25.9.17

Short Story: சிறுகதை: ஜி..எஸ்.டி ஜெயா ஆச்சி


மாணவக் கண்மணிகளே, அன்பர்களே,

அடியவன் எழுதி, இந்த மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
கதையின் தலைப்பு: ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி

        வந்ததும் வராததுமாக ராமஞ் செட்டியாரின் சின்ன மகள் கமலா, அன்னபூரணி ஆச்சியிடம் கேட்டாள்:

       “உங்கள் அண்ணமிண்டிக்கு ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி என்ற பெயர் எதனால் வந்தது?”

       “அது ஒரு அடையாளப் பெயர். அவ்வளவுதான்”

       “ நானும் பல அடையாளப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். சறுக்குப்படி சாலி ஆச்சி,  அரைப்படி அகிலா ஆச்சி, வங்கி வள்ளி  ஆச்சி. என்று ! அவைகள் எல்லாம் ஒரு காரணத்தை வைத்து உண்டான பெயர்கள். ஜி.எஸ்.டி என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே - அதனால் தான் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன். சரக்கு மற்றும் சேவை வரியின் சுருக்கம்தானே ஜி.எஸ்.டி”

        “ஆமாம்”

        “உங்கள் அண்ணமிண்டியின் பெயரோடு அது எப்படி இணந்தது?”

        “ஊருக்கு உதவி செய்யப்போக அப்படிப் பெயர் வந்துவிட்டது. அனாவசியமாகப் போகும் ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் என்று தெரிந்தவர்களிடமெல்லாம் அறிவுரை சொல்வார்.

        “வெளியில் செல்லும்போது குடிதண்ணீரை பாட்டிலில் எடுத்து செல்லுங்கள். பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லுங்கள். அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூடை இல்லை என்றால் மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான்களை  வாங்குங்கள். வார இறுதி நாட்களில் வீட்டிலயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்கள். திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்கள். விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாமல் ஆயா, அய்யா ஊருக்கோ, அல்லது சொந்த ஊருக்கோ போகலாம். காலையில் நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்துப் பழகுங்கள். பழைய  பழக்கங்கள் போல , சுற்றுப் பயணம் சென்றால், நண்பர்கள் எவராவது ஒருவர் வீட்டில் தங்குங்கள். சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து, சொந்தமாக வேலைகளைச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உடல் ஆரோக்கியமாகும். மிகப்பெரும் பணம் மிச்சமாகும். சொந்தம் பெருகும் மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .நட்பு வட்டங்கள் உண்மையாகும்.உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் . என்றெல்லாம் சொல்வார்”

       “ நல்ல அறிவுரைதானே!”

        “எல்லோரும் கேட்டுக் கொள்வார்களா? அதுவும் இளவட்டக் குமரிகள் கேட்டுக் கொள்வார்களா? லெக்கின்ஸ், ஜீன்ஸ் ஆடைகளை அணியாதீர்கள்  அவற்றிற்கெல்லாம் 18% ஜி.எஸ்.டி. மேக்கப் சாமான்களுக்கெல்லாம் 28 சதவிகிதம் வரி, மாக்டொனால்ஸ், டோமினோ, சப்வே என்று உணவங்களுக்கெல்லாம் செல்லாதீர்கள். அங்கே 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி ,ப்ரெளனி ஐஸ்கிரீம் முன்பு ஒரு கப் 120 ருபாய் விலை இப்போது. ஜி.எஸ்.டியுடன் 140 ரூபாய் விலை. வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து சாப்பிடுங்கள் என்பார்.  அதுதான் வினையாகிப் போய் விட்டது.”

          அந்த சமயத்தில் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டவுடன், இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க ஜெயா ஆச்சி காரை விட்டு இறங்கி அவர்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.        

          இருவரின் பேச்சும் அத்துடன் தடைப் பட்டது. கமலா இருவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.

          பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஜெயா ஆச்சியின் ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. மருமகள் இல்லாமல் ஆச்சி மட்டும் தனியாக வருவதைப் பார்த்தவுடன் அன்னமாச்சி மெதுவாகக் கேட்டார்:

              "என்ன அண்ணமிண்டி, உங்கள் மருமகள் மீனா எங்கே?"

              "என்ன நான் மட்டும் தனியாக வரக்கூடாதா? தொடுக்கோடுதான் வர வேண்டுமா?"

              "அடடா, கோபப் படாதீர்கள்! நான் எதேச்சையாகத்தான் கேட்டேன்."

              "நானும் கோபமாகச் சொல்லவில்லை. சாதரணமாகத்தான் சொல்கிறேன். அவளையும் என் மகனையும் தனிக் குடித்தனம் பண்ணச் சொல்லி சரவணம்பட்டி ஸ்ரீவத்சா குடியிருப்பில் வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுத்து அனுப்பி விட்டேன்”

               "சின்னஞ்சிறிசுகள் - தனிக்குடித்தனம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் உங்கள் வீடுதான் பெரிய வீடு ஆயிற்றே - ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து நீங்கள் இதைச் செய்திருக்கலாம்."

               "இல்லை. திருமணமாகி வரும்போதே எனக்குக் கஷாயம் கொடுத்து விட்டாள். அதனால்தான் வந்தவுடன் முதல் வேலையாக அதைச் செய்தேன்"

              "கஷாயமா?"

              "உனக்குத்தான் தெரியுமே? எனக்கு முதுகு தெரியும்படி ரவிக்கை அணிவது, கவ்விப் பிடிக்கும்படி காலுக்கு லெக்கின்ஸ் அணிவது எல்லாம் பிடிக்காது என்று. திருமணத்திற்கு வாங்கிய பட்டுப் புடவைகள், காட்டன் புடைவைகள் ரவிக்கைத் துணிகள், சுடிதார் என்று எல்லாவற்றையும்  நீங்களே தைத்துக் கொள்ளுங்கள் என்று சம்பந்தி வீட்டில் கொடுத்திருந்தேன். கொடுத்தனுப்பும்போதே சொல்லியிருந்தேன். ரவிக்கையில் ஜன்னல் வைத்து, கவர்ச்சியாக எல்லாம் தைக்க வேண்டாம் என்று. ஆனால் அது நடக்கவில்லை. டிசைனர் வியர்ஸ் என்று எல்லாவற்றையும் அடாவடியாகத் தைத்து 45,000 ருபாய்க்கு தையற்கூலி பில் கொடுத்தார்கள். அத்துடன் வாசனைச் சாமான்கள் அலங்காரப் பொருட்கள் என்று 20,000 ருபாய்க்கு பில் கொடுத்தார்கள். நான் மொத்தமாக 15,000
ருபாய்தான் தருவேன். மீதியை உங்கள் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கசப்பாகிவிட்டது. அதைத்தான் கஷாயம் என்று சொன்னேன். ஆடை விஷயத்தில் ஒரு பெண்ணிற்கு அடக்கம் வேண்டாமா? உடல் வனப்பைப் பலரும் பார்க்கப் படம் போட்டா காட்டுவது?"

              "எல்லா இளம் பெண்களுமே அப்படித்தான் இருக்கின்றார்கள். காலத்தின் கோளாறு. நாகரீகம் ஏற்படுத்தும் தலைவலி!"

              "காசின் அருமை தெரியாததால் அப்படிச் செய்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிக்க வேண்டும். அவ்வப்போது தட்டி வைக்க வேண்டும் சிக்கனத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது கலாச்சாரம் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லிப் பாடம் நடத்த வேண்டும். நாம் சிறுகக்கட்டி பெருக வாழ்ந்த, வாழ்கின்ற சமூகம். அதைப் பிள்ளைகள் உணர வேண்டாமா?  என் மகன் பழனியப்பனுக்கு உடைகளுக்கென்று  அவர்கள் 30,000 ஆயிரம் ருபாய் கொடுத்தார்கள். அவன் 20,000 ஆயிரத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டான். மிச்சம் பத்தாயிரத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டோம். அவன் என்னிடம்  வளர்ந்தவிதம் அப்படி!!!!"

             பேச்சின் போக்கை மாற்றுவதற்காக  அன்னமாச்சி “ இருங்கள், காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று சமையல் அறைக்குச் சென்று விட்டார்

              இந்த இடத்தில் ஜெயா ஆச்சி அவர்களைப் பற்றிய சில செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

             ஜெயா ஆச்சி பிறந்தது, வளர்ந்தது  எல்லாம் கோவையில் தான். வாழ்க்கைப்பட்ட பிறகுதான் கணவரின் வேலை காரணமாக, கொச்சி, மும்பை,  நாசிக், ஹைதராபாத், பாண்டிச்சேரி என்று பல ஊர்களுக்கு பெட்டி தூக்கும்படி ஆயிற்று.

            ஆச்சியின் கணவருக்கு தேசிய வங்கி ஒன்றில் வேலை. சேரும்போதே அதிகாரியாகச் சேர்ந்தவர், இன்று வேலையில் பல நிலைகளைக் கடந்து பதவி உயர்ந்து வங்கியின் உதவிப் பொது மேலாளராக கோவையில் பணிபுரிகின்றார். வயது 58. இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. அதற்குப் பிறகு ரிடையர்மெண்ட்- பணி ஓய்வு. இனிமேல் உங்களை எங்கும் மாற்ற மாட்டோம் கோவையிலேயே நீங்கள் பணி செய்யலாம். அதற்குள் அந்த வட்டத்தில் நிலுவையில் உள்ள, வராத கடன்களை எல்லாம் வசூல் செய்யுங்கள் என்று வங்கி மேலிடம் சொல்லிவிட்டது. இவர் அதில் திறமையானவர். ஆகவே  முழு மூச்சுடன் அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தார்.

            ஆச்சியின் கல்யாணத்தின்போது அவருடைய தந்தையார் 14 சென்ட் இடத்துடன் பெரிய வீடு ஒன்றை கோவை ஆர்.எஸ் புரத்தில் வாங்கி ஆச்சிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இதுவரை ஆச்சியின் கணவர் வேலை பார்த்த வங்கிக்கே குடியிருப்பாக வாடகைக்குக் கொடுத்திருந்தவர், தான் கோவை வந்தவுடன் அந்த வீட்டிற்கே குடி வந்து விட்டார்.

           வீட்டில் சமையல், மற்றும் மேல் வேலைக்கெல்லாம் எப்போதும் ஆள் வைத்திருப்பார். நிறைய புத்தகங்கள் படிப்பார். நன்றாக கார் ஓட்டுவார். உறவினர்கள், தோழிகள் என்று நிறைய வெளிவட்டாரத் தொடர்புகள். அவைகள்தான் ஆச்சியின் பொழுதுபோக்கும் கூட!

          ஆச்சி பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வேலைக்குப் போவதில் விருப்பம் இல்லாததால் கணவரோடு வீட்டிலேயே இருந்து அவருக்குப் பணிவிடை செய்வதிலேயே 28 ஆண்டு காலத்தைக் கழித்துவிட்டார். நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளமாக ஒரே ஒரு மகன். தில்லி பல்கலைக் கழகத்தில் மனிதவளம் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன்.

           பொறியியல் படி. உன்னை அமெரிக்காவிற்கு அனுப்பி எம்.எஸ் படிக்க வைக்கிறேன் என்ற ஆச்சியின் பரிந்துரைகளை எல்லாம் அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை.

            இப்போது, கோவை சரவணம்பட்டியில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை. சம்பளம் குறைவுதான். இருந்தாலும் பரவாயில்லை உள்ளூர் வேலை என்று அதிலேயே ஒட்டிக் கொண்டிருந்தான்

            கல்யாணமான ஒரு வாரத்திலேயே தன் தாயார் தன்னைத் தனிகுடித்தனம் போ என்று சொன்னதுடன், சரவணம்பட்டியில் வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுத்தவுடன், அவன் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டான். அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கும் மெயிண்டனன்ஸ் செலவுக்குமாக பாதி சம்பளம் பறிபோய் விடுமே, மீதி சம்பளத்தில் எப்படிக் குடும்பம் நடத்துவது என்பது அவன் கவலை!

            அதெல்லாம் முடியும். சிக்கனமாக இருந்தால் எதுவும் சாத்தியமே என்று தாயார் சொல்லி அனுப்பியவுடன், வேறு வழியின்றி அவனும் சென்று விட்டான். தாயார் ஒருமுறை சொன்னால் அது நூறுமுறை சொன்னதற்குச்  சமம் என்பதும் அவனுக்குத் தெரியும்.

            ஜெயா ஆச்சி சிக்கனமானவர்கள்தான். ஆனால் கஞ்சத்தனம் இருக்காது. தேவைகளுக்குத் தயங்காமல் செலவழிப்பார்.
 
            கல்யாணத்திற்குப் பிறகு தன் மகன் பழநியப்பனுக்குப் புதுக் கார் ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருந்தார். ஆனால் மருமகளின் ஆட்டத்தைப் பார்த்தவுடன் கார் வாங்கிக் கொடுக்காமல் விட்டுவிட்டார். பல்சர் மோட்டார் சைக்கிள்தான். அதையே வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.

            தனிக்குடித்தனம் துவங்கியவுடன் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று தன் மனைவி கையில் பத்தாயிரம் ரூபாய்களைக் கொடுத்து இதற்குள் வீட்டுச் செலவைச் செய்து கொள் என்று பழனியப்பன் சொல்லிவிடுவான்.

           அந்தக் குடியிருப்பில் மொத்தம் 96 வீடுகள். பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களெல்லாம் கார், டெபிட் கார்டு , வண்ண வண்ண ஆடைகள் என்று அசத்தலாக வலம் வந்து கொண்டிருந்த போது, மீனாட்சியால் வெளியே சுற்றாமல்  வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியாகிவிட்டது. மேல் வேலைக்கு ஆள் என்றால் இரண்டு மணி நேரம்தான் வருவாளாம் மாதம் மூவாயிரம் சம்பளமாம். ஆள் சேர்க்காமல் மீனாட்சியே எல்லா வேலைகளையும் பார்க்கத்  துவங்கிவிட்டாள். நாளைடைவில் அது பழகிவிட்டது.
                                            *************************************************************************

            காலதேவன் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒரே சீராக ஓடிக்கொண்டிருப்பான். அவனுடைய ஓட்டத்தில் நாட்களும், வாரங்களும், மாதங்களும் என எல்லாம் பறந்து சென்றதில் இரண்டாண்டுகள் ஓடி விட்டது.

            ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெயா ஆச்சிக்குப் பேரக்குழந்தை பிறந்தது. பிறந்த அன்றே திருச்சியில் இருந்த சம்பந்தி வீட்டிற்குத் தன் கணவர் மற்றும் மகனுடன் சென்றவர், தனியார் மருத்துவ மனையில் இருந்த தன் மருமகளையும் குழந்தையையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

             அதற்குப் பிறகு  ஒரு மாதம் கழித்து தங்கள் செட்டிநாட்டுக் கிராமத்தில் குழந்தையை வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும் நிகழ்வையும் சிறப்பாகச் செய்து முடித்தார்.  உன் ஆத்தா வீட்டிலேயே இரு. குழந்தைக்குத் தாய்ப்பாலைக் கொடு. குழந்தை ஊறிய பிறகு - கழுத்து நின்ற பிறகு நீ கோவைக்கு வரலாம் என்று  சொல்லி ஜெயா ஆச்சி அவளைத் திருச்சியிலேயே இருக்கும்படி செய்து விட்டார்கள்.

              மீனாட்சியின் பெற்றோர்கள் இருவருமே கல்லூரிப் பேராசிரியர்கள். இரண்டு தங்கைகளில் ஒருத்தி மட்டும்தான் துணைக்கு, இன்னொருத்தி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். குழந்தை மீனாட்சியைப் படாத பாடு படுத்திவிட்டது.  பல நேரங்களில் அழுகையில் பிடித்துக் கொண்டுவிடும். எதற்கு அழுகிறதென்றே தெரியாது. இரவில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும். பகலில் சில மணி நேரம் மட்டும் உறங்கும். தொட்டிலில் போட்டு கை வலிக்க ஒருமணி நேரம் ஆட்டினாலும் தூங்காது. மீனாவிற்கு பெரிய அவதியாகிப் போய்விட்டது.

             மீனாட்சி மெலிந்து போய் விட்டாள். சரியான உறக்கம் இல்லாவிட்டால், மெலியாமல் என்ன செய்வதாம். மனதால் நொறுங்கிப் போய் விட்டாள்.எதற்குடா சாமி கல்யாணம்,
குழந்தை என்று சமயங்களில் எண்ணக்கூடத் தோன்றியது,

             ஆறாவதும்  மாதத்தில் அவள் கணவன் காரில் வந்து அவளையும் குழந்தையையும்  கோவைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான். முதலில் பெரிய வீட்டிற்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விட்டு, மதிய உணவையும் முடித்துக் கொண்டு அன்று மாலையே சரவணம்பட்டியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து விட்டான்.

              மீனாட்சிக்கு ஏமாற்றமாகி விட்டது. குழந்தை சற்றுப் பெரிதாகும் வரை மாமியார் வீட்டிலேயே இருக்கலாம் என்று ஆசைப் பட்டவளுக்கு, அந்த ஆசை நிறைவேறவில்லை. ஜெயா ஆச்சி அதற்கு இடம் கொடுக்காமல் கறாராக அவளை அனுப்பிவிட்டார்கள். அதை முன்பே தன் மகனிடமும் சொல்லியிருந்ததால், ஜெயா ஆச்சிக்கு  எந்த விதத் தயக்கமும் இல்லாமல் போய்விட்டது.

              “ நீ பச்சைக் குழந்தையாக இருக்கும்போது, உன்னைப் பம்பாய்க்குத் தூக்கிக் கொண்டு போய்த் தனியாளாக நின்றுதான் உன்னை நான் வளர்த்தேன். உதவிக்கு யாரும் வரவில்லை. என் தாயாரும் வரவில்லை. உன் அப்பத்தாவும் வரவில்லை. மன தைரியம் ஒன்றுதான் எனக்குத் துணையாக இருந்தது. ஆகவே குழந்தையை நீங்கள் இருவரும் வளர்ப்பதுதான் முறை” என்று விளக்கம் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

               ******************************************************************************

                ஒரே மாதம்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு அந்த அதிசயம் நடந்தது.

                ஓலா டாக்ஸியில் வந்திறங்கிய மீனாட்சியும், பழநியப்பனும் வீட்டிற்குள் உள்ளே வர, நடு ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்த ஜெயா ஆச்சி இருவரையும், “வாங்க, வாங்க” என்று வரவேற்றார்

                ஜெயா ஆச்சியின் கையில் குழந்தையைக் கொடுத்த மீனாட்சி, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினாள்.  “ அடடே.... எதற்கு இதெல்லாம்.... எழுந்திரு”  என்று ஆச்சி அவர்கள் சொன்னவுடன், எழுந்து தரையில் அவர்கள் எதிரிலேயே அமர்ந்தவள், தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்து விட்டாள்.  ஜெயா ஆச்சி தன் மகனைப் பார்க்க அவன் கண்களும் கலங்கியிருந்தன!!!!

                “என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும்?” என்று ஜெயா ஆச்சி வினவ,  மீனாட்சி அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

                “அத்தை, என்னை மன்னித்து விடுங்கள். கல்யாண சமயத்தில் உங்கள் பேச்சைக் கேட்காமல் நான் செய்ததெல்லாம் தவறுதான்.  உங்களின் நல்ல குணம் தெரியாமல், உங்களுக்கு அனுசரனையாக நடக்காமல் இருந்ததும் தவறுதான். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இனிமேல் நான் எந்தத் தவறையும் செய்ய மாட்டேன். இரண்டு வருடங்களாக பல அவதிகளுக்கு ஆளாகி விட்டேன். இப்போது திருந்தி விட்டேன். அடக்கமாக இருப்பேன். எனக்கு அனுபவமில்லை. தனியாளாக என்னால் குழந்தையை வளர்க்க முடியவில்லை. இந்த ஊரின் ஜில்லென்ற கிளைமேட் காரணமாக குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது.  குழந்தைகளுக்கான டாக்டர் இங்கே நூறடி ரோட்டில் இருக்கிறார். சரவணம்பட்டி வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் தனியாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு என்னால் வரமுடியவில்லை. ஆபீஸிற்கு லீவு போட்டுவிட்டு உங்கள் மகனும் வரவேண்டியதாக உள்ளது. இருவருக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. ஆகவே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கே நாங்களும் வந்து விடுகிறோம்.”

                தொடர்ந்து அவள் பேசியதைக் கேட்ட ஜெயா ஆச்சி, நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.

                 "சரி, இங்கே வந்து விடுங்கள்!!!!!”

                 அப்படிச் சொன்னதோடு நிற்காமல், எழுந்து சென்று, தன்னுடைய கார் சாவியை மகனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்:
                 “குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று  எல்லா சாமான்களையும் எடுத்து வையுங்கள். நான் லாரி கம்பெனி மாணிக்கம் அண்ணனை ஒரு மினி லாரி மற்றும் நான்கு ஆட்களுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் எல்லாச் சாமான்களையும் இங்கே எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். இங்கே மேல்வீட்டில் உள்ள ஹாலில் எல்லா வற்றையும் ஒரு பகுதியில் வைத்து  விடுங்கள். அந்த வீட்டைக் காலி செய்து வீட்டுக்காரரிடம் சாவியைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இருவரும் கீழே உள்ள படுக்கை அறை ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு உதவியாக நம் வேலைக்காரப் பெண் தாயம்மாவும், அவளுடைய மகளும் இருப்பார்கள். சமையல் மற்றும் மேல் வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எல்லாம் சரிதானே? சரி, இப்போது புறப்படுங்கள்”

                அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆச்சியை வணங்கி விட்டு அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

                 எல்லாவற்றையும் தன் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆச்சியின் கணவர் சண்முகம் செட்டியார் வெளியே வந்து புன்னகையுடன், ஆச்சியைப் பார்த்து மெல்லிய குரலில் சொன்னார்.

                 “ஹாட்ஸ் ஆஃப் ஜெயா! நல்ல முடிவு!

                 ஆச்சி ஒரே வார்த்தையில் “நன்றி” என்று சொன்னார்கள்

                  “ஜெயா ஊரில் எல்லோரும் உன்னை, ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி என்று அடையாளப் படுத்திச் சொல்கிறார்களாம். என் தம்பி மூலம் தெரிந்தது. ஜி.எஸ்.டி என்பதற்கு வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்று பொருள். ஆனால் மனித வளத்தில் என்ன பொருள் தெரியுமா?”

                  “சொல்லுங்கள்”

                   “Good, Smart and Talented  என்று பொருள். அதாவது நல்லவர், புத்திசாலித்தனமானவர், திறமைசாலி என்று பொருள்”. “இதை நம் ஊர் மக்களுக்கெலாம் தெரியப் படுத்த வேண்டும்!”

                    “அதெல்லாம் வேண்டாம். உங்கள் விளக்கத்தை என்னோடு வைத்துக் கொள்கிறேன். உங்களுடைய பென்சன் தொகை, இந்த மாதம் வரவாகவில்லை. வங்கியில் கேளுங்கள்”

                    செட்டியார் செல்போனை எடுத்துவர, தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

                    ஜெயா ஆச்சியின் மனம் தன் கணவர் தன் மீது வைத்திருக்கும், அன்பையும், பரிவையும், மதிப்பையும் நினைத்துப் பார்த்து வியந்தது. மனம் நெகிழ்ந்துவிட்டது. கண்கள் பனித்துவிட்டன

                    *******************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Smart lady தான். நல்ல நிர்வாகத்திறன் ஆச்சிக்கு. தற்காலத்திற்கு உகந்த கதை. பாராட்டுக்கள் Sir.

    ReplyDelete
  2. Good morning sir very excellent story,,now ah days all the youngster's wants to follow these story, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. As usual the story is very nice.Thank you Sir.

    ReplyDelete
  4. /////Blogger Thanga Mouly said...
    Smart lady தான். நல்ல நிர்வாகத்திறன் ஆச்சிக்கு. தற்காலத்திற்கு உகந்த கதை. பாராட்டுக்கள் Sir./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  5. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story,,now ah days all the youngster's wants to follow these story, thanks sir vazhga valamudan//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    As usual the story is very nice.Thank you Sir./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  7. Good evening sir,
    Very nice Story, For Current generation youngsters very much needed story. Thank you sir.

    ReplyDelete
  8. Excellent sir.. must for Youngsters.. Hats off

    ReplyDelete
  9. /////Blogger gokila srinivasan said...
    Good evening sir,
    Very nice Story, For Current generation youngsters very much needed story. Thank you sir.////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  10. ////Blogger KJ said...
    Excellent sir.. must for Youngsters.. Hats off/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. எந்நவொரு அருமையான கதை சகோதரரே. மகிழ்ந்தேன். ஆச்சியைப் போல் நிறைய பேர் இருக்க வேண்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com