13.11.14

எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி?


கவியரசர் கண்ணதாசனும் இசையமைப்பாளர்  M.S.V யும்

எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி?

கடைசி பெஞ்ச் மாணவன் என்று,  எனக்குக் கடிதம் எழுதும்போது சிலர் குறிப்பிடுகிறார்கள்

கடைசி பெஞ்சுன்னா என்ன? அதனால ஒன்னும் தப்பில்லை! எங்கள் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில்தான் கண்ணதாசன் படித்தார். அதாவது எங்கள் ஊரான தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் பிராதான சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அமராவதிபுதூர் சுப்பிரமணியன் செட்டியார் குருகுல பள்ளிக்கூடத்தில்தான் கவியரசர் கண்ணதாசன் படித்தார். உடை, தங்கும் இடம், உணவு, படிப்புக் கட்டணம் என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து பதிமுன்று ரூபாய்தான் கட்டணம்.

இப்போது, அதாவது இன்றைய விலைவாசியில், அந்தப் பதிமூன்று ரூபாய்க்கு ஒரு காப்பிகூட சாப்பிடமுடியாது. 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலைமை அது. எங்கள் ஊர் அன்னபூர்ணா ஹோட்டலில் காப்பியின் விலை ரூ.25:00

படிக்கின்ற காலத்தில் அவரும் கடைசி பெஞ்சு மாணவன்தான். எட்டாம் வகுப்பு வரை படித்ததோடு நின்றுவிட்டார் (வருடம் 1943). அதாவது பள்ளியில் படிக்கின்ற காலத்தில் இரவு நேரங்களில் விடுதியில் இருந்து வெளிவந்து, சுவர் ஏறிக்குதித்து, நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்குச் செல்லும் ஆசையினால் அவ்வாறு செய்தார். பள்ளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காரைக்குடிக்குச் செல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக பலமுறை அவர் அப்படிச் சென்றிருக்கிறார். விடுதி காப்பாளாரிடம் மாட்டியும் இருக்கிறார். பலமுறை எச்சரித்திருக்கிறார்கள். கடைசியில் ஒருநாள் பள்ளியை விட்டே வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டார்கள். அப்போது கவிஞருக்கு வயது 15.

பள்ளியைவிட்டு வரும்போது அங்கேயிருந்த வாத்தியாரும் மேலாளருமான சுப்பிரமணியன் என்பவர், கண்ணதாசனுக்குக் கொடுத்த சர்ட்டிஃபிகேட்
என்ன தெரியுமா? "நீ எங்கு போனாலும் உருப்படமாட்டே!" என்பதேயாகும்.

கண்ணதாசனுக்கு பள்ளியில் கிடைத்த சான்றிதழ் விவரம் அவருடைய மனவாசம் புத்தகத்தில் உள்ளது. முடிந்தால் அந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். அசத்தலாக இருக்கும். அது அவருடைய சுயசரித நூல்.

பல வாத்தியார்களுக்கு சொல்பலிதம் இல்லை. கண்ணதாசன் பின்நாளில் நாடேபோற்றும் கவிஞரானார்.


சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்

கவியரசர் பலே பாண்டியா திரைப்படத்திற்கு எழுதிய ‘ வாழநினைத்தால் வாழலாம்’ பாடலைக் கேட்டுவிட்டு, ரசிகர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது நெனைக்குறபடி எல்லாம் நடந்தாத்தான் வாழலாமா? இல்லேன்னா செத்துவிட வேண்டுமா?’ என்ற சந்தேகம்.

கவியரசர் எப்பொழுதுமே படத்தில் வரும் காட்சி களுக்குரிய சூழ்நிலைக்குத்தான் பாட்டை எழுதுவார்

படத்தில் என்ன சூழ்நிலை?

வண்ணப்பறவை போன்ற கதாநாயகி, நாயகனைப் பார்த்துச்சொல்கின்றார்:

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்"

உடனே நாயகன் பார்க்கச் சொன்னவளையே பார்க்கிறான். உடனே நினைக்கிறான் இந்த வண்ணப் பறவையே கிடைத்தால் போதுமே என்று நினைத்து உடனே அவளிடமே ஒரு மனுவைக் கொடுக்கும் முகமாக தன் பாடல் வரிகளில் சொல்கிறான்

"கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்"

ஆமாம் அவள் கிடைத்தாள் போதாதோ? வாழ்க்கையில் உள்ள சோகங்களையெல்லாம் மறந்துவிட்டு வாழலாம் என்று நினைத்தான் போலும்.

அதைத்தான் கவியரசர் அந்த சுழ்நிலைக்குச் சொல்லியிருக்கிறார்.

இல்லாவிட்டால், செத்துவிடு என்று கண்ணதாசன் சொல்லவில்லையே?

சொந்த வாழ்க்கையில் கண்ணதாசன் ஒரு பெண்ணைக் காதலித்துக் காதல் கைகூடாமல் போனவர். அதற்காக அவர் கவலைபட்டு நொடிந்து போகவில்லையே?

அவர் எழுதிய அத்தனை பாட்டுக்களுமே படத்தின் சூழ்நிலைக்கு மட்டுமே எழுதப்படடதாகும். சில பாடல்கள் படத்தின் சூழ்நிலையையும், அவருடைய சொந்த வாழ்க்கையின் அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். அது இயற்கையே!

இதை நான் என்னுடைய பல பதிவுகளில் மாய்ந்து மாய்ந்து விளக்கி எழுதியுள்ளேன்
----------------------------------------------
காதலைப் பற்றி இன்னொரு படத்தில் கவியரசர் இப்படியெழுதினார்:

"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட் அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!"

இது அந்தப் படத்திற்காக எழுதியது.

கவிஞர்கள் எப்பொழுதுமே இப்படித்தான். சூழ்நிலைக்கு, உணர்வு வயப்பட்டு அப்போது தங்கள் மனதில் தோன்றுவதை எழுதிவிடுவார்கள்!

ஒரு கவிஞன் எழுதினான்

"மாடு (wealth) மனை (house) போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடி செம்பொன் போனாலென்ன - உன்
குறுநகை ஒன்று போதும்!"

என்று தன் காதலிக்கு அவன் எழுதிக் கொடுத்தானாம். குறுநகை மட்டும் இருந்தால் போதுமா? Roti, Kapata, makanற்கு என்ன செய்வதாம்?

செத்துவிடு என்று எந்தக் கவிஞனுமே சொல்ல மாட்டான். சொன்னால் அவன் கவிஞனல்ல!

வேறு ஒரு கவிஞன் எழுதினான்

"அனைக்க - ஒரு 
அன்பில்லாத மனைவி
வளர்க்க - இரு 
நோயுற்ற சேய்கள்
பிழைக்க - ஒரு 
பிடிப்பில்லாத தொழில் - ஆனாலும்
ஏனோ இன்னும் உலகம் கசக்கவில்லை!"

அதுதான் வாழ்க்கை!

கண்ணதானும் வாழ்க்கையைப் பற்றி நான்கே வரிகளில் அற்புதமாக எழுதியுள்ளார்.

"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்"

சரி, தலைப்பிற்கு வருகிறேன். எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி? அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படாதீர்கள். கர்மகாரகன் பார்த்துக் கொள்வான். இறைவன் கை கொடுப்பார். ஆகவே இறை நம்பிக்கையோடு இருங்கள். நடப்பது எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இரவும் வரும் பகலும் வரும் பாடல் கவிஞர் எழுதியதா? ஆலங்குடி சோமு எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. எங்கே போனாலும் உருப்படுவதற்கு இறைவன் கை கொடுப்பான்.

    உண்மை..

    இனிய பதிவு!..

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Hope all is well.

    Nice post... We can get according to our karma (planet positions in 12 houses).

    With kind regards,
    Ravichandran m.

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.

    தாங்கள் வரும் தை மாதம் திருநெல்வேலி மாவட்டம்,
    சிவகிரி தாலுகா,
    வாசுதேவநல்லூர் கிராமத்திற்கு வர உள்ளீர்கள் என்பதனை இன்றே தெரிவித்துகொள்கின்றேன்.

    ஏனெனில் தாங்கள் எனக்கு ஓர் வாக்கு கொடுத்து உள்ளீர்கள்
    நல்ல காரியத்தின்
    " அழைப்பிதழை " கூறுங்கள் வந்து " வாழ்த்தி " விட்டு செல்கின்றேன் என்று.

    இதனை தாங்கள் கூறி சுமார் ஐந்து வருடமாவது இருக்கும் என்று நம்புகின்றேன்.

    அந்த நல்ல காரியம் என்ன என்பதனை பின்னர் தெரிவிக்கின்றேன் ஐயா!.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    இறை நம்பிக்கையோடு இருங்கள். நடப்பது எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!

    அதே பாடலில் கவிஞரின் வரிகள்!

    "வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான், தெய்வம் ஒன்று தான்!"

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா. நீங்கள் அமராவதிபுதூர் குருகுலம் பள்ளியில் படித்தவரா? அப்பள்ளியில்தான் என் மாமனார் திரு. நாகநாதன் தலைமை ஆசிரியராக இருந்தார். மற்றும் என் கணவரும்,அவர் சகோதரர்களும் பணியாற்றிய பள்ளி. என் கணவர் காலஞ்சென்ற திரு. சந்திரமணி ஆரம்பித்துவைத்த '' மாணவர்களுக்குப் பரிசுத்திட்டம்'' சிறப்பாக நடை பெற்றுவருகிறது. -கமலாசந்திரமணி

    ReplyDelete
  7. Good evening sir,
    I want horoscope books.

    ReplyDelete
  8. Enjoyed reading this article. Thank you,Sir.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய ஐயா!

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.

    இதை மேலொட்டமாக பார்த்தால், சாதாரண மக்களுக்கு வாழ வழி சொல்வது போல் தெரியும். உண்மையில் கவிஞர் அவர்கள், தியானம் செய்து கடவுளை காணும் வழியை இங்கே கூறியுள்ளார். ஜாதக ரீதியில் வாழ்க்கை சரியில்லாதவர்கள், தற்கொலை செய்து கொள்வதை விட, தியானம் செய்து கடவுளைக் காணலாம் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறாரோ!

    அன்புடன்

    தரணிக்கரசு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com