24.4.17

இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதியது!!!!


இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் 
சுஜாதா எழுதியது!!!!

அப்பா, அன்புள்ள அப்பா”

இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதி இருப்பது ஒரு அற்புதம்!

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள்.
 டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச்
பெட்டர் நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா
(pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம்.
“மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால்
ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி
ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!

சுஜாதா
------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:


  1. சுஜாதாவால் மட்டும் தான் இப்படி கண் கலங்க அப்பாவைப் பற்றி எழுத முடியும்.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    படிக்கப் படிக்க வேதனை! யாருடைய தகப்பனார் ஆனாலும் இதே கதைதான்!
    எழுத்தின் த/வன்மை அப்படி!
    சுஜாதா அவர்களின் முத்திரை அது!
    உருக்கம் நெருக்கமாக இருந்தது!
    வாழ்க சுஜாதாவின் புகழ்!

    ReplyDelete
  3. Good morning iyya how can you collect this information very nice sir

    ReplyDelete
  4. ப்பா...என்ன எழுத்து நடை...

    இறந்த கதை எழுதியவனும் இறந்துட்டான்....

    இதைப்படிப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்...

    " மல்லிமூட்டையை பாத்து இறக்கு"...
    என்னே ஒரு யதார்த்த நடை.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,படிக்கும்
    போதே அந்திம கால அனுபவத்திற்க்கு,அழைத்து சென்றுவிடுகிறார்.நன்றி.

    ReplyDelete
  6. ///Blogger Ragini Santosh said...
    சுஜாதாவால் மட்டும் தான் இப்படி கண் கலங்க அப்பாவைப் பற்றி எழுத முடியும்.////

    ஆமாம் சகோதரி!!! அந்த எழுத்து நடை அவருக்குக் கிடைத்த இறையருள்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    படிக்கப் படிக்க வேதனை! யாருடைய தகப்பனார் ஆனாலும் இதே கதைதான்!
    எழுத்தின் த/வன்மை அப்படி!
    சுஜாதா அவர்களின் முத்திரை அது!
    உருக்கம் நெருக்கமாக இருந்தது!
    வாழ்க சுஜாதாவின் புகழ்!///////

    ஆமாம், ஆமாம்!!! வாழ்க அவர் புகழ் இந்த வையம் உள்ளமட்டும்!!!! நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    Touching.////

    ஆமாம். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. ////Blogger Subathra Suba said...
    Good morning iyya how can you collect this information very nice sir//////

    எல்லாம் என் நண்பர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலமாகவும், வாட்ஸப் மூலமாகவும் வருவதுதான்!!!!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    வணக்கம்/////

    வணக்கம் வேப்பிலையாரே! உங்கள் வருகை நல்வரவாகட்டும் சுவாமி!!!!

    ReplyDelete
  11. ////Blogger mohan said...
    ப்பா...என்ன எழுத்து நடை...
    இறந்த கதை எழுதியவனும் இறந்துட்டான்....
    இதைப்படிப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்...
    " மல்லிமூட்டையை பாத்து இறக்கு"...
    என்னே ஒரு யதார்த்த நடை.
    நன்றி ஐயா./////

    உண்மைதான். அவருடைய அந்த அசத்தலான எழுத்து நடையால்தான் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!!!!!! நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  12. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,படிக்கும்
    போதே அந்திம கால அனுபவத்திற்க்கு,அழைத்து சென்றுவிடுகிறார்.நன்றி./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com