31.10.16

எதற்காக தீபாவளி ?

 
 எதற்காக தீபாவளி ?

தீபாவளி : வாரியார் அவர்களின் விளக்கம்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

சோமவார விரதம்
உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
திருவாதிரை விரதம் (மார்கழியில்)
சிவராத்திரி விரதம் (மாசியில்)
கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
பாசுபத விரதம் (தைப்பூசம்)
அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]
---------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம் குருவே!
    வாரியார் அவர்களின் சொற்பொழிவைக்
    கேட்டோருக்குத் தெரியும் அவரது நகைச்சுவையுடன் அறிவார்ந்த கருத்துக்கள் மட்டுமே அன்னாரின் நாவிலிருந்து வரும் என்பது! தீபாவளி பற்றிய அவரது அவ் விளக்கம் ஏன் பாமரமக்களைச் சென்றடையவில்லை என்பது புதிராகவல்லவோ உள்ளது? நரகசதுர்த்தி ஸ்நானம் என்றும் கங்காஸ்நானம் ஆச்சா? என்றும் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேனே?!
    வாரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்தும் இவ்வினாவுக்கு விடை தெரியாதிருந்துவிட்டது கொடுமை தான்?!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Thanks for sharing.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. தேவ தீபாவளி என வாரணாசியில் மட்டும் நடக்கும விழா...

    ReplyDelete
  4. தீபாவளி பற்றிய எனது அறிவை மேம்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,தீபாவளிபற்றி உண்மையான விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.நன்றி.

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    வாரியார் அவர்களின் சொற்பொழிவைக்
    கேட்டோருக்குத் தெரியும் அவரது நகைச்சுவையுடன் அறிவார்ந்த கருத்துக்கள் மட்டுமே அன்னாரின் நாவிலிருந்து வரும் என்பது! தீபாவளி பற்றிய அவரது அவ் விளக்கம் ஏன் பாமரமக்களைச் சென்றடையவில்லை என்பது புதிராகவல்லவோ உள்ளது? நரகசதுர்த்தி ஸ்நானம் என்றும் கங்காஸ்நானம் ஆச்சா? என்றும் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேனே?!
    வாரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்தும் இவ்வினாவுக்கு விடை தெரியாதிருந்துவிட்டது கொடுமை தான்?!/////

    இனிமேல் சென்றடையட்டும் வரதராஜன்!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    தேவ தீபாவளி என வாரணாசியில் மட்டும் நடக்கும் விழா.../////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. /////Blogger C Jeevanantham said...
    தீபாவளி பற்றிய எனது அறிவை மேம்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா /////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!!!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,தீபாவளிபற்றி உண்மையான விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.நன்றி./////

    ஆமாம். வாரியார் சொன்னதால் அது உண்மையானதாகத்தான் இருக்கும்.நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com