18.12.11

என்ன நடந்தது லிமோ காரில்?

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நான்கு பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 மார்கழியில் சொக்கவைக்கும்  மகராசி
+++++++++++++++++++++++++++++++++++

சில்லென்ற  வாசம்
சுவாசத்தோடு நேசம்
குளிரும் பனிமழையைப்
பொழியும் மார்கழியே!

பொங்கும் நுரையோடு
கரையில் புரண்டோடும்
நிறைந்த நீர் நிலையை
தந்திடும் மார்கழியே!

பயிர்களும்  பூக்களும்
கனிகளும் கொடிகளும்
செழித்திடும் பசுமையைக்  
கொடுத்திடும்  மார்கழியே!

கல்யாண வைபோகம்  
கைகூடி  வந்துசேர
நோன்பிருந்து கன்னியர்  
தொழுதிடும் மார்கழியே!

எண்ணங்கள் அனைத்தையும்
வண்ணங்களில் விளக்க
கைகொடுக்கும் கோலங்கள்
காட்சிதரும் மார்கழியே!  

சுட்டெரிக்கும் வெயிலை
சுட்டெரித்து  விட்டு
இளந் தென்றலைங்காலம்
ஏந்திவரும் மார்கழியே!

சுழற்றடிக்கும்  மழையை
சுழற்றி அடித்துவிட்டு
தளிர்காலம் தனதாக்கி
தாலாட்டும்  மார்கழியே!

தமிழென்ற மகளுக்கு
சீர்செய்யும் தாயே!
மாதங்களின் அரசியே!
வருவாய் மகராசியே!!.

--தனூர் ராசிக்காரன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2



அவனும் நானும்!

'அவன்' தன்னைக் காலால் உதைப்பான் என்று சரவணன் எதிர் பார்க்கவே யில்லை.

'அவன்' கால் அடியில் அமர்ந்து கொண்டு அவன் முழங்காலைத் தொட்டுத் தொட்டு 'ஏய்!விஷப்பூச்சி. ஏய் விஷப் பூச்சி' என்று நச்சுப்பண்ணிக் கொண்டே இருந்தான் சரவணன்.

மும்முரமாக மாதிரித் தேர்வு  எழுதிக் கொண்டு இருந்த 'அவன்' சட்டென்று ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தில் சரவணனைக் காலால் அழுத்தமாக ஒரு  உதை விட்டான்.

எதிர் பார்க்காமல் கிடைத்த உதையால் சரவணன் நிலை குலைந்து பெஞ்சு இடுக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஆசிரியர் மேடை அருகில் போய் விழுந்தான்.

"என்ன என்ன..?"என்று ஓடி வந்தார் வகுப்புக் கோடியில் நின்று தேர்வு எழுது பவர்களைக் கண்காணித்துக் கொண்டு இருந்த என் எஸ் சார்.அவர்தான் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்.

சமாளித்து எழுந்த சரவணன் "என்னை உதைச்சுத் தள்ளி விட்டான் சார்!"என்று புகார் படித்தான்.

"யாருடா?"

"இவன்தான் சார்!" என்று அவனைச் சுட்டினான்.அவனோ குனிந்த தலை நிமிராமல் தேர்வு எழுதுவதிலேயே கவனமாக இருந்தான்.

அவனருகில் என் எஸ் சார் வந்தார். அவன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து அலாக்காகத் தூக்கினார்.

"வாடா!ஹெச் எம் ரூமூக்கு" என்று தரதர வென்று இழுத்துச் சென்றார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவர் பின்னே சென்றான். தேர்வின் மேல் இருந்த கவனம் சிதறி மாணவர்கள் எல்லோரும் நடப்பதையெல்லாம் ஒரு நாடகம் என்பதைப் போல பார்க்கத் துவங்கினர்.
======================================
அந்தப் பள்ளி  ஊர்க்கோடியில், சுடுகாட்டுக்கு அருகில் இருந்தது. அப்போது 11ஆவது வரை உள்ள உயர்நிலைப் பள்ளி ஆகும். பள்ளியைத் தாண்டிப் போனால் சுடுகாடு. அப்புறம் இஸ்லாமிய மக்களுக்கான புதைகாடு. அப்புறம் கிறித்துவர்களுக்கான புதைகாடு.இந்துக்களிண் சுடுகாட்டுப் பிண வாடையுடன் ஸெர்த்துதான் பாடங்களும் மண்டைக்குள் புக வேண்டும்.

அதன் பின் பகுதியில், ஜான்சன் பேட்டை என்ற குடியிருப்பு. முழுவதும் கிறித்துவ மதத்தினைத் த‌ழுவிய  தலித் சமூகத்தவர் வாழும் பகுதி.

இப்புறம் மூன்று அக்கிரஹாரங்கள். கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் ஹென்றி அண்டு உல்சி ரொட்டிக்கடை அருகில் முதல் அக்கிரஹாரம் துவங்கிவிடும். ஒரு காலத்தில் அங்கே மாத்வ பிராமணர்கள் (ராவ்ஜிக்கள்) வாழ்ந்த இடம். இரண்டாவது அக்கிரஹாரம் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் அருகில் துவங்கி ஆத்தூர் திருப்பம் வரை. அங்கே பெரும்பாலும் ஸ்மார்த்த பிராமணர்கள்(ஐயர்) வசித்துள்ளனர். அதற்கடுத்து செளராஷ்டிரா தெருவரை இருப்பது மூன்றாவது அக்கிரஹாரம். அதில் வைஷ்ணவர்கள் (அய்யங்கார்) வசித்துள்ளனர். அவன் இர‌ண்டாவது அக்கிரஹாரத்தில் பிறந்து வளர்ந்தபோதே அக்கிரஹாரத்தில் பல சாதியினரும் வீடுகள் வாங்கிக் கொண்டோ, வாடகைக்கோ வந்து குடியேறிவிட்டனர்.

பள்ளிக்கூடம் மறவன் ஏரி அருகில் அமைந்து இருந்தது. ஏரிக்குப்பெயர் கொடுத்த மறவன் யார்? அவருடைய சிறப்புக்கள் என்ன என்பது ஆராய வேண்டிய ஒன்று.

தஞ்சை மாவட்டத்தில் எங்கு சென்றாலும் ஐயன் வாய்க்கால், ஐயன் குளம், ஐயன் படித்துறை,ஐயன் பொதுக்கிணறு என்று பெயர் காதில் படும் அந்த ஐயன் கோவிந்த தீட்சதர் என்ற மகான். நாயக்க மன்னர்களின் பிரதம அமைச்சராகப் பதவி வகிததவர்.

அதுபோல மறவனேரிக்குப்பெயர் கொடுத்த வீர மறவர் யார்? தெரியவில்லை.

பள்ளிக்கூடம் ஜானசன் பேட்டைக்கு அருகாமையில் இருந்தது. அக்கிரஹாரத்துப் பையன்கள் பள்ளிக்குச் செல்ல மணிமுத்தாறு குட்டைப் பாலத்தினைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.மழை பெய்தால் பாலத்தின் மீது இடுப்பளவு தண்ணீர் ஓடும்.தடுப்பணை பொங்கி வ‌ழிந்து அருவி போலக் கொட்டும்.அப்போதெல்லாம் ரயில்வே பாலத்தின்மீது ஆற்றைக் கடந்து போக வேண்டும். தூரத்தில் டவுன் ஸ்டேஷனில் 'இதோ கிளம்பிவந்து உன்னை நசுக்குகிறேன் பார்' என்று சவால் விட்டு நிற்கும் தொடர் வண்டியைப் பார்த்துக் கொண்டே பாலத்தின் மீது தடத‌டவென்று மகாப் பெரிய புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். உயிர்வதை என்பது என்ன வென்று அப்போது புரியும்.

அந்தப் பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு அக்கிரஹாரத்தையும் ஜான்சன் பேட்டையையுமே நம்பி இருந்தது. மற்ற இடைநிலை சாதி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே சேருவார்கள்.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது. அவனும் போராட்ட்த்தில் கலந்து கொண்டான்."தமிழ் தாய், இந்தி நாய்" "தமிழ் தாய், இந்தி பேய்"என்ற வாசகங்கள் அவனுடைய பேனாவின் மசியால்தான் எழுதப்பட்டது. அது பின்னர் தமிழகம் எங்கும் பரவியது. பல நாட்கள்,வாரங்கள் பள்ளி கல்லூரிகள் மூடிக் கிடந்தும்,எந்த ஒரு முடிவும் வரவில்லை.

ஒரு நாள் காலைப் பத்திரிகையில், போராட்டக்காரரகள் திருப்பூரில் (ஈரோட்டிலோ?) ஒரு உதவிப்போலீசு அதிகாரியை வண்டிச் சக்கரத்தில்  கட்டி தீயிட்டுக்கொளுத்திய கொடூரச் செயல் வெளியானது. அவர் மூளை மழுங்கிய போராட்டக் கும்பல்காரார்களிடம் தனியாக மாட்டிக் கொண்டார். வண்டிச் சக்கரத்தில் அவரைக் கட்டி, சக்கரத்தை உருட்டி விளையாடியது கூட்டம். அவர் தண்ணீர், தண்ணீர் என்று கதறிய போது வாயில் பெட்ரோல் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்டார். 

அரசு தன் பிடியை இறுக்கத் துவங்கியது.

போராட்டம் மாணவர்கள் கையில் இருந்து ச‌மூக விரோதிகளிடம் போய்விட்டது என்பதை நன்றாகவே உணரமுடிந்தது.

அவன் போராட்டத்திலிருந்து விலக முடிவு செய்தான். காரணங்களை எழுதிச் சமர்ப்பித்து விட்டு விடுபட விரும்பினான்.ஆனால் யாரிடம்  சமர்பிப்ப‌து?  தலைமையே இல்லாமல் இயக்கம் பாதை மாறிப் போவது நன்றாகத் தெரிந்தது.

அந்த சமயத்தில் தனி ஆளாகப் பள்ளியில் எல்லோர் முன்னிலையிலும் போராட்டத்தை நிறுத்தக் கூறியவாறு வகுப்புக்குத் திரும்பினான்.

முதலில் அவனுக்கு ஜான்சன் பேட்டை ஆதரவு அளித்தது.

அவர்களில் மூத்த மாணவன் ஒரு 10 இளையவர்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.

"ஆமாண்டா! எவனோ போலீசக் கொளுத்த‌றான். நாம கைது கிய்துன்னு அவஸ்தைப் படணுமா? இந்தக் கொடுமைக்கு இந்திக் கொடுமையே தேவலாம்டா"

மறு நாள் பள்ளிக்கு வந்த மாணவர் எண்ணிக்கை கூடியது. தமிழகம் முழுவதும் இதே போல மாணவர்கள் போராட்டத்தைப் புறக்கணிப்பது செய்தியாக வரத் துவங்கியது.போராட்டம் பிசு பிசுத்தது.

அந்தப் பள்ளியில் மைனாரிடிகளான இடைநிலை சாதி மாணவர்களுக்கும், அக்கிரஹார மாணவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் துவங்கியது. ஒரு சில ஜானசன் பேட்டை மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

அப்போது 'அவனு'க்குக் கொடுக்கப்பட்ட பட்டப் பெயர்தான் 'விஷப்பூச்சி'

பள்ளியில் நுழைந்தவுடன் எந்த‌ ஒரு மூலையில் இருந்தாவது 'விஷப்பூச்சி’ வருது உஷார்!' என்று குரல் கேட்கும். அவன் அதையெல்லாம் பெரிது படுத்தமாட்டான்.

சரவணன் என்பவன் பள்ளிக்குப் புதியவன். பள்ளி ஆண்டின் நடுவில்தான் வேறு ஊரில் இருந்து வந்து சேர்ந்தான்.

சரவணனின் தந்தை மாவட்டக் கல்வி அதிகாரி. அவரே தன் அலுவல‌க ஜீப்பில் சரவணனுடன் வந்து இறங்கி, ஆகஸ்டு மாதம் முடிந்து சேர்க்கை அறிக்கை கல்வித்துறைக்கு அனுப்பிய பின்னர், விதிகளைத் தளர்த்தி சரவணனைச் சேர்த்து விட்டார். மீண்டும் சரவணன் பெயரையும் சேர்த்துப் புதிய அறிக்கை, 'சப்பிளிமென்டரி' அறிக்கை, அனுப்பப் ப‌ட்டதாம்.

படிப்பில் ஞானசூன்யம் என்பது ஒருசில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. பலரும் பேச்சுக் கொடுத்து சரவணன் ஒவ்வொரு வகுப்பிலும் பல ஆண்டுகள் இருந்து நல்ல உறுதியான அஸ்திவாரத்துடன் வந்துள்ளதை அவனிடம் வந்து சொன்னார்கள்.

சரவணனோ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அரசியல், ஆட்சி அதிகாரங்களை அடைவதில் கவனம் செலுத்திய அரசியல், குடும்பப் பின்னணியில் வந்தவன்.

அவனோ காந்திய வழியில் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட குடும்பத்தில் வந்தவன்.

முதல்நாளே அவனுக்கும், சரவணனுக்கும் முட்டிக் கொண்டு விட்டது.

கண‌க்கு நோட்டை அவனிடம் கேட்காமலேயே எடுத்து காப்பி பண்ணத் துவங்கினான் சரவணன. தட்டிக் கேட்ட அவனுக்கு முறைப்புத்தான் பதிலாகக் கிடைத்தது.

"நான் யார் தெரியுமில்ல? எங்க‌ அப்பா என்ன போஸ்டு தெரியுமில்ல?.. ஆமா..யாராவது வாலை ஆட்டினா நடக்கிறதே வேற..எவ்வளவு நல்லா படிச்சாலும் எஸ் எஸ் எல் ஸி மார்க் புக்கு எங்க அப்பாவைத் தாண்டித் தாண்டி வரணும்.. அதை நியாபகத்தில் வையுங்கடா கூமுட்டைகளா.."

இதெல்லாம் அக்கிரஹார மாணவர் மத்தியில் ஒரு பயத்தைக்கொடுத்தது. கோபத்தையும் வளர்த்தது. ஆனால் அதை எப்படிச் சொல்வது என்றுதான் தெரியவில்லை.ஆசிரியர்கள் 10க்கு 6 அக்கிரஹாரத்தைச் சார்ந்தவர்களே. அவர்களிடம் சொன்னால் "மோதாதே. மோதினால் அதிகாரி எங்கள் பிழைப்பில் கை வைத்து விடுவான். கிரான்டில் கை வைத்தால் எஙக பிழைப்பு நாறிடும்.ஆகவே பொறுமை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு.."

இந்தப் பின்னணியில்தான் சரவணன் அவனிடம் உதை வாங்கியது.
===========================
தலைமை ஆசிரியர் அறை வாசலில் அவனை நிறுத்திவிட்டு, என் எஸ் சார் உள்ளே சென்று 10 நிமிடம் சென்று அவன் அழைக்கப்பட்டான்.

"சரவண‌னைக் காலால் உதைத்தாயா?"

"ஆமாம்"

"அவன் யார் என்று தெரியுமல்லவா?"

"தெரியும்"

"நீ செய்த செயலால் நமது மொத்தப் பள்ளியுமே கஷ்டப்படப் போகிறது. உன்னை சஸ்பெண்ட் பண்ணுகிறேன்."

"தேங்ஸ் சார்!"

விறு விறு என்று வெளியேறி வகுப்புக்குச் சென்று தன் பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியேறினான்.

'என்னடா, என்னாடா நடந்தது?' என்று அவன் பின்னால் ஓடி வந்து மறித்த மாண்வர்களை மீறிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவன் அப்பாவும் தலைமை ஆசிரியரும் நல்ல நண்பர்கள். அவன் செயலால் த‌னக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்தினை அப்பாவிடம் அவர் சொன்னார். அப்பா அதனைச் சரியான கோண‌த்தில் புரிந்து கொண்டார். இறுதித் தேர்வு எழுத அனுமதிப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை என்றும் தலைமை ஆசிரியர் சொன்னாராம்

இரண்டாவது மாடல் டெஸ்டு நடக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. மேலும் இரண்டு மாதிரித் தேர்வுகளுக்கு சஸ்பென்ஷன் காரணத்தால் அவன் போகவில்லை. போயிருந்தால் அவன் மாவட்ட அளவிலாவது முதல் மார்க் வாங்கியிருப்பான். இப்போது அவன் மார்க் 404/600 என்ற அளவில் முடங்கியது. அக்காலத்தில்  400 தாண்டுவதே பெரிய வெற்றிதான்.

அந்த அவன் அடியேன்தான் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே.முத்துரமகிருஷ்ணன் (லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

என்ன நடந்தது லிமோ காரில்?

S. சபரி நாராயணன், சென்னை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது
A limousine (or limo) is a luxury sedan or saloon car, especially one with a lengthened wheelbase or driven by a chauffeur. Few stretch limousines are sold new to private individuals. In addition to luxuries, security features such as armoring and bulletproof glass are available. மேலே படத்தில் உள்ளதுதான் லிமோ கார்.
-----------------------------------------------------------------------------------
என்ன நடந்தது லிமோ காரில்?

அதிக தூரம் பயணிக்க இருந்த போப்பாண்டவரின் உடைமைகளை (luggage) லிமோ காரில் ஏற்றிய ஓட்டுனர், அப்போதுதான் கவனித்தார், போப்பாண்டவர் காரின் முன் கதவருகே இன்னும் நின்று கொண்டிருந்தார்.

பதறி அடித்து ஓடிவந்த ஓட்டுனர், “மன்னிக்க வேண்டும் புனிதரே! உங்கள் சீட்டில் நீங்கள் அமர்ந்தால், நாம் புறப்படலாம்”

“ஒரு உண்மையைச் சொல்கிறேன். கார் ஓட்டுவது என்றால், எனக்குக் கொள்ளை பிரியம். நன்றாகவும் ஓட்டுவேன். ஆனால் என் பதவி கருதி கடந்த பத்தாண்டுகளாக என்னை யாரும் விடுவதில்லை. அதனால் இன்று காரை நானே ஓட்டுவதாக உள்ளேன்.

“மன்னிக்கவும் புனிதரே, உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அல்லது நீங்கள் வாகனம் ஓட்டியது தெரிந்தால், என் உத்தியோகத்தைக் காலி செய்து விடுவார்கள்.”

“கவலைப் படாதே, அதை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே அவனிடம் சாவியை வாங்கிய போப்பாண்டவர் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து விட்டார்.

வேறு வழியில்லாமல் ஓட்டுனர் ஏறி பின் இருக்கையில், அதாவது போப்பாண்டவர் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

வண்டி கிளம்பியது. சற்று தூரம் சென்று வண்டி நெடுஞ்சாலையை அடைந்த பிறகுதான் அது நடந்தது. ஓட்டுனரின் முகத்தில் வருத்தமும் பயமும் ஒரு சேரவந்து குடிகொண்டது.

வண்டியை 200 கிலோ மீட்டர் வேகத்தில் போப்பாண்டவர் ஓட்டத் துவங்கினார்

ஓட்டுனர் சற்றுப் பதறி, “ஐயா புனிதமானவரே.....இத்தனை வேகம் வேண்டாம். மெதுவாகச் செல்லுங்கள். 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லவே கூடாது.

போப்பாண்டவர், அவனுடைய பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தொடந்து அதே வேகத்திலேயே சென்று கொண்டிருந்தார்.

அதீத சங்கு ஒலியுடன் ஒரு காவல்துறை வாகனம் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தவுடன், போப்பாண்டவர் வண்டியின் வேகத்தை உடனே குறைத்து, சற்று தூரம் சென்று வண்டியை நிறுத்தினார்.

“கடவுளே, இன்று என் ஓட்டுனர் உரிமமும் உத்தியோகமும் ஒன்றாகக் காலியாகப் போகிறது.” என்று ஓட்டுனர் தன் மனதிற்குள் பதைபதைத்தார்.

அருகே வந்த போலீஸ்காரர், ஓட்டுனரையும் வண்டிக்குள் அமர்ந்திருப்பவரையும் ஒருமூறை பார்த்துவிட்டு, அருகில் நின்று கொண்டிருந்த தனது மோட்டார் சைக்கிளிற்குச் சென்று, ஓயர்லெஸ் கருவியின் மூலம் தனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். எடுத்த ஆப்பரேட்டரிடம், தலைமை அதிகாரிக்கு (Police Chief) இணைப்புக் கொடுக்கச் சொன்னார்.

கொடுக்கப் பெற்றது.

“அய்யா, இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த வாகனத்தைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்.”

“ஆசாமியை, இங்கே பிடித்துக் கொண்டு வா!”

“நாம் அப்படிச் செய்ய முடியாது அய்யா! அவர் மிகவும் முக்கியமானவர்”

“என்ன சொல்கிறாய் நீ?”

போலீஸ்காரரின் குரலில் சற்று நடுக்கம் தெரிந்தது. “உண்மையைத்தான் சொல்கிறேன். அவர் நம் அனைவருக்கும் அதி முக்கியமானவர்!

“யார் மேயரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“அமைச்சரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“செனேட் அவை உறுப்பினரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“பிரதமாரா?”
“அவரையும் விடப் பெரியவர்!”

“யாரய்யா, சொல்லித்தொலை!”

“கடவுள் என்று தோன்றுகிறது”

“எதை வைத்துச் சொல்கிறாய்?”

“போப் ஆண்டவரே டிரைவர் சீட்டில் ஆமர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டி ருக்கிறார்!”
--------------------------------
அனுப்பியது: S. சபரி நாராயணன், சென்னை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 4
  காணொளி
திருப்பாவைப் பாசுரங்கள் மூன்று. அனுப்பி வைத்தவர்   “கண்ணா 79 ”


--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

32 comments:

  1. பின்னால் வரும் உதை விட்ட கதைக்குத் தோதாகக் கழுதையை சுமந்து செல்லும் புகைப்படம் எதேச்சையாக அமைந்ததா? அல்லது வாத்தியாரின் subtle joke?

    படத்தைவிட கீழே காணும் வாசகம்தான் நல்ல ஜோக்!நம்மூரில் பெரும்பாலும் கழுத்து வெட்ட ஆடுகளைத்தான் இப்படி எடுத்துச் செல்வார்கள். சிலசமயம் வாய் கட்டப்பட்ட பன்றி.கழுதையை எடுத்துச் செல்வது அதிசயம்தான்.

    எவ்வளவுதான் எந்திரங்கள், லாரிகள்,டிராக்டர்கள் வந்தாலும், இன்றளவும் மாடுகள், மட்டக் குதிரைகள்,கழுதைகள் நாட்டுக்கு ஆற்றிவரும் பணிகள் குறைத்து மதிப்பிட முடியாது.அவ‌ற்றின் பொருளாதார மதிப்பை கணக்கிட்டால் பல்லாயிரம் கோடி தாண்டும்.

    அந்த மங்கோலிய முகமுடைய குழந்தையின் சுளிக்கும் முகம் சூப்பர். அதற்கு மைனரைத் தெரியும். சும்மா பொய் சொல்கிறது. முன்னால் வந்த மைனரைப் பார்த்து விட்டுத்தான் அப்படி முகம் சுளிக்கிறது என்கிறேன் நான். என் கருத்துக்கு எவ்வளவு பேர் ஓட்டுப் போடுகிறீர்கள் பார்ப்போம்?

    என் வாழ்கைக் கதையில் ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி அய்யா.இது ஒரு வேளை பதிவிடப்படாமல் போகலாம் என்று எண்ணினேன்.என் எண்ணம் சரியல்ல என்று புரிந்து கொண்டேன்.

    புருனை மன்னரின் கவிதை நன்றாக உள்ளது.மார்க்கசீருசம் என்ற இந்த மாதத்தின் குளுமையை அவரது கவிதை அளிக்கிறது.

    சபரியின் தமாஷும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. இதைப்போல தழுவி, சொந்தக் கற்பனை சேர்த்து எழுதலாம். மொழி பெயர்ப்பு வரை வந்து விட்டார்.
    சொந்த ஆக்கம் கைக்கு எட்டும் தூரம்தான்.

    திருப்பாவைக் காணொளி அருமை.

    ReplyDelete
  2. மிகவும் தாமதமாகவே வகுப்புக்கு வந்தேன்.கடந்த ஒரு வாரமாகவே வேலை கொஞ்சம் அதிகம் .வகுப்புக்கு வந்தோமா, எட்டி பார்த்தோமா, போனோமா, என்றே இருந்தேன்.இன்று கூட மாணவர் மலரை எதிர் பார்த்தே வந்தேன்.வந்த இடத்தில திரு மகளின் மனம் திறந்த மடல்.

    பொதுவாக என் போன்றோர்
    வீட்டைப் பற்றியும்-பண
    நோட்டை பற்றியும்-ஜாதக
    கட்டை பற்றியும் -எழுதும்
    பாட்டை பற்றியும் கருத்தாய் இருப்போம் . இவர் மேன்மாயானவர் நாட்டை பற்றி கவலைப் பட்டு எழுதி உள்ளார்.நல்ல சிந்தனை நல்ல எண்ணம் . வாத்தியாரும் ஆராய போவது இன்னும் சந்தோஷமே .

    அனைத்திற்கும் மேலாக மறைந்திருந்த இந்த நல் என்ன சித்தனை வெளியாக்கிய இத்தனை பின்னூட்டங்களை பார்த்தபோது அனைவரின் அடி மனதிலும் இதே சிந்தனை இருந்திருக்கிறது.
    அதை வெளியாக்கிய
    கலைமகளே நீ வாழி.

    ReplyDelete
  3. ஐயா, இன்றைய படங்களும் அதற்கு நீங்கள் எழுதிய வாசகங்களும் நல்ல சிரிப்பை வர வழைத்தது. அதிலும் "மைனரை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பமாடீர்களா? ச்சே!" என்று சொல்லும் பாப்பா ஹி. ஹி. ஹீ ... இவள் தேரமாட்டாள் போலிருக்கிறதே நம் மைனரைப் போய் தெரியவில்லை என்றால் எப்படி?

    "சில்லென்று ஒரு பாடல்" மார்கழியைத் துவக்க அளித்துள்ளார் தனுசு. நன்றி. படமும் பார்க்க சில்லேன்றுதான் இருக்கிறது. நன்றி ஐயா.

    நான் பள்ளி நாட்களில் (இஞ்சின் இணைப்பு இன்றி) நிறுத்தப் பட்டுள்ள சரக்கு ரயில்களின் அடியே குனிந்து, பிளாட்பாரத்தில் ஏறிக் குதித்து, குறுக்கு வழியாக செல்பவர்கள் மற்றவர்களுக்காக வசதியாக பிரித்து வைத்த தடுப்பு சட்டங்களற்ற வேலிகளின் ஓட்டை வழியாக நுழைந்ததெல்லாம் குறுக்கு வழியாக பள்ளியை விரைவில் அடைய தினமும் சென்றுள்ளேன். KMRK ஐயா அந்த நாட்களை நினைவு படுத்துகிறார். என்ன ஒரு வித்தியாசம் நான் பள்ளி சென்ற நாட்களில் மாணவிகளான எங்களிடையே, ஜாதி, மத, இன, மொழி பிரச்சனைகள் இன்றி, அடாவடி மாணவமணிகள் இன்றி நன்றகவே கள்ளமற்ற பள்ளிப் பருவ நாட்கள் கழிந்தது. இனிமையான பேதமட்ற நாட்களுக்கு யாருக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

    சபரியின் தகவலை ஆசிரியர் அவர் நடையில் விவரித்துள்ளது நன்றாகவுள்ளது. ஆனால் போப் சட்டத்தை மீறியதும் ... உதவி செய்த ஓட்டுனரை இக்கட்டில் மாட்டி விட்டதும் வருத்தம். என்ன இருந்தாலும் போப்பும் மனிதர்தானே..( ஐயா யார் மனதாவது இந்த வாக்கியத்தால் வருத்தப்படும் என்று கருதினால் தயவு செய்து நீக்கிவிடவும்).

    திருப்பாவை பாசுரங்களை தேடிப் பிடித்து அனுப்பிய “கண்ணா 79" விற்கு நன்றி

    ReplyDelete
  4. அம்மா சாயலில் குழந்தை இருப்பதனாலே
    'மைனரை சுத்தமாத் தெரியாது'ன்னு சொல்றதுலே கொஞ்சம் அர்த்தம் இருக்கத்தான் செய்யுது..

    ReplyDelete
  5. முத்து கிருஷ்ணன் ஐயா !
    உங்கள் காலத்தில் பள்ளியில் அதிகாரிகளின் அதிகாரம்..
    நான் கல்லூரியில் internal mark இல்லாமல் external 75 க்கு 59 எடுத்து
    internal இல்லாமல் அதிகாரத்தால் முட்டாள் முத்திரை பட்டம் வாங்கியதை
    நினைத்து, நீங்களுமா என்று வியந்தேன்!

    ***********
    கலை மகளுக்கே கோபம்!
    எழுத்தை கலையாக கவலையாக
    வெடித்திருக்கிறார் !

    மகளே !
    நியாயம் அல்லாதது அநியாயம்தான் !
    அநியாயம் அல்லாதது எல்லாம் நியாயமில்லை!

    ReplyDelete
  6. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்கிறது அந்த ஜப்பானியக் குழந்தை. நம்மைப் போல குழந்தைகளை அவரவர் இஷ்டத்துக்கு விட்டுவிட்டு பொது இடங்களைப் பாழடிக்காத பண்பட்ட குழந்தைகள் அது எதற்கு அப்படி மைனரைத் தெரியாது என்று முகம் சுளிக்க வேண்டும். உலகம் முழுவதும் குழந்தைகள் இறைவனின் வடிவங்கள்தான். நேற்று கருப்பு குழந்தைகள், இன்று மஞ்சள் குழந்தை. நல்ல வளமான கற்பனையோடு கூடிய புகைப்படம். புருனெய் தனுசுவின் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டு வருகின்றன. அவர் தமிழகம் திரும்பும்போது திரைப்பட இசையுலகம் இவர் பக்கம் திரும்பலாம் ஒரு நல்ல பாடலாசிரியர் கிடைத்துவிட்டார் என்று. பார்ப்போம் பல தடவைகளில் என் வாக்கு பலித்திருக்கிறது. கே.எம்.ஆர்.கதையை நிதானமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன். அதில் தோண்டித் துருவி ஏதாவது கண்டுபிடித்தாக வேண்டும்.

    ReplyDelete
  7. பொதுவாக சுய புராணம் போரடிக்கும்..ஆனால் KMRK வகையில் அப்படி இல்லை..
    'அவன்' உதை வாங்கிய காரணம்தான் இன்னும் புரியவில்லை..

    ஆனால் ராவ்ஜிதான் 'மத்வ'ன்னும், அய்யர்தான் 'ஸ்மார்ட்'ன்னும்,
    கிறித்துவ மதத்தினைத் த‌ழுவியவரில் பெரும்பான்மை தலித் சமூகத்தவர்ன்னும்,
    தடம் புரண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டப் பூனைக்கு மணி கட்டியது யாரென்றும்,
    'வாத்தியார் பிள்ளை மக்கு' ன்னும்
    'விஷப் பூச்சி' சொல்ல வந்த விஷயங்கள் கொஞ்சம் புரிஞ்சது..

    'விஷப் பூச்சி' ன்னு பேரு சரியாத்தான் வெச்சுருக்காங்கன்னு தெளிவாவே புரிஞ்சது..

    ReplyDelete
  8. தனுசுவின் மார்கழித் திங்கள் பற்றிய கவிதை அருமை..

    அதிலே இளந்தென்றல் 'அலைங்காலம்' என்று குறிப்பிடப்படுவது மாலை நேரத்தைப் பற்றி என்று பொருள்கொண்டேன்..சரியா என்றுதான் புரியவில்லை..

    'மாலைநேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு' என்று பொதுவாகத் தென்றல் மாலையிலே வீசும் என்பதால் இப்படிப் பொருள்கொண்டேன்..

    கவிஞர்தான் விளக்கம் சொல்லவேண்டும்..

    இதுக்குத்தான் கவிதா கிட்டே போறதில்லே..

    ReplyDelete
  9. 'கேப்' ல போப் காரோட்டிய கதை விறுவிறுப்பு..

    வேகம் பிடித்து ஆக்ஸி'டென்ட்'டில் விடாமல் இத்தோடு விட்டாரே..

    ஒஹ்..ஜீசஸ்..

    ReplyDelete
  10. கே.எம்.ஆரின் பள்ளிக்கூட நிகழ்வு ரசிக்கத்தக்கதாக இருந்தது. அப்போது அது அவருக்குக் கடுமையான தண்டனையாக இருந்திருக்கலாம். இந்தி எதிர்ப்புப் போர் நிகழ்ச்சிகள் எனக்குப் பசுமையாக இருக்கின்றன. திருப்பூரில் ஒரு டி.எஸ்.பி. பாறவண்டியில் கட்டிவைக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் இன்னமும் பசுமையாக உள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட எங்கள் அலுவலக கட்டடத்தில் நாங்கள் ஏழுபேர் மட்டும் வேலை செய்துகொண்டிருந்த சமயம் சுமார் பதினைந்து முதல் இருபதுக்குள் வயதிருக்கும் சிறுவர்கள் சுமார் இருநூறுபேர் அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்களைக் கல்லெறிந்து அடித்து நொறுக்கிவிட்டு பெட்ரோலை உள்ளே ஊற்றி தீவைத்து ஆவணங்களெல்லாம் பற்றி எரிய நாங்கள் உள்ளே தாழ்போட்டிருந்தும், வாயில்புற கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சிலர் கேஷ் புக் அனைத்தையும் எடுத்து தீவைத்துக் கொளுத்தி, மேலே மாட்டியிருந்த காந்திஜி படத்தைத் தடிகொண்டு அடித்து நொறுக்கியதும், அப்போது ஒரு போலீஸ் ஜீப் வந்ததும் அத்தனை பேரும் ஓடிவிட உள்ளே நுழந்த ஒரு ஆள் மட்டும் கவுண்டரின் உட்பகுதியில் மறைந்து கொண்டு நான் இருப்பதை போலீசுக்குச் சொல்லாதீர்கள் என்று கையெடுத்துக் கும்பிட்ட காட்சியும் என் மனதில் நிழலாடுகிறது. வந்த போலீஸ் எங்களிடம் போதுமான காவலர்கள் இல்லை, எப்படியாவது சமாளித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். பற்றி எரிந்த நெருப்பை அணைத்துவிட்டுத் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு சென்ற ஷேக் தாவூத் எனும் எங்கள் அலுவலகப் பையனை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதும் நினைவுக்கு வருகிறது. பல காலம் சிகிச்சைக்குப் பின் தாவூத் உயிர் பிழைத்து மீண்டும் வேலைக்கு வந்தான். விஷப்பூச்சி இதில் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  11. இல்லாள் இந்தியப் பயணம் - அதனால்
    கொஞ்சம் வந்தது துயரம் -நல்லாள்
    அவள் இங்கு இல்லாள், அதனால்
    நளபாகமும் ஏற்ற மையால் -இடை
    இடையையே வந்து போகிறேன்
    இடைவெளியது இல்லாது போகவே...!

    இனிது இனிது கவிதை இனிது
    இனிதான இளமைப் பருவக்
    கதையும் இனிது, அதனோடி துவுமினிது
    'போப்வர்தம் பவரும் போலீசின் ஸிவரும்'
    அனைத்திலும் இனிது, என்றுமி னிதான
    திருப்பாவையின் அமுத சுரங்களே...!

    பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  12. நான் ஒரு குழந்தை
    தவழ்ந்த நிலை தாண்டி
    தளிர்நடை போட
    தத்தளித்து துள்ளும் கைக்குழந்தை.

    அஹா அப்படியேவா என ஆசானும்
    அடுத்த அடிவைத்து வா என அய்யாவும்
    அழைக்கும் அழைப்பில்
    அவர்களின் அன்பை பார்கிறேன்.

    சென்ற வாரம் தேமொழி said...புத்தகமாக போடலாமே என்று உசுப்பி விட்டார்கள்
    இன்று
    அய்யா Thanjavooraan said..
    அவர்கள் புருனெய் தனுசுவின் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டு வருகின்றன. அவர் தமிழகம் திரும்பும்போது திரைப்பட இசையுலகம் இவர் பக்கம் திரும்பலாம் ஒரு நல்ல பாடலாசிரியர் கிடைத்துவிட்டார் பார்ப்போம் பல தடவைகளில்
    என்வாக்குபலித்திருக்கிறது.

    பாராட்டுகளை தலை வணங்கி ஏற்று கொள்கிறேன்.புத்தக உலகமும் சரி திரை உலகமும் சரி ஓட்டபந்தய வீரர்கள் நிரம்பிய உலகம். நான் நடை பயிலும் மழலை. ஓட்டபந்தய வீரர்களுடன் ஓட முடியுமா.

    வாரம் ஒரு கவிதை எழுதவே நேரம் இல்லை. சமயத்தில் வகுப்பற பக்கம் எட்டி பார்க்கவே நேரம் இருக்காது.management meeting-staff meeting-site visit என்று ஆலாய் பறக்கும் நேரத்தில் நான் என்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொள்ள வந்து சேர்ந்த இடம் தான் வகுப்பறை. இப்போது அது என்னை கட்டி போட்டுவிட்டது. வகுப்பறையும் இதன் மூலம் கிடைத்த பாரதி பயிலகமும் தான் நான் தியானம் செய்யும் இடமாக மாறி விட்டது.

    தினமும் 1 மணி நேரம் நடக்க செல்வேன் அந்த நேரத்தில் தான் கவிதையை பற்றி சிந்திப்பேன்.இப்போது மற்றவைக்காக உள்ள நேரங்களிளிருந்து கொஞ்சம் திருடி 90 நிமிடங்களாக எழுதுவதற்காக உயர்த்தி கொண்டேன்.

    மதிப்பிற்குரிய
    KMRK அவர்களும்
    மைனர் சார் அவர்களும் என்னை பாராட்ட மறந்ததே இல்லை.

    எனது கவிதையை ரசிக்கும் அனைவரும் அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. kmrk அவர்களே மைனர் செய்தியில் நான் உங்கள் பக்கம் தான். நான் என்ன நினைக்கிறன் என்றால் மைனரின் முகத்தை பார்த்ததால் தான் ஜப்பானிய குழந்தை புளிப்பை சாப்பிட்டதைப்போல் சுருக்குகிறது என்று நினைக்கிறன்.

    ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி விரிவாகவும் ஒரு வாரம் எழுதுகளேன். பின்னாளில் வந்த என் போன்றோருக்கு அதை பற்றி முழுமையாக தெரிய வரும்.

    ReplyDelete
  14. minorwall said...அதிலே இளந்தென்றல் 'அலைங்காலம்' என்று குறிப்பிடப்படுவது மாலை நேரத்தைப் பற்றி என்று பொருள்கொண்டேன்..சரியா என்றுதான் புரியவில்லை..
    'மாலைநேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு' என்று பொதுவாகத் தென்றல் மாலையிலே வீசும் என்பதால் இப்படிப் பொருள்கொண்டேன்..

    கவிஞர்தான் விளக்கம் சொல்லவேண்டும்..

    நான் அந்த காலத்தை குறிப்பிடவில்லை. மாலை நேரம் இதமானது. அதனுடன் தென்றலும் சேர்ந்தால் இன்னும் சுகமானது, அந்த குறிப்பிட்ட காலத்தை மார்கழிக்கு உவமையாக சொல்கிறேன்

    ReplyDelete
  15. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
    பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
    வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
    காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.

    கேளிர்(நண்பர்,உறவினர்), கேளலார்(நட்பு,உறவு இல்லாதவர்), நாடு, மொழி நன்னெறி, உயர்வு, தாழ்வு, வறுமை, செல்வம், இளமை, முதுமை முதலிய எவ்வகை வேறுபாடுமின்றி உடலினுக்கு உணவும் உயிரினுக்கு உணர்வும் வேண்டினார்க்கு ஈதல் உடையோர் கடனாகும். தக்காராய் வந்தார் யாவர்கட்கும் மிக்கவுவகையோடு இலனென்னும் எவ்வம் உரையாவகையாய்க் குறிப்பறிந்து இடுங்கள். அவர் இவர் என்று எவ்வகை வேறுபாடும் கூறாதீர்கள். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள்.

    யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
    யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
    யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
    யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.

    எல்லாராலும் பசுக்களுக்கு வாயுறையாகிய புல் முதலியன கொடுத்தல் இயலும். இவ்வாயுறை கொடுப்பதன்கண் இருவேறு தொண்டுகள் அடங்கியுள்ளன. ஒன்று நந்தவனத்துக்குக் களையெடுத்தல். மற்றொன்று பசுவினுக்குப் புற்கொடுத்தல். அதுபோல் யாவர்களாலும் உண்ணும்போது ஒரு கைப்பிடி யுணவு உவகையுடன் பிறர்க்குக் கொடுத்தல் இனிதின் இயலும். இது அறத்தின் கூறாகும்.

    ==================================================திருமந்திரம்
    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர்.

    இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, நாடோறும் உம்மால் முடிந்த அளவு பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்;

    ==================================================நாலடியார்
    நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
    பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்
    அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
    வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று.

    (பதவுரை) நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு-நொய்யாற் சமைத்த கூழினை வயிறார வுண்டு, பிறங்கு இருகோட்டொடு பன்றியும் வாழும்-விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும், அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை-ஆதலால் அறத்தினைச் செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும், மற்றெல்லாம்-அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம், வெறும் பேழை தாழ்க்கொளீஇயற்று-தன்னகத்தொன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டிவைத்தல் போலாம்.

    ===================================================அறநெறிச்சாரம்

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    எத்தனை நாள் தான் கழுதை சுமை தூக்கும்...இன்று அவர்களுடைய முறை போலும்!பாவம் அந்த குழந்தையை இப்படி சொல்லி பயமுறுத்திருக்கக் கூடாது...குழ‌ந்தை ரொம்ப‌ "cute".

    ReplyDelete
  17. ஒவ்வொருவரின் இனிமையான காலம் நிச்சயமாக பள்ளி வாழ்க்கையாகத் தான் இருக்கும்...எனக்கும் அப்படி தான்,மீண்டும் பள்ளி வாழ்க்கை கிடைக்காதா என்று நானும் என் தோழிகளும் இன்று வரை எங்கள் பசுமையான நாட்களை எண்ணி புலம்பிக் கொண்டேயிருப்போம்...அதை மீண்டும் நினைவுபடுத்தும் அருமையான ஆக்கம்...நான் மிகவும் ரசித்து படித்தேன்...நன்றி kmrk ஐயா.
    எனக்கு இந்தி மொழி மிகவும் பிடிக்கும்...எனக்கு ஓரளவு எழுத,படிக்க தெரிந்தாலும் சரளமாக பேச வராது...காரணம் 3 ஆண்டுகள் எங்கள் பள்ளியில் மூன்றாம் மொழி விருப்பப் பாடமாக இந்தி மொழியை படித்தது தான்...அன்னிய மொழி ஆங்கிலத்தை விட நம் நாட்டு ஆரிய மொழி ஒன்றும் குறைந்த மொழி அல்லவே?பின்பு எதற்கு இவ்வாறு போராட்டங்கள் நடந்தன என்று புரியவில்லை...எது எப்படியோ இனியும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்தால் சரிதான்...

    ReplyDelete
  18. மார்கழி மாத கவிதை "பசுமை"...மார்கழியின் அழகை மேலும் மெருகேற்றிவிட்டது தனூர் ராசிக்காரன் அவர்க‌ள‌து க‌விதை...என‌க்கும் மார்க‌ழி மாத‌ம் தான் மிகவும் பிடிக்கும் மார்க‌ழி ப‌னியுட‌னே வ‌ரும் என் பிற‌ந்த‌நாளால் தான்...
    ச‌ப‌ரி நாராய‌ண‌ன் ஆக்க‌ம் ந‌ன்றாக‌யிருந்த‌து...ஆனால் ச‌ட்ட‌ம் எல்லோருக்கும் ஒன்று தான்,முடிவை யூகிக்க முடிகிறது...
    திருப்பாவை பாசுரம் மொழியாக்கத்துடன் இனிமையாக காணொளி தந்த கண்ணணுக்கு ந‌ன்றிக‌ள்...

    ReplyDelete
  19. மார்கழியில் சொக்கவைக்கும் மகராசி மிகவும் நன்றாக உள்ளது .வாழ்த்துகள்
    csekar2930

    ReplyDelete
  20. ஸ்ரீ ஷோபனாவுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு!

    வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். கழுதையும் ஒரு நாள் மொப்பெட்டில் ஏறும். மொப்பெட்(பழுதானால்)கழுதைமேல் ஏறும்!

    மம்முட்டியான் பேரச் சொன்னா காட்டுப்பூனை கூட பயப்படுமாமே!"காட்டுவழி போற பொண்ணே கவல‌ப்படாதே!காட்டுப்பூனை வழிமறிச்சா கலங்கி நிக்காதே!"

    சின்னக் குழந்தை கிட்டப் போயி மைனர் பேரைச் சொல்லி .....ஹிஹிஹிஹி!

    ReplyDelete
  21. //எனக்கு இந்தி மொழி மிகவும் பிடிக்கும்...எனக்கு ஓரளவு எழுத,படிக்க தெரிந்தாலும் சரளமாக பேச வராது...காரணம் 3 ஆண்டுகள் எங்கள் பள்ளியில் மூன்றாம் மொழி விருப்பப் பாடமாக இந்தி மொழியை படித்தது தான்...அன்னிய மொழி ஆங்கிலத்தை விட நம் நாட்டு ஆரிய மொழி ஒன்றும் குறைந்த மொழி அல்லவே?//

    ஆம். இந்தி அறிந்திருப்பது ஒன்றும் தவறல்ல. எத்தனை மொழி தெரிகிறதோ அத்தனைக்கு நல்லது.ஆங்கிலத்தாலும் நாம் பயன் பெற்றோம். அதுதான் இன்று நம்மை உலகப் பார்வை பார்க்க வைத்த‌து.

    ஆரிய மொழி என்று ஒன்று இல்லை. ஆரியர் என்றால் வீரார்கள், சான்றோர்கள் என்றுதான் பொருள்.ஆரியர் படையெடுப்பு என்பது வெறும் கற்பனைக் கதை.

    ReplyDelete
  22. //பொதுவாக என் போன்றோர்
    வீட்டைப் பற்றியும்-பண
    நோட்டை பற்றியும்-ஜாதக
    கட்டை பற்றியும் -எழுதும்
    பாட்டை பற்றியும் கருத்தாய் இருப்போம் . இவர் மேன்மாயானவர் நாட்டை பற்றி கவலைப் பட்டு எழுதி உள்ளார்//

    இதுவே ஒரு கவிதை போல உள்ளதே!

    வில்லாளன் என்று பெயர் வைத்துக்கொண்டு
    சொல்லாள‌னாக இருக்கிறாரே தனுசு!வாழ்க!

    ReplyDelete
  23. //என்ன ஒரு வித்தியாசம் நான் பள்ளி சென்ற நாட்களில் மாணவிகளான எங்களிடையே, ஜாதி, மத, இன, மொழி பிரச்சனைகள் இன்றி, அடாவடி மாணவமணிகள் இன்றி நன்றகவே கள்ளமற்ற பள்ளிப் பருவ நாட்கள் கழிந்தது.//

    நீங்கள் அடைந்த பள்ளி அனுபவங்கள் எல்லோருக்கும் அமைவது இல்லை, தேமொழி.இன்றளவும் கிராமத்து ஆரம்பப் பள்ளிகளில் அவரவர்களது ஜாதி
    அடையாளங்கள் நன்கு நிறுவப்பட்டே நடக்கின்றது. என் மனைவியார் 26 ஆண்டுகள் கிராமப் பள்ளி தலைமை ஆசிரியையாக‌ மூன்று கிராமங்களில் பணி புரிந்த அனுபவத்தில் இதைச் சொல்லுகிறேன்.

    ReplyDelete
  24. //அதிலும் "மைனரை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பமாடீர்களா? ச்சே!" என்று சொல்லும் பாப்பா ஹி. ஹி. ஹீ ... இவள் தேரமாட்டாள் போலிருக்கிறதே நம் மைனரைப் போய் தெரியவில்லை என்றால் எப்படி?//

    அதானே! அந்தப் பாப்பா பொய் சொல்லுகிறது. மைனரை நினைத்தாலே அவ்வளவு முகச் சுளிப்பு.ஹி ஹிஹிஹி!

    ஒருவேளை டெல்லிக்கார அம்மாவுடைய பழைய படமோ அது?!ஹிஹிஹிஹி!

    ReplyDelete
  25. //'அவன்' உதை வாங்கிய காரணம்தான் இன்னும் புரியவில்லை.. //

    கதையில் தெளிவாகவே இருக்கு. "உன்னால நமது பள்ளி முழுதுமே கஷ்டப்படப் போகிறது" என்று தலைமை ஆசிரியர் சொல்கிறாரே!

    அது பிராமண சேவாசங்கம் துவங்கிய பள்ளி.10 க்கு 6 பேர் அக்கிரஹார ஆசிரியர்கள். கல்வி அதிகாரியோ...?

    "மோதாதே!அதிகாரி கிரான்டில் கைவைத்தால் எங்க பொழைப்பு நாறிடும்.."

    ஆகவே அவனுக்கு ஒரு தண்டனை கொடுத்தாச்சு என்று பள்ளி பதிவு செய்தாக வேண்டிய நிர்பந்தம். அதான் சஸ்பென்ஷன் என்ற உதை.

    ReplyDelete
  26. அனைத்துமே நன்றாக இருக்கிறது. KMRK அவர்கள் தன்னைப் பற்றிதான் சொல்கிறார் என்று எதிர்பார்த்தேன். அதுதான் நடந்தது.

    தனுர்ராசியாரே சூரிய பகவான் தன் சுழற்சியில் தங்கள் ராசியான தனுர் ராசிக்கு வருவதுதான் மார்கழி மாதம். அதையே கவிதையாக வடித்தது அருமை.

    ReplyDelete
  27. //internal இல்லாமல் அதிகாரத்தால் முட்டாள் முத்திரை பட்டம் வாங்கியதை
    நினைத்து, நீங்களுமா என்று வியந்தேன்!//

    ஆம்! நமது கோள்களின் இயக்கத்தால் எவ்வளவுதான் நம்மிடம் அறிவும் திறமையும் இருந்தாலும் அது எடுபடாமல் போக சந்தர்ப்ப சூழல் வந்து நம்மை
    வீழ்த்திவிடும் என்பதே இப் பதிவினை எழுதியதின் நோக்கம்.
    முன்னர் ஒருமுறை நான் எப்படி (பயோகெமிஸ்டிரி) முதுகலை படிக்க இயலாமல் போயிற்று என்பதையும் எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  28. //அம்மா சாயலில் குழந்தை இருப்பதனாலே
    'மைனரை சுத்தமாத் தெரியாது'ன்னு சொல்றதுலே கொஞ்சம் அர்த்தம் இருக்கத்தான் செய்யுது..//

    ஓய்,மைனர்ஜி!நீர் இப்படி பின்னூட்டம் போட்டுள்ளது அவ்விடத்து மிஸஸ் மைனருக்குத் தெரியுமா?

    ReplyDelete
  29. //ஆனால் ராவ்ஜிதான் 'மத்வ'ன்னும், அய்யர்தான் 'ஸ்மார்ட்'ன்னும்,//

    மாத்வர்கள்,ராவ்ஜீக்கள், ம‌த்வாச்சாரியாரின் தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதாவது கடவுளும் நாமும் ஒன்றல்ல; இரண்டு வெவ்வேறு நிலைப்பாடு என்ற
    துவைதக் கருத்தாளர்கள்.

    ஸ்மார்த்தார்கள்(அய்யர்) ஸ்ம்ருதி என்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள்.அத்வைதிகள். கடவுள் தவிர வேறு எதுவமெஏ இங்கே இல்லை.நாமும் அதுவே என்பவர்கள்.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள்(ஐயங்கார்)விஷ்ணுவைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பவர்கள். விஸிஷ்டாத் துவைதம்

    ReplyDelete
  30. ///ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி விரிவாகவும் ஒரு வாரம் எழுதுகளேன். பின்னாளில் வந்த என் போன்றோருக்கு அதை பற்றி முழுமையாக தெரிய வரும்.///

    வில்லாளரே!வரலாறு படிப்பதிலும்,எழுதுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் நமது தஞ்சாவூர் பெரியவரே!அவர்தான் இதைப் பர்ரி எழுதத் தகுதியானவர்.

    http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations

    இந்த லின்கில் முழுத்தகவலும் ஆங்கிலத்தில் உள்ளது.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

    இந்த லின்கில் தமிழில் முழுத் தகவலும் உள்ளது.

    ReplyDelete
  31. kmr.krishnan said...
    //அம்மா சாயலில் குழந்தை இருப்பதனாலே
    'மைனரை சுத்தமாத் தெரியாது'ன்னு சொல்றதுலே கொஞ்சம் அர்த்தம் இருக்கத்தான் செய்யுது..//

    ஓய்,மைனர்ஜி!நீர் இப்படி பின்னூட்டம் போட்டுள்ளது அவ்விடத்து மிஸஸ் மைனருக்குத் தெரியுமா?

    நல்லது..பல கமெண்ட்டுக் களுக்குப் பின்னால் எனது கமெண்ட்டைப் புரிந்துகொண்டு குறிப்பிட்டதற்கு நன்றி..

    முடிந்தவரை எதையும் வீட்டில் மறைக்க முயலுவதில்லை..என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்..

    (மத்ததெல்லாம் தனியா மெயில்லே..சாட்டிங்கிலே பேசிக்குவோம்..)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com