28.2.14

Short Story - Scale for Luck - அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

 

Short Story - Scale for Luck - அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

எட்டு ஆண்டுகளாகப் பதிவில் (Blog)  எழுதிக்கொண்டிருக்கிறேன். சுமார் 2,000 பதிவுகளுக்குமேல் (2,000 Posts) எழுதியுள்ளேன். பல்சுவை, மற்றும் வகுப்பறை 2007 ஆகிய இரண்டு வலைப்பூக்களையும் சேர்த்து அந்தக் கணக்கு. அவற்றுள் என்னுடைய சிறுகதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். பாடம் நடத்துவதைப் போல, கதை சொல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் முன்பு எழுதிய சிறுகதை ஒன்றை இன்று வலை ஏற்றியிருக்கிறேன். அந்தக் கதையை உங்களுக்கு முன்பே நான் தந்திருக்கிறேனா என்பது என் நினைவில் இல்லை. ஆகவே முன்பே படித்திருப்பவர்கள், அதைப் பின்னூட்டத்தில் சொல்லாமல் மீண்டும் ஒருமுறை படியுங்கள். புதியவர்கள் நன்றாக ஒருமுறை படியுங்கள். கதை அழுத்தமாக இருக்கும்

அன்புடன்,
வாத்தியார்

----------------------------------------------------
அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

செழிப்பான கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடுகளும், சிறு சிறு குன்றுகளும் நிறைந்து. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். பக்கத்தில் காட்டாறு ஒன்றும் ஓடி, அதன் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அந்தக் கிராமத்திற்கு வந்திருந்த செல்வந்தர் ஒருவர், அதன் சுற்றுப்புறச் சூழலில் மயங்கி, ஒரு வாரம் தங்கி விட்டார்.

தங்கியிருந்த அவருக்கு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர் தடபுடலாக விருந்து உபசாரம் செய்து அவரை மேலும் மகிழ்வித்தார்.

அந்த சின்ன கிராமத்தில் இருந்த சுமார் 200 வீட்டுக்காரர்களுக்கும் அவர் நன்கு பரீட்சயம் ஆகிவிட்டார். அதற்குக் காரணம் அந்தக் கிராம மக்களுக்காக அவர் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வதாக வாக்களித்ததோடு, அதற்கான பணத்தையும் கொடுத்திருந்தார்,

அவர் தங்கியிருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வெள்ளை நிறக் குதிரை ஒன்று அம்சமாக இருந்தது. வந்த நாள் முதலாகத் தினமும் அதைப் பார்த்து மகிழ்ந்த அந்த செல்வந்தர், தன் நண்பரிடம் மெதுவாகக் கேட்டார்.

"சிவசாமி, அந்தக் குதிரை மிகவும் அம்சமாக இருக்கிறது. விலைக்குக் கிடைக்குமா?"

உடனே சிவசாமி பதில் அளித்தார்.

"அந்த வீட்டுக்காரன் கட்டுப்பெட்டியான ஆசாமி. தரமாட்டான். எங்கள் கிராமத்தில் வேறு வீடுகளிலும் குதிரைகள் உள்ளன. அவைகள் கிடைக்கும்"

"இல்லை. எனக்கு இதுதான் வேண்டும். கேட்டுப்பார். எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்போம்"

உடனே சிவசாமி, எதிர்விட்டுக் கந்தசாமியைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிக் குதிரையைக் கேட்டார். நினைத்தபடி அவன் மறுத்து விட்டான். சந்தையை விலையைப் போல இரண்டு மடங்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதற்கும் அவன் மசியவில்லை.

திரும்பிவந்து, நடந்ததைத் தன் நண்பரிடம் சொன்னார்.

நண்பருக்கு ஒரு வேகம் வந்து விட்டது. நினைத்ததை முடிக்கும் சுபாவம் மிகுந்தவர் அவர்.

"பத்து மடங்கு பணம் கொடுப்போம்.கேட்டுப்பார்" என்றார்.

அவன் அதற்கும் மசியவில்லை. அவர் சற்று வருத்தத்துடன் கிளம்பிப் போய்விட்டார்.

பத்து மடங்கு பணம் என்பது ஐந்து லட்ச ரூபாய்.

செய்தி, உடனே காட்டுத் தீயைப் போலக் கிராமம் முழுவதும் பரவி விட்டது. விஷயத்தை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவர் வந்து, அவனை பார்த்துத் திட்டித் தீர்த்தார்கள். அதோடு தங்கள் கருத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொன்னார்கள்.

"அட மடச்சாம்பிராணி, ஐந்து லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை? அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாயே! நீ அதிர்ஷ்டமில்லாதவன்டா! (யு ஆர் லன்லக்கி!) தேடிவந்த ஸ்ரீதேவியை உணராதவன்டா! "

"ஐந்து லட்சத்தை வேண்டாம் என்று சொன்னதை வைத்து நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்" என்று சொல்லி அவர்களைக் கந்தசாமி அனுப்பி வைத்தான்.

"அடக் கிறுக்கா!" என்று அவனை மனதிற்குள் ஒருமுறை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை!

கந்தசாமி வீட்டுக் குதிரையைக் காணவில்லை.

தன் மகனைத் துணைக்கழைத்துக் கொண்டு கிராமம் முழுவதும் கந்தசாமி தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. பேசாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டான்.

இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவி, அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கந்தசாமியின் குதிரையை யாரோ லவட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதாவது திருட்டுப்போயிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

அன்று மாலை, முதல் நாள் வந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் திரும்பவும் வந்தார்கள்

"அடேய், ஐந்து லட்சம் பணத்தையும் தவற விட்டாய். இப்போது உன்னுடைய குதிரையும் போய் விட்டது. இதற்கு என்ன சொல்லப்போகிறாய்? நேற்று நாங்கள் சொன்ன போது நீ ஒப்புக்கொள்ளவில்லையே? இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா - நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்று?"

புன்னகைத்துவிட்டுக் கந்தசாமி அவர்களுக்குப் பதில் சொன்னான்:

"குதிரை இப்போது இங்கே இல்லை. அது மட்டுமே உண்மை. அதை மட்டும் வைத்து நீங்கள் என்னைக் குறை சொல்லாதீர்கள் மேலும் துரதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள்.அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்"

அவர்கள் போய்விட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன ஆச்சரியம். அதற்கு அடுத்த நாள் காலையில் கந்தசாமியின் குதிரை திரும்பி வந்து விட்டது. வந்த குதிரை சும்மா வரவில்லை. காட்டுக்குள்ளிருந்து மேலும் பத்துக் குதிரைகளைத் தன்னுடன் ஈர்த்துக் கொண்டு வந்து விட்டது. கந்தசாமி, தன் குதிரையுடன் அந்தப் பத்துக் குதிரைகளையும் சேர்த்துத் தன் தோட்டத்தில் கட்டி வைத்தான்.

ஒட்டு மொத்த கிராமமும் இந்த நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியது.

கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் மீண்டும் வந்தார்கள்.

"அப்பனே எங்களை மன்னித்துவிடு. நாங்கள் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். நீ அதிர்ஷ்டசாலியடா!" என்று மகிழ்ந்து பாராட்டினார்கள்

கந்தசாமி அதற்கும் பொறுமையாகப் பதில் சொன்னான்.

"என் குதிரை திரும்பி வந்து விட்டது. வரும்போது பத்துக் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்துள்ளது. அதுதான் உண்மை. வந்த அந்த பத்துக் குதிரைகளால் என்ன நேரப்போகிறது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதை வைத்து என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள். அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன்"

"அட லூசுப் பயலே!" என்று மனதிற்குள் ஒருமுறை அவனை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் சென்றது.

கந்தசாமியின் ஒரே மகனும், பதினெட்டு வயது நிரம்பிய இளைஞனுமான முருகானந்தன், வந்த குதிரைகளில் ஒன்றில் ஏறிப் பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோது, அந்தக் குதிரை, முரட்டுத்தனமான அவனைக் கீழே தள்ளியதில், வலது காலில் அடிபட்டு விட்டது.

கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. அருகில் இருந்த நகரத்தில் இருந்து, நுட வைத்தியர் ஒருவரை அழைத்து வந்தான் கந்தசாமி. வந்தவரும் அவனுடைய மகனுக்குச் சிகைச்சையை மேற்கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட, அவனுடைய உறவினர்கள் இருவரும் மீண்டும் கந்தசாமியை வந்து பார்த்தார்கள். அடிபட்டுப் படுத்திருந்தவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

சற்று நேரம் இருந்துவிட்டுப் போகும்போது மறக்காமல் இப்படிச் சொல்லிவிட்டுப்போனார்கள்.

"நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்பது மட்டும்தான் இப்போது உண்மை!"

கந்தசாமி லேசாகப் புன்னகைத்தனே தவிர, வேறு ஒன்றும் சொல்லவில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை.

அந்த நாட்டு அரசின் உத்தரவின் பேரில், அந்தக் கிராமத்திற்குத் தன் பரிவாரங்களுடன் வந்த ராணுவத் தளபதி, கட்டாய ராணுவ சேவை என்ற பெயரில் கிராமத்தில் இருந்த அத்தனை இளைஞர்களையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார் - கந்தசாமியின் மகனைத்தவிர.

கந்தசாமியின் மகனுக்கு, எலும்பு முறிந்து சிகிச்சை நடப்பதால், அவனை மட்டும் விட்டு விட்டார்கள்.

ஒட்டு மொத்த கிராமமும், தங்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்த சோகத்தில் இருந்தது.

அன்றும், கந்தசாமியைப் பார்த்துப் பேசிவிட்டுப்போக வந்த அவனுடைய உறவினர்கள் இருவரும் ஒருமித்த குரலில்
சொன்னார்கள்.

"எது அதிர்ஷ்டம்? அல்லது எது துரதிர்ஷ்டம்? என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு (மனிதனுக்கு) இல்லை. அதுதான் உண்மை. அதை உணர்ந்து வைத்திருக்கும் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். உனக்கு ஒரு குறையும் வராது."
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. எந்தக் குலுக்கலுக்கும் அசராத மனம்! கொண்டவர் கந்தசாமி...

    'எல்லாவற்றும் அவனின் கணக்கு அது அதில் அவசரப் பட்டு மகிழவும் வருந்தவும் அவசியமில்லை'

    என்னும் அவசியமானக் கருத்தை கருக்கொண்டு பிறந்த கதை.

    அருமை. பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ஐயா கடந்த தின பதிவு மிக அருமை. அடியேன் நேற்று Absent. பஞ்ச அட்சரமாகிய ஓம் நமசிவாய என்பதில் 'ச்' இடம் பெறாது என நினைக்கின்றேன். எழுத்தினும் ஓளியே பிரதானமானது.

    ReplyDelete
  3. ayya vanakam naan kulapavathi intha shortstory yenaku aaruthal tharuthu.indraya kettathu naalai namakku nalathil mudiyum yenpathai unarthiya unkalaku nandri ayya.

    ReplyDelete
  4. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    அதிர்ஷ்டத்தின் அளவுகோல் பதிவு அருமையாக இருந்தது ஐயா.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  5. அதிர்ஷ்டமா இது துர்
    அதிர்ஷ்டமா?

    அடுத்தவர் பேச்சை கேட்க கூடாதென
    அடுக்கிச் சொன்னது தொடர் தகவல்

    நாக்கு தண்ணீரில் இருப்பதால்
    நாம் பேச்சில் நியாயம் இருப்பதில்லை


    ReplyDelete
  6. வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம், தங்கள் சொல்வது உண்மைதான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com