3.9.14

மனதை மயக்கிய மந்திரச் சொல் - பகுதி 2



மனதை மயக்கிய மந்திர்ச் சொல் - பகுதி 2

இந்தக் கட்டுரையின் முன் பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------
அவர் தன்னுடைய இளம் வயதில் (20 வயதில்) முதன் முதலில்
அவராகவே ஒரு மேடை அமைத்து, காங்கிரஸ் கட்சிக்காக தனியாக மேடையில் பேசியபோது கீழே அமர்ந்து கேட்டவர்கள் ஏழுபேர்கள்
தான். அந்த ஏழு பேர்களும் இவருடைய உறவினர் வீட்டுப்
பையன்கள். இவர் பேசுகிறாரே என்று கேட்க வந்தவர்கள்.

மைக் செட்டெல்லாம் இல்லாத காலம் அது.

பின்னாட்களில் ஏழாயிரம், எழுபதாயிரம் பேர்கள் அமர்ந்த பல
கூட்டங்களில் இவர் பேசினார் என்பது ஒரு தனி வரலாறு!

அந்தக்காலத்தில் காங்கிரஸ் கூட்டமென்றால் போலீஸ் கெடுபிடி அதிகம்.அராஜகம் அதிகம். இவர் பேச ஆரம்பித்ததும், உள்ளூர்
காவல் நிலையத்தலைமைக் காவல்காரர் அங்கே வந்து விட்டார். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்
அது. ஏகப்பட்ட கெடுபிடிகள் நிறைந்த சமயமும் கூட!

ஏட்டய்யாவைக் கண்டவுடன் முன்னால் அமர்ந்து கேட்ட ஏழு
பேர்களும் எழுந்து ஓடி விட்டார்கள். ஆனால் நமது நாயகர் மட்டும்
விடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“நிறுத்து” என்று ஏட்டையா குரல் கொடுத்தவுடன் இவர்
நிறுத்தவில்லை. மேடையில் இருந்தவாறே குரல் கொடுத்தார்,

“ஏன் நிறுத்த வேண்டும்?”

தன் சக தோழர்களூடன் (போலீஸ்காரர்களுடன்) நின்று
கொண்டிருந்த ஏட்டு பதில் சொன்னார், ‘144 தடை உத்தரவு
இருக்கிறது”

உடனே இவர் சொன்னார், “உத்தரவைக் காட்டுங்கள்”

ஏட்டைய்யா திகைத்துப் போய்விட்டார். அந்தக் காலத்தில்
ஏட்டைய்யா என்பது பெரிய பதவி. யாரும் அதுவரை அப்படிக்
கேட்டதில்லை.

அதைத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய
மேலதிகாரி சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்,

“காட்டச் சொன்னால் நம் வழக்கப்படி அதைக் காட்டைய்யா”

ஏட்டைய்யா உடனே மேடை ஏறிக்காட்டினார்.

எதை? உத்தரவையா? இல்லை, தங்கள் அராஜகத்தை!

அடித்து, உதைத்து, கையில் விலங்கு மாட்டி ஸ்டேசன் வரை
தெருவில் இழுத்துச் சென்று எச்சரிக்கை செய்து, பிறகு நமது
நாயகரைப் போலீசார் விட்டு விட்டார்கள்
---------------------------------------------------
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி.

இந்திய மக்களின் விடுதலைப் புரட்சி துவங்கிய நேரம்.
‘வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷம் நாடெங்கும்
கேட்கத் துவங்கியது.

நமது நாயகரும் சும்மா இருக்கவில்லை. தேவகோட்டை
வட்டாரத்தில் பல இடங்களில் ஆவேசமாகப் பேசிப் பெருங்
கூட்டத்தைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

போலீசிற்குத் தலைவலியாக இருந்தது. இவரைக் கைது
செய்து உள்ளே போட்டுவிட்டால் பிரச்சினை தீரும் என்று
எதிர்பார்த்தார்கள். பகலில் இவரைச் சுற்றி எப்போதும்
500 அல்லது 600 பேர்களுக்குக் குறையாத இளைஞர்கள் கூட்டம்

அதனால் ஒரு இரவு, நடுநிசி நேரத்தில் பத்து லாரி போலீசார்
புடைசூழ, இவரைக் கைது செய்து, தேவகோட்டையில் இருந்து
22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாடானை என்ற நகரத்தில்
உள்ள சிறைக்குக் கொண்டுபோய் அடைத்து வைத்துவிட்டார்கள்

அவ்வளவுதான், அடுத்த நாள் ஊரே கொந்தளித்து விட்டது.
தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் உள்ள
மக்கள் சுமார் 20,000 பேர்கள் ஒன்று திரண்டு, திருவாடானை
சிறையை உடைத்து இவரை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்கள்.

மக்களின் மாபெரும் எழுச்சியில் நடந்த இந்த சிறை மீட்பு, 

இந்திய அரசியலில் முதன் முறையாக நடந்ததாகும். இந்தியாவில்
வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை இவருக்குக் கிடைத்தது.

அதே காலகட்டத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள்
சிறையில் இருந்து தப்பிச் சென்றதைப் பெருமையாகப் பேசிய
இந்திய மக்கள், இவருடைய சிறை மீட்புச்செய்தியைக்
கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்பது வருந்த
வேண்டிய விஷயம்.

தமிழகத்தின் தென்கோடியில் நடந்த இந்த அறிய சம்பவம்,
இந்தியா முழுவதும் ஊடக விளம்பரம் இல்லாமல் அமுங்கிப்
போய்விட்டது.
---------------------------------------------------------------------------------------------------------
அதைத் தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த சுதந்திரப்
போரட்டத்தில், போராட்ட வீரர்கள் கட்டுக்கடங்காமல் கூட,
போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடுகள் நடத்த, பெரிய கலவரம்
ஏற்பட்டு, உள்ளூர் நீதி மன்றம் தீக்கிரையாக - பிறகு நடந்த
தெல்லாம் பெரிய கதை அதை விவரித்தால் பத்துப் பக்கங்கள்
எழுத வேண்டும். ஆகவே தவிர்த்திருக்கிறேன்
----------------------------------------------------------------------------------------------------------
1944ஆம் ஆண்டில் ‘புத்தகப்பண்ணை' என்ற பதிப்பகத்தைத் 
துவங்கி, எண்ணற்ற தமிழ்ப் புத்தகங்களைச் சின்ன அண்ணாமலை 
அவர்கள் வெளியிட்டார். இன்று சென்னையில் உள்ள அத்தனை பதிப்பகங்களுக்கும் முன்னோடி அவர்தான்.

நாமக்கல் கவிஞர் திரு.ராமலிங்கம் பிள்ளை, ராஜாஜி, கல்கி
ஆகியோர் போன்று பல பெரியவர்களின் எழுத்துக்களை வாங்கிப்
பதிப்பித்து வெளியிட்டார்.

அரசியலில் இருந்ததால், புத்தகங்களில் லாபம் பார்க்கத்
தெரியாமல், புத்தக வெளியீட்டு விழாக்களிலும், தன்னைத் தேடிவரும், தேசபக்தர்கள், எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டார்.

ஒரு சமயம் ராஜாஜியின் மந்திரி சபையில் இருந்த டாக்டர்
டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள் இவரிடம் “என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது இவர் சொன்னாராம்.

“புத்தகம் போட்டுக்கொண்டிருக்கிறேன்”

“அது சரி, சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டாராம்

“என் மனைவியின் நகைகளை விற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்”
என்று இவர் பதில் சொல்ல அது அவர் மூலமாக ராஜாஜி அவர்களின்
காதிற்கு எட்ட, அடுத்த தினமே ராஜாஜி அவர்கள் இவரின் வீட்டிற்கு வந்துவிட்டாராம். வந்ததோடு இல்லாமல், இனிமேல் நகைகளை
விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டும் போனாராம்.
------------------------------------------------------------------------------------------------
திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றியும், கவியரசர்
கண்ணதாசன் அவர்களைப் பற்றியும் எவ்வளவு பக்கங்கள்
எழுதினாலும் நிறைவு செய்ய முடியாது. இருவரும்
மாமேதைகள். பன்முகத் திறமைகள் கொண்டவர்கள்.

சின்ன அண்ணாமலை அவர்கள், சுதந்திரப்போராட்ட வீரர், சிறந்த,
தமிழகம் அறிந்த காங்கிரஸ்காரர், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர்
போன்ற தலைவர்களை நண்பர்களாகப் பெற்றவர். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடமும் நட்பு பாராட்டிப்
பழகியவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர்,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை சரித்திரப்படங்களில்
இருந்து சமூகப்படங்களுக்குக் கொண்டுவந்தவர் சின்ன அண்ணாமலை அவர்கள்தான் (படம்: திருடாதே), அதேபோல நடிகை சரோஜாதேவிக்கு
முதல் பட வாய்ப்பு வாங்கிக்கொடுத்ததும் அவர்தான் (படம்:
தங்கமலை ரகசியம், பிறகு திருடாதே படம்)

திரு. சிவாஜி கணேசன் அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள், சிவாஜி ரசிகர் மன்றங்கள் அனைத்திற்கும் ஒருங்கினைப் பாளராக இருந்தார்.

சரியாக அறுபது ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்த
சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த தேதியும், 
மறைவுத் தேதியும் ஒன்றாகும்

பிறந்தது: 18.6.1920
இயற்கை எய்தியது: 18.6.1980

ஆமாம் மணிவிழா நாளன்று, மணிவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்பொதே பல உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள்
மத்தியில் மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
(Massive heart attack)

சென்னை நல்லி சில்க்ஸ் திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்,
1944ல் சின்ன அண்ணாமலை அவர்கள் துவங்கிய புத்தகப்பண்னை'
கடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். அதோடு அவருடைய நெருங்கிய
நண்பர் மற்றும் அபிமானி.அவருக்குத் தமிழ்ப் புத்தகங்களின்மேல்
ஆர்வம் ஏற்பட்டதற்கு நமது நாயகரே காரணமாவார். அன்றிலிருந்து
அவர் இவருடைய குடும்ப நண்பர்

அதேபோல, இன்று சென்னையில் உள்ள பிரபல பதிப்பாளர்களான,
வானதி பதிப்பகம் திரு.திருநாவுக்கரசு அவர்கள், அருணோதயம்
பதிப்பகம். திரு அருண் அவர்கள், பாரதி பதிப்பகம் திரு.வைத்தியநாதன் அவர்கள், பதிப்பளர்.திரு சீனி விஸ்வநாதன் அவர்கள், மற்றும் பல பதிப்பாளர்கள் எல்லாம் சின்ன அண்ணாமலை அவர்களின்
சீடர்கள் ஆவார்கள்.

எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.விக்கிரமன் அவர்கள்
சின்ன அண்ணாமலை அவர்களின் நெருங்கிய நண்பராவார்.

சின்ன அண்ணாமலை அவர்கள் என் தந்தையாரின் நெருங்கிய 
நண்பராவார். அவரை நான் இரண்டு முறைகள் 
சந்தித்திருக்கிறேன் (1972ல்)
-----------------------------------------------------------------------------------------------------------------
பதிவில் எழுதுவதற்காக சின்ன அண்ணாமலை அவர்களின்
சுய சரிதைப் புத்தகத்தையும், அவருடைய புகைப்படத்தையும் எனக்கு,
சின்ன அண்ணாமலை அவர்களின் பேரன் திரு. கேஆர். திலக் alias மீனாட்சிசுந்தரம் அவர்கள் தந்து உதவினார். அவருடைய
உதவியால்தான் இந்தக் கட்டுரைக்குப் பட்டை தீட்ட முடிந்தது.
அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்


-----------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------
அந்த சுய சரிதைப் புத்தகத்தை பற்றிய விவரம்:

தலைப்பு:
“சொன்னால் நம்பமாட்டீர்கள்”
வெளியீடு:
குமரன் பதிப்பகம்
எண்3, முத்துக் கிருஷ்ணன் தெரு,
பாண்டி பஜார்
சென்னை - 600 017

பக்கங்கள் 240
விலை: ரூ.60:00

புத்தகம் படு சூப்பராக - அசத்தலான நடையில் இருக்கும்
வாங்கிப் படித்து இன்புற வேண்டுகிறேன்
-----------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------
திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதி, குமுதம் இதழுடன் 
இணைப்பாக முன்பு ஒரு காலத்தில் வந்த புத்தகத்தில் இருந்து, 
சில சுவையான சம்பவங்களை நீங்கள் அறியத் தரவுள்ளேன்.. 
கட்டுரையின் நீளம் கருதி அதைத் தனிப்பதிவாக தரவுள்ளேன்.. 
அது இதன் பகுதி 3

அது அடுத்த வாரம் வெளிவரும்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


8 comments:

  1. //மக்களின் மாபெரும் எழுச்சியில் நடந்த சிறை மீட்பு//

    அறியாத தகவல்!..

    //திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றியும், கவியரசர்
    அவர்களைப் பற்றியும் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் நிறைவு செய்ய இயலாது.//

    முக்காலும் உண்மை..

    //18.6.80 மணிவிழா நாளன்று, நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே உறவினர்கள்
    மத்தியில் மாரடைப்பினால் உயிர் பிரிந்தது.//

    அதிர்ச்சியில் உறைந்த நாள் அது.

    இனிய பதிவினுக்கு நன்றி..

    ReplyDelete
  2. அன்புள்ள வாத்தியாருக்கு,

    வணக்கம்.

    திரு.சின்ன அண்ணாமலை அவர்களை பற்றிய குறிப்பு மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக மக்கள் திரண்டு அவரை ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்த நிகழ்வு.

    தயவு செய்து, திரு.சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த நேர குறிப்பு தாருங்கள்.

    blaknar@gmail.com

    நன்றி.

    அன்புள்ள மாணவன்,
    பா.லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி

    ReplyDelete
  3. சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி மேலும் தொடர்ந்தது நன்றாக இருந்தது.

    டாக்டர் டி எஸ் டிஎஸ் ராஜன் பற்றி இக்கட்டுரையில் வந்துள்ளது. அவ்ர் உண்மையாகவே ஒரு மருத்துவர். அதாவது உடல் பரிசோதனை செய்து மருந்து கொடுக்கும் டாக்டர்தான். அந்தக் கால்த்தில் நிலவிய சமூகக் கட்டுபாடுகளைத் தாண்டி ஏழைகளுக்கு உதவியாக இருந்த மருத்துவர். மகாத்மா காந்திஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்.1930ல் தமிழகத்தில் நடந்த வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹப் பாத யாத்திரை திருச்சியில் தி சே செள‌ ராஜன் அவர்களின் இல்லத்தில் இருந்துதான் ராஜாஜி துவங்கினார். திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) என்பது அவ்ர் ஊர். திருவையாறு அருகில் உள்ளது.அந்த ஊர் ஈஸ்வரரின் பெயர் அருள்மிகு நெய்யாடியப்பர். அவ‌ர் வெறும் ராஜன் அல்ல. அவ்ர் முழுப்பெயர் செள‌ரிராஜன்.

    சின்ன அண்ணாமலை அவர்கள் புத்தக வெளியீடு மட்டும் அல்லாமல் திரைப்படத் தொழிலிலும் ஈடுபட்டார்.அதிலும் பெரிய அளவில் காசு பார்த்ததாகத் தெரியவில்லை.அவ‌ர் ஈடுப‌ட்ட மற்றொரு துறை மல்யுத்தம்.
    ஆம் கிங்காங்=தாராசிங் மல்யுத்தம் ஏற்பாடு செய்து ஊர் ஊராக அழைத்துச் சென்று விளமபரம் செய்து கூட்டம் கூட்டினார்.மாமிச மலை என்று கிங்காங்கை வர்ணிப்பார். கிங்காங் விட்ட சவாலையும்,தாராசிங்கின் பதில் சவாலையும் மாலை முரசில் படித்து சிறுவர்களாகிய நாங்கள் நடுங்குவோம். தாராசிங் கட்சி, கிங்காங் கட்சி என்று பிரிந்து 'மாக் ஃபைட்' செய்வோம்.தாராசிங் யாரென்றால் ராமானந்த சாகரின் ராமாயணத்தில் அனுமனாக நடிப்பாரே அவர்தான்.

    பழைய நினைவுகளை தூண்டிவிட்ட ஐயாவுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம் சார்....
    சின்ன அண்ணாமலை பேச்சை கேட்டுப்பார்க்கலாம் என YouTube ல்
    தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை.
    1920 ல் பிறந்தவர் 1940 க்கு மேல்
    1970 வரை பேசியிருப்பார்.
    அந்த காலகட்டம். நவீனவசதிகள்
    இல்லை,டிவி,ரேடியோ இல்லை!
    ஆடம்பர வாழ்க்கை இல்லை!
    பப் இல்லை!
    படகு கார் இல்லை!
    பளபளக்கும் சாலை இல்லை!
    மதுவின் போதை இல்லை!
    மயக்கும் சுந்தரிகள் இல்லை!
    காலை இட்லிக்கு குவாட்டர் இல்லை!
    மதியம் மேட்டர் இல்லை!
    அப்பாவியான காலகட்டத்தில்
    வாழ்ந்தவர். அதனால் அவரின் பேட்சை கேட்கும் பாக்யம் இல்லை!!
    K.சக்திவேல்

    ReplyDelete
  5. /////Blogger துரை செல்வராஜூ said...
    //மக்களின் மாபெரும் எழுச்சியில் நடந்த சிறை மீட்பு//
    அறியாத தகவல்!..
    //திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றியும், கவியரசர்
    அவர்களைப் பற்றியும் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் நிறைவு செய்ய இயலாது.//
    முக்காலும் உண்மை..
    //18.6.80 மணிவிழா நாளன்று, நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே உறவினர்கள்
    மத்தியில் மாரடைப்பினால் உயிர் பிரிந்தது.//
    அதிர்ச்சியில் உறைந்த நாள் அது.
    இனிய பதிவினுக்கு நன்றி..

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger BLAKNAR said...
    அன்புள்ள வாத்தியாருக்கு,
    வணக்கம்.
    திரு.சின்ன அண்ணாமலை அவர்களை பற்றிய குறிப்பு மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக மக்கள் திரண்டு அவரை ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்த நிகழ்வு.
    தயவு செய்து, திரு.சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த நேர குறிப்பு தாருங்கள்.
    blaknar@gmail.com
    நன்றி.
    அன்புள்ள மாணவன்,
    பா.லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி//////

    கையில் தயாராக இல்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும். கிடைத்தால் தருகிறேன்!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி மேலும் தொடர்ந்தது நன்றாக இருந்தது.
    டாக்டர் டி எஸ் டிஎஸ் ராஜன் பற்றி இக்கட்டுரையில் வந்துள்ளது. அவ்ர் உண்மையாகவே ஒரு மருத்துவர். அதாவது உடல் பரிசோதனை செய்து மருந்து கொடுக்கும் டாக்டர்தான். அந்தக் கால்த்தில் நிலவிய சமூகக் கட்டுபாடுகளைத் தாண்டி ஏழைகளுக்கு உதவியாக இருந்த மருத்துவர். மகாத்மா காந்திஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்.1930ல் தமிழகத்தில் நடந்த வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹப் பாத யாத்திரை திருச்சியில் தி சே செள‌ ராஜன் அவர்களின் இல்லத்தில் இருந்துதான் ராஜாஜி துவங்கினார். திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) என்பது அவ்ர் ஊர். திருவையாறு அருகில் உள்ளது.அந்த ஊர் ஈஸ்வரரின் பெயர் அருள்மிகு நெய்யாடியப்பர். அவ‌ர் வெறும் ராஜன் அல்ல. அவ்ர் முழுப்பெயர் செள‌ரிராஜன்.
    சின்ன அண்ணாமலை அவர்கள் புத்தக வெளியீடு மட்டும் அல்லாமல் திரைப்படத் தொழிலிலும் ஈடுபட்டார்.அதிலும் பெரிய அளவில் காசு பார்த்ததாகத் தெரியவில்லை.அவ‌ர் ஈடுப‌ட்ட மற்றொரு துறை மல்யுத்தம்.
    ஆம் கிங்காங்=தாராசிங் மல்யுத்தம் ஏற்பாடு செய்து ஊர் ஊராக அழைத்துச் சென்று விளமபரம் செய்து கூட்டம் கூட்டினார்.மாமிச மலை என்று கிங்காங்கை வர்ணிப்பார். கிங்காங் விட்ட சவாலையும்,தாராசிங்கின் பதில் சவாலையும் மாலை முரசில் படித்து சிறுவர்களாகிய நாங்கள் நடுங்குவோம். தாராசிங் கட்சி, கிங்காங் கட்சி என்று பிரிந்து 'மாக் ஃபைட்' செய்வோம்.தாராசிங் யாரென்றால் ராமானந்த சாகரின் ராமாயணத்தில் அனுமனாக நடிப்பாரே அவர்தான்.
    பழைய நினைவுகளை தூண்டிவிட்ட ஐயாவுக்கு நன்றி!//////

    பழைய நினைவுகளை வைத்திருந்து அவ்வப்போது, அவற்றைப் பயன் படுத்தும் உங்களின் மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்....
    சின்ன அண்ணாமலை பேச்சை கேட்டுப்பார்க்கலாம் என YouTube ல்
    தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை.
    1920 ல் பிறந்தவர் 1940 க்கு மேல்
    1970 வரை பேசியிருப்பார்.
    அந்த காலகட்டம். நவீனவசதிகள்
    இல்லை,டிவி,ரேடியோ இல்லை!
    ஆடம்பர வாழ்க்கை இல்லை!
    பப் இல்லை!
    படகு கார் இல்லை!
    பளபளக்கும் சாலை இல்லை!
    மதுவின் போதை இல்லை!
    மயக்கும் சுந்தரிகள் இல்லை!
    காலை இட்லிக்கு குவாட்டர் இல்லை!
    மதியம் மேட்டர் இல்லை!
    அப்பாவியான காலகட்டத்தில்
    வாழ்ந்தவர். அதனால் அவரின் பேட்சை கேட்கும் பாக்யம் இல்லை!!
    K.சக்திவேல்/////

    அடடா, அடுக்குமொழியில் சொல்லி அசத்திவிட்டீர்களே!
    உண்மையில் உங்களிடம் வேலின் சக்தி இருக்கிறது!
    நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com