-------------------------------------------------------------------------------------------
கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தவர்
இலக்கியச்சோலை
புதுச்சேரி கம்பர் விழாவில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாடிய வரிகளில் கம்பரைப் பற்றிப் பாடிய வரிகள் மட்டும் தொகுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளது!
-----------------------------------------------------------------------------------
எப்படியோ கம்பனுக்கும்
எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்
அக்காலம் அப்பிறப்பில்
அழகுவெண்ணெய் நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன்; அப்படித்தான்!
நான்படித்த படிப்பெல்லாம்
எட்டாம் வகுப்பன்றி
எட்டுக்கு மேல்வகுப்பை
எட்டியும் பார்த்ததில்லை
இலக்கணமும் கற்றதில்லை!
கம்பன் கொடுத்த
கவிப்பிச்சை ஓரளவு;
கண்ணன் கனிந்தளித்த
கைமுதல்கள் ஓரளவு!
கம்பனை நான்பாடிக்
களிப்பதற்குக் காரணமே
தம்பிக்குக் கொஞ்சம்
தந்துவைத்தான் என்பதனால்!
தந்தை எனக்குத்
தந்ததெல்லாம் புத்திமதி;
கம்பன் எனக்குக்
கருணைசெய்தான் இந்தமதி!
தாயார் எனக்குத்
தந்ததெல்லாம் அன்புமொழி;
தாயான கம்பன்
தந்ததுதான் இந்தமொழி!
தனயன்மார் ஒன்பதுபேர்
சரியாக வளரவில்லை
தனயன்நான் கம்பனுக்கு;
தந்தையினை மறக்கவில்லை!
என்தம்பி என்றுசொல்ல
இளையோன் பிறக்கவில்லை
என்றாலும் கம்பனுக்கு
இளையோர்கள் தம்பிகளே!
என்காதலன் கம்பன்
என்றேநான் காதலித்தேன்
தன்காதல் நாயகியைத்
தழுவினான் கம்பனவன்!
என்காதலி என்றே
இன்னொருநாள் நான்தழுவத்
தன்காதலன் எனக்குத்
தமிழைப் பரிசளித்தான்!
என்நண்பன் என்ஆசான்
என்தெய்வம் எனறவனை
எத்தனைபேர் சொன்னாலும்
எல்லாம் பொருந்துவதே!
கம்பனுக்கு மேலோர்
கவிஞன் பிறப்பதில்லை!
கம்பனது கவியின்றிக்
கன்னித்தமிழ்தான் வாழ்வதில்லை!
நாக்கிலே தெய்வம்
நடத்தியதோர் தேன்மொழியோ
வாக்கிலே தேவி
வரவழைத்த பொன்மொழியோ
பன்னீரா யிரம்பாட்டுப்
பாடினான் கம்பனவன்!
சொன்னயமா பொருள்நயமா
தொடரும் உவமைகளா
என்னென்ன அம்மம்மா!
எடுத்தெழுத வார்த்தையில்லை!
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்
ஜானகியைக் காட்டுவதில்
உள்ளிருக்கும் கள்ளெல்லாம்
ஓடும் நதியாகும்!
முள்ளிருக்கும் மலருண்டு;
முறைதெரியாக் கவியுண்டு
உள்ளிருக்கும் தவறெண்ணி
உலகம் நகைப்பதுண்டு!
புள்ளிருக்கும் ஆலமரம்
புலவரெல்லாம் தங்குமரம்
வெள்ளம் பெருக்கெடுக்கும்
வியத்தகுமோர் கங்கைநதி!
கம்பனது பாட்டில்
களங்கம் எதுவுமில்லை!
அவையடக்கம் சொன்னானே
அதிலே அவைஅடக்கம்!
வான்மீகி சொன்ன
வடமொழிநூல் ஒன்றினைத்தான்
தேன்பூசித் தருகின்றேன்
செந்தமிழில் என்றுசொன்னான்!
சீதைக்குத் தமிழ்நாட்டுச்
சேலையினைக் கட்டிவைத்தான்
ஸ்ரீராமன் ஒழுக்கத்தில்
தென்னாட்டுப் பண்புவைத்தான்
தசமுகனைக் காட்டுங்கால்
தனைப்பெற்று வளர்த்துவிட்ட
திசைமுகத்தைப் பார்க்காமல்
சிறப்பாகப் புகழ்ந்துரைத்தான்!
உடனே இருந்து
உண்ணவைத்த செஞ்சோற்றுக்
கடனுக்கோர் கும்ப
கன்னனையும், நழ்வழி
நடப்பதே நன்மையென
நல்லறங்கள் போதித்த
வீடணனையும் காட்டி
வேறான தத்துவத்தைக்
கூறாக வைத்துக்
கொள்வோர்கள் கொள்கவென்றான்!
குருதியிலே பாசம்
கொப்பளிக்கும் இலக்குவனை
இறுதிவரை ராமனுடன்
இணைத்துவைத்த பாவனைகள்
உடன்பிறந்தார் தங்களுக்குள்
உள்ள உறவுகளைக்
கடனென்று காட்டும்
கவிதைச் சிகரமன்றோ!
தம்பிதான் இந்தத்
தரணிதனை யாள
மகுடம் கிடைக்கும்என
மாமுனிவன் சொன்னதற்கே
நாடு துறந்தானே
நல்லிளங்கோ, அவன்தம்பி!
மகுடம் உனக்கிந்த
மண்டலமும் உனக்கென்று
தந்துவிட்ட பின்னாலும்
தவவேடம் தான்கொண்டு
அண்ணனது காலணியை
அரசாள வைத்தானே
பரதன், அவனிந்தப்
பாரதத்து மூத்ததம்பி!
செந்தமிழர் நாட்டுக்குத்
திரைப்படங்கள் சிறுகதைகள்
காட்டுகின்ற பாத்திரங்கள்
கணத்துக்கோர் தத்துவங்கள்
எல்லாம் இரவல்;
எதிலும் முழுமையில்லை!
குடிக்காமலே போதை
குடியேறி நிற்பதுபோல்
படைக்கின்ற பாத்திரங்கள்
படித்தவரைத் தொடுவதில்லை!
கம்பனின் பாத்திரங்கள்
காலத்தின் சாத்திரங்கள்!
தந்தை இறந்தான்
தசரதனின் புகழ்பாடிக்
கம்பன் புலம்புகின்றான்
கனிந்தமகன் வழியாக;
எந்நாளும் நல்லவர்க்கு
இப்பாடல் பொருந்தாதோ?
சொல்லுகிறேன் சொல்லுகிறேன்
சொல்லிக்கொண் டேயிருக்க
எண்ணுகிறேன் ஆனால்
இவ்வவையில் நேரமில்லை!
மனோன்ம ணீயமென்னும்
மகத்தான நாடகத்தைச்
சொன்னாரே அந்தச்
சுந்தரனார் சொன்னதுபோல்
‘கடல்குடித்த குருமுனிஉன்
கரைகாணாக் குருநாடில்
தொடுகடலை உனக்குவமை
சொல்வதும் வியப்பாமே!
அவ்வளவுதான் ஐயன்மீர்
அடியேனின் முன்னுரையும்;
இவ்வளவே வாழ்க!
எல்லார்க்கும் என்வணக்கம்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க வளமுடன்!
செப்பியக் கவியாவும்
ReplyDeleteசெவ்விய நடையாவும்
கம்பனின் நடையன்றோ!
கவியமுதச் சுவையன்றோ!
அற்புதக் கவிதனை
சொற்பத நயத்துடனே
கம்பனை புகழ்ந்தே
கவிமழையும் பொழிந்தே
சிந்தை நிறைத்திட்டார்
சின்னக் கம்பனாய் - கவிச்
சிகரமும் ஏறிவிட்டார்.
அற்புதம் அருமை,
பதிவுக்கு நன்றிகள் ஐயா!
நல்ல கவிதை கண்ணதாசன் என்றால் கண்ணதாசன் தான்.
ReplyDeletehttp://astrovanakam.blogspot.com/
"கம்பனின் பாத்திரங்கள் காலத்தின் சாத்திரங்கள்!"
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் அவர்களின் எளிமையும் கவித்துவமும் யாருக்கு வருமையா?
வணக்கம் ஐயா!.
ReplyDelete