25.10.11

Short Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்!

------------------------------------------------------------------------------
Short Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்!       

மீனாட்சி ஆச்சி பிரதானக் கதவைத் திறந்து கொண்டு வீட்டு வாசலுக்குள் அடியெடுத்து வைத்தார். காதைக் கிழிக்கும் ஓசையுடன் அவர்கள் வீட்டு மாடியில் ஒலிக்கும் பாடல் அதிரடியாய் வரவேற்றது.

    "டாடி மம்மி வீட்டில் இல்லை
    தடை போட யாருமில்லை
    விளையாடுவோமா உள்ளே வில்லாளா"


உட்கதவையும் திறந்து கொண்டு மெல்லப் படிகளில் ஏறினார். பாடலின் ஓசை மேலும் அதிகரித்துக் கேட்டது.

வீட்டில் கேட்கக்கூடிய பாடலா அது?

ஆச்சியின் மகன்கள் இருவரில் ஒருவர்தான் அதைத் தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆச்சி இல்லாத நேரத்தில் எப்போதுமே மியூஸிக் சேனல்தான். ஆட்டம் போடும் பாடல்கள்தான் அதிகமாக ஒளிபரப்பாகும். பார்க்கப்படும்.

குத்தாட்டப்பாடல்கள் எனும் வகைப் பாடல்களுடன், இப்போது 'அயிட்டம் சாங்' எனும் புதுவகைப் பாடல்களும் கை கோர்த்திருக்கின்றன.

என்ன அயிட்டமோ? என்ன சாங்கோ? கலி முற்றிக் கொண்டிருக்கிறது.

இப்போது பல்லவியில் இருந்து சரணத்துக்குத் தாவியிருந்தார் பாடகி.

    "ஹேய் மைதானம் தேவை இல்லை
    Umpire-ம் தேவை இல்லை
    யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

    ஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு
    தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
    விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
    எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு"


வந்த கோபத்தை அடக்கிக் கொண்டார் ஆச்சி. வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாகத் தொலைக் காட்சிப் பெட்டியை ஸ்விட்ச் ஆஃப்' செய்தார்.

பார்த்துக் கொண்டிருந்த பதினான்கு வயது மகன் விரைப்பாகப் பார்த்தான்.

"எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இது டி.வி பார்க்கும் நேரமல்ல. கை, கால் முகத்தைக் கழுவிட்டு பாடத்தைப் படி. வீட்டுப் பாடங்களைச் செய்து முடி. ஏழரை மணி முதல் எட்டரை மணிவரைதான் டி.வி பார்க்க வேண்டும்."

பையன் எழுந்து போய்விட்டான்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பெரும் தொல்லையே, இரண்டும் கெட்டான் வயதில் இப்படி இருக்கும் பிள்ளைகள்தான்.

அடுத்தவன் என்ன செய்கிறான்? அவனுக்கு வயது பன்னிரெண்டு. படுக்கையறையில் எட்டிப் பார்த்தார்கள். அவன் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்றார்கள். அவனை வாஞ்சையுடன் தட்டி எழுப்பினர்கள்.

"ஏன்டா படுத்திருக்கே?"

"அண்ணன் டி.வி யைத் தரமாட்டேங்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கிறதுக்கு விடமாட்டேங்கிறான். எனக்குத் தனியா ஒரு டி.வி வாங்கித் தாங்க மம்மி!"

"அதைவிடச் சுலபமான வழியிருக்கிறது. உங்கள் இருவரையும் ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். அங்கே தங்கிப் படியுங்கள். அப்போதுதான் சரியாக வரும்!"

"அண்ணனைக் கொண்டுபோய் விட்டுடுங்க மம்மி. அவன்தான் தினமும் தகராறு பண்றான்"

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அவனும் நம்ம வீட்டுப் பிள்ளை!"

"இரண்டு நாளைக்கு முன்னால புது வீடு பார்க்கப் போனோமில்ல, அங்க வந்து சண்டை போட்டான். அந்த வீடு அவனுக்காம். நீ பழைய வீட்டை வச்சுக்கடா என்கிறான்."

"அப்படியா சொன்னான்?"

"அவன் பெரியவனாம். அதனால புது வீடு அவனுக்காம். பழைய வீடு உனக்குங்கிறான்"

இந்த இடத்தில் மீனாட்சி ஆச்சி குறுகுறுப்புடன் கேட்டார்கள்," நீ என்ன சொன்னே?"

"டாடிக்கும், மம்மிக்கும் என்னடா பண்றதுன்னு கேட்டேன். அவங்க ஊர்ல இருக்கிற வீட்டுக்குப் போயிடுவாங்கடா என்கிறான். அங்க நம்ம ஐயா இருக்காங்களேன்னேன். அதுக்கு, ஐயாவுக்கு வசயாயிருச்சுடா, இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல புட்டுக்கிருவாருங்கிறான்."

மீனாட்சி ஆச்சிக்கு சுரீரென்றது. 440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியதைப் போலிருந்தது.

மெல்லக் கேட்டார்கள்," நீங்கள் வீட்டிற்காகச் சண்டை போட்டது அப்பாவுக்குத் தெரியுமா?"

"ஓ தெரியும். வீட்டுக்கு வந்ததும், அண்ணன் இல்லாத சமயத்தில அப்பாவிடம் சொல்லிட்டேன்"

இரண்டு நாட்களாகப் பிடிபடாமல் இருந்த ஒரு விஷயம் மீனாட்சி ஆச்சிக்கு மெல்லப் பிடிபட ஆரம்பித்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

மீனாட்சி ஆச்சிக்கு தேசிய வங்கி ஒன்றில் வேலை. ஆச்சி என்பது ஒரு விகுதிக்காகத்தான். மரியாதைக்காகத்தான். ஆச்சி என்றவுடன் சின்னாளப்பட்டி சேலையில் வலம் வரும் வயதான ஆச்சியை நினைத்துக்கொள்ளாதீர்கள். நமது கதையின் நாயகி மீனாட்சி ஆச்சிக்கு வயது  முப்பத்தெட்டுத்தான். வணிகவியல் முதுகலையில் தங்க மெடலுடன் பட்டம் வாங்கியவர். படித்து முடித்த வருடமே வேலையும் கிடைத்தது. திருமணமும் கூடிவந்தது. கணவர் சொந்த அத்தை மகன். அதனால் தேடுதல் இன்றி வாடுதல் இன்றித் திருமணம் கூடி வந்தது.

ஆச்சியின் கணவர் சொக்கலிங்கத்திற்கும் வங்கியில்தான் வேலை. ஆனால் அது வேறு வங்கி. அவர்கள் வேலை பார்க்கும் வங்கிகளுக்குக் கோவையில் நிறையக் கிளைகள் இருப்பதால் இருவருமே கோவையிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்விற்குப் பரிசாக இரண்டு ஆண் குழந்தைகள். எப்படியோ கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று கொண்டே, வீட்டோடு வேலைக்காரிகளை வைத்துக் குழந்தைகள் இருவரையும் சிறுபிராயத்தைத் தாண்டி வளர்த்துவிட்டார்கள்.

மாறுதல் உத்தரவுடன் ஊர் ஊராகப் பெட்டி தூக்க முடியாது என்பதால் குமாஸ்தா வேலையே உத்தமம் என்று பதவி உயர்வுகளுக்கு நோ சொல்லிவிட்டார்கள். அப்படி இருந்தும் ஒரே கிளையில் பத்து வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய விதிகள் தலை காட்டியபோது, சொக்கலிங்கம் கோவையின் புறநகர்ப் பகுதியில் இருந்த கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு விட்டார்.

விவேகானந்தா சாலையில் கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்ட்டர் அருகே பதினைந்து சென்ட் இடத்தில் சொந்த வீடு இருக்கிறது. கீழ்தளம் மேல்தளம் என்று மொத்தம் நான்காயிரம் சதுர அடி வீடு. கீழ்தளத்தை ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகை வருகிறது. நிறுவனத்தின் காவல்காரர்களால் இவர்களுக்கும் செலவில்லாமல் பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆச்சியின் மாமனார் சின்னைய்யா செட்டியார் அவர்கள் காலத்து வீடு அது. அவர் கோவை காட்டூரில் இருந்த நூற்பாலையொன்றில் வேலை செய்த காலத்தில் வாங்கியது. சிறிய ஓட்டு வீடு. அதை இடித்துவிட்டுச் செட்டியாரின் மகன் சொக்கலிங்கம்தான் இப்போது இருக்கும். பெரிய வீட்டைக் கட்டினார். திருணமாகி வந்த புதிதில் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, பெரிய செட்டியாரின் மேற்பார்வையில் கட்டிய வீடு அது. வங்கிக் கடனையெல்லாம் கட்டித் தீர்த்தாகி விட்டது.

பெரிய செட்டியாருக்கு இப்போது அறுபத்தைந்து வயசு. பத்தாண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வில் வேலையை விட்டு வந்தவர், தம் சொந்த ஊரான காரைக்குடிக்குப் போய் செட்டிலாகி விட்டார். ஒரே ஒரு சோகம் அவருடைய மனைவி சிகப்பியாச்சி குடல் புற்று நோயில் காலமாகிவிட்டார்கள். அது நடந்து இரண்டாண்டுகள் ஆகிறது. இவர்கள் எங்களோடு வந்து இருங்கள் என்று அழைத்தும் வர மறுத்துவிட்டார்.

பையன்கள் இருவரையும் கவனித்துப் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள் எவரும் உடன் இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை. 

பழநியப்பன் அருளால் அதற்கு ஒரு வழிபிறக்க இருக்கிறது என்பது ஆச்சிக்கு அப்போது தெரியாது
     
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தன் கணவர் சொக்கலிங்கம் வரும்வரை காத்திருந்த ஆச்சி, அவர் வந்தவுடன் கேட்டார்கள்

"முல்லை நகரில் பார்த்த புது வீடு. அம்சமாக இருக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படியும் கட்டப் பெற்றிருக்கிறது. வேறு யாராவது அதைக் கொத்திக் கொண்டு போவதற்குள் ஒரு முடிவெடுங்களேன்."

"அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே. இருக்கும் வீடு போதும். இனிமேல் வாங்கினால் இடமாகத்தான் வாங்க வேண்டும்."

"காலி இடத்திற்கு வங்கியில் எப்படிப் பணம் கிடைக்கும்?"

"வாங்கும்போது முழுப் பணத்தையும் கொடுத்து வாங்குவோம்!"

"அது நடக்கிறகாரியமா?"

"மனசு வைத்தால் நடக்கும். பொறுமையாக இரு."

"இல்லை, நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால், அந்த வீட்டை நீங்கள்தானே கூட்டிக்கொண்டுபோய்க் காட்டினீர்கள். இப்போது நறுவுசாக வேண்டாம் என்கிறீர்களே? பையன்கள் இருவரும் பேசிக் கொண்டதை நானும் கேள்விப்பட்டேன். அதானால்தான் வேண்டா மென்கிறீர்களா?"

"அதுவும் ஒரு காரணம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது! வருகிற அனைத்தையும் சொத்துக்களாகமாற்றி வைத்துக் கொண்டே போகாமல், ராஜா செட்டியார் சொன்னதுபோல செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன்"

"இப்ப இருக்கிற ராஜாவா?"

"இல்லை அவருடைய ஐயா!"

"அண்ணாமலை அரசரா?"

"ஆமாம்"

"என்ன சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்?"

"நன்றாகச் சம்பாதி. அடிப்படைத் தேவைகளுக்குப் போக மீதியைச் சேமித்துவை. சேமிப்பதை யெல்லாம் ஒரே கூடையில் போட்டுவைக்காமல். நான்கு பகுதியாகப் பிரித்து ஒரு பகுதியை இடத்திலும், ஒரு பகுதியை நிறுவனப் பங்குகளிலும், ஒரு பகுதியைத் தங்கத்திலும் போட்டுவை.
மீதியுள்ள ஒரு பகுதியை நீ அனுபவித்துவிடு. இல்லையென்றால் உனக்கு அனுபவ பாத்தியமே இல்லாமல் போய்விடும் என்றாராம்.ஆகவே இனிமேல் நாமும் அனுபவிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை வாங்கப் போகிறேன். ஆறு லட்ச ரூபாய் விலை. உனக்கும் வேண்டுமென்றால் சொல் மாருதி ஜென் கார் ஒன்றை வாங்கி விடுவோம்."

"அய்யோ வேண்டாம் சாமி. எனக்கு, இருக்கிற ஸ்கூட்டியே போதும்."

"ஆதோடு மூன்று அறைகளுக்கு ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் மாட்டப்போகிறேன்"

"நமக்கொன்று, பசங்களுக்கு ஒன்று என்று இரண்டு போதுமே. மூன்றாவது எதற்கு?"

"அப்பச்சியையும் இங்கே கூட்டிக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்"

"அதைச் செய்யுங்கள். மிகவும் நல்ல காரியம். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் எத்தனையோ முறைகள் கூப்பிட்டு விட்டோம். வரமாட்டேன் என்கிறார்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?"

"இல்லை, வரச் சம்மதித்துவிட்டார்கள். அதிரடியாகப் போனில் பேசினேன். நீங்கள் வாருங்கள். இல்லையென்றால் வங்கி வேலையை உதறி விட்டுக் குடும்பத்தோடு நான் அங்கே வந்து விடுகிறேன். இருப்பதுபோதும். எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்றேன். வருவதற்குச் சம்மதித்துவிட்டார்கள்"

"எல்லாம் சரிதான் வருமானவரிப் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?"

"அதற்குத்தான் புதுக்கார் வாங்குகிறேன். வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்"

"வீடு வாங்கினாலும், வட்டியால் தள்ளுபடி கிடைக்குமே!"

"இல்லை பணத்தைச் சேர்த்து வைத்துப் பையன்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். மேல் படிப்பிற்கு அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிப் படிக்க வைப்போம். இல்லை பணம் கட்டி இங்கேயே பிலானியில் படிக்க வைப்போம். பையன்களுக்குச் சொத்துக்களை விடப் படிப்புதான் முக்கியம்."

"ஏன் இந்த முடிவு?."

"ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறான். நாம்தான் எதையும் படிப்பதில்லை. எங்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் பழைய பாடல் ஒன்றைச் சொல்லி என் கண்களைத் திறந்து விட்டுப்போனார். தெரிந்த பாடல்தான். அவர் அதைச் சற்று மாற்றிச் சொல்லிவிட்டுப்போனார். அதுவும் நன்றாகத்தான் உள்ளது."

"................................."

"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே, ஒளிர்வாள் அருஞ்சமம் முறுக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே எனும் தமிழிப் பாடலை, இந்த நூற்றாண்டுக்காக சிறிது மாற்ற வேண்டும் என்று சொல்லி, ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே, சான்றோர் ஆக்குதல் சமூகத்தின் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் வேந்தரின் கடனே, நாட்டை மேம்படுத்தி நல்வழிப் படுத்தல் காளையர் கடனே என்று சொன்னார்."

"சமூகம் எப்படிச் சன்றோனாக்கும்? சன்மானம் இல்லாமல் அதாவது பணம் இல்லாமல் எதுவும் நடக்காதே!"

"இல்லை, சமூகத்தில் பலர் படிப்பிற்காக உதவிகள் செய்யத் துவங்கி யிருக்கிறார்கள். அது தற்சமயம் நலிந்த பிரிவினருக்கு மட்டுமே  கிடைக்கிறது. நாம்தான் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமே. அதனால் நமது பிள்ளைகளை நாம் படிக்க வைப்போம். படிக்கவைத்துச் சான்றோனாக்குவது மட்டுமே நமது கடன் சொத்து சேர்த்து வைப்பது பெற்றோரின் கடன் என்று எவனும் சொல்லவில்லை. அதை நீ உணர்ந்து கொள்."

அற்புதமான இந்தப் பதிலால் ஆச்சி அதிர்ந்துபோய் நின்றார். மேற்கொண்டு அவரால் எதுவும் பேச முடியவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி ஏப்ரல் 2009ஆம் ஆண்டு மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. நீங்களும் படித்து மகிழ அதை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்

             ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

24 comments:

  1. ஏற்கனவே கதையைப் படித்த நினைவு. ஆனாலும் மீள் வாசிப்பும் நன்றாகவே உள்ளது.

    இது போன்ற நீதிக்கதைகளை பின் நவீனத்துவ‌ வாதிகள் இலக்கியத்தில் சேர்க்கத்
    தயங்குகிறாகள்.

    அவர்கள் தயங்கினால் நமக்கு என்ன என்கிறீர்களா?

    அதுவும் சரிதான்

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    ஏற்கனவே கதையைப் படித்த நினைவு. ஆனாலும் மீள் வாசிப்பும் நன்றாகவே உள்ளது.
    இது போன்ற நீதிக்கதைகளை பின் நவீனத்துவ‌ வாதிகள் இலக்கியத்தில் சேர்க்கத் தயங்குகிறாகள்.
    அவர்கள் தயங்கினால் நமக்கு என்ன என்கிறீர்களா?
    அதுவும் சரிதான்/////

    பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் என்று எதுவும் இடையாது. இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய நவீனம் கிழடாகிவிடும். அப்போது வருகிறவன், இவற்றை ஒதுக்கிவிட்டு, அவன் எழுதுவதுதான் புது நவீனம் என்பான். ஒன்றை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு அந்த அதிகாரம் ஏது?

    பாரதியின் எழுத்துக்களும், கவியரசர் கண்ணதாசனின் எழுத்துக்களும் எக்காலத்திலும் நவீனமானதுதான். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியைப் போல சாண்டில்யனைப் போல, சுஜாதாவைப் போல, பாலகுமாரனைப் போல இவர்களை அட்லீஸ்ட் ஒரு பக்கம் எழுதச்சொல்லுங்கள் பார்க்கலாம்!

    ReplyDelete
  3. Guru Vanakkam,

    Arumai. Thanks for posting the story.

    Bharati, kannadasan, KALKI, SUJATHA, RK, Bala,

    ":Perai sonalle summa adhirudhella"

    Ramadu

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா.

    சொத்து சேர்த்து கொடுத்தால் அவை அனைத்தும் ஒரு நாளில் அழிக்கவும் வாய்ப்பு உண்டு, அழிந்து போகவும் வாய்ப்பு உண்டு.கல்வியை கற்று கொடுத்தால் , அவர் காலம் வரை அழியாமல் கூடவே இருக்கும். எத்தனை கழ்டம் வந்தாலும் கல்வியை வைத்து கரை ஏறிவிடுவார்.

    மாணவர் மலர் . மிக நன்று. ஆனால் என்னால் அதனை இன்றுதான் பார்க்க முடிந்தது. காரணம் நடுகடலில் மாட்டிக்கொண்டேன். புயல்,மழை, கடல் கொந்தளிப்பு பிரச்சினைகளால் இனைய தொடர்பு இல்லை.ஒருவழியாக நேற்று இரவு முதல் , சீற்றம் சற்றே அடங்கி இனைய தொடர்பு கிடைத்தது.

    மாணவர் மலரில் முதல் பகுதியாக எனது கவிதையை வடிவமததிற்கு நன்றி .பின்னுட்டம் தாமதமாக இடுவது வருத்தம் அளிக்கிறது.இருந்தும் நன்றெய் எப்போது வேண்டும் என்றாலும் சொல்லலாம் .

    சந்தனு, இனைய எதிர்காலம், பலூன் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் , வித்தியாசமாக இருந்தது. இன்னும் நிறைய பேர்கள் கலந்து கொள்ள வேண்டும் .

    கவிதையை பார்த்து Mr.KMR அமர்க்களம் என்றார், மைனர்வாளும் சந்தோசப்பட்டார், தேமொழி நன் மொழி இட்டார் .அனைவருக்கும் நன்றி.எல்லா புகழும் ஆசானுக்கே.

    அத்துடன் அனைவருக்கும் "திபாவளி வாழ்த்துக்கள்"

    நரகாசுரனுக்கு நன்றி.
    வில்லனாய் வந்தான் ,
    வேதனையை தந்தான்,
    கொண்டோரை கொன்றான்,
    குலம்பல அழித்தான்; இறுதியில் -
    தீயை தின்றான்,
    வேரறுந்து வீழ்ந்தான்,
    வதம்பெற்று அழிந்தான்,
    தீபதிருநாளை தந்தான்.
    நரகாசுரனுக்கு நன்றி.

    ReplyDelete
  5. காலமும் காட்சியும் மாறும் போது
    கருத்தும் மாறுவது தான் இயல்பு...

    சமூகத்தின் இன்றைய தேவைக்கு உகந்தக் கதை...
    நல்லப் பதிவு.
    நன்றிகள் ஆசிரியரே!

    வாத்தியார் தங்களுக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் தீபாவளி நல வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  6. "எல்லாம் சரிதான் வருமானவரிப் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?"

    "அதற்குத்தான் புதுக்கார் வாங்குகிறேன். வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்"//

    இது மட்டும் உதைக்கிறது அய்யா. வாகன கடனுக்கு வருமான வரிச் சலுகை கிடைப்பதில்லை. வீட்டுக் கடனுக்கு
    மட்டும்தான் சலுகை உண்டு.

    புறநானூற்றுப் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  7. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Arumai. Thanks for posting the story.
    Bharati, kannadasan, KALKI, SUJATHA, RK, Bala,
    ":Perai sonalle summa adhirudhella"
    Ramadu/////

    ஆமாம். எக்காலத்திலும் அதிரும்!

    ReplyDelete
  8. Blogger thanusu said...
    வணக்கம் அய்யா.
    சொத்து சேர்த்து கொடுத்தால் அவை அனைத்தும் ஒரு நாளில் அழிக்கவும் வாய்ப்பு உண்டு, அழிந்து போகவும் வாய்ப்பு உண்டு.கல்வியை கற்று கொடுத்தால் , அவர் காலம் வரை அழியாமல் கூடவே இருக்கும். எத்தனை கழ்டம் வந்தாலும் கல்வியை வைத்து கரை ஏறிவிடுவார்.
    மாணவர் மலர் . மிக நன்று. ஆனால் என்னால் அதனை இன்றுதான் பார்க்க முடிந்தது. காரணம் நடுகடலில் மாட்டிக்கொண்டேன். புயல்,மழை, கடல் கொந்தளிப்பு பிரச்சினைகளால் இனைய தொடர்பு இல்லை.ஒருவழியாக நேற்று இரவு முதல் , சீற்றம் சற்றே அடங்கி இனைய தொடர்பு கிடைத்தது.
    மாணவர் மலரில் முதல் பகுதியாக எனது கவிதையை வடிவமததிற்கு நன்றி .பின்னுட்டம் தாமதமாக இடுவது வருத்தம் அளிக்கிறது.இருந்தும் நன்றெய் எப்போது வேண்டும் என்றாலும் சொல்லலாம் .
    சந்தனு, இனைய எதிர்காலம், பலூன் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் , வித்தியாசமாக இருந்தது. இன்னும் நிறைய பேர்கள் கலந்து கொள்ள வேண்டும் .
    கவிதையை பார்த்து Mr.KMR அமர்க்களம் என்றார், மைனர்வாளும் சந்தோசப்பட்டார், தேமொழி நன் மொழி இட்டார் .அனைவருக்கும் நன்றி.எல்லா புகழும் ஆசானுக்கே.
    அத்துடன் அனைவருக்கும் "திபாவளி வாழ்த்துக்கள்"
    நரகாசுரனுக்கு நன்றி.
    வில்லனாய் வந்தான் ,
    வேதனையை தந்தான்,
    கொண்டோரை கொன்றான்,
    குலம்பல அழித்தான்; இறுதியில் -
    தீயை தின்றான்,
    வேரறுந்து வீழ்ந்தான்,
    வதம்பெற்று அழிந்தான்,
    தீபதிருநாளை தந்தான்.
    நரகாசுரனுக்கு நன்றி.//////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger iyer said...
    வருகை பதிவு//////

    நன்றி அய்யர்!

    ReplyDelete
  10. Blogger தமிழ் விரும்பி said...
    காலமும் காட்சியும் மாறும் போது
    கருத்தும் மாறுவது தான் இயல்பு...
    சமூகத்தின் இன்றைய தேவைக்கு உகந்தக் கதை...
    நல்லப் பதிவு.
    நன்றிகள் ஆசிரியரே!
    வாத்தியார் தங்களுக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் தீபாவளி நல வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///////

    நல்லது. நன்றி ஆலாசியம். உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. /////Blogger Jagannath said...
    "எல்லாம் சரிதான் வருமானவரிப் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?"
    "அதற்குத்தான் புதுக்கார் வாங்குகிறேன். வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்"//
    இது மட்டும் உதைக்கிறது அய்யா. வாகன கடனுக்கு வருமான வரிச் சலுகை கிடைப்பதில்லை. வீட்டுக் கடனுக்கு
    மட்டும்தான் சலுகை உண்டு.
    புறநானூற்றுப் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி./////

    வாகனங்களுக்கு வருமானத்தில் (Depreciation) தள்ளுபடி உண்டு அல்லவா? அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே!

    ReplyDelete
  12. prema-
    iyya vanakkam. intha kathai nandraga irukirathu.

    ReplyDelete
  13. my hearty deepavali wishes to our respected sir and to all the students. and the moral of the short story is very much essential for today's world. thank you

    ReplyDelete
  14. கதையை மிகக் கவனத்துடன் படித்தேன். இத்தனை அழகாக வருமானம், செலவு, பெரியவர்களைப் பாதுகாப்பது, பிள்ளைகளை முறையாக வளர்ப்பது, பண முத்லீடு, எதில் எத்தனை சலுகைகள் என்பதையெல்லாம் துல்லியமாகக்கணக்கு பார்த்து கதை எழுதுவது என்பது அரிதான செயல். செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். சங்க இலக்கியம் அந்த காலத்துக்குப் பொருந்துவது போல், புதிய இலக்கியம் இன்றைய நிலைமைக்கு மிகச் சரியாகப் பொருந்தும். நான் இதுவரை பார்த்த வரையில், ஒருவன் தானாக முயன்று சேர்த்த சொத்தின் மீது இருக்கும் அக்கறையை மூதாதையர் சேர்த்து வைத்த சொத்தில் காண்பிப்பதில்லை. தாத்தா வைத்த மாமரத்தின் இனிய‌ பழத்தைக் காட்டிலும், பேரனுக்குத் தான் வைத்த மரம் காய்க்கும் புளிப்புப் பழம் தேனாக இனிக்கும். அதுதான் உலகம். நல்ல உளவியலை விளக்கும் கதை. வாழ்க நீவிர்!

    ReplyDelete
  15. நல்ல அருமையான சிறுகதை. சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் அதற்கேற்ப பெற்றோர்கள் இருப்பதைப்போல் வள்ளுவர் சொன்னது போல் "இவன் தந்தை எந்நோற்றான் கொல்"என்பது போல் பிள்ளைகளும் இருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்.வயதானவுடன் ஆசிரமங்களில் சேர்த்துவிடும் பிள்ளைகளும் இருக்கிறார்களே.

    ReplyDelete
  16. ///////////Thanjavooraan said...


    கதையை மிகக் கவனத்துடன் படித்தேன். இத்தனை அழகாக வருமானம், செலவு, பெரியவர்களைப் பாதுகாப்பது, பிள்ளைகளை முறையாக வளர்ப்பது, பண முத்லீடு, எதில் எத்தனை சலுகைகள் என்பதையெல்லாம் துல்லியமாகக்கணக்கு பார்த்து கதை எழுதுவது என்பது அரிதான செயல். செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.///////////


    அத்துடன் நன்றியையும் தீபாவளி நல்வாழ்த்துக்களையும் சொல்லி நரகாசுரனை வாழ்த்தி குறுங்கவி பாடிய புலவர் தனுசுக்கு ஒரு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்தைச் சொல்லி மேலே சொன்ன கமெண்ட்டை அப்புடியே ரிபீட் வுட்டுக்குறேன்.....

    ReplyDelete
  17. என் அன்பிற்கினிய ஆசிரியர் அவர்களுக்கும், வகுப்பறை மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது மனமுவந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கருத்தை வழிமொழிந்த ஜப்பான் மைனர், தமிழ்விரும்பி, கவிஞர் தனுசு போன்றோர் அயல் மண்ணில் தொலை தூரத்தில் இருந்தாலும், வகுப்பறை மாணவர்கள் அனைவரும் உடன் இருப்பதாகக் கருதி மகிழ்ச்சியாக எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. நடைமுறை வாழ்க்கை நிலையை மிகையின்றி பிரதிபலித்த கண்ணாடி உங்கள் சிறுகதை.
    இன்று மாமாவையும் உங்கள் பதிவைப் படிக்கவைத்தேன்.
    பொருளாதார நிதி லோசனை, வாழ்க்கை நெறி இரண்டையும் உள்ளடக்கிய சிறந்த கதை. வழங்கியதற்கு நன்றி ஐயா.

    ஆசிரியருக்கும், சகமாணவ நட்பு வட்டத்திற்கும் பண்டிகை நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க.

    ╔╗─╔╦═══╦═══╦═══╦╗──╔╗╔═══╦══╦╗╔╗╔╦═══╦╗──╔══╗
    ║║─║║╔═╗║╔═╗║╔═╗║╚╗╔╝║╚╗╔╗╠╣╠╣║║║║║╔═╗║║──╚╣╠╝
    ║╚═╝║║─║║╚═╝║╚═╝╠╗╚╝╔╝─║║║║║║║║║║║║║─║║║───║║
    ║╔═╗║╚═╝║╔══╣╔══╝╚╗╔╝──║║║║║║║╚╝╚╝║╚═╝║║─╔╗║║
    ║║─║║╔═╗║║──║║────║║──╔╝╚╝╠╣╠╬╗╔╗╔╣╔═╗║╚═╝╠╣╠╗
    ╚╝─╚╩╝─╚╩╝──╚╝────╚╝──╚═══╩══╝╚╝╚╝╚╝─╚╩═══╩══╝

    ReplyDelete
  19. ////// Thanjavooraan said...
    என் கருத்தை வழிமொழிந்த ஜப்பான் மைனர், தமிழ்விரும்பி, கவிஞர் தனுசு போன்றோர் அயல் மண்ணில் தொலை தூரத்தில் இருந்தாலும், வகுப்பறை மாணவர்கள் அனைவரும் உடன் இருப்பதாகக் கருதி மகிழ்ச்சியாக எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்./////

    மிக்க நன்றி..தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  20. மிகவும் அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. நல்ல பதிவு. நன்றி ஐயா...

    ReplyDelete
  22. அருமையான கதை. ஆனால் பெற்றோர்கள் ஏன் அடிப்படைத் தேவைகளைக் கூட பூரித்தி செய்துக்கொள்ளாமல் சேமித்துவைக்க வேண்டும், அதுவும் இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு...எனைப்பொருத்தமட்டில் பல‌ன் எதிர்பார்க்காமல் கனித்தரும் எல்லா ம‌ர‌முமே ந‌ல்ல‌ ம‌ர‌ம் தான் அய்யா.

    ReplyDelete
  23. //சொத்து சேர்த்து வைப்பது பெற்றோரின் கடன் என்று எவனும் சொல்லவில்லை//
    உண்மைதான் ஐயா. கல்வி என்ற சொத்து மட்டுமே அடிப்படைத் தேவை. மீன் வேண்டாம். மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது முக்கியம்.
    //வாகனங்களுக்கு வருமானத்தில் (Depreciation) தள்ளுபடி உண்டு அல்லவா? அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே!//
    இது நிறுவனங்களுக்கு மட்டுமே, தனி மனிதர்களுக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com