5.7.11

Astrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்?

------------------------------------------------------------------------------------
Astrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்? 

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு தூங்கும் நேரம்... )


என்ற அசத்தலான பாடல் இசைஞானியின் இசைக்கோர்வையால் மேன்மையுற்றது. 1985ஆம் ஆண்டு வெளியான குங்குமச்சிமிழ் என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் இன்றும் கேட்பவர்களின் மனதை நெகிழ வைக்கும். காலத்தை வென்ற பாடல். பாடலாக்கம் கங்கை அமரன்!

உண்மையைச் சொன்னால், நிலவு தூங்காது. அது எப்படித் தூங்கும்? காதலர்கள் காதல் மயக்கத்தில், பிதற்றலில்  இது போன்று எல்லாவற்றையும் சொல்வார்கள்.

அதே பாடலில் தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள்:

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்


வாலிபம் தென்றலாய் வீசும் என்பது சரி. என்றும் எனும் பதம் எப்படிச் சரியாகும்? எல்லாமே ஒரு முடிவிற்கு வரக்கூடியதுதான். வாலிபத்திற்கு முடிவு இல்லையா என்ன?

தென்றலாய் வீசும் வாலிபம், திருமணத்தோடு முடிந்து விடும்.

அதற்குப் பிறகு என்ன?

ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசனாக இருந்தவன், சேவகனாக மாறிவிடுவான். மனைவிக்கு 4 முழம் மல்லிகைப்பூவும், திருநெல்வேலி அல்வா வாங்கி வருவது மட்டும் சேவைக் கணக்கில் வராது.

அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். புதுப் பெண்டாட்டிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை ஒன்று உள்ளது. பிறகு ஒரு நாள் அதைச் சொல்கிறேன்.

ரேசன் கடைக் க்யூவில் நிற்கும்போது என்ன வீசும் நீங்களே சொல்லுங்கள்? புது மனைவிக்கும் அம்மாவிற்கும் உரசல் ஏற்படும்போது என்ன வீசும்? அதையும் சொல்லுங்கள்

எல்லாத் துவக்கத்திற்குமே, ஒரு முடிவு இருக்கும்.

இன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இரண்டையும் சமமாகப் பாவிப்பவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. இன்பத்தில் துள்ளவும் கூடாது. துன்பத்தில் துவளவும் கூடாது.

ஒரு தசாபுத்தியில் கிடைக்கும் இன்பம், அடுத்த தசாபுத்தியிலும் தொடருமா என்பது சந்தேகமே. துன்பத்திற்கும் அதே வரம்புதான். ஆகவே கால நேரம் மாறி மாறி வரும் என்பதை உணர்ந்து, நிம்மதியாக இருங்கள்
--------------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், செவ்வாய்புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து சூரிய மகா திசையில், ராகுபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 10 மாதங்களும் 24 நாட்களும் ஆகும். மொத்த காலமும் தீமையுடையதாக, துன்பமுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

ஆமென்ற ரவிதிசையில் ராகுபுத்தி
    ஆகாதமாதமது பத்து நாள்மூவெட்டாகும்
போமென்ற அதன்பலனைப் புகழக்கேளு
    பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
    நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
தாமென்ற மனைவியரை பிரித்துவைக்கும்
    தகமையில்லாத நாளென்று தணிந்து நில்லே!


அத்துடன் இதற்கு ஈடானதொரு தீமைகள் ராகு மகா திசை சூரிய புத்தியிலும் நமக்கு உண்டாகும். இருவரும்  கடும் பகைக் கிரகங்கள். அதை மனதில் கொள்ளவும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

ஆகுமே ராகுதிசையில் சூரியபுத்தி
   அருளில்லாத மாதமது பத்தேயாகும்
யேகுமே நாளதுவும் மூவெட்டாகும்
    யென்னசொல்வேன் அதன்பலனை யியம்பக்கேளூ
போகுமே சத்துருவால் வியாதிகாணும்
    பொருள்சிலவு பூமிமுதல் சேதமாகும்
சாகுமே நாள்தோறும் சண்டையாலே
    சதிரான பூமிமுதல் காலிபோமே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

8 comments:

  1. ////தென்றலாய் வீசும் வாலிபம், திருமணத்தோடு முடிந்து விடும்.
    அதற்குப் பிறகு என்ன?
    ஆட்சி மாற்றம் ஏற்படும்.////

    ஆட்சி மாறினால் அது என்ன?
    காட்சி மாறும், பேச்சு அதன் வீச்சு மாறும்
    மரியாதையை காப்பாற்றிக் கொண்டாலே
    என்ற நிலைக்கே போகும்...

    முகத்தைப் பார்த்து பார்த்து பேசியதை நிறுத்தி
    முத்தத்தை (வீட்டின்) பார்த்து பேசும் நிலைக்கு வரும்.
    நிலம் பார்த்தவள் இப்போது அவன் முகம் பார்ப்பாள்
    இவனோ இப்போது நிலம் பார்ப்பான்...

    எதைச் சொன்னாலும் அப்படியா என்று அதிசயித்துக் கேட்டவள்
    ம்கூம்.. உங்களுக்கு எண்ணத் தெரியும் என்னும் நிலை வரும்.

    "இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை"

    அருமையான ஒருப் பாடலை வெண் பலகையில் எழுதியுள்ளீர்கள்...
    இந்தப் பாடலில் வரிகளுக்கு சமாமாக நம்மை ஆக்கிரமிப்பது
    இசைஞானியின் "மவுத் ஆர்கன் இசையும்"

    பாடத்திற்கும் பதிவுக்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ////தென்றலாய் வீசும் வாலிபம், திருமணத்தோடு முடிந்து விடும்////

    அப்படியா..
    அதுவெல்லாம் அன்றைய சினிமாவில்

    காதலில் தொடங்கி
    கடற்கரையில் முடியும் காலத்தில்

    காலையில் கல்யாணம்
    மாலையில் விவாகரத்து என

    வேகமாக நடைமுறை சூழல்
    வேறு பாதைக்கு போய்கொண்டிருக்கு

    இன்னமும் சிலருக்கு
    இரண்டாவது திருமணத்தில் தான்

    வாழ்க்கையேதொடங்குதுன்னு இளசுகள்
    வாழ்ந்து கிட்டு இருக்காங்க..

    பார்வை மாறி இருக்கு
    பாதையை மாத்த சொல்லுங்க..

    ReplyDelete
  3. புதுப் பெண்டாட்டிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்கள்.இப்படிதான் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லவே இல்லை.

    நீங்கள் சமத்தாக சொல்லிவிடுங்கள்‍ புதுப் பெண்டாட்டி கதையை.

    நான் ஒரு புது மனைவி ஜோக் சொல்கிறேன்.மாட்டுவண்டியில் மறுவீடு வந்து கொண்டிருந்தார்கள் கணவனும் மனைவியும்,புதிதாக மணம் புரிந்தவர்கள்.
    கணவன் கொஞ்சம் முன்னால் நகர்ந்தான் அவள்மேள் பட.அவள் வெட்கி முன்னே நகர்ந்தாள். மீண்டும் அவன் நெருக்கினான். அவள் மேலும் வெட்கப்பட்டு முன்னே நகர்ந்தாள்.அவன் இன்னும் கொஞ்சம்.அவளும் அப்படியே.வீடு போய் சேருமுன் அவள் மாட்டு வண்டிக்காரன் மடியில் இருந்தாள்.(இந்த ஜோக் யார் சொல்லியது தெரியுமா?பரம ரகசியம் யாரிடமும் சொல்லாதீர்கள்.சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம திட்சதர் அவர்கள்.)

    அதுசரி அந்த மெக்ஸிகோ ஜோக் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

    சூரியதசா ராகுபுக்தி கணினி பஞ்சாங்கம் படி டிசம்பர் 2011ல் துவங்குகிறது. வியாதி படுத்தாமல் இருக்க வேண்டும்.இப்போதில் இருந்தே உணவு உடற்பயிற்சியை தீவரப்படுத்துகிறேன்.பார்ப்போம்.

    ReplyDelete
  4. //அதற்குப் பிறகு என்ன?

    ஆட்சி மாற்றம் ஏற்படும்.//

    மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்ற யாவும் காலவோட்டத்தில் மாறக் கூடியதுதான்.

    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே

    (நன்னூல்,462)

    இதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டியதுதான்.

    (காணாமல் போனவர்கள் பட்டியலில் என் பெயரும் வந்து விடக் கூடாதே என்று அவ்வப்போது வந்துக் கொண்டிருக்கிறேன்)

    ReplyDelete
  5. எனக்கு இரண்டு திசைகலும் வயோதிக காலதில் வருகின்றன அய்யா.
    //நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
    நீன்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்//
    நல்ல பாடல். என்ன சொன்னாலும், விதித்த படித்தான் நடக்கும் என்பதால் தற்பொழுது கவலை இல்லை.

    எனவே

    கன்னதாசனே கன்னதாசனே வந்துவிடு, என் காதல் கவிதையின் வரிகலை கொஞ்சம் திருத்திக்கொடு...

    என்ற‌ பாடலும் சேர்த்துக்கொல்கின்ரேன்.

    ReplyDelete
  6. வணக்கம் வாத்தியார் ஐயா,

    இன்றைய முன்னுரை சூப்பரோ சூப்பர்..

    //புதுப் பெண்டாட்டிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை ஒன்று உள்ளது. பிறகு ஒரு நாள் அதைச் சொல்கிறேன். //

    சீக்கிரம் சொல்லுங்கள் ஐயா..

    ReplyDelete
  7. //எல்லாத் துவக்கத்திற்குமே, ஒரு முடிவு இருக்கும்.

    இன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இரண்டையும் சமமாகப் பாவிப்பவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. இன்பத்தில் துள்ளவும் கூடாது. துன்பத்தில் துவளவும் கூடாது.//


    சத்தியமான வார்த்தைகள் ஐயா,
    இதைத்தான் சைவ சித்தாந்தம்
    " இருவினை ஒப்பு " - என்று பேசுகிறது..

    அருமை...

    ReplyDelete
  8. Dear Sir,

    Please provide Link in Side bar for Each DASA's. so that evrybody can easily refer.

    Nandri Ayya.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com