4.10.16

Short Story: சிறுகதை: பொது வீடு


Short Story: சிறுகதை: பொது வீடு

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி, சென்ற மாதம் வெளிவந்து, பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று வலையில் ஏற்றி இருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
கதையின் தலைப்பு: பொது வீடு
-
சின்னைய்யா செட்டியாருக்கு கோபமே வராது. ஆனாலும் அன்று கோபம் வந்து, சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் மனைவி சீதாலெட்சுமி ஆச்சி, அவரைச் சமாதானப் படுத்திப் பொறுமையாகப் பேசும்படி செய்தார்.

“எதற்காகக் கோபம்?  எப்பவும் போல பொறுமையாகப் பேசுங்கள்.”

“என் தம்பி பேசுவதைக் கேட்டால், யாருக்கும் கோபம் வரும்.”

“என்ன சொல்கிறார்?”

“ஊரில் உள்ள நம்முடைய பொது வீடு இடியட்டும் என்கிறான். அதை ரிப்பேர் செய்வது வேஸ்ட் என்கிறான்.”

“அவரிடம் பணம் கேட்டால் அப்படித்தான் சொல்வார். ஆகவே அவரிடம் பணம் கேட்காமல் நீங்களும், உங்கள் பெரியப்பச்சி மக்களுமாகச் சேர்ந்து வீட்டை ரிப்பேர் செய்யுங்கள்.”

“அவனிடம் பெர்மிஷன் வாங்க வேண்டாமா?”

“வீட்டின் பொதுப் பகுதியை ரிப்பேர் செய்வதற்கு யாருடைய பெர்மிஷனும் வேண்டாம்.  அவருடைய அறைகளை, அவருக்குப் பாத்தியமான பகுதியை ரிப்பேர் செய்வதற்குத்தான், அவரிடம் கேட்க வேண்டும். அதைத் தொடாமல் மற்ற இடங்கள் அனைத்தையும், அதாவது ஒழுகுகின்ற இடங்கள் அனைத்தையும் ரிப்பேர் செய்யுங்கள்.”

“அவனிடம் பணம் வாங்கவில்லை என்றால் பரவாயில்லை என்கிறாயா?”

“அவர் உங்களுடன் பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்பச்சிக்கு நீங்கள் ஒருத்தர்தான் வாரிசென்றால் என்ன செய்வீர்களோ - அதைச் செய்யுங்கள்”

“உன்னால் எப்படி இப்படிச் சிந்திக்க முடிகிறது?”

“நம் வீட்டுப் பசு மாட்டிற்கு காலில் அடிபட்டு அதால் நடக்க முடியாத, நிற்க முடியாத நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். அடிபட்ட கால் என் தம்பியின் பங்குக்கு உரிய  கால், ஆகவே அவன் பணம் தந்தால்தான் மாட்டிற்கு வைத்தியம் பார்க்க முடியும் என்று சொல்வீர்களா? மாடு நம்முடைய பொது மாடு. ஆகவே நாம் வைத்தியம் பார்த்துத்தான் ஆகவேண்டும்!. அவரை மறந்து விட்டு நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். ஆகின்ற செலவை நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்யுங்கள். நீங்கள் கும்பிடுகின்ற பழநியாண்டவர் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டுவார்”

ஆச்சி பழநியாண்டவர் பெயரைச் சொன்னவுடன் சின்னைய்யா செட்டியார், அந்த வாதத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டார

                ***************************************************

ஊரில் இருக்கும் தங்கள் வீடு, பொது வீடுதான் என்றாலும் சின்னைய்யா செட்டியாருக்குத் தங்கள் வீட்டின் மேல் ஒரு தீராத காதல் உண்டு, 110 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பாட்டையா சொக்கலிங்கம் செட்டியார் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. அத்தனை அழகாக இருக்கும். இடத்திற்கு இடம் ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகளுடன் அம்சமாக இருக்கும்.  33 செண்ட் இடத்தில் கட்டப்பெற்ற வீடு.

சொக்கலிங்கம் செட்டியாருக்கு சின்னைய்யாவின் அய்யா சிவலிங்கம் செட்டியார் ஒரே ஒரு மகன்தான்.  அவருடைய காலத்தில்தான் வம்சம் பெருகி, அவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பேரர்கள் என்று, அந்த வீட்டிற்கு இன்றைய வாரிசுதாரர்கள் மொத்தம் ஐந்து பேர்கள் ஆனார்கள்.

சின்னைய்யாவின் அப்பச்சி சோமசுந்தரம் செட்டியார் இரண்டாவது மகன். அத்துடன் அவருக்கு இரண்டு மகன்கள். அவருடைய அண்ணன்  பரமசிவம் செட்டியாருக்கு மூன்று மகன்கள். சோமசுந்தரம் செட்டியாருக்கு வீட்டில் சரி பாதிப் பங்கு. அதில் இப்போது சின்னைய்யாவிற்கும் அவருடைய தம்பி கதிரேசனுக்கும் பெரிய வீட்டில் கால் கால் பங்கு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே 250 ஏக்கர் விளை நிலங்கள் பொதுச் சொத்தாக இருந்தன. இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்பு நீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் நொடித்துப் போன சமயத்தில் எல்லா நிலங்களையும் விற்றுக் காசக்கிக் கொண்டு பெரியவர்கள் எல்லாம் ஊருக்கே வந்துவிட்டபடியால், அப்போது அவர்களுடைய குடும்பத் தொழில் சுகஜீவனம் என்றாகி, கையில் இருந்த பணமெல்லாம் நடப்புச் செலவில் கரைந்து போய் ஒன்றும் இல்லாமலாகிவிட்டதோடு. பெரிய வாரிசுகள் எல்லாம் காலமாகி, இப்போது உள்ள பொது வீடு மட்டும்தான் மிஞ்சியது.

சின்னைய்யாவிற்கு ஒரு தேசிய வங்கியில்,  கிளார்க் வேலை. ஆபிசரானால் மூன்று வருடங்களுக்கு  ஒருமுறை ஊர் ஊராக பெட்டி தூக்க வைத்துவிடுவார்கள் என்று கிளார்க் வேலையே போதும் என்று எழுதிக் கொடுத்ததோடு சென்ற 30 ஆண்டுகளாக திருச்சி வட்டகையிலேயே வேலையைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். இப்போது அவருக்கு 55 வயதாகிறது. பணி ஓய்விற்கு இன்னும் 5 ஆண்டுகள் பாக்கி உள்ளது.

சின்னய்யாவின் தம்பி கதிரேசனுக்கும் வங்கியில்தான் வேலை. பெங்களூர், தவனகிரி, ஹூப்ளி என்று கர்நாடகா மாநிலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் பணி செய்தவர், இப்போது சென்னையில் இருக்கிறார். அந்த வங்கியின் வண்டலூர் கிளையில் மேலாளர் வேலை. கேளம்பாக்கத்தில் சொந்த வீடு என்று வசதியாக இருக்கிறார். ஆனால் ஊரின் மேல் பிடிப்பு இல்லாதவர்.  எப்போதாவதுதான் ஊருக்கு வருவார்.

சின்னைய்யாவின் பெரியப்பச்சி மகன்களில் மூத்தவரான சுப்பிரமணியன் செட்டியார், எல்.ஐ.சியில் வேலை பார்த்தவர், பணி ஓய்விற்குப் பிறகு ஊருக்கே வந்து தங்கள் வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கி விட்டார். அவருக்கு ஒரே ஒரு  பெண். அவள் திருமணமாகி சவுத் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சென்றவர், ஜோஹன்னெஸ்பர்க் நகரில் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து விட்டுப் போவார்.

சுப்பிரமணியன் செட்டியாரின் உடன்பிறப்புக்கள் இருவரும் கடலூரில் கூட்டாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சினை இல்லாமல் இருந்த பொது வீட்டில் இப்போதுதான் பிரச்சினை தலை தூக்க அரம்பித்தது.

என்ன பிரச்சினை?

கடந்த பத்து வருடங்களாக முறையான பராமரிப்பு இன்மையால், மழைகாலங்களில் வீட்டின் பல இடங்களில் நீர் ஒழுக ஆரம்பித்துவிட்டது.  அதை இப்போது ரிப்பேர் பார்க்க வேண்டும். கொத்தனாரைக் கூட்டிவந்து காட்டிக் கேட்கையில். ஆறு லட்ச ரூபாய் செலவாகும் என்று சொன்னார். மற்ற பங்குக்காரர்கள் எல்லாம் சரி என்று சொன்ன தோடு, ஊரில் பெரிய வீட்டில் இருக்கும் சுப்பிரமணியன் செட்டியார் தான் இருந்து பராமரிப்புப் பணிகளைச் செய்வதாகவும்  சொன்னார்.

அதன்படி சின்னைய்யா செட்டியாரையும் சேர்த்து மற்ற பங்குக்கரர்கள் நால்வருமாக ஒரு நல்ல நாளில் பராமரிப்புப்  பணியைச் செய்யத் துவங்கினார்கள்.

இரண்டு மாத காலத்தில், எட்டு லட்ச ரூபாய் மொத்த செலவுடன் பொது வீடு பொலிவு பெற்றது.

வாட்ஸப்பில் தங்கள் குடும்பத்திற்கென ஒரு க்ரூப்பை உண்டாக்கி, அதில் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு அனைவரும் அறிந்து கொள்ளும்படி சின்னைய்யா செட்டியார் செய்திருந்தார். யாரும் உனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது, என்னிடம் சொல்லவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளக்கூடாது. என்பதற்காக அந்த ஏற்பாடு.

வீட்டு பராமரிப்பு பணியெல்லாம் நிறைவாக முடிந்தவுடன், தன் மனைவியுடன், சின்னைய்யா செட்டியார் பழநிக்குச் சென்று பழநியாண்டவரைத் தரிசித்துவிட்டுத் திரும்பினார்.

திரும்பும் வழியில் ஆச்சி கேட்க செட்டியார் சொன்னார். “மொத்தம்  4 லட்ச ரூபாய் என் கைக்காசு செலவாகியிருக்கிறது. அதில் என் தம்பி தரவேண்டியது இரண்டு லட்ச ரூபாய்கள்.  அதை வாங்கிக் கொடுக்க பழநி அப்பனிடம் வேண்டிக் கொண்டு விட்டு வந்தேன்”

”வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார். பொறுமையாக இருங்கள்” என்று ஆச்சி அவர்கள் பதில் சொல்ல அவர் மெளனமாகிவிட்டார்.

                         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கேளம் பாக்கத்தில் உள்ள கதிரேசன் செட்டியாரின் வீட்டிற்கு அருகே அவருடைய வீட்டைத் தொட்டாற்போல இரண்டு காலி மனைகள் இருந்தன, அது முழுக்க காட்டுக் கருவேல மரங்கள் முளைத்து, வளர்ந்து, அச்சுறுத்திக் கொண்டிருந்தன.

அதில் 4 அல்லது 5 பாம்புகள் வேறு குடியிருந்தன. அச்சுறுத்தல் இருக்காதா என்ன?

அந்த இரண்டு மனைகளும் ஒருவருக்கே சொந்தமானது. அவரைச் சந்தித்துப் பேசியபோது,  ”அந்த இடங்களை நல்ல விலை கிடைத்தால் விற்பதாக உள்ளேன். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்”

“வாங்குவதற்காக நான் வரவில்லை. அந்த இடத்தை ஆட்களை விட்டு செம்மைப் படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. அதைச் செய்யுங்கள் போதும்”

“என்னால் முடியாது. உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள்” என்று கறாராகப் பேசி அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.
   
வெட்டிச் சுத்தம் செய்வதற்கு இங்கே ஆட்கள் கிடைக்காது. செங்கல்பட்டு தாண்டி உள்ள கிராமங்களில் இருந்துதான் ஆட்களைக் கூட்டிக் கொண்டு  வரவேண்டும். வருகிறவர்களும் ஒரு அடி உயரத்திற்கு மரத்தின் கீழ் பகுதியை விட்டுவிட்டு மேல் பகுதியை மட்டும்தான் வெட்டுவார்களாம். மரம் மீண்டும் முளக்கும் அபாயம் உண்டு. வேருடன் பெயர்த்து எடுங்கள். தரைப் பகுதியையும் சுத்தம் செய்யுங்கள் என்றால், அதற்கு பொக்லைன் எயந்திரத்தை வைத்துத்தான் நீங்கள்  சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை வைத்து ஆகக்கூடிய செலவைக் கணக்குப் பண்ணினால் இரண்டு லட்ச ரூபாய் ஆகும்போல் இருந்தது.

கதிரேசன் செட்டியார் நொந்து போய் விட்டார். அவருடைய மனைவி மீனாட்சி ஆச்சிதான் சமாதானமாகப் புரியும்படி பேசினார்:

“நீங்கள் ஊரில் உள்ள பொதுவீட்டை  ரிப்பேர் செய்வதற்கு இடக்குப் பேசி வம்பளந்தீர்கள். இப்போது விதி உங்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளது. ஆகவே வேறு வழியில்லை, நாம்தான் செய்ய வேண்டும்.”

“நான் செய்வதாக இல்லை. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று ஆச்சியை அதட்டி அனுப்பிவிட்டார்.

                    ********************************************************
கதிரேசன் செட்டியாரின் மகன் ஓ.எம்.ஆர் தெருவில் இருக்கும் ஒரு கணினி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தான். அன்று வேலை முடிந்து அவன் வீட்டிற்குத் திரும்பும் போது மணி இரவு பதினொன்றைத் தொட்டிருந்தது.

வீட்டிற்கு வெளியில் இருந்து தன்னுடைய கார் ஹாரனின் மூலம் ஒலி எழுப்பினான். அதை வீட்டிற்குள் இருந்து கேட்ட அவனுடைய தாயார் மீனாட்சி ஆச்சி கதவைத் திற்ந்து கொண்டு, போர்ட்டிகோ பகுதிக்கு வந்தார்,

மின் சிக்கணம் என்ற பெயரில் செட்டியார் விளக்குகளை அனைத்து வைத்திருந்தார். ஆச்சி போர்ட்டிகோ விளக்கைப் போடுவதற்கு எத்தனிக்கும்போது, கீழே கிடந்த பாம்பைக் கவனிக்காமல் அதன் மேல் காலை வைத்து நன்றாக மிதித்துவிட்டார். பாம்பும் ஆச்சியைக் கொத்திவிட்டு நகர்ந்து சென்றது. விளக்கு வெளிச்சத்தில் பாம்பைப் பார்த்த ஆச்சி, அது கொத்தியதையும் உண்ர்ந்த ஆச்சி, “அடேய், பாம்பு கடித்து விட்டது” என்று பதற்றத்துடன் அலறலாகக் குரல் கொடுத்தார்.

கேட்டின் மீது ஏறிக் குதித்து உள்ளே வந்த மகன் , வீட்டின் உள்ளே நுழைந்து தாயாரின் மேற்பகுதிக் காலில் இறுக்கமாகக் கட்டுப் போட்டு விஷம் மேலே ஏறாமல் தடுத்ததுடன், அடுத்த 10வது நிமிடம் அருகில் இருந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றில் தன் தாயாரை சேர்த்ததுடன், அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தான்.

அங்கேயிருந்த மருத்துவர்கள் ஆச்சியைக் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால் காலின் கீழ் பகுதியில் இரத்தம் கட்டி பட்டுப் போயிருந்த பகுதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆச்சியை அங்கே ஒரு வாரம் படுக்க வைத்துவிட்டார்கள்.

ஒருவாரம் கழித்து ஆச்சியை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வரும்போது, மருத்துவமனைச் செலவு எழுபத்தையாயிரம் ரூபாயைத் தொட்டிருந்தது.

அடுத்த நாளே கதிரேசன் செட்டியார் வங்கிக்கு ஒரு வாரம் லீவு போட்டதுடன், ஆட்களைப் பிடித்து வந்து பக்கத்து மனைகள் இரண்டையும் சுத்தம் செய்து கட்டாந்தரையாக்கினார். பொக்லைன் நிறுவனத்தாரும் கொடுத்த பணியைச் செவ்வனே செய்து முடித்திருந்தார்கள். வந்திருந்த வேலையாட்கள், அங்கே தாங்கள் அடித்துப் போட்ட ஐந்து பாம்புகளையும் அவருக்குக் காட்டினார்கள்.

எது எப்படிப் போனாலும், ஆச்சி அவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததில் இந்த செலவெல்லாம் கதிரேசன் செட்டியாருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இதை ஆச்சியிடமும் சொன்னார்

ஆச்சி அவர்கள் மனக் கலக்கத்துடன் சொன்னார்கள்,   “உங்கள் அண்ணன் முருக பக்தர். வாட்ஸாப்பில் செய்தி பார்த்தீர்கள் இல்லையா? அவருடைய மன வருத்தம் நமக்கு வேண்டாம். அவர் மனம் வருத்தப்பட்டால் நமக்கு இன்னும் என்னென்ன கேடு வருமோ - யாருக்குத் தெரியும்? ஆகவே அவருடைய பணத்தை, உங்களுக்காக அவர் செலவழித்த பணத்தை அவருக்கு உடனே அனுப்பி வையுங்கள்”

ஆச்சியின் பேச்சில் இருந்த சத்தியத்தை உணர்ந்த கதிரேசன் செட்டியார், அன்றே தன் அண்ணனின் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பி வைத்ததோடு, வாட்ஸ்சப்பில் செய்தியையும் பதிவு செய்தார்.

செய்தியைப் பார்த்த சின்னையா செட்டியாரின் கண்கள் பனித்தன, ஒரு சிரமமும் இல்லாமல் பணத்தை வாங்கிக் கொடுத்த பழநி அப்பனின் மகிமையை நினைத்து மனம் குளிர்ந்தது.
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected Sir,

    Happy morning... Superb post.

    Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. Nalla kathai mattumalla, karuthulla kayhaium .

    ReplyDelete
  3. அருமையான கதை. உங்கள் கதைகளைப் படித்தாலேயே நகரத்தார் வாழ்வியலைக் கற்றுவிடலாம்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    கிள்ளிப்பார்த்தேன்
    கையை வலிக்கிறது
    நிசமாய்
    ஆளுயர பெல்ஜியம்
    கண்ணாடிகளையும்
    அரண்மனை போன்ற
    வீட்டையும் கண்ணிலே
    காட்டிவிட்டு கதையென்று
    சொல்லும்போதும்
    மின்சார சிக்கனத்தில்
    மினுமினுக்கும் அரவத்தையும்
    கண்முன்னே ஓடவிட்டு
    கதையென்று சொல்லும்
    போதும் கிள்ளிப்பார்த்தேன்
    கையை வலிக்கிறது
    நிசமாய் எனவே கனவல்ல
    கதையுமல்ல இது நிசம்தான்.
    நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Superb post.
    Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  6. ////Blogger KARTHIKEYAN V K said...
    Nalla kathai mattumalla, karuthulla kayhaium /////.

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    அருமையான கதை. உங்கள் கதைகளைப் படித்தாலேயே நகரத்தார் வாழ்வியலைக் கற்றுவிடலாம்.////

    உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,
    கிள்ளிப்பார்த்தேன்
    கையை வலிக்கிறது
    நிசமாய்
    ஆளுயர பெல்ஜியம்
    கண்ணாடிகளையும்
    அரண்மனை போன்ற
    வீட்டையும் கண்ணிலே
    காட்டிவிட்டு கதையென்று
    சொல்லும்போதும்
    மின்சார சிக்கனத்தில்
    மினுமினுக்கும் அரவத்தையும்
    கண்முன்னே ஓடவிட்டு
    கதையென்று சொல்லும்
    போதும் கிள்ளிப்பார்த்தேன்
    கையை வலிக்கிறது
    நிசமாய் எனவே கனவல்ல
    கதையுமல்ல இது நிசம்தான்.
    நன்றி.//////

    நிசம்போல் தோன்றுகின்ற புனைவுக் கதைதான். நன்றி ஆதித்தன்!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com