15.12.11

Astrology தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!


Astrology  தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!

தேவி என்றால் அரிதாரம் பூசிக்கொண்டு திரைப்படங்களில் தலை காட்டும் தேவியல்ல! உண்மையான தேவி. அன்னை உமையவள் என்பது அவரின் திருப்பெயர்களில் ஒன்று. மதுரைக்காரர்கள் அவரை மீனாட்சி என்பார்கள். காஞ்சியில் காமாட்சி. காசியில் விசாலாட்சி!

சிவபெருமானின் இயக்க ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பிய அன்னை உமையவள், அதுபற்றி இறையனாரிடமே வினவ, அவர் வழக்கம்போல ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். நாம் விளையாடினால், அது வெறும் விளையாட்டு. இறைவன் நிகழ்த்தினால் அது திருவிளையாட்டு. அதற்கு விதிமுறைகள் எல்லாம் கிடையாது. கேள்வி கேட்டால், அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து நம்மை எரித்துவிடும் அபாயமும் உண்டு. ஆகவே கேள்வி கேட்காமல் இப்போது விளையாட்டை மட்டும் பார்ப்போம்.

கட்டணம் எதுவும் கிடையாது. செலவும் இல்லை. ஆகவே இணையத்தில் இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியோடு இதையும் பார்த்து வைப்போம்.

உமையவள் தன்னை மறந்து இறையனாரின் கண்களைப் பொத்தினார். கண்ணாம்பூச்சி விளையாட்டில் நாம் செய்வதைப்போல தேவியார் இறைவனின் கண்களைத் தன் திருக்கரங்களால் மூடினார். ஒரு நொடிதான் மூடினார். அந்த ஷணத்தில் உலக இயக்கம் நின்று விட்டது. தவறை உணர்ந்த தேவி மன்னிப்புக் கோர இறையனார் வருத்தம் மேலிடச் சொன்னார்:

“என் கண்களை மூடி இந்த பிரபஞ்சத்தை இருளடையச் செய்து விட்டாய். என் கரத்தில் இருக்கும் ஜோதியில் நான் மறையப் போகிறேன்.
நீ பசுவாக உருவெடுத்து அலைந்து திரிந்து, அந்த ஜோதி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து என்னை வந்து சேர்க!” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

பசுவாக மாறிய உமையவள், தன் சகோதரன் திருமாலின் உதவியோடு அந்த ஜோதியைத் தேடி அலைய நேரிட்டது. பூமி எங்கும் வலம் வந்தார். ஒரு திறமையான தொலைகாட்சி இயக்குனர் என்றால் அந்த அலைச்சலை 100 எஃபிசோடுகளாக்கி நம்மைப் பரவசப் படுத்தியிருப்பார், ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் நடக்கவில்லை.

அம்மையின் அலைச்சலைக் கண்டு மனம் கனிந்த சிவன் ஒரு அஸ்த நட்சத்திர நன்னாளில் தன்னுடைய ஜோதியைக் காட்சியாக்கி அருளினார்.
உமையவளும் மனம் மகிழ்ந்து அந்த ஜோதியில் ஐக்கியமானார். ஐக்கியமாதல் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் கேட்கலாம். லால்குடிக்காரர் விரிவாகப் பதில் சொல்வார்.

உமையவளுக்கு, சிவனார் கிருபை (கருணை) செய்த இடம் கோமல் என்ற ஸ்தலம். அந்த ஸ்தலத்தில், அதாவது அந்த இடத்தில் சிவனாருக்காகக் கோவில் எழுப்பப்பெற்றது. சிவனாருக்கு கிருபா குபரேஸ்வரர் என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. அம்மைக்கு அன்னபூரணி என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. இதுதான் அக்கோவிலின் தல வரலாறு.

வரலாற்றை எல்லாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். அதற்கெல்லாம் ஜோல்னாபை ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்
---------------------------------------------------------------------------------------------------
சந்திரனுக்குரிய மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான ரோகினியைப் பற்றி முன் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்த நட்சத்திரம் அஸ்தம் (Hastham) தசாபுத்திப் பலன்கள் ரோகினிக்கு உள்ளதைப் போலவே இம்மி பிசகாமல் இதற்கும் உண்டு.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் அலங்காரப் பிரியர்கள். கற்பதில் ஆர்வம் உடையவர்கள். தாமாக வலியச் சென்று பிறருடன் பழகுபவர்கள்.
இரசிகத்தன்மை மிகுந்தவர்கள். அகட விகடமாகப் பேசும் தன்மை உடையவர்கள். தங்கள் தாயின் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள்.

Those born in the star Hasta are stable bodied, bear excellent character and warriors. They are givers, independent, famous, interested in the worshiping of god. They are learned, handsome, wealthy, daring, helpful to others and all knowledgeable. interested in music, happy with their relatives and friends, respected by kings (rulers)
-----------------------------------------------------------------------------------------------


அஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் கோமல் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோமல் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில் குத்தாலம் என்னும் சிற்றூரில் இருந்து பிரியும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.
குலுக்கல் வண்டி வசதியும் உண்டு (அதாங்க நம்ம ஆட்டோ ரிக்சா)

கோவிலின் பெயர்: அருள்மிகு கிரிபா குபரேஸ்வரர் ஆலயம்
மூலவரின் திருப்பெயர்: கிரிபா குபரேஸ்வரர்
அம்மையின் பெயர்: அன்னபூரணி
தலவிருட்சம்: வில்வ மரம்
காலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்
உங்களின் தரிசனத்திற்காக கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணிவரை. அதுபோல மாலையில் 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்பு!.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் கோவில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்!

கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடக்கூடிய திறமையான அன்பர்களுக்காக கோவிலின் முழு முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். வெளி நாட்டில் இருப்பவர்களும், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் தங்கள் ஜென்ம நட்சத்திரத தினத்தன்று, தங்களால் முடிந்த சிறு தொகையைக் கோவிலுக்கு அனுப்பி இறைவனுக்கு அர்ச்சனை, ஆபிஷேகம், ஆராதனை ஆகியவற்றை செய்யலாம். அவர்களுக்காவும்தான் முழு முகவரியைக் கொடுத்துள்ளேன்,

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
கோமல்-609 805
குத்தாலம் தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்     
தொலைபேசி எண்: +91 95002 84866    


அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லலாம். திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் அதிக அளவில்  இங்கேவந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அதையும் மனதில் கொள்க

கிருபா குபரேஸ்வரர் மன்னிக்கும் குணமுடையவர். சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை வணங்க வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிரச்சினைகள் தீர இத்தலத்திற்குச் சென்று அப்பனையும் அம்மையையும் வழிபட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும்,

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28 comments:

  1. என் மூத்த மகளுக்கும் இரண்டாவது மகளுக்கும் ஹஸ்த நட்சத்திரமே.எனவே கோமல் சென்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது நலம் பயக்கும். இறைவன் அருள் கூட்டிவைக்கட்டும்.(மூத்தவளுக்கு 14 ஆண்டுகளாகக் குழந்தை பாகியம் கிட்டவில்லை).

    கிருபாகூபேஸ்வரர் என்பதே சரி. கட்டுரையின் இறுதியில் அப்படிச் சொன்ன ஐயா
    கட்டுரையின் உள்ளே குபேஸ்வரர் என்று குபேரனை நினைவு படுத்துகிறார்.

    'ஐக்கியம் ஆவ'தற்கு நான் பொருள் சொல்ல வேண்டுமா? 'ஒருங்கிணைதல்' என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.கிட்டத்தட்ட சரியாக வருகிறது.

    கோமல் சுவாமினாதன் என்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சினிமா கதை வசனகர்த்தா ஒருவர் இருந்தார். இடது சாரி சிந்தனையாளர்.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா ,
    ஹஸ்த நட்சத்திரக்காரனான நான் உங்கள் விளக்கம் கேட்டு எனை ஆராய்ந்து சரி பார்த்துக் கொண்டேன். நீங்கள் குறிப்பிட்ட "கோமல் " கோயிலுக்கு அவசியம் சென்று வர விரும்புகிறேன்.எனக்கு 61 வயது பூர்த்தி ஆகி சென்ற வருடம் மணி விழாவை என் பிள்ளைகள் மூவரும் ( மகன் 1 , மகள்கள் 2 - கல்யாணம் ஆகி விட்டது ) சேர்ந்து செட்டிநாட்டில் சிறப்பாக நடத்தினார்கள். ஆகவே "கோமல் - கிருபா குபரேஸ்வரர் " இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும் அருளைப் பெறவும் விரும்புகிறேன். உங்கள் பழைய பாடங்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்.நன்றி. வணக்கம் அய்யா.
    அருணாசலம்- கோட்டையூர்

    ReplyDelete
  3. ஐயா காலை வணக்கம். மிக்க நன்றி. அஸ்த நட்சத்திர நண்பர் ஒருவர் கூட இல்லையே! பின்னாளில் கிடைத்தால் பகிர்ந்துகொள்ளலாம். நன்றிகள் பல..

    ReplyDelete
  4. தகவல்கள் நிரம்பியப் பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. Ayya,

    Very useful info about Hastha nackstra.

    Student,
    Trichy Ravi

    ReplyDelete
  6. வணக்கங்கள். முதலில் கே.எம்.ஆருக்கு ஒரு மறுப்பு. கோமல் சுவாமிநாதன் எனும் நாடக ஆசிரியரின் ஊர் திருவாரூர் அருகிலுள்ள கோமல். இந்த கோமல் மறைந்த பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் சி.எஸ்.சுப்பிரமணியத்தின் ஊர். அந்த கோமலில் என் தாத்தா கர்ணம் எனும் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். நான் அந்த ஊரில் எட்டாவது (அதாவது ஈ.எஸ்.எல்.சி.) வரை படித்தேன். ஆங்கிலோ வர்னாகுலர் நடுநிலைப் பள்ளி. அந்த ஊரின் மற்றுமொரு விசேஷம் சுற்றுப்புற பதினெட்டு கிராம மாரியம்மன் தேர்கள், கோமல் மாரியம்மன் திருவிழா தீமிதியின் போது கிராமத்தை வலம் வரும். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 18 தேர்கள் போவது ஓர் அரிய காட்சி. கோமல் வீரசோழன் நதிக்கரையில் அமைந்த கிராமம். அடுத்த மூன்றாவது கி.மீ.யில் கம்பன் பிறந்த ஊரான தேரிழந்தூர் இருக்கிறது. நல்ல தகவல்கள். பழைய நினைவுகள் மீண்டன.

    ReplyDelete
  7. ///ஒரு திறமையான தொலைகாட்சி இயக்குனர் என்றால் அந்த அலைச்சலை 100 எஃபிசோடுகளாக்கி நம்மைப் பரவசப் படுத்தியிருப்பார்///
    ஐயா யோசனை சொல்லி கொடுத்துட்டீங்க, "விநாயகர் திருவிளையாடல்" முடிஞ்ச கையோட யாராவது ஆரம்பிச்சுடுவாங்க பாருங்க.

    அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் extroverts அப்படின்னு தெரியுது. ஆனால் எனக்கு தெரிஞ்சவங்க யாரும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் கிடையாது.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் ரயிலில் செல்லும் வழி மிக அழகிய பசுமை நிறைந்த வயல்கள் உள்ள இடம். பயணம் செய்யும்பொழுது கதவருகில் நின்றவாரேதான் ஒவ்வொருமுறையும் பயணம் செய்தேன் ஒரு காலத்தில். அந்த வசந்த காலத்தை நினைவூட்டியதற்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    என் மூத்த மகளுக்கும் இரண்டாவது மகளுக்கும் ஹஸ்த நட்சத்திரமே.எனவே கோமல் சென்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது நலம் பயக்கும். இறைவன் அருள் கூட்டிவைக்கட்டும்.(மூத்தவளுக்கு 14 ஆண்டுகளாகக் குழந்தை பாகியம் கிட்டவில்லை).
    கிருபாகூபேஸ்வரர் என்பதே சரி. கட்டுரையின் இறுதியில் அப்படிச் சொன்ன ஐயா
    கட்டுரையின் உள்ளே குபேஸ்வரர் என்று குபேரனை நினைவு படுத்துகிறார்.
    'ஐக்கியம் ஆவ'தற்கு நான் பொருள் சொல்ல வேண்டுமா? 'ஒருங்கிணைதல்' என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.கிட்டத்தட்ட சரியாக வருகிறது.
    கோமல் சுவாமினாதன் என்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சினிமா கதை வசனகர்த்தா ஒருவர் இருந்தார். இடது சாரி சிந்தனையாளர்./////

    கூபே என்ற சொல் படிப்பதற்கு நெருடலாக இருந்ததால் அப்படி மாற்றினேன். பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  9. ////Blogger VCTALAR said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா ,
    ஹஸ்த நட்சத்திரக்காரனான நான் உங்கள் விளக்கம் கேட்டு எனை ஆராய்ந்து சரி பார்த்துக் கொண்டேன். நீங்கள் குறிப்பிட்ட "கோமல் " கோயிலுக்கு அவசியம் சென்று வர விரும்புகிறேன்.எனக்கு 61 வயது பூர்த்தி ஆகி சென்ற வருடம் மணி விழாவை என் பிள்ளைகள் மூவரும் ( மகன் 1 , மகள்கள் 2 - கல்யாணம் ஆகி விட்டது ) சேர்ந்து செட்டிநாட்டில் சிறப்பாக நடத்தினார்கள். ஆகவே "கோமல் - கிருபா குபரேஸ்வரர் " இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும் அருளைப் பெறவும் விரும்புகிறேன். உங்கள் பழைய பாடங்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்.நன்றி. வணக்கம் அய்யா.
    அருணாசலம்- கோட்டையூர்/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger Sathish K said...
    ஐயா காலை வணக்கம். மிக்க நன்றி. அஸ்த நட்சத்திர நண்பர் ஒருவர் கூட இல்லையே! பின்னாளில் கிடைத்தால் பகிர்ந்துகொள்ளலாம். நன்றிகள் பல..////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger தமிழ் விரும்பி said...
    தகவல்கள் நிரம்பியப் பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. ///Blogger iyer said...
    Iyer is on leave for one week./////

    ஆகா, சென்று வாருங்கள். வந்த பிறகு பதிவானவற்றைப் படித்து, உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  13. //////Blogger Ravichandran said...
    Ayya,
    Very useful info about Hastha nackstra.
    Student,
    Trichy Ravi///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger Thanjavooraan said...
    வணக்கங்கள். முதலில் கே.எம்.ஆருக்கு ஒரு மறுப்பு. கோமல் சுவாமிநாதன் எனும் நாடக ஆசிரியரின் ஊர் திருவாரூர் அருகிலுள்ள கோமல். இந்த கோமல் மறைந்த பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் சி.எஸ்.சுப்பிரமணியத்தின் ஊர். அந்த கோமலில் என் தாத்தா கர்ணம் எனும் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். நான் அந்த ஊரில் எட்டாவது (அதாவது ஈ.எஸ்.எல்.சி.) வரை படித்தேன். ஆங்கிலோ வர்னாகுலர் நடுநிலைப் பள்ளி. அந்த ஊரின் மற்றுமொரு விசேஷம் சுற்றுப்புற பதினெட்டு கிராம மாரியம்மன் தேர்கள், கோமல் மாரியம்மன் திருவிழா தீமிதியின் போது கிராமத்தை வலம் வரும். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 18 தேர்கள் போவது ஓர் அரிய காட்சி. கோமல் வீரசோழன் நதிக்கரையில் அமைந்த கிராமம். அடுத்த மூன்றாவது கி.மீ.யில் கம்பன் பிறந்த ஊரான தேரிழந்தூர் இருக்கிறது. நல்ல தகவல்கள். பழைய நினைவுகள் மீண்டன.//////

    இதைத்தான் நல்ல அனுபவங்கள் என்பது. உங்கள் அனுபவங்கள்/ நினைவுகள் பலருக்கும் பயன்படட்டும். மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger தேமொழி said...
    ///ஒரு திறமையான தொலைகாட்சி இயக்குனர் என்றால் அந்த அலைச்சலை 100 எஃபிசோடுகளாக்கி நம்மைப் பரவசப் படுத்தியிருப்பார்///
    ஐயா யோசனை சொல்லி கொடுத்துட்டீங்க, "விநாயகர் திருவிளையாடல்" முடிஞ்ச கையோட யாராவது ஆரம்பிச்சுடுவாங்க பாருங்க.
    அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் extroverts அப்படின்னு தெரியுது. ஆனால் எனக்கு தெரிஞ்சவங்க யாரும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் கிடையாது.
    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் ரயிலில் செல்லும் வழி மிக அழகிய பசுமை நிறைந்த வயல்கள் உள்ள இடம். பயணம் செய்யும்பொழுது கதவருகில் நின்றவாரேதான் ஒவ்வொருமுறையும் பயணம் செய்தேன் ஒரு காலத்தில். அந்த வசந்த காலத்தை நினைவூட்டியதற்கு நன்றிகள் ஐயா./////

    கதவருகில் நின்று கொண்டே பயணித்த உங்கள் இளம் வயதுத் துணிச்சலுக்கு ஒரு பாராட்டு. ஏற்றுக்கொள்ளுங்கள்! பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட உங்களின் மேன்மைக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  16. Guru Vanakkam,

    my daughter is also hasta nakshatram. I have been to this temple when I was in Mayuram. My grandfather lived in a village that is 10 miles from mayuram and this post has kindled my memories.
    mmm.,,,good old days.

    RAMADU

    ReplyDelete
  17. ///Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    my daughter is also hasta nakshatram. I have been to this temple when I was in Mayuram. My grandfather lived in a village that is 10 miles from mayuram and this post has kindled my memories.
    mmm.,,,good old days.
    RAMADU/////

    சொந்த ஊரைப் பற்றிய செய்தி என்றால், மனம் நெகிழத்தானே செய்யும்? நன்றி மாயவரத்தாரே!

    ReplyDelete
  18. from Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 15 December 2011 15:01
    subject comment

    என் பெண் (பத்து வயது) ஹஸ்த நட்சத்திரம்தான், நீங்கள் எழுதிய அனைத்து பலன்களும் நூறு சதவீதம் பொருந்துகிறது. இப்போது அவளுக்கு ராகு தசை நடக்கிறது. இந்த கோவிலைப்பற்றி முதன்முறை கேள்விப்படுகிறேன், அடுத்தமுறை தமிழகம் வரும்போது சென்று வருவோம்.

    S.உமா, தில்லி

    ReplyDelete
  19. என்னமோ வடக்கத்திக்காரர்கள் எல்லோரும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள் போல ஒரு தோற்றம் காசி பற்றிய பதிவுகளின் போது உண்டானது. ஒரு மைல் கல்லில் தமாஷ் பண்ணியுள்ளதைப் பாருங்கள்.
    4 கிமி உள்ள‌ தியோகர் என்ற ஊருக்கு வடதுருவத்துக்கும், நியூயார்க்குக்கும் தூரம் சொல்லி நக்கலோ நக்கல் பண்ணியுள்ளதைப் பாருங்கள்.

    அப்புறம் அந்தப் பையன்க‌ளின் நிர்வாண நடனம்! இதைப் பார்த்துத்தான் புத்தரே மஹாநிர்வாணம் பற்றி ஒரு முடிவுக்கு வந்தாரோ?!

    கருங்கடலை சிவக்க வைக்க முடியாத சூரியனைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.

    இரண்டு கோமல் இருப்பது தஞ்சாவூரார் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.
    சந்தேகத்தால்தான் கோமல் சுவாமிநாதன் என்று ஒருவர் உண்டு என்று மையமாகத்தான் சொல்லியுள்ளேன். 18 தேர் ஓடும் தகவல் எல்லாம் புதியதுதானே!அந்தத் தேர் திருவிழாவை ஒரு முறைச்சென்று காண வேண்டும்.

    ReplyDelete
  20. அய்யா வணக்கம்,
    நான் தங்களது பாடங்களை வெளியில் இருந்து
    படிக்கும் மாணவன் தங்களுக்குத் தெரிந்ததே
    நேற்று தான் கேட்டேன் என் நட்சத்திர கோயில் எப்போது வரும் என்று.
    மறுநாளே போட்டுவிட்டிர்கள். ஊருக்கு பொய் முதலில் போய்வர வேண்டியது தான்
    தாங்கள் ஆற்றும் கலை பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  21. சதீஷ் கவலை வேண்டாம்
    நானும் ஹஸ்த நட்சத்திர காரனே!!

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    என்னமோ வடக்கத்திக்காரர்கள் எல்லோரும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள் போல ஒரு தோற்றம் காசி பற்றிய பதிவுகளின் போது உண்டானது. ஒரு மைல் கல்லில் தமாஷ் பண்ணியுள்ளதைப் பாருங்கள்.
    4 கிமி உள்ள‌ தியோகர் என்ற ஊருக்கு வடதுருவத்துக்கும், நியூயார்க்குக்கும் தூரம் சொல்லி நக்கலோ நக்கல் பண்ணியுள்ளதைப் பாருங்கள்.
    அப்புறம் அந்தப் பையன்க‌ளின் நிர்வாண நடனம்! இதைப் பார்த்துத்தான் புத்தரே மஹாநிர்வாணம் பற்றி ஒரு முடிவுக்கு வந்தாரோ?!//////

    படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள். சிறுவர்கள் தங்கள் மானத்தை மறைக்க ஜட்டி அணிந்திருக்கிறார்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////// கருங்கடலை சிவக்க வைக்க முடியாத சூரியனைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.
    இரண்டு கோமல் இருப்பது தஞ்சாவூரார் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.
    சந்தேகத்தால்தான் கோமல் சுவாமிநாதன் என்று ஒருவர் உண்டு என்று மையமாகத்தான் சொல்லியுள்ளேன். 18 தேர் ஓடும் தகவல் எல்லாம் புதியதுதானே!அந்தத் தேர் திருவிழாவை ஒரு முறைச்சென்று காண வேண்டும்.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. /////Blogger Balraj said...
    அய்யா வணக்கம், நான் தங்களது பாடங்களை வெளியில் இருந்து படிக்கும் மாணவன் தங்களுக்குத் தெரிந்ததே
    நேற்று தான் கேட்டேன் என் நட்சத்திர கோயில் எப்போது வரும் என்று. மறுநாளே போட்டுவிட்டீர்கள். ஊருக்கு பொய் முதலில் போய்வர வேண்டியது தான்
    தாங்கள் ஆற்றும் கலை பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!
    நன்றி வணக்கம்//////

    இது இணைய வகுப்பு. உள்ளே வெளியே என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. கலைப் பணி என்று எதைச் சொல்கிறீர்கள்? பாடம் நடத்துவதையா?

    ReplyDelete
  24. அஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் கோமல் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோமல் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில் குத்தாலம் என்னும் சிற்றூரில் இருந்து பிரியும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.

    பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  25. உமையவள் அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? Very bad.

    நடிகர் கமலஹாசன் ஒரு திரைப்படத்தில் பேசும் வசனம். பழமொழியை சொன்னால் அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. அதுபோல்தான் புராணக் கதைகளும். ஆராயக் கூடாது.

    ஐயர் என்ன க்ஷேத்ராடனம் போய் வர கிளம்பி விட்டாரோ. ஐயராயிற்றே இருக்கலாம்.

    ReplyDelete
  26. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    அஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் கோமல் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோமல் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில் குத்தாலம் என்னும் சிற்றூரில் இருந்து பிரியும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.///
    பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. ////Blogger ananth said...
    உமையவள் அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? Very bad.
    நடிகர் கமலஹாசன் ஒரு திரைப்படத்தில் பேசும் வசனம். பழமொழியை சொன்னால் அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. அதுபோல்தான் புராணக் கதைகளும். ஆராயக் கூடாது.
    ஐயர் என்ன க்ஷேத்ராடனம் போய் வர கிளம்பி விட்டாரோ. ஐயராயிற்றே இருக்கலாம்.////

    நமக்கு நெற்றிக்கண் இல்லாமல் போய்விட்டதே!:-)))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com