருவானது.

மொத்தம் 2,221 பேர் காந்திக்குப் பின்னால் நடந்துபோனார்கள்.
அதில் 127 பேர் பெண்கள். 57 பேர் குழந்தைகள். அதில் ஒரு குழந்தைதான் வள்ளியம்மை. 15 வயது என்பதால் குழந்தை பட்டியலிலேயே அவர் பெயர் இருந்தது.

சுமார் 2 ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் உறுதிமொழி தாளை எடுத்துப்படிக்கப் போன காந்தி, கூட்டத்தைப் பார்த்து, ‘யார் படிக்கிறீர்கள்?’ என்றார். ‘நான் படிக்கிறேன்’ என்று வந்தாள் வள்ளி.

சிரித்தபடியே தாளை வள்ளியின் கையில் கொடுத்தார் காந்தி. மக்கள் பயணம் புறப்பட்டது.

இந்தியர்கள் வரக் கூடாது என்ற நேடால் மகாணத்துக்குள் நுழைவதுதான் காந்தியின் திட்டம். அதற்கு முன்னதாக கலவரம் ஏற்படுத்தி காந்தியை சுட திட்டமிட்டது தென்னாப்பிரிக்க
போலீஸ். ஓர் இடத்தில் காந்தியை குறி பார்ப்பதுபோல ஒரு போலீஸ்காரர் வர, அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை,
திடீரென காந்திக்கு முன் வந்து நின்றார். மக்கள் பயணத்தில்
நடந்து வந்த அனைவரையும் தன் வீட்டுத் திருமணத்துக்கு வந்தவர்கள்போலக் கவனித்துக்கொண்டார்

வள்ளியம்மை. 56 நாட்கள் நடந்தது இந்த நடைப்பயணம்.
இறுதியில் எல்லோருடனும் வள்ளியும் கைதானார்.

ஒவ்வொருவரையும் பதிவு செய்யும்போது இவர்கள், தங்களை இந்தியர்கள் என்று  பதிவு செய்துகொண்டார்கள். ‘ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே?’ என்று சிறை
அதிகாரிகள் கேட்டார்கள். வள்ளியிடம், ‘‘இந்தியா என்ற
ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே?’’ என்று ஒரு சிறை அதிகாரி கேட்டார். தான் அப்போது உடுத்தி இருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, ‘‘இதுதான் இந்தியாவின் கொடி.
இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே!’’ என்று திரும்பக் கேட்டார் வள்ளி. அவரிடமிருந்து அந்தத் துணியை வாங்கிய கஸ்தூரிபாய், அதனைப் பாதுகாப்பாக காந்தியிடம் கொடுத்தார் என்பதும்  வரலாறு.

மெலிந்த உடல் வள்ளிக்கு. சிறை அதனை மேலும் சிதைத்துவிட்டது. விஷக்காய்ச்சல் ஏற்பட்டது.

கிரிமினல் கைதிகள் இரவு முழுக்க அலறிக்கொண்டே இருந்ததால் வள்ளியம்மைக்குத் தூக்கமே இல்லை. சரியான சிகிச்சையும் இல்லாமல் விடுதலை ஆனார். ‘‘பாவம் இந்தக் குழந்தை! இது எதற்காக சிறைக்கு வரவேண்டும்?’’ என்று சிறை அதிகாரி வள்ளி காதுபடச் சொன்னார். கோபம்

பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ‘‘நான் குழந்தையும் அல்ல. பாவமும் அல்ல’’ என்று சீறினார் வள்ளி.

விடுதலையாகி வீட்டுக்கு வந்து படுத்தவர், எழவே இல்லை. பத்தே நாட்களில் உயிர் பிரிந்துவிட்டது.

பிப்ரவரி 22 வள்ளியின் பிறந்தநாள். அதுவே இறந்தநாளும்.

அவர் இறக்கும்போது காந்தி இல்லை. இங்கிலாந்து பயணத்தில் இருந்தார். திரும்பி வந்தவர், வள்ளி அடக்கம் செய்யப்பட்ட ஜோகன்ஸ்பர்க் இடுகாடு போய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அப்போதுதான் சொன்னார், ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும்
இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் இவர்’’ என்றார். அவரது கல்லறை இடிந்து கிடந்தபோது, 1997-ல் அதைப்
புதுப்பித்துக் கொடுத்தவர் நிறத்திமிர் அடக்கிய நெல்சன் மண்டேலா.

இவ்வாறு விரிகிறது நாம் பார்த்திராத தெரிந்திடாத  "#தில்லையாடி #வள்ளியம்மை" எனும் இளம் தியாகத்தின் மறு உருவத்தினை  அவரின் ரத்தச் சுவட்டினை ஓவியமாக காணும் ஔியாக
நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு எளிய பெண் பிள்ளையின் அற்புதமான வரலாறை #எழுத்துலகப் #பேராசான் #ப.#திருமாவேலர் #பெரியோர்களே #தாய்மார்களே எனும் ஆவண நூலில்
பதிவு செய்திருக்கிறார்கள்.

"தில்லையாடி வள்ளியம்மை" பிறந்ததினம் 22 February

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. சிலிர்க்க வைக்கும் வரலாறு.

    ReplyDelete
  2. Good morning sir very nice to hear about our historical Tamil people thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    இத்துனை நாட்களில் வந்த தங்களின் பதிவுகளில் என் இரத்தம்
    துடிக்க வைத்தது இதுதான்!
    ஏனெனில், இவ் வீரப்பெண்ணின்
    வீர வரலாற்றை அறிந்திலன்! தென்னாப்பிரிக்காவில் மஹாத்மா காந்தியின் முன் தொடங்கிய வரலாறு பிரமிக்கத்தக்கது! தன் பதினைந்தாம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்த வீரமங்கை பற்றிய தகவலைப் படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து
    கசிந்து கனத்தது, ஐயா! எப்பேற்பட்ட தியாகசீலி,அம்மங்கை!
    அவரது தியாகத்தை மெச்சி காந்தியடிகள் ஜோகன்னஸ்பர்க் சென்று, அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் என்பதும்,
    நெல்சன் மண்டேலா அவர்கள்,
    தில்லையாடி வள்ளியம்மையின்
    கல்லறையைப் புதிப்பித்தார் என்னும்
    தகவல்கள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தபோது,
    என் உடல் தானே எழுந்து ஒரு நிமிடம், மௌன அஞ்சலி செலுத்தியது என்பதைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், வாத்தியாரையா!
    அன்னையாம் அவ்வீர மங்கைக்கு
    மீண்டும் ஒருமுறை எனது
    வீர வணக்கங்கள்!!

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட தேச தலைவர்களின் மற்றும் உலக தலைவர்களின் கட்டுரைகளை நிறைய உங்கள் தளத்தில் எதிர்பார்கிறேன். சோர்ந்து கிடக்கும் மனதிற்கு புது எழுச்சி தருகிறது ஐயா. நன்றி...

    ReplyDelete
  5. ///Blogger ஸ்ரீராம். said...
    சிலிர்க்க வைக்கும் வரலாறு.////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  6. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice to hear about our historical Tamil people thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இத்துனை நாட்களில் வந்த தங்களின் பதிவுகளில் என் இரத்தம்
    துடிக்க வைத்தது இதுதான்!
    ஏனெனில், இவ் வீரப்பெண்ணின்
    வீர வரலாற்றை அறிந்திலன்! தென்னாப்பிரிக்காவில் மஹாத்மா காந்தியின் முன் தொடங்கிய வரலாறு பிரமிக்கத்தக்கது! தன் பதினைந்தாம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்த வீரமங்கை பற்றிய தகவலைப் படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து
    கசிந்து கனத்தது, ஐயா! எப்பேற்பட்ட தியாகசீலி,அம்மங்கை!
    அவரது தியாகத்தை மெச்சி காந்தியடிகள் ஜோகன்னஸ்பர்க் சென்று, அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் என்பதும்,
    நெல்சன் மண்டேலா அவர்கள்,தில்லையாடி வள்ளியம்மையின் கல்லறையைப் புதிப்பித்தார் என்னும்
    தகவல்கள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தபோது,
    என் உடல் தானே எழுந்து ஒரு நிமிடம், மௌன அஞ்சலி செலுத்தியது என்பதைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், வாத்தியாரையா!
    அன்னையாம் அவ்வீர மங்கைக்கு மீண்டும் ஒருமுறை எனது வீர வணக்கங்கள்!!//////

    உங்களின் வீர வணக்கங்களுக்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  8. /////Blogger Nathan said...
    இப்படிப்பட்ட தேச தலைவர்களின் மற்றும் உலக தலைவர்களின் கட்டுரைகளை நிறைய உங்கள் தளத்தில் எதிர்பார்கிறேன். சோர்ந்து கிடக்கும் மனதிற்கு புது எழுச்சி தருகிறது ஐயா. நன்றி.../////

    வாழ்க உங்களின் தேசபக்தி. நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com