26.12.16

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

நீலவான் குடையின் கீழே
   நின்றாடும் உலகம் எங்கும்
கோலமோர் கோடி! ஆடி(க்)
   குலவுமோர் காட்சி கோடி!
காலையும் மாலையும் என்றும்
   கடும்பகல் இராப்போழ் தென்றும்
காலமோ விரைந்து போகும்
   காண்பதோ குறைவே யாகும்!

பூவமை வாசல் கன்னிப்
   புதுமலர் பெண்கள் பாடப்
பாவகை பலமன் றங்கள்
   பல்வகை நடனம்; நெஞ்சில்
ஆவலைக் கிளப்பும்; போதை
   ஆயிரம் மதுக்கிண் ணங்கள்;
காலனும்  வேலி யின்றிக்
   கட்டவிழ்த் தாடும் சங்கம்!

ஆடைகள் புதுவண் ணங்கள்
   ஆங்காங்கு நாடு தோறும்
மேடைகள் பலவண் ணங்கள்
   மெல்லிய மடவார் காட்டும்
ஜாடைகள் பலவா றாகச்
   சமைத்தநற் கறிகள், நீந்த
ஓடைகள் அருவி ஆறு
   உலகமே கலையின் கூடம்!

சில்லென்ற காற்று வந்து
   தேகத்தைத் தழுவும் குன்றம்
புல்லென்ற இறைவன் மெத்தை
   போகத்தின் நினைவை யூட்டிச்
செல்கின்ற மேகக் கூட்டம்
   சிறுமழைத் தூறல் சாரல்
கொல்கின்றாள் இயற்கை அன்னை!
   கொஞ்சத்தான் பருவம் இல்லை!

சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங்
   செல்வம்சேர் கோலா லம்பூர்
இங்கிலாந் தமெரிக் காவோ(டு)
   எழிலான பிரான்ஸூ ஜப்பான்
எங்கெங்கே விமானம் போகும்
   எல்லாமும் காணத் தோன்றும்,
இங்கேநான் வாழும் எல்லை
   இவைகாணும் அளவா யில்லை!

அணைக்கவோ இரண்டே கைகள்
   அனுபவித் துறவை வாழ்வில்
இணைக்கவோ ஒன்றே உள்ளம;
   இயறகையைச் சுகத்தை நித்தம்
பிணைக்கவோ சிலநாள் வாழ்க்கை;
   பெரும்பெரும் நினைவை யெல்லாம்
அணைக்கவோ வருவான் காலன்;
   அளந்துதான் கொடுத்தான் தேவன்!

இருபதே வயதாய் என்னை
   இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
   பார்க்கின்ற அனைத்தும் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
   மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
   உலகத்தை அனுப விப்பேன்!

இறைவனா விடுவான்? என்னை
   இருபாலும் விலங்கு போட்டுக்
குறையுள்ள மனிதனாக்கி
   குரங்கென ஆட்டு வித்து
முறையாக வயது போக
   முதுமையும் நோயும் தந்து
சிறைவாசம் முடிந்த தேபோல்
   ஜீவனை முடித்து வைப்பான்!

இதயத்தை எண்ணம் வெல்லும்
   இளமையை முதுமை வெல்லும்
அதிகமாய்த் தோன்றும் நெஞ்சில்
   ஆசையைக் காலம் வெல்லும்;
மதியினை விதியே வெல்லும்
   வாழ்க்கையைக் கனவே வெல்லும்
வதைபட்ட நிலையில் இந்த
   மனிதனை மரணம் வெல்லும்!
                            - கவியரசர் கண்ணதாசன்

===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. உயர்திரு ஐயா,

    காலை வணக்கம். அருமை அருமை கவிதை என்றால் இதுஅல்லவா கவிதை. கவியரசு தனிக்கே உரித்தான வகையில் எழுதிய கவிதை. எமக்கு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. "இறைவனா விடுவான்" என்று தெடுங்கும் வரிகள் மிகவும் அருமை. கவிதைக்கு பொருளும் சிறிது விளக்கமும் இருந்தால், கவிதை நயத்தை இனிதே ரசித்திருக்கலாம்.

    அன்புடன்,

    விசுவநாதன் N

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    தன்னிகரில்லாக் கவியரசர் கண்ணதாசன்... சொல்ல வார்த்தைகள் இல்லை... அத்துண பெரிய மாமனிதர்..
    இனி எங்கே அதுபோன்ற இன்னொருவர்?
    இறைவனே நினைத்தாலும் ஒருவேளை
    இயலாதோ என்னவோ?!
    வாழட்டும் அன்னாரின் புகழ் இப்புவிதனில் சூரிய சந்திரர்கள் உள்ள மட்டும்!
    என் வணங்கும்
    வரதராஜன்

    ReplyDelete
  3. அருமை மற்றும் அற்புதமான கவிதை

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,நீர்க்குமிழி போன்ற மனித வாழ்கையில் எத்துனை ஆசா பாசங்கள்.கடைசியில் மரணம்தான் வெல்லும்.கவிஞரின் அற்புதமான கவிதை வரிகள்."ஆடிய ஆட்டமென்ன" என்ற கவிஞரின் கவிதையும் நினைவுக்கு வந்தது. நன்றி.

    ReplyDelete
  5. ////Blogger Visvanathan N said...
    உயர்திரு ஐயா,
    காலை வணக்கம். அருமை அருமை கவிதை என்றால் இதுஅல்லவா கவிதை. கவியரசு தனிக்கே உரித்தான வகையில் எழுதிய கவிதை. எமக்கு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. "இறைவனா விடுவான்" என்று தெடுங்கும் வரிகள் மிகவும் அருமை. கவிதைக்கு பொருளும் சிறிது விளக்கமும் இருந்தால், கவிதை நயத்தை இனிதே ரசித்திருக்கலாம்.
    அன்புடன்,
    விசுவநாதன் N////

    கவியரசர் கண்ணதாசனின் கவிதைகள் எளிய சொற்களோடு இருக்குமே சுவாமி! அதற்கு எதற்கு விளக்கம்?

    ReplyDelete
  6. /////Blogger G. K A R T H I K E Y A N said...
    last paragraph super ji///

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தன்னிகரில்லாக் கவியரசர் கண்ணதாசன்... சொல்ல வார்த்தைகள் இல்லை... அத்துண பெரிய மாமனிதர்..
    இனி எங்கே அதுபோன்ற இன்னொருவர்?
    இறைவனே நினைத்தாலும் ஒருவேளை இயலாதோ என்னவோ?!
    வாழட்டும் அன்னாரின் புகழ் இப்புவிதனில் சூரிய சந்திரர்கள் உள்ள மட்டும்!
    என வணங்கும்
    வரதராஜன்/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. ////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    அருமை மற்றும் அற்புதமான கவிதை////

    நல்லது. நன்றி விஜயகுமார்!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நீர்க்குமிழி போன்ற மனித வாழ்கையில் எத்துனை ஆசா பாசங்கள்.கடைசியில் மரணம்தான் வெல்லும்.கவிஞரின் அற்புதமான கவிதை வரிகள்."ஆடிய ஆட்டமென்ன" என்ற கவிஞரின் கவிதையும் நினைவுக்கு வந்தது. நன்றி./////

    ஆமாம். தத்துவத்தில் அவர் தொடாத விஷயமே இல்லை. ஆகவே ஒன்றைப் படிக்கும்போது. இன்னொன்று வந்து நிற்பது உண்மையே. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  10. ////Blogger Kannan L R said...
    Iyya vanakkam
    Kavithai super
    Kannan/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com