20.1.14

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

சில பாடங்களை கதைகளை உதாரணமாகச் சொல்லி, நடத்தினால் எளிதில் புரியும். கேதுவால் என்ன கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதை
ஒரு கதையின் மூலம் இன்று சொல்ல விளைகிறேன். படித்துப் பாருங்கள்!
-------------------------------------------------------------------------
கதையின் தலைப்பு: அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன் ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது. அவனது ஆட்சியில் நாட்டு
மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில் சண்டைகள். சச்சரவுகள்.வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத் தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம் விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி
மக்களை தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான்.
அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை. செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால்,எல்லாப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச்
சொன்னான். முதன்மந்திரியும், நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான் மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச் சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான் முக்கியம் கொடுப்பதில்லை  என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்க வில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால் நடைப் பயணம்
மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும் வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும்
கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது
செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு
வாரங்கள் கழித்து அரசன் நினைவு படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச்
சொல்லி மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து
தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில் சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின் மூளையும் அப்படியொரு
வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும்
முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான ஒருவனைக் கொண்டு வந்து
நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத் தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக் கிடைத்தான்.மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான்
பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?
------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி  பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின் பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது.

மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான். அரண்மனை பல்லக்கு ஒன்று
அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக
இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல் மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர்
நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

கதையின் அடுத்த பகுதியும், கேதுவைப் பற்றிய தகவலும், கேதுவால் ஏற்படும் துன்பங்களுக்கான பரிகாரமும் நாளை வெளியாகும். இங்கெயல்ல!
galaxy2007 வகுப்பில் வெளியாகும். இங்கே எழுதினால், பதிவு திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கே வெளியாகும்.  அங்கே எழுதுபவைகள் எல்லாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good Morning Sir
    I remember reading this story in your lessons before.

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா. இந்த கதையை ஏற்கெனவெ அதிரவைத்த இளம் சன்னியாசி என்ற தலைப்பில் எழுதி இருந்திர்கள்.

    ReplyDelete


  3. சுவாரசியமான இடத்தில் விளம்பர இடைவேளை போல

    இப்படி நிறுத்திவிட்டீர்கள் !

    ReplyDelete
  4. கதையை முடிக்கச்சொல்லி வாச்ககண்மணிகளுக்குப் போட்டியே வைக்கலாம் போல சுவாரஸ்யமாக இருக்கிறது..!

    ஆசிரியரின் முடிவுக்கு இணையான கதைக்கு பாராட்டுகளைத் தாராளமாக வழங்கலாமே..!

    ReplyDelete
  5. இப்படி ஒரு கொக்கியா? சரி, கேலக்சி க்கு ஒரு அனுமதி கொடுங்க!

    ReplyDelete
  6. இதே பாணியில் தொடர்ந்து
    இந்த வகுப்பறை நடந்தால்

    நன்றாக இருக்கும்..
    நல்லதே நடக்கும்

    ReplyDelete
  7. ////Blogger Dallas Kannan said...
    Good Morning Sir
    I remember reading this story in your lessons before.//////

    உங்களின் நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள். வகுப்பறையில் நிறைய புதுமுகங்கள் உள்ளார்கள். அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை பதிவிட்டேன்!

    ReplyDelete
  8. //////Blogger MS RAJU said...
    வாத்தியார் ஐயா. இந்த கதையை ஏற்கெனவெ அதிரவைத்த இளம் சன்னியாசி என்ற தலைப்பில் எழுதி இருந்திர்கள்./////

    உங்களின் நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள் ராஜூ. வகுப்பறையில் நிறைய புதுமுகங்கள் உள்ளார்கள். அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை பதிவிட்டேன்!

    ReplyDelete
  9. ////Blogger Sattur Karthi said...
    சுவாரசியமான இடத்தில் விளம்பர இடைவேளை போல
    இப்படி நிறுத்திவிட்டீர்கள் !/////

    காரணத்தைத்தான் பதிவில் எழுதியுள்ளேனே ராசா!

    ReplyDelete
  10. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    கதையை முடிக்கச்சொல்லி வாசககண்மணிகளுக்குப் போட்டியே வைக்கலாம் போல சுவாரஸ்யமாக இருக்கிறது..!
    ஆசிரியரின் முடிவுக்கு இணையான கதைக்கு பாராட்டுகளைத் தாராளமாக வழங்கலாமே..!//////

    நீங்கள் எழுதி அனுப்புங்கள் சகோதரி. சுவாரசியமாக இருந்தால், உங்கள் பெயருடன் பதிவில் வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  11. /////Blogger Vasudevan Tirumurti said...
    இப்படி ஒரு கொக்கியா? சரி, கேலக்சி க்கு ஒரு அனுமதி கொடுங்க!/////

    நிஜ வாழ்க்கையில் இல்லாத கொக்கிகளா? classroom2007@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள் நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    இதே பாணியில் தொடர்ந்து
    இந்த வகுப்பறை நடந்தால்
    நன்றாக இருக்கும்..
    நல்லதே நடக்கும்//////

    உங்களின் பரிந்துரைக்கு நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com