22.1.18

பாரதப்போர் எப்படி முடிந்தது?

பாரதப்போர் எப்படி முடிந்தது?

குருஷேத்திரம்..

பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு..

தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும் கிருஷ்ணர், இன்று இதுவரை இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் ஒருபுறம் கலக்கமாகவே இருந்தது தருமனுக்கு.

உள்ளே வரலாமா ? உத்தரவு கேட்டபின் உள்நுழைந்தனர் இருவரும்.

வாருங்கள்.. என்ற கிருஷ்ணரின் குரலில் என்றும் இருக்கும் உற்சாகம் சற்றுக் குறைந்திருப்பது தெரிந்தது தருமனுக்கு.

நாளைய போர் நிகழ்வு பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா.. என்றான் தருமன்.

நாளை பதினெட்டாம் நாள் போர். இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன் நான்.. என இழுத்தார் கிருஷ்ணர்.

இறுதிநாள்தான். ஐயமே இல்லை. துரியோதனனுக்கும், அவனது மொத்தப் படைக்கும் நாளை இறுதிநாள். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப்போகும் நாள்.. பல் கடித்தான் பீமன்.

நாளை நம் படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள் ? கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தான் தருமன்.

யாரா ? அதை நீயல்லவா முடிவு செய்து சொல்லவேண்டும்.. என்றான் தருமன்.

அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது.  நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள். அண்ணன் தருமர் செல்லுமளவிற்கு அத்தனை அவசியமும் இல்லை. எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா.. என்றான் பீமன்.

தாராளமாக. அதில் தவறேதுமில்லை. அதற்குமுன், நகுலனும், சகாதேவனும் நாளை தலைமையேற்க வேண்டாம் என்பதற்கான காரணம் வேண்டுமே ?.. கேட்டார் கிருஷ்ணர்.

விஷயமறியாதவன் போல் பேசுகிறாயே கண்ணா.. நாளை துரியோதனப் படைக்கு தலைமையேற்பது சல்லியர் என்பது தெரியாதா உனக்கு ? நகுலனும், சகாதேவனும், அவரது மருமகன்களாயிற்றே. அவர்களுடைய கையால் அவர் அழியவேண்டாம் என்பதால்தான், நான் செல்கிறேன் என்கிறேன்.. என்றான் பீமன்.

ஏன் ? உனக்கும் மாமன் முறைதானே சல்லியர் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

இருக்கலாம். எதிரிப்படையில் நிற்கும் எவரையும் நான் உறவாகக் கொள்வதில்லை. அதுவுமின்றி, பீஷ்மர், கர்ணன், துரோணர் போன்ற பெருவீரர்களை எல்லாம் வென்றழித்த நமக்கு, சல்லியர் எம்மாத்திரம் ? எனவேதான், அண்ணன் தருமருக்கு அவ்வாய்ப்பினை தராமல், நானே தலைமை ஏற்க நினைக்கிறேன். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே, சல்லியரை அப்புறப்படுத்திவிட்டு, துரியோதனனைத் தொட எண்ணம். அவனைக் கொல்வது மட்டுமே என் இலட்சியம் என்பதை நீயுமறிவாய் கண்ணா.. என்றான் பீமன் வேகமாக.

அப்படியா ? உன் வீரத்தின் மீது நம்பிக்கை வைப்பது உனக்கு நல்லது. அதே சமயம், எதிரியின் வீரத்தை குறைத்து மதிப்பிடுவது உனக்கு நல்லதல்ல பீமா.. என்றார் கிருஷ்ணர்.

புரியவில்லை கண்ணா.. சல்லியர் அத்தனை பலசாலியா ?.. வேண்டுமென்றே இகழ்ச்சியாகக் கேட்ட பீமனை, புன்சிரிப்போடு பார்த்தார் கிருஷ்ணர்.

நீயும், அர்ஷூனனும் ஒன்றாக எதிர்த்தால் கூட, சல்லியரை வெல்வது கடினமே பீமா.. என்ற கிருஷ்ணரின் வார்த்தைகள் கேட்டு கோபமுற்றான் பீமன்.

என்ன பிதற்றுகிறாய் கண்ணா.. நேற்று வரை தேரோட்டியாய் களத்தில் வலம் வந்தவர், இன்று தளபதியானவுடன், பிறந்துவிடுமா வீரம் ?.. கேட்ட பீமனை நோக்கிய கிருஷ்ணர்,

கர்ணனுக்குத் தேரோட்டியாவதற்கு முன், சல்லியன் பங்கு கொண்ட போரில், அவரை எதிர்த்த எவராவது உயிர்தப்பி இருக்கிறார்களா பீமா ?.. என்று கேட்டார்.

தருமன் யோசித்தான். ஆம்.. சல்லியனை எதிர்த்த எவரும் உயிரோடில்லை. எதிர்த்தவர்கள் அத்தனை முக்கிய நபர்கள் இல்லை என்பதால் , இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அப்போதுதான் புரிந்தது தருமனுக்கு.

ஏதோ விஷயம் உள்ளது. இல்லையெனில், கிருஷ்ணர் இத்தனை பீடிகை போடமாட்டார் என்பதும் புரிந்தது.

கிருஷ்ணா.. பீமன் தான் செய்த சபதத்தை முடிக்கவேண்டும் என்ற வெறியில் அறியாமல் பேசுகிறான். அவனை மன்னித்தருளி, என்னவென்று தெளிவாய் எடுத்துரைக்கக் கூடாதா ?.. வணங்கியபடியே கேட்டான் தருமன்.

தருமா.. நாளை கௌரவர் படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்று வரப்போகும் சல்லியரை எவராலும் வெல்லவே முடியாது என்பதே உண்மை. அவர்முன் கோபத்தோடு எவர் போரிட்டாலும், எதிரியின் ஆற்றல், ஆயிரம் மடங்காகப் பெருகி, அவரையே அடையும் என்பது அவர் கொண்டிருக்கும் வரம். எனவே, அவரை எதிர்த்து எவர் போரிடினும், அவனது ஆற்றலும் அவரையே அடையுமே தவிர, எதிர்த்து நிற்பவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், என்ன செய்வதென்று இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறேன்... என்றார் கிருஷ்ணர்.

இப்படி ஓர் வரமா ? சல்லியரிடமா ? இது துரியோதனனுக்குத் தெரியுமா ? எதிர்த்து நிற்கும் எவருமே தப்பமுடியாவிடில், வெல்வதெப்படி ?.. உறைந்துபோய் நின்றான் பீமன்.

கிருஷ்ணா.. உனையன்றி வேறெதுவும் எங்களைக் காத்தருளாது என்பதை முழுமையாய் அறிந்தவன் நான். இத்தனை இன்னல்களைக் கடக்க எங்களோடு துணைநின்று, பேருதவி பலபுரிந்த நீ, இப்போதும் எமைக் காக்கத் தவறமாட்டாய் என்பதையும் அறிவேன். பாண்டவர் படை முழுவதுமே உன்னையே சரணாகதி அடைந்திருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி, என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் உத்தரவிடு கிருஷ்ணா.. என்று கைகள் குவித்து, கருணை மிகுந்த கண்களோடு, யாசிக்கும் தருமனைக் கண்டவுடன், சட்டெனத் தோன்றியது ஓர் முடிவு கிருஷ்ணருக்கு.

எதிரியின் வலிமை அதிகம் என்றறிந்தும் பயப்படாமலும், கோப்படாமலும், ஆத்திரப்படாமலும், பீமன் போல் அவசரப்படாமலும், அடுத்து என்னவென்பதை நிதானமாய் யோசித்து, தன்னை யாசித்து நிற்கும் தருமனே நாளை சல்லியரை எதிர்க்கத் தகுதியானவன் என்பது புரிந்தது கிருஷ்ணருக்கு. பீமனை நோக்கித் திரும்பினார்.

பீமா.. நாளை களத்தில் உன்முன் கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி நிற்கும் சல்லியரைக் கண்டால், என்ன தோன்றும் உனக்கு ?.. கேட்டார் கிருஷ்ணர்.

எதிரில் நிற்பவர் எவராயினும் எதிரியே எனக்கு களத்தில். உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், களத்தில் வந்த கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அர்ஜூனனுக்கே நீ செய்த உபதேசம் கண்ணா.. என்றான் பீமன்.

மறுக்கவில்லை. ஆனால், அன்றோடு குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டதா பீமா ?.. கேட்ட கிருஷ்ணருக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினான் பீமன்.

ஆனால், அதுதான், அந்த நிகழ்வுதான் நம்மை வெற்றியை நோக்கித் திருப்பியது. இல்லையேல், பீஷ்மரையும், துரோணரையும் அர்ஜூனனால் எதிர்கொண்டிருக்க இயலாது.. என்றான் பீமன்.

ஆம்.. போரில் வெற்றியை நோக்கிப் பயணிக்க, கடமையே முக்கியம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நாளைய போர், வெற்றியை அடையப்போகும் விஷயம் என்பதைவிட, போரை முடிக்கப்போகும் விஷயம் என்று கொள்வதே சிறந்தது.
இரத்த உறவுமுறை கொண்ட உங்களால், ஏதோ ஒரு காரணத்தால், இத்தனை பெரிய யுத்தம் துவங்கப்பட்டது. இதில், கௌரவர், பாண்டவர் என்ற உங்கள் இருவரின் ஆற்றலும், திறமையும், வரங்களும், வீரமும், துணையும், சூழ்ச்சிகளும், இராஜதந்திரங்களும் என இவை எல்லாமே போரை நடத்திச் செல்ல பயன்பட்டனவையே தவிர, போரை முடித்துவைக்க அல்ல.
உங்கள் ஆயுதங்களோ, பழியுணர்ச்சியோ, கோபமோ, பகையோ, ஆத்திரமோ, வருத்தமோ இப்போரை முடிக்கவே விடாது. உறுவுகளுக்கிடையே நடைபெறும் இப்போரை மட்டுமல்ல.. எப்போரையுமே முடிக்க இயலாது. . என்ற கிருஷ்ணரை, குழப்பமாய்ப் பார்த்தான் பீமன்.

அப்படியெனில், நாளை இப்போர் முடிந்துவிடாதா ? பாஞ்சாலியின் சபதமும், நான் கொடுத்த சத்தியமும் நிறைவேறாதா ? நான் கொண்ட பழியணர்ச்சி தீராதா ?.. கோபமாய்க் கேட்டான் பீமன்.

பழியுணர்ச்சி என்பது உள்ளவரை எப்போரும் என்றுமே முடியாது பீமா. அது இருக்கட்டும்.. என்றவர், தருமனின் பக்கம் திரும்பினார்.

தருமா, ஒருவேளை நாளை சல்லியரின் எதிரில் நீ நிறுத்தப்பட்டால், என்ன செய்வாய் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி வரினும், சல்லியர் எனது மாமன்.. என்னிலும் பெரியவர்.. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்.. அவரை வணங்குவேன்.. அவரை வெல்ல, அவரின் ஆசி கேட்டு நிற்பேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போரிடுவேன்.. என்றான் தருமன்.

எதிரியிடம் சரணாகதியா ? இது நமக்குக் கேவலம் அண்ணா.. கொதித்தான் பீமன்.

தருமா.. சற்று முன்பு என்னிடம் சரணாகதி என்றாயே.. என் உத்தரவு கேட்டு நின்றாயே.. என் உத்தரவு இதுதான். நாளை சல்லியரை எதிர்க்கப் போவது நீதான். அதேசமயம், சல்லியரை மனதால் சரணாகதி அடைய உன்னால் இயலுமா ? களத்தில் எதிரிமேல் கருணை கொண்ட விழிடளோடு களமாட இயலுமா ? எதிரியின் அஸ்திரங்களுக்கு பதிலாக எய்யும் உனது அஸ்திரங்களை, சிறிது கூட கோபப்படாமல், சிரித்தபடியே எய்ய முடியுமா ? சுருக்கமாய்க் கேட்கிறேன்.. என்னைக் கண்டால் உன் மனதில் தோன்றும், அன்பும், கருணையும், சல்லியரைக் களத்தில் காணும்போது வெளிப்படுத்த இயலுமா ?.. கேட்ட கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தைகளையும், மனதிற்குள் ஆழமாய் அசைபோட்டான் தருமன்.

சல்லியரின் முன் கோபத்தோடு போரிடும் எவரின் ஆற்றலும், ஆயிரம் மடங்காய்ப் பெருகி, சல்லியனை அடையும் என்பதால், கோபமே படாமல், கருணையோடு களமாடச் சொல்கிறான் கிருஷ்ணன். எதிரியின் வலிமையைக் கூட்டாமல், பகையுணர்ச்சியைக் கூட்டாமல், கருணையையும் அன்பையும் கூட்டி, செயலிழக்கச் செய்யச் சொல்கிறான் கிருல்ணன் என்பது தெளிவாகப் புரிந்தது.

முடியும் கிருஷ்ணா.. என்னால் முடியும். உன்னிடம் அடைவது போலவே, சல்லியரிடமும் என்னால் சனணாகதி அடைய இயலும் கிருஷ்ணா.. உறுதியாகச் சொன்னான் தருமன்.

இது சாத்தியமே இல்லை அண்ணா.. பீமன் இடைமறித்தான்.

சாத்தியம். இது சாத்தியம். தூணிலும், துரும்பிலும், பரந்தாமன் என்றபின், எதிரே நிற்கும் எதிரியிலும் பரந்தாமன். சல்லியரில் என்னால் கிருஷ்ணனனைக் காண இயலும். அதனால், இது சாத்தியம்.. என்றான் தருமன்.

நல்லது தருமா. குருஷேத்திரப் போர் நாளை நிச்சயம் முடிந்துவிடும். இதை முடிக்கப்போவது, பாண்டவரின் வீரமோ, கிருஷ்ணனனின் துணையோ அல்ல. இப்போரினை முடிக்கப்போவது உறவுகளுக்கிடையேயான அன்பு. அது வெளிப்பட வாய்ப்பின்றி தனை மறைத்தே நிற்கும். தனது இருப்பினை அது வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன், எதிர்த்து நிற்கும் எப்பகையும், எப்போரும் முடிந்துவிடும்.

மண்ணாசையால், பொன்னாசையால், அதிகார போதையால், அகம்பாவத்தால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு போரும், காலம் காலமாய் தொடர, கர்ணன் போன்ற துணையும், பீஷ்மர் , துரோணர் போன்ற வீரமும், சகுனி போன்ற சூழ்ச்சியும், என் போன்ற தந்திரங்களும் துணைக்கு இருக்கலாம். ஆனால், அப்போரினை முடிவுக்கு கொண்டுவர, பெரும் சக்தியான சல்லியருக்கு எதிராக நீ காட்டப்போகும் அன்பு ஒன்றாலேயே முடியும்..

என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உண்மை என்னவென்பது, மறுநாள் போர் முடிந்தபின்தான் பீமனுக்கும் புரிந்தது.

உங்களுக்கும் புரியும்.. எல்லோருக்கும் புரியவேண்டும்..மகாபாரதம் வெறும் இதிகாசமோ, வீரகாவியமோ அல்ல.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் போராட்டம். இறுதியில், அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்பது எல்லோருக்கும் புரியவேண்டும்.

பாரதம்.. மதத்தின் அடையாளமல்ல..மனிதனின் அடையாளம்.
--------------------------------------------------------------
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected Sir,

    Happy morning... You have narrated and completed in your own style about the Mahabharat.

    Thanks for posting...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... You have narrated and completed in your own style about the Mahabharat.
    Thanks for posting...
    With kind regards,
    Ravi-avn////

    நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  3. ///Blogger SELVARAJ said...
    அருமை அருமை....////

    நல்லது. நன்றி செல்வராஜ்!!!!!

    ReplyDelete
  4. ////Blogger senthil said...
    superb sir.////

    நல்லது. நன்றி செந்தில்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com