13.12.12

கவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா?


கவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா?

குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?

(உனக்கு)

கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா

(உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாமே ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்னை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக் காரன் யாரு! - நீ துணிவிருந்தா கூறு!
ரொம்ப - எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு!
அவரு - எங்கே போனார் பாரு!


(அவரு)

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை

பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!


------கவியாக்கம் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++====

25 comments:

  1. அருமையாக இருக்கிறது

    Prasanna

    ReplyDelete
  2. புகழ்ந்து சொல்ல வார்த்தைகளில்லாத மிக அருமையான பாடலை மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மெல்லிசை மன்னர், திரு.எம்.எஸ்.வி., பட்டுக்கோட்டையாருக்கு, திரைப்பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுக்கக் காரணமாக இருந்த அற்புதமான பாடல் இது.

    ////நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
    காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
    கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா/////

    நிச்சயமான வேதாந்தம் இது.

    ////மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
    அடியே முத்துக்கண்ணு - இதில்
    எத்தனை எத்தனை ஆனந்தம்!/////

    கடைசி வரியில் எத்தனை எத்தனை அர்த்தங்கள். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. Good morning sir. Truthful song. Thanks for sharing.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  5. மகாகவிகள் நிறைய நாட்கள் வாழ்வதில்லை...
    வருத்தமிகு விடயம் என்ன வென்றால் அவர்களை நாம் முழுவதும் மறந்தும் விடுகிறோம்!
    சிலரைப் போல் நேற்று (12/12/1882) பிறந்து இருந்தால் ஞாபகம் இருந்திருக்கலாம்..
    அதற்கு ஒரு நாளுக்கு முன்பு (11/12/1882) பிறந்ததால் மகாகவி பாரதியை மறந்து விட்டோம்.
    எந்த நாளிதழிலும் காணவில்லை! அவனின் பிறந்த நாள் நினைவலைகள்! அது போகட்டும்...

    அப்படித்தான் இந்த பட்டுக் கோட்டையாரும்!
    உண்மையில் அருமையான பாட்டுக் கோட்டையாரின் பாடல்...
    முதன் முதலில் வாசித்தேன். அதற்கு நன்றிகள் ஐயா!

    அவரின்கவிதை எனக்குள் புகுந்து புதிய வரிகளை சமைத்தது.
    இதோ அந்த வரிகள் இங்கே....

    உனக்கெது சொந்தமடா உண்மையைச் சொன்னால்
    உன்னது ஏதும் இல்லையடா!
    பொன்னும் பொருளும் எதற்கடா அவை
    மண்ணுக்குள் அள்ளிப்போக முடியுமா?
    கண்ணுக்கு கண்ணான மனைவி மக்கள்
    பின்னுக்கு வந்துன்னை காக்கவா?
    முன்னுக்கே முனிகள் கூறிய மெய்ப்பொருள்
    எண்ணிப் பார்த்தாயோ மானிடா!
    ஈட்டியப் பொருளும் இங்கே உலகம்
    காட்டிய இந்த உறவும்
    தட்டிக்கழிக்க வேண்டாம்; தனக்கே உரிய
    தாட்கிக் கொள்ளவும் வேண்டாம்
    மலரும் மனமுமாக, தேனும் சுவையுமாக
    உலகும் மானுடமும் பயனுற
    ஒன்று கூடி உனக்காக வாழாமல்
    நன்றியோடு பிறருக்காக வாழ்வாயடா!
    என்றும் இயற்கை நமக்குத் தந்த பாடமடா
    எண்ணமதை திண்ணமாக மாற்றிடடா!
    கனக்கும் இதயம் எதற்கடா எல்லாம் -அவனின்
    கணக்கில் தானே இருக்குதடா!
    பிணக்கு எதற்கு கொள்கிறாயடா -எல்லாம்
    எனக்கே சொந்தமென்ற பேராசையடா!
    தனக்கென்று ஏதும் வேண்டாமடா நாளும் தடுமாறும்
    மனத்தோடு நாடகமாடிடும் மானிடா!
    தனத்தோடு உறவும் பொருளுமில்லை உடன்வருவது
    தானத்தொடு கொண்டதவமும் தானடா!
    மனக்கவலை விட்டுவிடடா மாலுமுடலை பெரிதென்று
    தினம் போற்றுவதை மறந்திடடா!
    பணம் பாசம் பற்று பாடையோடு
    பாவபுண்ணியமே உந்தன் ஆவியோடு!
    தேடவேண்டியது எதுவென்று தெரியாமல்
    தேடி அலையும் மானிடா
    கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
    கோயில் கோயிலாக சுற்றினாலும்
    பாவி உன்னை பரிசுத்த மாக்கியே
    ஆவியோடு அவனின் பாதமே
    மேவிடும் போது தானடா உன்னத
    மேனிலை பெற்றுய்வாய் பேதைமானிடா!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் அருமை,இன்று இருக்கிறோம் நாளை இருப்போமா என்று தெரியவில்லை,அதற்குள் எத்தனை ஆசைகள்,அடுத்தவரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது,அதற்காக கொலைகூட செய்ய தயங்குவதில்லை,இவற்றை நினைக்கும்போது என்ன உலகமடா என்று இருக்கிறது, நன்றி ஐயா.

    ReplyDelete
  7. பட்டுக்கோட்டையாரை பாட்டுக்கோட்டையார் என்றும் கூறுவதுண்டு.

    ஒரு விவசாயச் சூழலில் பிறந்தவருக்கு இவ்வளவு ஆற்றல் வந்தது இறைவன் திருவருளே!

    ஒரு வருடம் பட்டுக்கோட்டை அலுவலகத்தில் பணி செய்தேன். தினமும் பேருந்துப் பயணம்.பேருந்துப் பயணத்தின் போது ஒலி பரப்பப்படும் பாடல்களில் ஒன்றிரண்டு பட்டுக்கோட்டையாரின் பாடல்களாக இருக்கும். அன்று நாள் முழுதும் சிந்தனையைத் தூண்டும்.

    'காடு விளைஞ்சென்ன மச்சான்? நமக்குக்
    கையும் காலும்தானே மிச்சம்'

    போன்ற வரிகள் விவசாயக் கூலி வேலை செய்வோரின் கண்ணீரை நமக்குக் காட்டும்.

    நெஞ்சைத்தொட்ட வரிகள்! தந்த உங்களுக்கு வணக்கம் பல.

    நண்பர் ஹாலாஸ்யத்தின் கவிதையையும் ரசித்தேன். நன்றி!













    ReplyDelete
  8. பொதுவுடமைக் கருத்துகளை அதிகம் தன் பாட்டில் புகுத்தியவர் பட்டுக் கோட்டையார் அவர்கள். அவர் பக்திப் பாடலையும் இயற்றியிருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் இயற்றிய ஒரே பக்தி பாடல்:

    கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
    நின் தாள் துணை நீ தா!

    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா

    ReplyDelete
  9. பட்டுக் கோட்டையார் தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவர் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தாராமே.

    ReplyDelete
  10. கோட்டையாரின் பாடல்
    கொடி கட்டி பறந்த போதும் மன

    பூட்டிலே வைத்து காத்து வந்த போதும்
    ஊட்டி வந்த சொந்தமெல்லாம் காலில்லா

    கட்டிலுக்கே இன்றும்
    போட்டி போட்டி நிற்கிறது..

    வலமாக சுழல விடுகிறோம்
    வழக்கம் போல் இந்த பாடலினை

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா

    முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
    மூடினால் காலில்லா கட்டிலடா

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம் என்பதே தாய்மொழியாம்

    மறந்தோம் என்பதே நித்திரையாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்

    சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்

    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவன் அன்றோ திறக்கின்றான்

    வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
    வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

    தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....

    ReplyDelete
  11. ////Blogger Prasanna Venkatesh said...
    அருமையாக இருக்கிறது/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Parvathy Ramachandran said...
    புகழ்ந்து சொல்ல வார்த்தைகளில்லாத மிக அருமையான பாடலை மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மெல்லிசை மன்னர், திரு.எம்.எஸ்.வி., பட்டுக்கோட்டையாருக்கு, திரைப்பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுக்கக் காரணமாக இருந்த அற்புதமான பாடல் இது.
    ////நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
    காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
    கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா/////
    நிச்சயமான வேதாந்தம் இது.
    ////மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
    அடியே முத்துக்கண்ணு - இதில்
    எத்தனை எத்தனை ஆனந்தம்!/////
    கடைசி வரியில் எத்தனை எத்தனை அர்த்தங்கள். மிக்க நன்றி ஐயா./////

    உணர்வுபூர்வமான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger KJ said...
    Good morning sir. Truthful song. Thanks for sharing.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  15. Blogger ஜி ஆலாசியம் said...
    மகாகவிகள் நிறைய நாட்கள் வாழ்வதில்லை...
    வருத்தமிகு விடயம் என்ன வென்றால் அவர்களை நாம் முழுவதும் மறந்தும் விடுகிறோம்!
    சிலரைப் போல் நேற்று (12/12/1882) பிறந்து இருந்தால் ஞாபகம் இருந்திருக்கலாம்..
    அதற்கு ஒரு நாளுக்கு முன்பு (11/12/1882) பிறந்ததால் மகாகவி பாரதியை மறந்து விட்டோம்.
    எந்த நாளிதழிலும் காணவில்லை! அவனின் பிறந்த நாள் நினைவலைகள்! அது போகட்டும்...
    அப்படித்தான் இந்த பட்டுக் கோட்டையாரும்!
    உண்மையில் அருமையான பாட்டுக் கோட்டையாரின் பாடல்...
    முதன் முதலில் வாசித்தேன். அதற்கு நன்றிகள் ஐயா!
    அவரின்கவிதை எனக்குள் புகுந்து புதிய வரிகளை சமைத்தது.
    இதோ அந்த வரிகள் இங்கே....

    உனக்கெது சொந்தமடா உண்மையைச் சொன்னால்
    உன்னது ஏதும் இல்லையடா!
    பொன்னும் பொருளும் எதற்கடா அவை
    மண்ணுக்குள் அள்ளிப்போக முடியுமா?
    கண்ணுக்கு கண்ணான மனைவி மக்கள்
    பின்னுக்கு வந்துன்னை காக்கவா?
    முன்னுக்கே முனிகள் கூறிய மெய்ப்பொருள்
    எண்ணிப் பார்த்தாயோ மானிடா!
    ஈட்டியப் பொருளும் இங்கே உலகம்
    காட்டிய இந்த உறவும்
    தட்டிக்கழிக்க வேண்டாம்; தனக்கே உரிய
    தாட்கிக் கொள்ளவும் வேண்டாம்
    மலரும் மனமுமாக, தேனும் சுவையுமாக
    உலகும் மானுடமும் பயனுற
    ஒன்று கூடி உனக்காக வாழாமல்
    நன்றியோடு பிறருக்காக வாழ்வாயடா!
    என்றும் இயற்கை நமக்குத் தந்த பாடமடா
    எண்ணமதை திண்ணமாக மாற்றிடடா!
    கனக்கும் இதயம் எதற்கடா எல்லாம் -அவனின்
    கணக்கில் தானே இருக்குதடா!
    பிணக்கு எதற்கு கொள்கிறாயடா -எல்லாம்
    எனக்கே சொந்தமென்ற பேராசையடா!
    தனக்கென்று ஏதும் வேண்டாமடா நாளும் தடுமாறும்
    மனத்தோடு நாடகமாடிடும் மானிடா!
    தனத்தோடு உறவும் பொருளுமில்லை உடன்வருவது
    தானத்தொடு கொண்டதவமும் தானடா!
    மனக்கவலை விட்டுவிடடா மாலுமுடலை பெரிதென்று
    தினம் போற்றுவதை மறந்திடடா!
    பணம் பாசம் பற்று பாடையோடு
    பாவபுண்ணியமே உந்தன் ஆவியோடு!
    தேடவேண்டியது எதுவென்று தெரியாமல்
    தேடி அலையும் மானிடா
    கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
    கோயில் கோயிலாக சுற்றினாலும்
    பாவி உன்னை பரிசுத்த மாக்கியே
    ஆவியோடு அவனின் பாதமே
    மேவிடும் போது தானடா உன்னத
    மேனிலை பெற்றுய்வாய் பேதைமானிடா!////

    நன்றி. உங்களின் ஆக்கங்களை எல்லாம் கணினியில் சேர்த்துவையுங்கள். பின்னொரு நாள் நீங்கள் அவைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்
    புத்தகத்தின் தலைப்பு. ‘ஆலாசியத்தின் அசத்தல் கவிதைகள்’

    ReplyDelete
  16. ////Blogger geetha lakshmi said...
    வணக்கம் ஐயா,பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் அருமை,இன்று இருக்கிறோம் நாளை இருப்போமா என்று தெரியவில்லை,அதற்குள் எத்தனை ஆசைகள்,அடுத்தவரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது,அதற்காக கொலைகூட செய்ய தயங்குவதில்லை,இவற்றை நினைக்கும்போது என்ன உலகமடா என்று இருக்கிறது, நன்றி ஐயா./////

    ஆமாம். நீங்கள் சொல்வது உண்மை. அந்தக் கொடிய செயல்களுக்கு எல்லாம் ஞானமின்மையும் பணஆசையும்தான் காரணம். நன்றி சகோதரி

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    பட்டுக்கோட்டையாரை பாட்டுக்கோட்டையார் என்றும் கூறுவதுண்டு.
    ஒரு விவசாயச் சூழலில் பிறந்தவருக்கு இவ்வளவு ஆற்றல் வந்தது இறைவன் திருவருளே!
    ஒரு வருடம் பட்டுக்கோட்டை அலுவலகத்தில் பணி செய்தேன். தினமும் பேருந்துப் பயணம்.பேருந்துப் பயணத்தின் போது ஒலி பரப்பப்படும் பாடல்களில் ஒன்றிரண்டு பட்டுக்கோட்டையாரின் பாடல்களாக இருக்கும். அன்று நாள் முழுதும் சிந்தனையைத் தூண்டும்.
    'காடு விளைஞ்சென்ன மச்சான்? நமக்குக்
    கையும் காலும்தானே மிச்சம்'
    போன்ற வரிகள் விவசாயக் கூலி வேலை செய்வோரின் கண்ணீரை நமக்குக் காட்டும்.
    நெஞ்சைத்தொட்ட வரிகள்! தந்த உங்களுக்கு வணக்கம் பல.
    நண்பர் ஹாலாஸ்யத்தின் கவிதையையும் ரசித்தேன். நன்றி!/////

    ஆமாம். அந்தப் பாடல் ‘நாடோடி மன்னன்’ என்னும் திரைப்படத்தில் (ஆண்டு 1958) வந்து தமிழகம் எங்கும் ஒலித்த பாடல்! நன்றி!

    ReplyDelete
  18. ////Blogger Ak Ananth said...
    பொதுவுடமைக் கருத்துகளை அதிகம் தன் பாட்டில் புகுத்தியவர் பட்டுக் கோட்டையார் அவர்கள். அவர் பக்திப் பாடலையும் இயற்றியிருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் இயற்றிய ஒரே பக்தி பாடல்:
    கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
    நின் தாள் துணை நீ தா!
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா/////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  19. //////Blogger Ak Ananth said...
    பட்டுக் கோட்டையார் தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவர் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தாராமே./////

    ஆமாம். ஜனசக்தி என்ற பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வமான நாளிதழில் சிறிது காலம் பணியாற்றியும் இருக்கிறார்.

    ReplyDelete
  20. /////Blogger அய்யர் said...
    கோட்டையாரின் பாடல்
    கொடி கட்டி பறந்த போதும் மன
    பூட்டிலே வைத்து காத்து வந்த போதும்
    ஊட்டி வந்த சொந்தமெல்லாம் காலில்லா
    கட்டிலுக்கே இன்றும்
    போட்டி போட்டி நிற்கிறது../////

    ஞானமினமைதான் அதற்குக் காரணம்! ஞானத்தைப் பொதுவுடைமையாக்காமல் விட்டுவிட்டானே படைத்தவன்! என்ன செய்வது சொல்லுங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger mrx said...
    one line was missing sir!////

    என்ன வரி என்று சொல்லியிருக்கலாமே! அதைச் சொல்வதற்கு என்ன தயக்கம் சாமி?

    ReplyDelete
  22. ////Blogger renga said...
    excellent song. thank u guruji/////

    பாராட்டுக்களுக்கு உரியவர் எழுதியவரே! நன்றி!

    ReplyDelete
  23. ///நன்றி. உங்களின் ஆக்கங்களை எல்லாம் கணினியில் சேர்த்துவையுங்கள். பின்னொரு நாள் நீங்கள் அவைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்
    புத்தகத்தின் தலைப்பு. ‘ஆலாசியத்தின் அசத்தல் கவிதைகள்’/////

    நன்றிகள் ஐயா! நான் சேர்த்து வைத்திருக்கிறேன். தங்களின் ஆலோசனையும் ஆசியும் எனக்கு ஊக்கம் தருகிறது. மிக்க நன்றிகள் ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com