20.4.12

காவல்புரியவென்று அமர்ந்த மலை



காவல்புரியவென்று அமர்ந்த மலை 
------------------------------------------------------
முருகன் பாமாலை

 அறுபடை வீடுகொண்ட திருமுருகா - திரு
முருகாற்றுப் படைதன்னிலே வருமுருகா முருகா
அறுபடை வீடுகொண்ட திருமுருகா - திரு
முருகாற்றுப் படைதன்னிலே வருமுருகா முருகா

வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு - அந்த
வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலைமீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு

ஒருபெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்தமலை - எங்கள்
தமிழ்த்திரு நாடுகண்ட ஸ்வாமிமலை

தேவர்படைத் தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில்கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரிலுள்ள படைவீடு

குறுநகை தெய்வானை மலரோடு - எந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒருவீடு - வண்ண
திருப்பரங்குன்றமென்னும் படைவீடு

தேவர் குறை தவிர்த்து சினந்தணிந்து - வள்ளி
தெள்ளுதமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல்புரியவென்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத்தணிகை மலை
தணிகைமலை திருத்தணிகை மலை

பாடியவர்: சீர்காழியார்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
-----------------------------------------------
காணொளி
Our sincere thanks to the person who uploaded the video



வாழ்க வளமுடன்!

7 comments:

  1. நல்ல பாடலை பதிவேற்றியதற்கு நன்றி ஐயா. எப்படி எல். ஆர். ஈஸ்வரிக்கு மாரியம்மா பாடலோ, அது போல டி. எம். எஸ். க்கும், சீர்காழிக்கும் முருகர் பாடல்கள். படத்தில் இந்தப் பாடலை மிகவும் தைரியத்துடன் படம் முடிந்தவுடன் கடைசிப் பாடலாக இணைத்திருப்பார்கள். மக்கள் கடைசி வரை இருந்து பார்த்திருப்பார்களா எனத் தெரியவிலை. எனக்கு நினைவிருந்து படம் பார்த்த நாட்களில் மக்கள் பேருந்தைப் பிடிக்க ஓட ஆரம்பித்திருந்ததால், கடைசியில் தேசிய கீதத்தை திரையரங்குகளில் போடுவதை தவிர்க்கும் நிலை வந்திருந்தது.

    பழமுதிர்சோலை காணொளி அழகிய ஊரைக் காண்பிக்கிறது. கல்லூரி நாட்களில் மதுரைக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற பொழுது போக நேர்ந்தது. ஒரே நாளில் மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் மலை, பழமுதிர்சோலைசோலை எனப் பல இடங்கள் பார்க்கும் நிர்ப்பந்தம் என்பதால் பழமுதிர்சோலையை மிகவும் விடியல் காலையில் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு விடிகாலையில், அரையிருட்டில் எழுந்து பழக்கமில்லை. அதனால் வேண்டுதல் இல்லாமலே ஆடிக்கொண்டு செல்ல நேர்ந்தது. அதைத்தவிர சரியாக எதுவும் நினைவில் இல்லை. காணொளிக்கும் நன்றி.

    ReplyDelete
  2. சிறந்த பாடலுக்கும் அருமையான காணொளிக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடல், டிவியில் சானல்கள் மாற்றும்போது எந்த சானலில் இந்தப்பாடல் வந்தாலும் முழுவதும்
    கேட்டுவிட்டுத்தான் மாற்றுவேன்.

    இதில் கடைசிப் பாராவை நீங்கள் விட்டுவிட்டீர்கள், பழமுதிர்ச் சோலையைப் பற்றியது.

    கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
    நல்ல காட்சி தந்து கந்தன் கருணை கொண்டு
    வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
    தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
    தங்க மயிலாடும் பழமுதிர்ச் சோலை...

    ReplyDelete
  4. பகிர்வினுக்கு மிக்க நன்றி ஐயா. தங்களின் சுயவிவர பக்கத்தில் தங்களின் அடக்கத்தை காண முடிகிறது. ஒவ்வொரு வரியிலும் அமைதியைக் காண முடிகிறது. நன்றி

    ReplyDelete
  5. நக்கீரர் என்றாலே, திரு. ஏ.பி.என். அவர்களும். திரு. சீர்காழி அவர்களும் தான் நினைவிற்கு வருகிறார்கள். அருமையான பாடல். பாடலின் துவங்கும் முன் 'ஆற்றுப்படை' குறித்து, வரும் வசனங்களின் அழகே அழகு. அதன் சாரமாகவே பாடல் அமைந்திருப்பது சிறப்பு. சிறுவயதில், 'நிஜ சாமி' என்று நினைத்து, படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது கன்னத்தில் போட்டுக்கொண்டு பய பக்தியுடன் பார்த்திருக்கிறேன்.

    //படம் முடிந்தவுடன் கடைசிப் பாடலாக இணைத்திருப்பார்கள். மக்கள் கடைசி வரை இருந்து பார்த்திருப்பார்களா எனத் தெரியவிலை//

    பாடலின் இனிமை, பாடல் முடியும் வரை இருந்து பார்க்க வைத்திருந்தது. திரையரங்குகளில் மட்டுமல்ல. நாடகங்கள், தெருக்கூத்துகளிலும், கடைசியில் தேசிய கீதம் பாடும் வழக்கம் இருந்தது. சிறுவயதில், 'நல்லதங்காள்' நாடகம் முடிந்து, நடித்தவர்கள் அனைவரும் தேசியகீதம் பாடும்போது, 'கிணத்தில இருந்து எப்படி எழுந்திரிச்சு வந்தாங்க?' என்று 'டவுட்' கேட்டு, அர்ச்சனை பெற்ற அனுபவம் உண்டு.

    ReplyDelete
  6. வாத்தியார் ஐயா வணக்கம்.

    இன்றைய அனைத்து ஆக்கமும் நன்று அதனில் பாரத்தை பற்றி கதை மிகவும் அருமை . நன்றி பல கோடி நல்ல உள்ளம்களுக்கு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com