12.5.15

கவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்

கவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்

பெண்ணிற்கு காதல் மயக்கம் வந்தால் என்ன ஆகும்?

தன் மனதிற்குள் வைத்து உருகுவாள்.

சரி திரைப்படங்களில், அந்த உருக்கத்தை எப்படிக் காட்ட முடியும்?

அவள் உணர்வுகளைக் கவிஞர் ஒருவர் அற்புதமாகக் கவிதை
வரிகளால் எழுதிக் கொடுக்க, தேன் குரலால் சுசிலா அவர்களைப்
போன்ற சிறந்த பாடகி ஒருவர் நல்ல பாவத்துடன் அந்தப் பாடலைப்
பாட, நாயகியும் காட்சிக்கு ஏற்றார்ப்போல முக பாவம் மற்றும்
நளினம் காட்டி நடிக்க - அருமையாகக் காட்சி அமைத்துக் காட்டி
விடுவார்கள். (அதெல்லாம் ஒரு காலம் )

அப்படிக் கவியரசர் கண்ணதாசன் எழுதிய - பெண் மயங்கிப் பாடும்
காதல் பாடல்கள் இரண்டினை இன்று பதிவிட்டுள்ளேன்.படித்து
மகிழுங்கள்!
-----------------------------
"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
(நெஞ்சத்திலே)

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்க ளிரண்டில் நிம்மதி ஏது?
(நெஞ்சத்திலே)

காவிரி ஆறென நீர் விளயாட
கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்போல் ஆட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
(நெஞ்சத்திலே)"

பட்ம்: சாந்தி - வருடம் 1965

நினைவு தராமல் நீயிருந்தால், கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
என்ற வரிகளும், காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்,
கண்களிரண்டில் நிம்மதி ஏது? என்ற வரிகளும் சிறந்த வரிகளாகும்

காவிரி ஆறென நீர் விளயாட, கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம்போல்
ஆட - நீ தரவேண்டும் - நான் பெறவேண்டும் - நிலவினில் ஆடும்
நிம்மதி வேண்டும் - என்று எழுதிய வரிகளும் சிறந்த
வரிகளாகும்
--------------------------
மற்றுமொரு பாடல்:

"மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
மயங்குகிறாள் ஒரு மாது
(மயங்கு)

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)"

படம்: பாச மலர் - வருடம் 1961

மனதிற்கும், செயலுக்கும் உறவில்லாத நிலை என்று எப்படித் தன்
பாடலைத் துவங்கினார் பார்த்தீர்களா? ஒரு மயக்க நிலையை
இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்ல முடியும்? அதுதான் கவியரசர்!

"தோழியர் கதை சொல்லித் தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா நாழிகை செல்வதும் நினைவில்லையா"
- என்ற வரிகளும்

 "பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள் படித்தவள் தான் அதை
மறந்து விட்டாள் காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்"
- என்ற வரிகளும் சிறப்பான வரிகளாகும்.

காதலை அவள் நாணத்தில் மறைத்து விட்டாள் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பான வரியாகும்

அன்புடன்,
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. சிறப்பான பாடல்களைக் குறித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. மெல்லிசை மன்னர் தொடுத்தவற்றுள் சிறப்பிடம் பெறுபவை..

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா வணக்கம்.

    கவிதை ரசிக்கும் தன்மையை தான் இந்த இரு பாடல்களும் எடுத்து உறைகின்றன .

    மிக்க அருமை ஆசானே .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com