27.2.18

உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?


உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?

*ஆசை*

வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது?

ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.

சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துச் செல்கிறது.

அவன் துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை.

ஐநூறு ரூபாய் நோட்டு பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்து விட்டால், வழி நெடுக பணம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்து விட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ, அந்தக் கட்டத்தில் மகிழ்ச்சி ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப் பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்தது என்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறுவயதில் வேலையின்றி அலைந்த போது “மாதம் ஐயாயிரம் ரூபாயாவது கிடைக்கக் கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம் தான் அந்த நிம்மதி.

“மாதம் இருபதாயிரம் ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிக்கையில். பிறகு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வேலைக்கு ஏங்கியது!!!!

அதுவும் கிடைத்தது. மனது ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தாவிற்று. அது  வளர்ந்தது. பெருகிற்று. யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தி அடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அது தான் இறைவனின் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.

அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டி விடுகிறான்.

ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்து விட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்து விட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்து விட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசை கூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவே தான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட் படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்த போது கவனித்தேன்.

அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.

ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால் தான் “பரம் பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்து விட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால் தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல் இரு” என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.

ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.

எதிர் பார்ப்பதைக் குறைத்துக் கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையில் இல்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல, அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும் படி போதிப்பது தான் இந்து மதத் தத்துவம்.

‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள் தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது வென்று தேடிப் பார்.

ஆசை தான் என்பது உனக்குப் புரிய வரும்!!!!
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir very useful and excellent post sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா...நாம் ஆசையை அடக்கி வைத்தாலும் மனைவி மற்றும் சுற்றுசூழல் நம்மை மாற்றிவிடுகிறது....

    ReplyDelete
  3. Desire is the creator of worldly things. Desire makes a man to do good and bad.

    Just we need to be careful of bad ones,but one has to desire for everything in right way and work hard to achieve it.
    If lazy, then call it a philosophical point and spend rest of life whining.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அருமையான மனவள பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    மனம் பக்குவம் அடையவேண்டும் என்ற போதனையை மிகத் தெளிவாக உணர்த்தும் மிக அழகான பதிவு!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful and excellent post sir vazhga valamudan sir/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. ///Blogger kmr.krishnan said...
    Very much true////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger gopu said...
    உண்மைதான் ஐயா...நாம் ஆசையை அடக்கி வைத்தாலும் மனைவி மற்றும் சுற்றுசூழல் நம்மை மாற்றிவிடுகிறது....////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கோபு!!!!!

    ReplyDelete
  9. ////Blogger selvaspk said...
    Desire is the creator of worldly things. Desire makes a man to do good and bad.
    Just we need to be careful of bad ones,but one has to desire for everything in right way and work hard to achieve it. If lazy, then call it a philosophical point and spend rest of life whining.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான மனவள பதிவு.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  11. ///Blogger Subathra Suba said...
    Correct sir,correct explanation /////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மனம் பக்குவம் அடையவேண்டும் என்ற போதனையை மிகத் தெளிவாக உணர்த்தும் மிக அழகான பதிவு!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com