7.6.16

செட்டிநாட்டுச் சாப்பாட்டின் சிறப்பு!


செட்டிநாட்டுச் சாப்பாட்டின் சிறப்பு!

இந்தப் பதிவு லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களுக்கு சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------

பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!

அம்மியில்லாத ஆச்சிவீடு  ?!

அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!

பலாக்காயில பருப்புப்போட்டு
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லையப்பா!

அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி ரெசிபி{பக்குவம்}
சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!

புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அதுவொருசுவை!

பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
உருசியான மண்டியப்பா!

பறங்கிக்காய் புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!

அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!

வத்தல் வகை

வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!

கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!

வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல

வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!

துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!

மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்!

சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!

பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்!

வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!

மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!

உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!

மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!

பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!

இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!

ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!

அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!

இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!

அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல

ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!

அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!

பூரிக்கு கிழங்கு!

சப்பாத்திக்கு குருமா!

இட்டலிக்கு டாங்கரு!

சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!

இனிப்பு வகை

கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்

வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்

இனிப்புச்சீயம்!

தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி

பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!

ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!

உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!

கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!

குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!

முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்!
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. 'நான் வெஜ்' பதார்த்தங்கள் தவிர மற்றவற்றை சமர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு நன்றாக உண்டு களித்தேன்.

    நீண்ட நாட்களுக்குப்பின்னர் செட்டிநாட்டு சமையல் ருசி. ஆகா! நன்றி ஐயா!

    ReplyDelete
  2. Respected sir,

    Thank you very much for your detailed chettinadu samaiyal list. I am very much interested to come to your home to taste all the varieties. Will you permit me sir. Really I am enjoyed your dishes list. Some of them I am not able to understand the dish name. Great, Great, Great sir.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு வரி பக்குவத்திற்கே இவ்வளவு சுவையென்றால்?!.ரெசிபி பற்றி ஒரு என்சைக்ளோபீடியா படித்தது போல் உணர்ந்தேன்.நன்றி.

    ReplyDelete
  4. சொக்க வைக்கும் தமிழாலே
    சொல்லி வந்த  அழகாலே
    கடவாயில் எச்சில்
    கடலளவு ஊறுதையா...

    ஆசிரியர் சொன்னபடி
    அடுத்தடுத்துப் புசிப்பதற்கு
    நா சிறியதானாலும்
    நடுவயிறு பெரியதையா...

    சூடான இட்டிலியை
    சுக்குநூறாய் பிசைந்து விட்டு
    சாரல் தூறலாக
    சரசரவென நெய்யூற்றி
    தோசைப் பொடியதனை
    தூக்கலாய் தூவி விட்டு
    ஆசையாய்க் குழைத்து உண்டால்
    அம்புட்டு ருசியாகும்
    அடடாவோ அடடா....

    ( சும்மா நானும் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன் ).

    விருந்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  5. ஆஹா அருமையான சாப்பாடு.அன்னம் இட்ட கைகள் இன்னும் உண்டல்லோ.நல்ல பதிவு.

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    'நான் வெஜ்' பதார்த்தங்கள் தவிர மற்றவற்றை சமர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு நன்றாக உண்டு களித்தேன்.
    நீண்ட நாட்களுக்குப்பின்னர் செட்டிநாட்டு சமையல் ருசி. ஆகா! நன்றி ஐயா!/////

    நகரத்தார்கள் எல்லாம் சைவர்கள்தான்.சிவ பக்தர்கள். ஆனால் என்ன ஆயிற்று என்றால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் வணிகத்திற்காக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வீயட்நாம் என்று பல நாடுகளுக்குச் சென்று சென்று தங்கி வந்தவர்கள். புலாலையும் பழகிக் கொண்டுவந்ததோடு அவர்கள் வீடுகளிலும் விட்டு விட்டார்கள். இன்று 25% பேர்கள் மட்டுமே புலால் உண்பவர்கள். மற்றவர்கள் வீடுகளில் எல்லாம் சைவச் சாப்பாடுதான்! என் பெற்றோர்கள் பிறவிச் சைவம். நானும் சைவம்தான்!

    ReplyDelete
  7. //////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you very much for your detailed chettinadu samaiyal list. I am very much interested to come to your home to taste all the varieties. Will you permit me sir. Really I am enjoyed your dishes list. Some of them I am not able to understand the dish name. Great, Great, Great sir.
    with kind regards,
    Visvanathan N//////

    முகூர்த்த நாட்களில் வாருங்கள் காரைக்குடிக்குச் சென்று அத்தனை பதார்த்தங்களையும் உண்டு மகிழ்ந்து விட்டு வரலாம்.வீடுகளில் ஒரே நாளில் இத்தனை அயிட்டங்களும் கிடைக்காது சாமி!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு வரி பக்குவத்திற்கே இவ்வளவு சுவையென்றால்?!.ரெசிபி பற்றி ஒரு என்சைக்ளோபீடியா படித்தது போல் உணர்ந்தேன்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. //////mohan said...
    சொக்க வைக்கும் தமிழாலே
    சொல்லி வந்த அழகாலே
    கடவாயில் எச்சில்
    கடலளவு ஊறுதையா...
    ஆசிரியர் சொன்னபடி
    அடுத்தடுத்துப் புசிப்பதற்கு
    நா சிறியதானாலும்
    நடுவயிறு பெரியதையா...
    சூடான இட்டிலியை
    சுக்குநூறாய் பிசைந்து விட்டு
    சாரல் தூறலாக
    சரசரவென நெய்யூற்றி
    தோசைப் பொடியதனை
    தூக்கலாய் தூவி விட்டு
    ஆசையாய்க் குழைத்து உண்டால்
    அம்புட்டு ருசியாகும்
    அடடாவோ அடடா....
    ( சும்மா நானும் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன் ).
    விருந்திற்கு நன்றி ஐயா...//////

    நல்லது. நன்றி மோகன்!

    ReplyDelete
  10. //////Blogger Mera Balaji said...
    ஆஹா அருமையான சாப்பாடு.அன்னம் இட்ட கைகள் இன்னும் உண்டல்லோ.நல்ல பதிவு./////

    நல்லது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com