27.6.11

Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

அதெப்படி இரவு தொடர்ந்திடும்? இரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்?

”இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்” என்றுதானே கவியரசர் கண்ணதாசன் எழுதினார். ஆனால் இன்னொரு கவிஞர் வேறு மாதிரி சிந்தனை செய்து எழுதினார். இரவு தொடர இந்திரனைக் காவல் வைத்தால் போதும் என்கிறார்.

சரி, இந்திரனை எப்படிப் பிடித்துக்கொண்டு வருவது? அவனுக்கு உத்தரவு போட்டு எப்படிக் காவல் செய்ய வைப்பது? அதெல்லாம் உங்கள் வேலை. அது பற்றி அந்தக் கவிஞர் ஒன்றும் கூறவில்லை.

நாயகி ஏக்கத்தில் அப்படிக் கூறுகிறாள். ஏக்கத்திற்கெல்லாம் இலக்கணம் இல்லை. அதீதக் கனவுக் கணக்கில் அது வரும். பாடலைப் பாருங்கள்:

நாயகி:
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை


நாயகன்:
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

(பாடல் ஆக்கம் கவிஞர் வாலி. திரைப்படத்தின் பெயரும் வாலி. வெளிவந்த ஆண்டு 1999. பாடியவர்கள். திருமதி அனுராதா ஸ்ரீராம் மற்றும் திரு.உன்னி கிருஷ்ணன். இசை: தேவா. நடிப்பு அஜீத், சிம்ரன்)

என்னவொரு வெளிப்பாடு பாருங்கள். நடக்காத கற்பனைதான் என்றாலும், கேட்பதற்கு சுகமாக இருக்கிறதல்லவா?

ஏ.ஸி எல்லாம் வேண்டாம். மின் வெட்டு சமயத்தில் பிரச்சினையாக இருக்கும். ஆகவே நிலவைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டில் காலில் கட்டி வைத்து விடு. அறை குளிர்ச்சியாக இருக்கட்டும். படுத்தால் ஆளே அமுங்கும் படியான மெத்தை வேண்டும். மேகத்தைக் கொண்டு வந்து மெத்தையாகப் போடு. எரிக்கும் சூரியனை கடலுக்குள் அமுக்கி வை. இரவு முடியக்கூடாது. கடலை விட்டு சூரியன் வெளியே தலை காட்டக்கூடாது. அந்த வேலையை இந்திரனிடம் கொடுத்துக் காவலாக இருக்கச்சொல்.

அடடா, என்னவொரு கற்பனை பாருங்கள். இது போன்ற கற்பனை எல்லாம் யாருக்கு வரும்? கவிஞர்களுக்கு மட்டும்தான் வருமா? இல்லை. காதல் வயப்பட்டுள்ள அனைவருக்குமே வரும். அது மட்டுமல்ல எட்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்து அவரின் பார்வையில் இரண்டாம் வீடு இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும். மனகாரகன் சந்திரன் உச்சமாக இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும்.
------------------------------------------------------------------------------------------
அதுபோல இன்பம் தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

சந்திரனைக் கொண்டு வா சமர்த்தாய் கட்டி வை
குருவைக் கொண்டுவா கொல்லையில் நிற்க வை
காயும் சனியைக் கடலுக்குள் பூட்டிவை
சுகமாய் இருந்திட சுக்கிரனைக் காவல் வை


இதை எல்லாம் செய்தால் வாழ்க்கை சுகமாகவே - அதாவது இன்பமாகவே இருக்கும். முயன்று பாருங்கள்:-)))))
---------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் வியாழ புத்திக்கான பலன்களையும், வியாழ மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே அதி நட்புக் கிரகங்கள். கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் தேடி வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 38 மாதங்கள்

உண்டாகும் சுக்கிரதிசை சனியின் புத்தி
   உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு
தெண்டாடும் அதன் பலனை சொல்லக்கேளு
   திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு
நன்றாகும் அரசபதியாவாய் பாரு
   நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடுநகர் உண்டாம்
சென்றாகும் செல்வபதியாவான் பாரு
   தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை சனி மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

பாழில்லா காரிதிசை சுக்கிரபுத்தி
   பாங்கான மாதமது முப்பத்தெட்டு
நாளில்லா மங்கையரும் மனமாட்சியுமாம்
   நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம்
ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வான்
   அணைகட்டு விரக்கமுடன் அலங்காரமுண்டாம்
கோளில்லா சத்துரு நோய் இல்லை பாரு
   கோகனமாது செல்வம் கொடுப்பாள் தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

4 comments:

  1. அருமையான கற்பனை
    அந்த கவிஞர் போல உங்களுக்கும்

    குருவை கொல்லையில் வைத்தால்
    கும்பிட்டு போய்விடும் மக்கள் கூட்டம்

    இந்திரனை காவல் வைத்தால்
    இருக்கவா செய்வார் அகலியை தேடி

    அந்தப் பக்கம் போய்விடமாட்டாரா
    ஆனாலும் கற்பனை ... கடலுக்குள்??

    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் இதேயே சொல்லும் குறள்

    நிலா மறையாமலிக்க இரவு
    நீடிக்க இப்படி சொல்லுது வள்ளுவம்

    "விடா அது சென்றாரை கண்ணினால் காணப் படா அதி வாழி மதி"

    ReplyDelete
  2. வாத்தியாரும்
    வாலியானார்

    வகுப்பறையில்
    வார்த்தை ஜாலங்களால்

    வணக்கம் வாத்தியாரே...

    ReplyDelete
  3. //////Blogger iyer said...
    அருமையான கற்பனை
    அந்த கவிஞர் போல உங்களுக்கும்
    குருவை கொல்லையில் வைத்தால்
    கும்பிட்டு போய்விடும் மக்கள் கூட்டம்
    இந்திரனை காவல் வைத்தால்
    இருக்கவா செய்வார் அகலியை தேடி
    அந்தப் பக்கம் போய்விடமாட்டாரா
    ஆனாலும் கற்பனை ... கடலுக்குள்??
    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் இதேயே சொல்லும் குறள்
    நிலா மறையாமலிக்க இரவு
    நீடிக்க இப்படி சொல்லுது வள்ளுவம்
    "விடா அது சென்றாரை கண்ணினால் காணப் படா அதி வாழி மதி"/////

    அடடா, பின்னூட்டத்தில் குறளாகப் பொழிகிறீர்களே!!!! நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  4. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வாத்தியாரும்
    வாலியானார்
    வகுப்பறையில்
    வார்த்தை ஜாலங்களால்
    வணக்கம் வாத்தியாரே...////

    வாத்தியார் ஒரு நாளும் வாலியாக மாட்டார். நோ சான்ஸ்!
    அவர் பெரும் கவிஞர்! வாத்தியார் எளியவன்!
    இருந்தாலும் உங்களின் பாராட்டிற்கு நன்றி ஜானகிராமன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com