29.6.12

Mental Health நமக்கு முதல் எதிரி யார்!


Mental Health நமக்கு முதல் எதிரி யார்?
மனவளக் கட்டுரை

மனிதனுக்கு என்ன வேண்டும்?

நிம்மதியும், சந்தோஷமும் வேண்டும்! அது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்துவிடும்.

இதே கேள்வியை ஒரு கவிஞனிடம் கேட்டார்கள். அவன் அழகாகச் சொன்னான்:

காலையில் மலச் சிக்கலும்
இரவில் மனச் சிக்கலும்
இருக்கக் கூடாது!

அதுவும் ஒருவகையில் உண்மைதான்!

ஆனால் இதே கேள்வியை சக மனிதனிடம் கேட்டால், பதில் வேறுவிதமாக இருக்கும். ஒவ்வொருவரின் பதிலும் ஒருவிதமாக  இருக்கும். ஆனால் பொதுவான பதில் இதுவாகத்தான் இருக்கும்:

“பணம். பணம் வேண்டும் சுவாமி. அது மட்டும் தாராளமாகக் கிடைத்தால் போதும். மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்”

அப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள முடியாது. பிறகு விதிக்கு என்ன வேலை? விதிக்கப்பெற்றதற்கு என்ன வேலை? வாங்கி வந்த வரத்திற்கு என்ன வேலை?

அதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது தலைப்புச் செய்திக்கு வருகிறேன்.

நமக்கு முதல் எதிரி யார்? அல்லது எது?

ஒரு ஞானி சொன்னான்.

பகை, நெருப்பு, குப்பை மூன்றையும் மிச்சம் வைக்காதே! மிச்சம் வைத்து விட்டுப் படுக்காதே!

நெருப்பை அனைத்துவிட்டுப் படுக்கலாம். குப்பையைத் தெருக்கோடியில் உள்ள தொட்டியில் கொண்டுபோய்க் கொட்டி விட்டு  வந்து படுக்கலாம். பகையை என்ன செய்வது?

பகையை விட்டு வைக்கக்கூடாது. விட்டு வைத்தால் பார்த்தீனியம் செடியைப்போல, அல்லது கருவேல மரத்தைப்போல அது  வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே, உட்கார்ந்து பேசித் தீர்த்துப் பகையை ஓட்டிவிட வேண்டும்.

சில சமயம் தீராத பகை வந்துவிடும். பகையாளி எதிரியாக மாறிவிடுவான். நமக்கு இடைஞ்சல் செய்யும் விதமாகப் பல தீய செயல்களைச் செய்து கொண்டிருப்பான். ஆகவே எதிரி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் சில சமயங்களில் அதுவும் நம் கையில் இல்லை. நாம் இசைந்து போனாலும் எதிரி நம்மைப் புரிந்துகொள்ளாமல்,  எதிரிடையாகவே இருந்தால் என்ன செய்ய முடியும்?

ஆறாம் வீட்டுக்காரனின் தசாபுத்திகளில் அது போன்ற எதிரிகள் உருவாகி நமக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த தசாபுத்தி  முடிந்த பிறகே, அவர்களைச் சமாளிக்கும் அல்லது கணக்கைத் தீர்க்கும் காலம் நமக்கு  வரும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான். சகித்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

ஆனால் நமக்கு உண்மையான எதிரி ஒருவன் உண்டு என்றால் அது நம்முடைய சோம்பேறித்தனம்தான்!

நமக்கு முதல் எதிரி அந்த சோம்பல்தான். ஆகவே சோம்பல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். வேறு ஆளைத் தேடாதீர்கள்.

தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், நீங்களே எழுந்து சென்று வாட்டர் ஃபில்டரில் தண்ணீரைப் பிடித்துக் குடித்துவிட்டு  வாருங்கள். நாளொன்றிற்கு எழு முறைகள் அல்லது எட்டு முறைகள் அப்படிக் குடிக்க வேண்டியதாக இருந்தாலும் நீங்களே செய்யுங்கள். இல்லாளை ஏவாதீர்கள்.

நீங்கள் சாப்பிட்ட தட்டை நீங்களே கழுவுங்கள். உங்கள் உள்ளாடைகளை நீங்களே துவைத்து உலர்த்துங்கள்.

உங்களுக்கு ஜூனியர் விகடன் வேண்டுமென்றால், பெட்டிக்கடைக்கு நீங்களே சென்று வாங்கிக் கொண்டு வாருங்கள்.

உங்களுடைய வாகனத்தை நீங்களே துடைத்து சுத்தம் செய்யுங்கள். உங்கள் அறையை வாரம் ஒரு முறையாவது நீங்களே  சுத்தம் செய்யுங்கள்.

எதையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாதீர்கள். தள்ளி வைக்காதீர்கள்

லிப்ஃகோ என்னும் பெரிய புத்தக நிறுவனத்தின் உரிமையாளரை, ஒரு பத்திரிக்கை ஆசிரியர் நேர்காணல் செய்த போது கேட்டார்:

“உங்களுடைய வெற்றிக்கு என்ன காரணம் என்று. ஒற்றை வரியில் சொல்ல முடியுமா?”

உடனே அவர் பதில் சொன்னார்: ”உடனே செய் (Do it now) என்பதே என் வெற்றிக்கான தாரக மந்திரம்”

சோம்பேறித்தனம் இன்றி எதையும் அவ்வப்போதே செய்து வந்ததால், தான் வெற்றி பெற்றதாக அவர் அசத்தலாகச் சொன்னார்.

ஆகவே சோம்பேறிதனம் இன்றி பார்த்துக்கொள்வோம். அட்லீஸ்ட் இன்று முதல்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

வெள்ளி மலர்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய  சுட லைப்பொடி  பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே!
                                                          - திருஞான சம்பந்தர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பி.கு: வகுப்பறைக்கு சனி, ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமை புதிய பாடத்துடன் மீண்டும் சந்திப்போம்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் பின்னூட்டப் பெட்டியை உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தேவையில்லாத, இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை யாரும் இடவேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

50 comments:

  1. சோம்பல் இல்லாமல் இருக்க நீங்கள் சொன்ன அத்தனயையும் அப்படியே கடைப் பிடித்து வருகிறேன் ஐயா! மேலும் என்னால் ஆன உதவிகளை
    குடும்ப‌ நிர்வாகத்திற்குச் செய்கிறேன்.

    "உள்ளம் கவர் கள்வனை"யும் தரிசித்து மகிழ்ந்தேன்

    வெளியூர் பயணம் நன்கு அமைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. மிக அருமையான மனவளக் கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    //ஒரு ஞானி சொன்னான்.

    பகை, நெருப்பு, குப்பை மூன்றையும் மிச்சம் வைக்காதே! மிச்சம் வைத்து விட்டுப் படுக்காதே!//

    இவ்வாறு சொன்ன ஞானி மஹாவிதுரர். திருதராஷ்டிரரிடம் நீதி உபதேசம் செய்யும் போது இம்மாதிரி பல அரிய விஷயங்களை தொகுத்துக் கூறினார்.

    ஆளுடைய பிள்ளையார் தம் திருவாய் மொழிந்த முதல் திருப்பதிகத்தை மீண்டும் படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற வாக்கியம் கூட மனிதனின் சோம்பேறித்தனம்தான் அவனுக்கு ஏற்படும் தீமைகளில் பெரும்பகுதியைக் கொடுக்கிறது என்ற காரணத்தால் உருவாகி இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

    பதிவில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் மிக சாதாரணமானவைதான். இது அவர்களுக்கும் தெரியும். அதனாலேயே பலர் அலட்சியத்தால் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

    அதிகாலையிலேயே எழுந்து என் வேலையை நானே பார்த்துக்கொள்வதில் எவ்வளவு நேரம் மிச்சமாகிறது என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக இன்னொருவரை எதிர்பார்த்து அந்த காரியத்தை அவர் செய்யாமல் விடும்போது (எல்லா காரியத்தையும் நாமே செய்ய முடியாது. அது வேறு விஷயம்) அது வரை காலமும் விரயம். அதனால் ஏதாவது நஷ்டம் ஏற்படுவதோடு, அவரிடம் சொன்னோமே. செய்யாமல் விட்டுவிட்டாரே என்ற டென்ஷன் நமக்கு ஏற்படாமலும் தடுக்கலாம்.

    ReplyDelete
  4. அருமையானக் கருத்துக்கள் கொண்ட மனவளக் கட்டுரை.
    பகை என்றவுடன் தான் எனக்கு மகாகவியின் பாடலொன்றும்
    ஞாபகத்திற்கு வருகிறது...

    ********************************************************
    பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
    பகைவனுக் கருள்வாய்!

    புகை நடுவினில் தீயிருப்பதைப்
    பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
    பூமியிற் கண்டோ மே.
    பகை நடுவினில் அன்புரு வானநம்
    பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

    பரமன் வாழ்கின்றான்....
    ******************************************

    பகைக்கு இன்னும்மொறுக் காரணமும் இருக்கிறது என்பதி உணர்ந்த பாரதி... இப்படியும் கூறிவிடுகிறான்.

    **********************************************************
    சென்றதினி மீளாது மூடரே!நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
    இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
    தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

    எல்லாவற்றிற்கும் இறைபக்தி என்னும் அடிப்படை வேண்டும் என்கிறான். அப்படிக் கூறும் பாரதி பக்தியின் பயனாக பெரியப் பட்டியலையேத் தருகிறான்... ஆசை, காமம், சோர்வு போவதோடு... கல்வி வளரும், சிந்தை தெளிவுறும், சந்ததி வாழும் என்றும் கூறுகிறவன் நெத்தியடியாக தங்களின் கட்டுரைக்கு வலு சேர்த்தக் கருத்தை அழகாகச் சொல்கிறான்.

    *************************************************
    பக்தியினாலே-இந்தப்
    பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!

    சோம்ப லழியும்-உடல்
    சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
    கூம்புத லின்றி நல்ல
    கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
    வீம்புகள் போகும்-நல்ல
    மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
    பாம்பு மடியும்-மெய்ப்
    பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி)
    ******************************************************

    அருமை! அருமை!! அருமை!!!

    சோம்பலை ஒழித்தால் வாழ்வு
    ஆம்பலாய் மலரும் என்று
    தேம்பாவணியாக இலக்கணம் வகுத்தீர்!

    ஞான சம்பந்தரின் தேனமுதமான பாடலை மீண்டும் வாசிக்க வாய்ப்பளித்தமைக்கும்...
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    இன்றைய பதிவு சோம்பலை வெளியேற்றினால் வெற்றி உறுதி,
    அருமைய் இருந்தது நானும் பின்பற்றுவேன்

    ஒம் நமச்சிவாய்,சிவ சிவ ஒம்
    நன்றி

    ReplyDelete
  6. Respected Sir,

    Your posting today is very fine with a beautiful tiru gnyanasambandar thevaram.

    Sorry, there is a small mistake in that. In the second line it is Kaadudaiya Sudalai podi.

    Daily I am reading all your lessons. Everything is superb.

    with respects
    Srividhya

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Thanks for the good lesson today, Sir.

    ReplyDelete
  9. உங்கள் பயணம் இனிதாக அமைய இறையருளை வேண்டுகிறேன் ஐயா.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஆறாம் வீட்டு அதிபரின் காலம் மட்டும் அல்ல, ஏழரை சனி காலத்திலும் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் பகைகளை நம் முன் காலம் கொண்டு வந்து நிறுத்தும் அல்லவா? படித்த நினைவு, ஐயா.

    ஆனாலும் நம்பர் ஒன் வில்லன் ஆறாம் அதிபதி தானே.

    ஒரு சந்தேகம் ஐயா.

    ஆறாம் வீட்டு அதிபதி பதினோராம் வீட்டு அதிபதியாகவும் இருக்கிற போது எந்த எந்த காலத்தில் எந்த எந்த பலனை தருவார் என அறிவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஜாதகருக்கு அவருடைய புக்தி மட்டும் தான் வரும், தசை வராது (வரும் காலத்தில் ஜாதகர் எண்பது வயதுக்கு மேல்) என்னும் பொழுது, புலிப்பாணி முனிவரின் பாடல்களின் படி தசா நாதனை பொருது தான் புக்தி நாதன் பலன் தருவார் இல்லையா?

    ஆறாம் அதிபர் டபுள் கேம் ஆடுவார் போல!

    ReplyDelete
  13. திருத்தம்: சூரியன் மற்றும் சந்திரன் தவிர எல்லாருமே டபுள் கேம் தான் ஆடுவார்கள்! ஆறாம் அதிபரை மட்டும் சொல்லி இருக்கிறேன் என திட்டாதீர்கள் ப்ளீஸ்.

    என்ன, அவர்கள் ஆடும் ஆட்டத்துக்கு நாம் தான் கேள்வியே கேக்காமல் தாளம் போட வேண்டி உள்ளது! ரூல்ஸ மாத்தினா தேவலை.

    அம்பயர் முடிவை எதிர்த்து அப்பீல் போடுவது போல ஏதாவது இருக்குமா தெரியலையே......... ஒன்பது பெரும் சேர்ந்து ஒரு ஆளை அடிச்சா பாவம் ல?

    ReplyDelete
  14. இன்றைய பதிவல் சோம்பலை விரட்டுவதினால் வரும் நன்மையை விளக்கிய விதம் மிகவும் அருமை. பின்னூட்டத்தில் அதன் பிரதிபலிப்பு மேலாதிக்க தகவலாக அணிசேர்த்தது பதிவை ரசிக்க முடிந்தது.வாத்தியார் அய்யாவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. இனைய தொடர்பு தடை பட்டதால் என்னால் வகுப்பு வரமுடியவில்லை

    .சோம்பல் கொள்ளகூடாது என் சொல்லி வாத்தியார் இரண்டு தினம் விடுமுறை கொடுத்து விட்டார் விடுமுறை என்றாலே சோம்பல் தானே, லாஜிக் சரியில்லையே.


    சோம்பலிடம் நட்புகொள்ள மட்டும்
    நாம்
    சோம்பல் கொள்வோம்

    சாம்பலாய் ஆகும் வரை
    இதை
    நோன்பு கொள்வோம்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Dear sir,

    Request , kindly clarify my doubts sir,

    Understood from today lesson sixth lord will give lot of enemies & problems from them but my doubt is How would be the result of planet sitting in 6th place .

    ReplyDelete
  18. குட் Afternoon சார் !!
    Oh மி God ,எனக்கு இப்போது நட்பது உச்சம் பெற்ற 6 ஆம் அதிபதி சனியின் தசை,சனி லக்னத்திற்கு இரெண்டாம் வீட்டில் ,ராசிக்கு நான்காம் வீட்டில் ..நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ,பிரச்சனை மற்றும் பகை மிகவும் எதிர்பாராமல் வந்து விடுகிறது,இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது ,கேது தசை ,சனி புக்தி முடிய

    ReplyDelete
  19. ஐயா விற்கு வணக்கம்.


    பிட் நோட்டீஸ் போல இப்படிப் பல பின்னூட்டங்கள் எழுதியதைவிட, நச்’ சென்று இரண்டு பக்கங்களில் செய்தியாக எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தால், தனிப் பதிவாக போட்டிருப்பேன் இல்லையா? உங்களுக்கு ஏன் அது தோன்றவில்லை


    ஐயா! தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. மகாபாரத போரின் போது சேனைக்கு தலைமை தாங்கி செல்ல

    " சேனை தலைவராக "!

    நியமிக்க பட்டவர்

    " பிதாமகன் "

    என்று அழைக்க படும்

    " பீஸ்மர் ",

    ஆகும். தனக்கு என்று இருந்த அடிப்படை உணர்ச்சியையும் கூட தன்னுடைய தந்தைக்காக அனைத்து வகையான ஆசை, பாசம் அனைத்தையும் தியாகம் செய்து தந்தையின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என உயிர் பிரியும் வரை வாழ்தவர் ஆகும்.

    உண்மையிலே வில் வித்தையில் சிறந்தவர் என்று அழைக்கபடவேண்டியவர்

    " கருணை வள்ளல் கர்ணன்."

    ஆகும் . ஆனால் தேரோடியின் வளர்ப்பு மகன் என்ற ஒரே காரணத்தை காட்டி

    " வில்லுக்கு விஜையன், சொல்லுக்கு அரிச்சந்திரன் ",

    என்ற சொலவடையை சொல்லும் அளவிற்கு
    " அர்ஜுனன் "ஆ

    க்கிவிடப்பட்டான் என்பததுதான் உண்மையிலும் உண்மை சத்தியம் எல்லாமுமே .


    குருசேத்திர போர் தொடங்கும் முன்னர் யார் யார் எல்லாம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சேனை தலைவராக உள்ள பிதா மகனார் பிரிக்கின்றார்.

    கர்ணன் ஆயிரம் பேர்களுடன் கடைசி ஆளாக நின்று போர் புரியும் வீரனாக பிதாமகனார் பிரித்து விடப்பட்டுகின்றார் .

    கர்ணன் உணர்ச்சி வசப்பட்டு பிதாமகனார் இருக்கும் வரை யான் சண்டை புரிவது இல்லை என்று வாளின் மேல் சத்தியம் கொண்டு அவையில் இருந்து வெளியே செய்கின்றார்..


    பேர பிள்ளைகளால் இடப்பட்ட அம்பு படுக்கையில் கிடக்கின்றார் பீஷ்மர். வில்லுக்கு விஜையன் என்று அழைக்கப்படுகின்ற அர்ஜுனன் தாத்தாவிற்கு ஏற்பட்ட மற்றும் வேதனையை கண்கொண்டு கண்ணிர் விடுகின்றார்.

    தாத்தா பீஷ்மர் பேரன் ஆகிய அர்ஜுனன்னிடம் எனக்கு ஒரு தலையணை வேண்டும் என்கின்றார் . உடனே அர்ஜுனன் தாத்தாவிற்கு அம்பு கொண்டு எய்தி

    தலையணை தருகின்றார் .


    நிறைய காரண காரியம் விபாதம் உபதேசம் என நடக்கின்றது . கருணை வள்ளல் கர்ணனும் வந்து பார்த்து கண்ணிர் வடிக்கின்றார் .

    அப்பொழுது " பிதாமகன் பீஷ்மர்" ஒரு உண்மையை கூறுகின்றார் கர்ணனிடம். கர்ணா ! நி இருக்கும் வரை துரியோதனனை எவராலும் அளிக்க முடியாது என்பது எமக்கு நன்றாக தெரியும் ஆதலால் தான் உன்னை கடைசியில் கடை மட்ட வீரனாக நியமிக்க பட்டேன் . துரியோதனன் ஒன்றும் அறியாதவன் . விதி விதிக்கப்பட்டதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதும் . கர்ணன் பட்ட வேதனைக்கு ஈடாக வேறு ஒரு வேதனையும் பட்டதில்லை என்று பெரியவர்கள் கூற கேட்டது உண்டு.


    இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் திருப்பதிக்கு செல்லுவதை பற்றி முன்னர் வாத்தியார் ஐயாவிடம் கூறியது உண்டு வகுப்பறையில் ஏற்றலாம் என்று தங்களுடைய அனுமதி கிடைத்த பின்னர் திருப்திக்கு அழைத்து கொண்டு செல்லும் ஸ்வாமிஜியிடம் கேட்ட பொழுது முதலில் சரி என்றார் .

    நான் கூறினேன் ஐயா சுமார் 3,000 நபர்கள் படிக்கும் ஜோதிட வகுப்பு என்று கூறியதும் . இந்த வருடம் நீங்கள் மட்டும் வாங்க அடுத்த வருடம் வெங்கடாசலபதியின் அருள் கிடைப்பின் முன்னரே அனைத்து வகையான ஏற்பாடுகளை பற்றி பேசலாம் என்றார். நம்முடன் அழைத்துக்கொண்டும் செல்லலாம் என்றார் .


    நிலைமை இவ்வாறு இருக்க வாத்தியார் ஐயா கூறுவதை போல செய்தால் நிறைய நபர்கள் வந்தால் என்ன ஐயா செய்வது . தாங்கள் தான் அடிக்கடி கூருவிர்கள் ஜோதிட வகுப்பை நிறைய நபர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று இங்கு வலையில் கொண்டு வந்தால் கன்னிப்பெண் திறந்த வெளியில் குளிப்பதற்கு சமம் என்று . தலை எழுத்து உள்ளவர்கள் மற்றும் சில நபர்கள் தான் பின்னுட்டம் இடுகின்றனர் . மற்ற நபர்கள் எல்லாம் வந்தோம் போனோம் என்று தான் உள்ளார்கள்.

    அவர்களுக்கு விதியமைப்பு இருப்பின் வரட்டும் என்று தான் ஐயா கூறியது போல செய்ய வில்லை .

    எல்லோருக்கும் குல குருவாக இருந்த துரோனாட்சாரியாரும் கூட மாணவர்கள் கையாளில் தான் இறந்து போனார்.

    சோ நம்ம கையில் ஒன்றும் இல்லையா ஐயா ! ?

    ReplyDelete
  20. "இப்பதிவிற்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டங்களை இட வேண்டாம்" என்ற வாத்தியாரின் சொற்களுக்கு மதிப்பளித்து தனுசு தன்னுடைய கோபம் கொப்பளிக்கும் கவிதைப் பின்னூட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  21. //எல்லோருக்கும் குல குருவாக இருந்த துரோணாச்சாரியாரும் கூட மாணவர்கள் கைகளால் தான் இறந்து போனார்.//

    அடடா! மாயக்கண்ணா! டச்சிங் பண்ணிட்டிங்க!

    ReplyDelete
  22. திரு. கே.எம்.ஆர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, என் பின்னூட்டங்களையும் நீக்கி விடுகிறேன். அறிவுறுத்தியமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  23. Parvathy Ramachandran said..வாரமலர், நான் உள்பட பலரை வளர்த்தெடுத்தது. வளர வைத்துக் கொண்டிருந்தது. தனி வலைப்பூ இருந்தாலு......////

    நான் வகுப்புக்கு வந்து இந்த ஜூன் மாத்ததோடு பத்து மாதம் ஆகிறது. பெண்கள் உலகத்தில் பத்து மாதம் என்பது போற்றப் பட வேண்டிய மாதங்கள்.குருடனாய் பிறந்து குருடனாய் இறப்பது வேறு.குருடனாய் பிறந்து பார்வை பெற்று உலகத்தை பார்த்து இறப்பது என்பது வேறு.குருடனாய் பிறந்து திடீரென்று பார்வை வந்து உலகத்தை பார்த்து ருசித்த ஆனந்தம் அடையும் போது மீண்டும் பார்வை போய் குருடனாய் ஆனால் அவன் எத்தனை வேதனை படுவான். இது ஒரு ஜென் தத்துவம் .இன்று நான் பார்வை வந்து போன நிலையில் இருக்கிறேன்.

    என் வருத்தம் யார் மீதும் அல்ல அந்த செயலுக்கு மட்டுமே.

    ReplyDelete
  24. kmr.krishnan said...

    "இப்பதிவிற்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டங்களை இட வேண்டாம்" என்ற வாத்தியாரின் சொற்களுக்கு மதிப்பளித்து தனுசு தன்னுடைய கோபம் கொப்பளிக்கும் கவிதைப் பின்னூட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

    "செத்த அன்றைக்கு வந்து அழுதால் அழு, மூன்று நாள் கழித்து வந்து அழாதே" என்று சொல்வதுபோல் உள்ளது.

    தாங்களின் மீது வைத்த மரியாதயின் அடையாளமாக விலக்கிக் கொள்கிறேன்.ஆனால் மனம் ஆறவில்லை.

    ReplyDelete
  25. பல் துலக்கவே
    சோம்பல் படும் நம்மவர்களுக்கு சொன்ன பாடம் ஜோரு..

    ஓய்வு எடு ஆனால்
    சோம்பல் கொள்ளாதே என்ற பாடத்தை பாரு

    என சொல்லி வந்த பாடம் அருமை..

    வெள்ளியாய் மலர்ந்த வெள்ளி மலருக்கு நன்றிகள் (இன்றைய) நாளெல்லாம்

    ReplyDelete
  26. சோம்பேறித்தனம் இன்றி எதையும் அவ்வப்போதே செய்து வந்ததால், தான் வெற்றி பெற்றதாக அவர் அசத்தலாகச் சொன்னார்.

    அசத்தலான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  27. தாங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு உள்ள முதல் எதிரியும் என்னிடம் உள்ள சோம்பல்தான். இதனால் எவ்வளவு நாட்கள்/நேரங்கள் வீணாகி இருக்கின்றன என்பது எனக்குதான் தெரியும்.

    இடையராத பணி சுமையின் காரணமாக பல நாட்கள் வகுப்பறைக்கு வர முடியாமல் போய் விட்டது. என்ன நடந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. குறிப்பாக என்ன ஏது என்று கேட்டு நான் எதையும் கிளற விரும்பவில்லை. அது தேவையற்றதும் கூட. இனி எல்லாம் நன்றாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  28. Anbu Aiya,
    Thevarathin erendam vari yil thiruthham ullathu " Kaadudaiya sudalai " enbathaaga Gnabagam.

    Regards,
    R.Saravanakumar,
    Colombo

    ReplyDelete
  29. நன்கு வளர்ந்திருந்த ஒரு வளமான வயலில் ஒரு வானம்பாடி கூடுகட்டி தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. அறுவடை எந்த நாளிலும் நடக்கலாம் என்ற நிலை. ஒரு நாள் இரை தேட செல்லும்முன் தன் குஞ்சுகளிடம் கவனமாக வயலில் நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கசொல்லிவிட்டு சென்றது. வயலின் உரிமையாளர் விவசாயியும் அவர் மகன்களும் வந்து பயிர்களை பரிசீலனை செய்துவிட்டு நாளை ஆட்களை வரச்சொல்லி அறுவடையை செய்யலாம் என்று திட்டமிட்டு சென்றனர். தாய்ப்பறவை வந்ததும் குஞ்சுகள் இதைத் தெரிவித்தன. தாய்ப்பறவை "கவலைப்படாதீர்கள் நாளை அறுவடை நடக்காது" என்றது.

    மறுநாளும் அது இரையுடன் கூடு வந்தபொழுது குஞ்சுகள் இன்று ஆட்கள் கிடைக்கததால் நாளை வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்வதாக திட்டம் போட்டார்கள் என்றன. தாயும் கவலை வேண்டாம் நாளையும் அறுவடை நடக்காது என்று சொன்னது. அதற்கடுத்த நாள் அது கூடு திரும்பியபொழுது குஞ்சுகள், வெளியூர் ஆட்களும் இன்று வரவில்லை. அதனால் இனி அடுத்தவரை நம்பி பயனிலை நாளை நாமே அறுவடையை செய்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நடந்த நிகழ்ச்சிகளை தாய்ப்பறவையிடம் கூறின. தாய் உடனே வாருங்கள் இனி அபாயம், நாளை அறுவடை நடப்பதற்கு முன் நாம் போய்விடலாம் என்று சொல்லி தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வேறு இடம் போய்விட்டது. கதை சொல்லும் நீதி அடுத்தவரை எதிபார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்று வாழ வேண்டும். சோம்பல் கூடாது.

    இது என் மூன்றாம் வகுப்பில், சுப்புலட்சுமி டீச்சர் வகுப்பில், பாடத்தில் படித்தது. வாத்தியாரின் இன்றைய பதிவு கதையை நினைவிற்கு கொண்டு வந்தது. இதை இப்பொழுது சொல்லக் காரணம் ...கிடைக்கும் நேரத்தில் இதுபோல குட்டிக் கதை சொல்லி பயிற்சி எடுத்தால், தப்பித் தவறி நானும் பெரிய ஆளாக ஆனவுடன் கூட்டத்தில் பேச நேரும்பொழுது ஜெயலலிதா, ரஜினி போல குட்டிக் கதைகள் சொல்லலாம் என்ற முன்னேற்பாடுதான்.

    ஆனால் முதலில் "நமக்கு முதல் எதிரி யார்!" என்ற தலைப்பைப் பார்த்து "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதை விளக்கப் போகிறீர்கள் எனத் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் ஐயா.
    ___
    "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே"

    பாடலை சுசீலாவின் இனிய குரலில் கேட்க விரும்புவோர்களுக்கான சுட்டி கீழே:
    http://youtu.be/-OT2RCgAvVA

    ReplyDelete
  30. //////Blogger kmr.krishnan said...
    சோம்பல் இல்லாமல் இருக்க நீங்கள் சொன்ன அத்தனயையும் அப்படியே கடைப் பிடித்து வருகிறேன் ஐயா! மேலும் என்னால் ஆன

    உதவிகளை
    குடும்ப‌ நிர்வாகத்திற்குச் செய்கிறேன்.
    "உள்ளம் கவர் கள்வனை"யும் தரிசித்து மகிழ்ந்தேன்
    வெளியூர் பயணம் நன்கு அமைய பிரார்த்திக்கிறேன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  31. Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான மனவளக் கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
    //ஒரு ஞானி சொன்னான்.
    பகை, நெருப்பு, குப்பை மூன்றையும் மிச்சம் வைக்காதே! மிச்சம் வைத்து விட்டுப் படுக்காதே!//
    இவ்வாறு சொன்ன ஞானி மஹாவிதுரர். திருதராஷ்டிரரிடம் நீதி உபதேசம் செய்யும் போது இம்மாதிரி பல அரிய விஷயங்களை
    தொகுத்துக் கூறினார்.
    ஆளுடைய பிள்ளையார் தம் திருவாய் மொழிந்த முதல் திருப்பதிகத்தை மீண்டும் படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. ////Blogger சரண் said...
    தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற வாக்கியம் கூட மனிதனின் சோம்பேறித்தனம்தான் அவனுக்கு ஏற்படும் தீமைகளில் பெரும்பகுதியைக்
    கொடுக்கிறது என்ற காரணத்தால் உருவாகி இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
    பதிவில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் மிக சாதாரணமானவைதான். இது அவர்களுக்கும் தெரியும். அதனாலேயே பலர்
    அலட்சியத்தால் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
    அதிகாலையிலேயே எழுந்து என் வேலையை நானே பார்த்துக்கொள்வதில் எவ்வளவு நேரம் மிச்சமாகிறது என்பதையும் புரிந்து
    கொண்டிருக்கிறேன். முக்கியமாக இன்னொருவரை எதிர்பார்த்து அந்த காரியத்தை அவர் செய்யாமல் விடும்போது (எல்லா காரியத்தையும்
    நாமே செய்ய முடியாது. அது வேறு விஷயம்) அது வரை காலமும் விரயம். அதனால் ஏதாவது நஷ்டம் ஏற்படுவதோடு, அவரிடம்
    சொன்னோமே. செய்யாமல் விட்டுவிட்டாரே என்ற டென்ஷன் நமக்கு ஏற்படாமலும் தடுக்கலாம்.////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. /////Blogger ஜி ஆலாசியம் said...
    அருமையானக் கருத்துக்கள் கொண்ட மனவளக் கட்டுரை.
    பகை என்றவுடன் தான் எனக்கு மகாகவியின் பாடலொன்றும்
    ஞாபகத்திற்கு வருகிறது... ********************************************************
    பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
    பகைவனுக் கருள்வாய்!
    புகை நடுவினில் தீயிருப்பதைப்
    பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
    பூமியிற் கண்டோ மே.
    பகை நடுவினில் அன்புரு வானநம்
    பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
    பரமன் வாழ்கின்றான்.... ******************************************
    பகைக்கு இன்னும்மொறுக் காரணமும் இருக்கிறது என்பதி உணர்ந்த பாரதி... இப்படியும் கூறிவிடுகிறான். **********************************************************
    சென்றதினி மீளாது மூடரே!நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
    இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
    தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
    எல்லாவற்றிற்கும் இறைபக்தி என்னும் அடிப்படை வேண்டும் என்கிறான். அப்படிக் கூறும் பாரதி பக்தியின் பயனாக பெரியப்
    பட்டியலையேத் தருகிறான்... ஆசை, காமம், சோர்வு போவதோடு... கல்வி வளரும், சிந்தை தெளிவுறும், சந்ததி வாழும் என்றும் கூறுகிறவன்
    நெத்தியடியாக தங்களின் கட்டுரைக்கு வலு சேர்த்தக் கருத்தை அழகாகச் சொல்கிறான். *************************************************
    பக்தியினாலே-இந்தப்
    பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
    சோம்ப லழியும்-உடல்
    சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
    கூம்புத லின்றி நல்ல
    கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
    வீம்புகள் போகும்-நல்ல
    மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
    பாம்பு மடியும்-மெய்ப்
    பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி) ******************************************************
    அருமை! அருமை!! அருமை!!!
    சோம்பலை ஒழித்தால் வாழ்வு
    ஆம்பலாய் மலரும் என்று
    தேம்பாவணியாக இலக்கணம் வகுத்தீர்!
    ஞான சம்பந்தரின் தேனமுதமான பாடலை மீண்டும் வாசிக்க வாய்ப்பளித்தமைக்கும்...
    நன்றிகள் ஐயா!//////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  34. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    இன்றைய பதிவு சோம்பலை வெளியேற்றினால் வெற்றி உறுதி,
    அருமைய் இருந்தது நானும் பின்பற்றுவேன்
    ஒம் நமச்சிவாய்,சிவ சிவ ஒம்
    நன்றி////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ///Blogger Srividhya said...
    Respected Sir,
    Your posting today is very fine with a beautiful tiru gnyanasambandar thevaram.
    Sorry, there is a small mistake in that. In the second line it is Kaadudaiya Sudalai podi.
    Daily I am reading all your lessons. Everything is superb.
    with respects
    Srividhya//////

    தட்டச்சுப் பிழை. திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  36. ////Blogger Bhuvaneshwar said...
    Thanks for the good lesson today, Sir./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. ////Blogger Bhuvaneshwar said...
    உங்கள் பயணம் இனிதாக அமைய இறையருளை வேண்டுகிறேன் ஐயா./////

    பயணம் இனிதாக அமைந்தது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி புவனேஷ்வர்!

    ReplyDelete
  38. //////Blogger Bhuvaneshwar said...
    ஆறாம் வீட்டு அதிபரின் காலம் மட்டும் அல்ல, ஏழரை சனி காலத்திலும் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் பகைகளை நம் முன் காலம் கொண்டு வந்து நிறுத்தும் அல்லவா? படித்த நினைவு, ஐயா.
    ஆனாலும் நம்பர் ஒன் வில்லன் ஆறாம் அதிபதி தானே.
    ஒரு சந்தேகம் ஐயா.
    ஆறாம் வீட்டு அதிபதி பதினோராம் வீட்டு அதிபதியாகவும் இருக்கிற போது எந்த எந்த காலத்தில் எந்த எந்த பலனை தருவார் என
    அறிவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஜாதகருக்கு அவருடைய புக்தி மட்டும் தான் வரும், தசை வராது (வரும் காலத்தில் ஜாதகர்
    எண்பது வயதுக்கு மேல்) என்னும் பொழுது, புலிப்பாணி முனிவரின் பாடல்களின் படி தசா நாதனை பொருது தான் புக்தி நாதன் பலன்
    தருவார் இல்லையா?
    ஆறாம் அதிபர் டபுள் கேம் ஆடுவார் போல!//////

    கிரகங்கள், தங்களுடைய தசாபுத்திகளில் தான் பலனைக் கொடுப்பார்கள்!

    ReplyDelete
  39. ////Blogger Bhuvaneshwar said...
    திருத்தம்: சூரியன் மற்றும் சந்திரன் தவிர எல்லாருமே டபுள் கேம் தான் ஆடுவார்கள்! ஆறாம் அதிபரை மட்டும் சொல்லி இருக்கிறேன் என திட்டாதீர்கள் ப்ளீஸ்.
    என்ன, அவர்கள் ஆடும் ஆட்டத்துக்கு நாம் தான் கேள்வியே கேக்காமல் தாளம் போட வேண்டி உள்ளது! ரூல்ஸ மாத்தினா தேவலை.
    அம்பயர் முடிவை எதிர்த்து அப்பீல் போடுவது போல ஏதாவது இருக்குமா தெரியலையே......... ஒன்பது பெரும் சேர்ந்து ஒரு ஆளை
    அடிச்சா பாவம் ல?/////

    என்ன அடித்தாலும் வலி நிவாரணி 337 இருக்கிறதே! அதையும் அவர்கள்தானே கொடுக்கிறார்கள்!

    ReplyDelete
  40. ////Blogger Balamurugan Jaganathan said...
    இன்றைய பதிவல் சோம்பலை விரட்டுவதினால் வரும் நன்மையை விளக்கிய விதம் மிகவும் அருமை. பின்னூட்டத்தில் அதன் பிரதிபலிப்பு
    மேலாதிக்க தகவலாக அணிசேர்த்தது பதிவை ரசிக்க முடிந்தது.வாத்தியார் அய்யாவிற்கு மிக்க நன்றி.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////Blogger thanusu said...
    இனைய தொடர்பு தடை பட்டதால் என்னால் வகுப்பு வரமுடியவில்லை
    .சோம்பல் கொள்ளகூடாது என் சொல்லி வாத்தியார் இரண்டு தினம் விடுமுறை கொடுத்து விட்டார் விடுமுறை என்றாலே சோம்பல் தானே, லாஜிக் சரியில்லையே.
    சோம்பலிடம் நட்புகொள்ள மட்டும்
    நாம்
    சோம்பல் கொள்வோம்
    சாம்பலாய் ஆகும் வரை
    இதை
    நோன்பு கொள்வோம்./////

    விடுமுறையில், வாரநாட்களில் விட்டுப்போன வேலைகளைத் தேடிப்பிடித்துச் செய்யுங்கள்!

    ReplyDelete
  42. /////Blogger seenivasan said...
    Dear sir,
    Request , kindly clarify my doubts sir,
    Understood from today lesson sixth lord will give lot of enemies & problems from them but my doubt is How would be the result of planet sitting in 6th place ./////

    அமரும் கிரகம் தனது வலிமையை இழந்து விடும். சுப கிரகங்களாக இருந்தால் ஜாதகனுக்கு நன்மைகளை அளந்து (rationல்) கொடுக்கும்

    ReplyDelete
  43. /////Blogger Sowmya said...
    குட் Afternoon சார் !!
    Oh மி God ,எனக்கு இப்போது நட்பது உச்சம் பெற்ற 6 ஆம் அதிபதி சனியின் தசை,சனி லக்னத்திற்கு இரெண்டாம் வீட்டில் ,ராசிக்கு
    நான்காம் வீட்டில் ..நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ,பிரச்சனை மற்றும் பகை மிகவும் எதிர்பாராமல் வந்து விடுகிறது,இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது ,கேது தசை ,சனி புக்தி முடிய//////

    இறைவனைப் பிரார்த்தியுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

    ReplyDelete
  44. /////Blogger அய்யர் said...
    பல் துலக்கவே
    சோம்பல் படும் நம்மவர்களுக்கு சொன்ன பாடம் ஜோரு..
    ஓய்வு எடு ஆனால்
    சோம்பல் கொள்ளாதே என்ற பாடத்தை பாரு
    என சொல்லி வந்த பாடம் அருமை..
    வெள்ளியாய் மலர்ந்த வெள்ளி மலருக்கு நன்றிகள் (இன்றைய) நாளெல்லாம்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
    பல் துலக்கவே சோம்பல் என்றால்.... பக்கத்தில் யார் வருவார்கள்?

    ReplyDelete
  45. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    சோம்பேறித்தனம் இன்றி எதையும் அவ்வப்போதே செய்து வந்ததால், தான் வெற்றி பெற்றதாக அவர் அசத்தலாகச் சொன்னார்.
    அசத்தலான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  46. /////Blogger ananth said...
    தாங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு உள்ள முதல் எதிரியும் என்னிடம் உள்ள சோம்பல்தான். இதனால் எவ்வளவு
    நாட்கள்/நேரங்கள் வீணாகி இருக்கின்றன என்பது எனக்குதான் தெரியும்.
    இடையராத பணி சுமையின் காரணமாக பல நாட்கள் வகுப்பறைக்கு வர முடியாமல் போய் விட்டது. என்ன நடந்திருக்கும் என்று
    அனுமானிக்க முடிகிறது. குறிப்பாக என்ன ஏது என்று கேட்டு நான் எதையும் கிளற விரும்பவில்லை. அது தேவையற்றதும் கூட. இனி
    எல்லாம் நன்றாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  47. //////Blogger R.Saravanakumar said...
    Anbu Aiya,
    Thevarathin erendam vari yil thiruthham ullathu " Kaadudaiya sudalai " enbathaaga Gnabagam.
    Regards,
    R.Saravanakumar,
    Colombo/////

    தட்டச்சுப் பிழை. திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  48. /////Blogger தேமொழி said...
    நன்கு வளர்ந்திருந்த ஒரு வளமான வயலில் ஒரு வானம்பாடி கூடுகட்டி தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. அறுவடை எந்த நாளிலும் நடக்கலாம் என்ற நிலை. ஒரு நாள் இரை தேட செல்லும்முன் தன் குஞ்சுகளிடம் கவனமாக வயலில் நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கசொல்லிவிட்டு சென்றது. வயலின் உரிமையாளர் விவசாயியும் அவர் மகன்களும் வந்து பயிர்களை பரிசீலனை செய்துவிட்டு நாளை ஆட்களை வரச்சொல்லி அறுவடையை செய்யலாம் என்று திட்டமிட்டு சென்றனர். தாய்ப்பறவை வந்ததும் குஞ்சுகள் இதைத் தெரிவித்தன. தாய்ப்பறவை "கவலைப்படாதீர்கள் நாளை அறுவடை நடக்காது" என்றது.
    மறுநாளும் அது இரையுடன் கூடு வந்தபொழுது குஞ்சுகள் இன்று ஆட்கள் கிடைக்கததால் நாளை வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்வதாக திட்டம் போட்டார்கள் என்றன. தாயும் கவலை வேண்டாம் நாளையும் அறுவடை நடக்காது என்று சொன்னது. அதற்கடுத்த நாள் அது கூடு திரும்பியபொழுது குஞ்சுகள், வெளியூர் ஆட்களும் இன்று வரவில்லை. அதனால் இனி அடுத்தவரை நம்பி பயனிலை நாளை நாமே அறுவடையை செய்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நடந்த நிகழ்ச்சிகளை தாய்ப்பறவையிடம் கூறின. தாய் உடனே வாருங்கள் இனி அபாயம், நாளை அறுவடை நடப்பதற்கு முன் நாம் போய்விடலாம் என்று சொல்லி தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வேறு இடம் போய்விட்டது. கதை சொல்லும் நீதி அடுத்தவரை எதிபார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்று வாழ வேண்டும். சோம்பல் கூடாது.
    இது என் மூன்றாம் வகுப்பில், சுப்புலட்சுமி டீச்சர் வகுப்பில், பாடத்தில் படித்தது. வாத்தியாரின் இன்றைய பதிவு கதையை நினைவிற்கு கொண்டு வந்தது. இதை இப்பொழுது சொல்லக் காரணம் ...கிடைக்கும் நேரத்தில் இதுபோல குட்டிக் கதை சொல்லி பயிற்சி எடுத்தால், தப்பித் தவறி நானும் பெரிய ஆளாக ஆனவுடன் கூட்டத்தில் பேச நேரும்பொழுது ஜெயலலிதா, ரஜினி போல குட்டிக் கதைகள் சொல்லலாம் என்ற முன்னேற்பாடுதான்.///////

    கதைக்கு நன்றி சகோதரி! நானும் இந்தக் கதையைக் கேட்டிருக்கிறேன். எங்கே என்று நினைவில் இல்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
    ///// ஆனால் முதலில் "நமக்கு முதல் எதிரி யார்!" என்ற தலைப்பைப் பார்த்து "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதை விளக்கப் போகிறீர்கள் எனத் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் ஐயா. ___
    "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே"
    பாடலை சுசீலாவின் இனிய குரலில் கேட்க விரும்புவோர்களுக்கான சுட்டி கீழே:
    http://youtu.be/-OT2RCgAvVA/////

    தேடிப்பிடித்துக் கொடுத்த சுட்டிக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com