Short Story மேங்கோப்பு மேனா!
சிறுகதைகள் எழுதுவதுதான் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்ததும், அதிகமாக வசப்பட்டதும் ஆகும்!
பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிய கதைகளில்
60 சிறுகதைகள் 3 தொகுதிகளாகத் தொகுக்கப்பெற்றுப் புத்தகங்களாக
வெளி வந்துள்ளன. இன்னும் 20 கதைகள் சேர்ந்தவுடன், அவைகளும்
புத்தகமாக வெளிவரும். வட்டார மொழியில் எழுதுவதால்,
செட்டிநாட்டில் எனக்கு 20,000 வாசகர்கள் உள்ளார்கள். அவர்களை
நான் விடமுடியாது. பல பணிகளுக்கு இடையே விடாது
அவர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான்காண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கதை ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள். கதையைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேங்கோப்பு மேனா
(பர்மாத் தேக்கு மரங்களால் ஆன தூண்களும், உத்திரங்களும், சட்டங்களும், நிறைந்த மேற்கூரைப் பகுதிக்கு உள்ள பொதுப்பெயர் மேங்கோப்பு. செட்டி நாட்டில் உள்ள பெரிய பெரிய வீடுகளின் மேற்பகுதியை அப்படித்தான் சொல்வார்கள். அதை மனதில் கொண்டு கதையைப் படிக்கவும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த அடையாளப்பெயரை யாராவது சொன்னால் முத்தாள் ஆச்சிக்குக் கெட்ட கோபம் வரும்
ஆனால் வந்தவனுக்கு அது தெரியுமா என்ன ?
அவன் இரண்டாவது முறையாக அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக் கேட்டான்," மேங்கோப்பு மேனா வீடு எங்கே ஆச்சி இருக்கு?"
கொதித்துவந்த கோபத்தை வெளிக்காட்டாமல் ஆச்சி தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னார்கள், "இந்த வீடுதானப்பா! செட்டியார் உள்ளேதான் இருக்கிறார்-போய்ப்பார்!"
வந்தவன் வெளியூர்க்காரன்போலும், தோளில் தொங்கிக் கொண்டிருந்த ரெக்ஸீன் பையோடு வீட்டிற்குள்ளே போனான்.
ஆச்சியின் வீடு சிவன்கோவில் தெற்குத் தெருவில் இருந்தது. வீட்டு வாசலில் இருந்து பார்த்தால் கோவிலின் ராஜகோபுரம் நன்றாகத் தெரியும்
அன்று ஆடிக்கார்த்திகை.பெரிய கோலமாகப் போடவேண்டும் என்று தன் வீட்டின் வாசலுக்கு வந்திருந்த ஆச்சிக்குக் கோலம்போடும் மனநிலை மாறிவிட்டது.
பேருக்காக நான்கு புள்ளி, நான்கு வரிசையில் ஒரு கோலத்தைப் போட்டுவிட்டு, சிவன் கோவிலைப்பார்த்துக் கையெடு த்துக் கும்பிட்டார்கள். தங்கள் வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரைப் போக்கும்படி வேண்டிக்கொண்டவர்கள், வீட்டிற்குள்ளே திரும்பிச் சென்று விட்டார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சி மணமாகி, மாலையும் கழுத்துமாக அந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைத்தபோது அந்த வீட்டிற்குக் 'காரியக்காரர் சோனா வீடு' என்றுதான் பெயர். ஆச்சியின் மாமனார் சொக்கலிங்கம் செட்டியார் நகரச்சிவன் கோவிலின் காரியக்காரராக இருந்து இருபது வருடங்களுக்கு மேல் செய்த சேவைகள், தர்மங்களுக்காக ஊர் நகரத்தார்கள் பெருமைப்படுத்தி அழைத்த பெயர் அது!
அதெல்லாம் ஒரு காலம்.
ஆச்சி திருமணமாகி வந்த இரண்டாவது வருடமே பெரியசெட்டியார் சிவபதவி அடைந்துவிட்டார்.
ஆச்சியின் குடும்பத்தார்க்குப் பூர்வீகத்தொழில் அரிசி வியாபாரம்.
ஊரின் நுழைவாயிலில் மிகப்பெரிய அரிசி ஆலையும், நெல் கிடங்கும் இருந்தது. பெரிய செட்டியாரின் மறைவிற்குப் பிறகு தொழிலை யார்
பார்ப்பது என்ற பிரச்சினையில் ஆச்சியின் கணவர் மெய்யப்பன் தன் அண்ணனுடன் சச்சரவு செய்து கொண்டுவிட்டார். கறாராகப்பேசி பங்கைப்பிரித்துப் பணத்தையும் வாங்கிகொண்டு வந்துவிட்டார்.
பஞ்சாயத்துவைத்துப்பங்குபிரிக்கும் சமயத்தில் வாய் வார்த்தைகள்
முற்றி உன் சங்காத்தமே வேண்டாமென்று பொதுவீட்டைத் தன்
தம்பிக்கே கணக்குப்பண்ணிக் கொடுத்துவிட்டு ஆலைக்குப்
பக்கத்திலேயே ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு பிரிந்துபோய்
விட்டார்கள் அண்ணன் குடும்பத்தினர்.
பிரிவிற்குப்பிறகு மேனா ஆரம்ப காலத்தில் செட்டிநாட்டுக்
கலைப் பொருட்கள், ரவிவர்மாவின் படங்கள், சாண்ட்லியர் சர
விளக்குகள், வேலைப்பாடுகள் மிகுந்த மரச்சாமான்கள் என்று
வாங்கிவிற்க ஆரம்பித்தவர், பிறகு ஏற்பட்ட வியாபாரத்தொடர்புகள் காரணமாக நிலைக்கதவுகள், உத்திரங்கள், மரத்தூண்கள், கல்தூண்கள் என்றும் வாங்கி விற்க ஆரம்பித்தார். பிறகு மற்றும் ஒரு காலகட்டத்தில் வீடுகளை விலைக்கு வாங்கி மேங்கோப்புக்களைப் பிரித்து மொத்தமாக விற்றுக் காசு பார்க்கும் தொழிலுக்கு இறங்கிவிட்டார்.
சிதிலமான பழைய வீடுகள்,பராமரிப்பு பிரச்சினையுள்ள வீடுகள்,
பங்குப் பிரச்சினையுள்ள வீடுகள் என்று விலைக்குவரும் எந்த
வீட்டையும் அவர் விட்டு வைக்கவில்லை.செட்டிநாட்டில் எந்த
ஊரையும் வீட்டுவைக்கவில்லை
இலட்சக்கணக்கில் பணம் பார்த்ததோடு, 'மேங்கோப்பு மேனா'
என்ற பட்டப்பெயரும் சேர, மிகவும் பிரபலமாகவேறு ஆகிவிட்டார்.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் ஒரு மாத காலத்தில் தரைமட்ட மாக்கி, வீடு இருந்த சுவடே தெரியாமல் செய்து விடுவார். மூன்று கார்கள், நான்கு லாரிகள், இடிபாடுகளை அகற்றுவதற்கு 'பொக்லைன்' இயந்திரம், நூற்றிற்கும் மேற்பட்ட கூலியாட்கள் பட்டாளம், பெரிய கிடங்கு என்று எல்லாம் சொந்தமாக வைத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரிய ஆளாகி விட்டார்.
முத்தாள் ஆச்சிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக எத்தனையோ முறைகள் சொல்லிப் பார்த்துவிட்டார். எதுவும் அவரிடம் எடுபட வில்லை!
ஆச்சி அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்.
"நகரத்தார்கள் என்றால் ஆக்கபூர்வமான தொழிலைத்தான் செய்ய வேண்டும். அழிக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது. நான் ஒருவன் செய்யாவிட்டால், வேறு ஒருவன் இதைச் செய்யப்போகிறான்
என்கிறீர்களே- யாரோ செய்து விட்டுப்போகட்டும். நமக்கு இந்தத்
தொழில் வேண்டாம்.மாட்டுப் பண்ணை வைக்கலாம் - கசாப்புக்கடை வைக்கலாமா ?"
உடனே ஆச்சியின் கணவர் மேனா சூடாகப் பதில் சொல்வார். "திருடக்கூடாது, அடுத்தவன் சொத்தைக் கொள்ளையடிக்கக்கூடாது - அவைதான் தர்மமற்ற செயல்கள். நான் செய்வது தொழில்.நீ
விளங்காமல் வியாக்கியானம் பேசாதே! நான் ஒரு வீட்டை முழுப்
பணமும் கொடுத்து வாங்கிய பிறகுதான் இடிக்கிறேன்.மேங்கோப்பை விற்கிறேன். அது எப்படி கசாப்புக் கடையாகும், சொல்!" என்பார்
முத்தாள் ஆச்சி விடமாட்டார்கள். "நம்ம சேது அய்த்தான் செய்கிறார்களே- இடம் வாங்கி, வீடுகள், கடைகள், கட்டிடங்கள் கட்டி விற்கிறார்களே- அதே தொழிலை நீங்களும் செய்யுங்களேன். எதற்காக
இந்த இடித்து விற்கும் தொழில் ? ஒரு வீட்டை விற்கும் போது அந்த வீட்டிலுள்ள பங்குதாரர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமித்த சந்தோஷத்
தோடா உங்களிடம் விற்கிறார்கள் ? பத்தில் இரண்டு பேர்களுக்காவது மனக்கசப்பு, வருத்தம் இருக்கவில்லையா ? எத்தனை வீடுகளில்
அந்த வீட்டின் குலதெய்வங்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அந்த
வீடுகளும் இடிபடத்தான் வேண்டுமா ? அந்த பாவமெல்லாம் நம்மைச்
சும்மா விடுமா ? சேது அய்த்தான் செய்வது மாட்டுப் பண்ணைத்
தொழிலுக்கு ஒப்பானது-நீங்கள் செய்வது கசாப்புக்கடை வேலை- இப்போதாவது வித்தியாசம் தெரிகிறதா ? செய்தவரை போதும்,
இனிமேல் செய்ய வேண்டாம்- விட்டு விடுங்கள்!"
ஆ னால் மேனாவா விடுவார்? குடித்துப் பழக்கப்பட்டவன் எப்படிக் குடிப்பழக்கத்தை விடமாட்டானோ - அப்படி மேனாவும் விடவில்லை. தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.
மேற்கோண்டு சொல்வார்." உன்னுடைய சிவபெருமான் உத்தரவு போடுவார் என்பாயே- அவர் உத்தரவு போடட்டும்-நான் நிறுத்தி
விடுகிறேன்"
ஆனால் அந்த ஆதிமூலத்தின் உத்தரவுகள் வாய் மொழியாக
வராது- செயல் வடிவாகத்தான் வரும் என்பது அவருக்குத்
தெரியாமல் போய்விட்டது!
********************************
அந்த ரெக்ஸீன் பை ஆசாமியுடன் செட்டியார் புறப்பட்டுச் செல்லும்
போது காலை மணி பத்து இருக்கும்.திருச்சி வரை போகிறேன்- இரவு திரும்பிவர தாமதமானாலும் ஆகும் என்று ஆச்சியிடம் சொல்லி
விட்டுப் போனார்
ஆ னால் இரவு திரும்பிவரும்போதுதான் எதிர்பாராத விதமாக
பெரிய சிக்கல் கிவிட்டது. திருச்சியிலிருந்து எட்டாவது கிலோ
மீட்டரில் செம்பட்டு விமான நிலயம் அருகே செட்டியாரின் கார் விபத்துக்குள்ளாகிவிட்டது.
கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு, எதிரில் வந்த லாரிக்காரன்
ஒருவன் செட்டியாரின் காரை அசுர வேகத்தில் ஒரு சாத்து சாத்தி
விட்டான். சாத்திய வேகத்தில் செட்டியாரின் கார் பின் பக்கமாக
வந்த மினி லாரி ஒன்றோடும் மோதிக் கவிழ்ந்ததில் செட்டியாருக்கு மட்டும்தான் பலமான அடி, காயங்கள். பின் தலைப்பகுதி, முதுகுப்
பகுதி, இடுப்பு என்று பலமான காயங்கள். காது,மூக்கு,வாய் வழியாக வெல்லாம் ரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. செட்டியார் மயங்கி
விட்டார்.
சிறிய காயங்ளுடன் தப்பிப் பிழைத்த செட்டியாரின் டிரைவர்தான்
உடனே நிலைமையை உணர்ந்து புத்திசாலித்தனமான வேலையைச் செய்தான்.
செட்டியாரின் சின்ன மைத்துனர் திருச்சி¢யில் மருத்துவராக ஒரு
பெரிய தனியார் மருத்துவமனையில் பணி புரிந்துகொண்டிருந்தார்.
அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் இருவரும் புறப்பட்டு வந்தனர். செட்டியாரின் செல்போனை எடுத்து பதட்டத்தோடு விஷயத்தை
அவரிடம் சொன்னான்
அடுத்து எல்லாம் மளமளவென்று நடந்தன.
அம்புலன்ஸ் வண்டியோடு இருபதே நிமிடங்களில் அந்த
இடத்திற்கு வந்த செட்டியாரின் சின்ன மைத்துனர், செட்டியாருக்கு
முதல் உதவியளித்ததோடு, தங்கள் மருத்துவ மணைக்கே கொண்டு
போய் அவசர சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்செய்தார்.
முத்தாள் ஆச்சிக்குக் காலையில்தான் தகவல் சொல்லப்பட்டது
முத்தாள் ஆச்சி தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு,
தமிழ் நாட்டிலுள்ள, தனக்குத்தெரிந்த அத்தனை கொவில் சாமிகளையும் வேண்டிக்கொண்டு தங்கள் கம்பெனி ஆ ட்கள் துணையோடு திருச்சிக்கு
வந்து சேர்ந்தார்கள்.செட்டியாரின் மகள்கள் இருவரும் தங்கள்
கணவருடன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தார்கள்.சிதம்பரத்தில்
கடைசி வருடம் பொறியியல் பட்டப் படித்துக்கொண்டிருந்த செட்டியாரின் மகனும் வந்து சேர்ந்தான்
மற்றும் உறவினர்கள், நண்பர்கள், வியாபாரத்தொடர்பு நட்புக்கள்
என்று மருத்துவமனையில் ஏராளமான கூட்டம்.
பத்து நாட்கள் வரையில் யாரையும் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.மூன்று முறை பெரிய அறுவை சிகிச்சைகள்
நடந்தன உடைந்திருந்த கழுத்து எலும்பு,ஸ்பைனல் கார்டு எலும்புகள்,
இடுப்பு எலும்புகள் என்று ஒவ்வொருபகுதிக்கும் தனித்தனியாக
சிகிச்சைகள் நடைபெற்றன.மொத்ததில் பின் தலைபப்குதியிலிருந்து,
முதுகு வழியாக பின் பகுதி முழுவதையும் மொத்தமாகப் பிரித்து
சிகிச்சையளித் திருந்தார்கள்
மோசமாக அடிபட்டிருந்த தண்டு வடத்தசைகளுக்கும், நரம்புகளுக்கும் சிறப்பு மருத்துவர் ஒருவர் வந்து அறுவை சிகிச்சை செய்தார்.
நான்கு இலட்சரூபாய் செலவு. உயிரைக் காப்பாற்றி விட்டார்களே தவிர செட்டியார் பழைய நிலைமைக்கு வருவது இயலாது என்று விட்டார்கள். மூன்று மாதங்கள் படுத்த படுக்கைதான். அதற்குப்பிறகு பயிற்சி கொடுத்து எழுந்து உட்காரவைக்கலாம் என்றார்கள்.கை, கால்களில் நல்ல உண்ர்வுகள் திரும்பினால் வாக்கரின் உதவியுடன் நடக்க வைக்க முயற்சிக்கலாம் என்றார்கள்.
பதினைந்தாவது நாள்தான் சிறப்புக் கண்காணிப்புப் பிரிவை விட்டு தனி அறைக்குத் தூக்கிக்கொண்டுவந்து படுக்க வைத்தார்கள்.
செட்டியாரின் முகம் தெளிவாக இருந்தது.அலைபாய்ந்த கண்கள் முதலில் முத்தாள் ஆச்சியைத்தான் தேடின!
சற்றுத்தள்ளி நின்று கொண்டிருந்த ஆச்சி படுக்கையின் அருகில் வந்து நின்றார்கள்.
செட்டியார் மெல்லிய குரலில் சொன்னார்," உங்களுக்கெல்லாம் மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டேன்."
ஆச்சி பதிலுக்கு' ம்' ...என்றார்கள்
"என்ன முத்தா, ம்' என்கிறாய், ஏதாவது பேசு !" என்றார் செட்டியார் விடாமல்
ஆச்சி பட படவென்று பொரிந்து தள்ளிவிட்டார்கள்
"ஆண்டவன் உத்தரவு போடட்டும் என்று ஏளனம்
செய்வீர்களே! உத்தரவை எப்படிப்போட்டான் பார்த்தீர்களா ?
ஊர் மேங்கோப்பை யெல்லாம் நீங்கள் பிரித்தீர்கள், உங்கள்
மேங்கோப்பை அவன் பிரித்து விட்டான்.என் தாலி பாக்கியம்
தான் - இவ்வளவு பெரிய விபத்தில் நீங்கள் உயிர் பிழைத்
துள்ளீர்கள். போனது போகட்டும், மனம் உடைந்து விடாதீர்கள்.
நான் இருக்கிறேன் உங்களைக் கடைசிவரை வைத்துக் காப்பாற்றுவேன்.மனம் தளராமல் நம்பிக்கையோடிருங்கள்! "
எவ்வளவு நிதர்சனமான உண்மை!
கண்களில் நீர் வழிந்தோட விம்மி, விம்மி அழ ரம்பித்து விட்டார் செட்டியார் - அதுவும் வாழ்க்கையில் முதன் முறையாக !
அடிபட்டுப் படுத்திருக்கும் மனிதரிடம் ஏன் அப்படிச் சொன்னோம் என்றாகிவிட்டது ஆச்சிக்கு.அருகில் சென்ற ஆச்சி அவருடைய
தோளில் தட்டிக்கொடுத்தார்கள்.
ஆனால் உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம் இல்லையா? அதை உணர்ந்த செட்டியாரின் மனது சமாதானமடைந்தது என்பதை அவரது முகமே
காட்டியது!
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
தெய்வம் எப்போதும் வேறொரு உருவில் தான் பேசும்,
ReplyDeleteஅதை கூர்ந்து கவனித்தால் தான் புரிந்துக் கொள்ள முடியும்.....
அந்த ஆதி மூலம் தானே முத்தாச்சியின் மூலம் வந்து சொல்லி இருக்கிறான்....
பணம் சம்பாதிப்பது அவசியம் தான்... ஆனால் எதிலும் ஒரு தர்மம் வேண்டும் என்று கூறும் முத்தாச்சியின் சிந்தனை அற்புதம்..... நான் செய்யா விட்டால் வேறு ஒருவர் இதைச் செய்வார் என்பது எதார்த்தம் தான் ஆனால், நாம் செய்வது தர்மமாகாது என்ற உணர்வு நம் வீட்டிற்கு வந்த உடனாவது அதை நிறுத்தி இருக்க வேண்டும்.... அதை செட்டியார் செய்யாது விட்டு விட்டார்.
திருடுவது, பொய் சொல்வது என்றல்ல இது போன்றதொரு ஒரு சில ஆத்மாக்களின் துயரத்தில் வரும் பொருளும் பாவப்பட்டதே என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது......
அற்புதமானச் சிறுகதை....
நன்றிகள் ஆசிரியரே!
"ஊர் மேங்கோப்பையெல்லாம் நீங்கள் பிரித்தீர்கள், உங்கள் மேங்கோப்பை இறைவன் பிரித்து விட்டான்" என்று ஆச்சி மனம் வருந்திச் சொன்ன சொற்களில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஆக்கும் பணியைத்தான் உத்தமமான மனிதன் செய்ய வேண்டும், அழிக்கும் பணிகளையல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தும் நிகழ்ச்சி இது. இடிக்கப்படும் அந்த இல்லத்தில் எத்தனை நல்ல காரியங்கள் நடந்திருக்கும். எத்தனைப் புனித எண்ணங்கள் பரவியிருந்திருக்கும். அப்படிப்பட்ட இடம் இடிக்கப்பட்டு பாழ்மனையாகச் செய்வது எத்தனைப் பாவச் செயல். செய்யும் தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார். அதனை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். இது கதை அல்ல என்று நினைக்கிறேன், தாங்கள் நேரில் கண்டு உணர்ந்த உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். இந்த மண்ணில் இன்னமும் இதுபோன்ற தர்ம சிந்தையும், தொழில் தர்மமும் இருப்பதால்தான் இத்தனை ஊழல், மோசடி, பித்தலாட்டம், கொள்ளை இவற்றுக்கு மத்தியில் இறைவன் தான் இருப்பதை உணர்த்திக்கொண்டு மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான். "பகை நடுவினில் அன்புருவான நம் ஈசன் இருக்கின்றான்" என்பது இதுதான். பொருள்முதல் வாதத்துக்கு இந்த ஆன்மீக வாதம் சரியான விடையாக அமைந்திருக்கிறது. வாழ்க!
ReplyDelete////Alasiam G said...
ReplyDeleteதெய்வம் எப்போதும் வேறொரு உருவில் தான் பேசும்,
அதை கூர்ந்து கவனித்தால் தான் புரிந்துக் கொள்ள முடியும்.....
அந்த ஆதி மூலம் தானே முத்தாச்சியின் மூலம் வந்து சொல்லி இருக்கிறான்...
பணம் சம்பாதிப்பது அவசியம் தான்... ஆனால் எதிலும் ஒரு தர்மம் வேண்டும் என்று கூறும் முத்தாச்சியின் சிந்தனை அற்புதம்..... நான் செய்யா விட்டால் வேறு ஒருவர் இதைச் செய்வார் என்பது எதார்த்தம் தான் ஆனால், நாம் செய்வது தர்மமாகாது என்ற உணர்வு நம் வீட்டிற்கு வந்த உடனாவது அதை நிறுத்தி இருக்க வேண்டும்.... அதை செட்டியார் செய்யாது விட்டு விட்டார்.
திருடுவது, பொய் சொல்வது என்றல்ல இது போன்றதொரு ஒரு சில ஆத்மாக்களின் துயரத்தில் வரும் பொருளும் பாவப்பட்டதே என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது......
அற்புதமானச் சிறுகதை....
நன்றிகள் ஆசிரியரே!////
உங்களின் எண்ணப்பகிர்விற்கும் பாராட்டிற்கும் நன்றி ஆலாசியம்!
/////Thanjavooraan said...////
ReplyDelete"ஊர் மேங்கோப்பையெல்லாம் நீங்கள் பிரித்தீர்கள், உங்கள் மேங்கோப்பை இறைவன் பிரித்து விட்டான்" என்று ஆச்சி மனம் வருந்திச் சொன்ன சொற்களில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஆக்கும் பணியைத்தான் உத்தமமான மனிதன் செய்ய வேண்டும், அழிக்கும் பணிகளையல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தும் நிகழ்ச்சி இது. இடிக்கப்படும் அந்த இல்லத்தில் எத்தனை நல்ல காரியங்கள் நடந்திருக்கும். எத்தனைப் புனித எண்ணங்கள் பரவியிருந்திருக்கும். அப்படிப்பட்ட இடம் இடிக்கப்பட்டு பாழ்மனையாகச் செய்வது எத்தனைப் பாவச் செயல். செய்யும் தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார். அதனை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். இது கதை அல்ல என்று நினைக்கிறேன், தாங்கள் நேரில் கண்டு உணர்ந்த உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். இந்த மண்ணில் இன்னமும் இதுபோன்ற தர்ம சிந்தையும், தொழில் தர்மமும் இருப்பதால்தான் இத்தனை ஊழல், மோசடி, பித்தலாட்டம், கொள்ளை இவற்றுக்கு மத்தியில் இறைவன் தான் இருப்பதை உணர்த்திக்கொண்டு மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான். "பகை நடுவினில் அன்புருவான நம் ஈசன் இருக்கின்றான்" என்பது இதுதான். பொருள்முதல் வாதத்துக்கு இந்த ஆன்மீக வாதம் சரியான விடையாக அமைந்திருக்கிறது. வாழ்க!//////
உண்மையில் இது கற்பனைக் கதைதான். இதுபோன்ற செயல்களுக்கு என்ன தீர்வு என்று நினைக்கும்போது - ஒரு பொறியில் இந்தக் கதை கிடைத்தது. அத்துடன் ஒரே வேகத்தில் எழுதிமுடிக்கப்பட்ட கதையும் ஆகும்! உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி!
அருமையான / சுவாரசியமான கதை.
ReplyDeleteஇதை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போதும் சுவாரசியமாகவே இருந்தது.
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
மிகப்பெரிய ஆன்மிக தத்துவத்தை மிக எளிதான வார்த்தைகளால் ஆன
கதையால் விளக்கிவிட்டீர்கள் அய்யா.பாராட்டுக்கள்.
அன்புடன்,
அரசு.
வணக்கம் அய்யா.
ReplyDeleteநீதி என்ரும் மறைவதுயில்லை.காலதுக்கு ஏட்ற கர்ப்பனை கதை.ஆனால்
இது நிசம்போல கோர்த்தவிதம், கர்ப்பனைக்கு அப்பார் பட்டு நிர்க்கிரது
தன்கலது எழுத்தாற்றல். வாழ்க வளமுடன்.
அரிபாய்,நன்றி.
ரொம்ப நாளாச்சு..இப்பிடி ஸ்டைல்லே உங்க கதையைப் படிச்சு..கதை வழக்கம்போலவே நல்லா வந்துருக்கு..ஆனாலும் மேனாவின் மேங்கோப்பை இப்படிப் பிரிச்சு மேய்ந்திருக்க வேணாம்..
ReplyDeleteகதைலே திடீர்னு 'மேனா' சொன்னது செட்டிநாட்டு ஸ்டைல் பழக்கமானவுங்களுக்கு புரிஞ்சுடும்..மெய்யப்ப செட்டியாரைப் பத்தி சொல்லிய அடுத்தடுத்த பாராவிலே திடீர் 'மேனா' பிரசுரம்... கொஞ்சம் நிதானித்து ரிவர்ஸ் கியரில் போயி 'யாரு அந்த மேனா?' ன்னு துழாவ வேண்டியதாப் போச்சு..
/// "நகரத்தார்கள் என்றால் ஆக்கபூர்வமான தொழிலைத்தான் செய்ய வேண்டும். அழிக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது."///
ReplyDeleteஆகா!என்ன ஒரு தர்ம சிந்தனை!நம் நாட்டில் "தொழில்" என்று சொல்லாமல்,
'தர்மம்'என்று சொன்னார்கள்.ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த திறமைகளைச் சமூகத்திற்கு தர்மமாகக் கொடுக்க வேண்டும்.சமூகம் அவர்களுடைய தேவைகளைப் பார்த்துக் கொள்ளும்.இப்படி ஒரு அமைப்பு இருந்தது. இல்லாவிட்டால் இவ்வளவு அழகான கோவில்கள் வந்து இருக்க முடியுமா? 'லாபம்' என்ற எண்ணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாமல்
சமூக சேவை முன்னிறுத்தப்பட்டது.
ராங்கியம் தெய்வத்திரு.சுப்ரமணியம் செட்டியார்(லக்ஷ்மி சீவல்=பாக்கு)அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என்னுடைய 36 வயது முதல் 45 வயதுவரை கிடைத்தது.மரபுகளை அவர் கடைப் பிடித்ததையும், குணம், பணம் இரண்டிலும் அவர் காட்டிய விசேட கவனத்தையும் உள் வாங்கிக் கொண்டேன்.என் ஆளுமையை(personality) வெகுவாக மாற்ற அவருடைய தொடர்பு காரணம்.அவர் இருந்த போது தஞ்சையில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும்,முதல் நன்கொடை ரசீது அவர் பெயரிலேயே எழுதப்பட்டது.துன்பம் அவருக்கு வந்த போது,சொந்தங்கள்,பந்தங்கள், நட்புக்கள் எல்லோரும் விலகிக் கொண்டனர்.
நான் அப்போதும் அவருடன் கூடவே நின்றேன்.தன் கடைசி மூச்சு இருந்தவரை என்னை பார்க்கும் போதெல்லாம் நன்றியுடன் நினைவு கூர்வார்.இப்படியும் ஒருவரா என்று வியக்க வைத்தவர்.
மிக அருமையான கதை.
ReplyDeleteகருத்து உள்ள கதை.
சிறுகதை with a message super sir.
////Uma said...
ReplyDeleteஅருமையான / சுவாரசியமான கதை.
இதை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போதும் சுவாரசியமாகவே இருந்தது.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
/////ARASU said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
மிகப்பெரிய ஆன்மிக தத்துவத்தை மிக எளிதான வார்த்தைகளால் ஆன
கதையால் விளக்கிவிட்டீர்கள் அய்யா.பாராட்டுக்கள்.
அன்புடன்,
அரசு./////
உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!
////aryboy said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
நீதி என்றும் மறைவது இல்லை.காலதுக்கு ஏற்ற கற்பனைக் கதை. ஆனால்
இது நிசம்போல கோர்த்தவிதம், கற்பனைக்கு அப்பாற்பட்டு நிற்கிறது
தங்களது எழுத்தாற்றல். வாழ்க வளமுடன்.
அரிபாய்,நன்றி./////
உங்களது பாராட்டிற்கு நன்றி நண்பரே! இது போன்ற பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. அதாவது Tonic!
////minorwall said...
ReplyDeleteரொம்ப நாளாச்சு..இப்பிடி ஸ்டைல்லே உங்க கதையைப் படிச்சு..கதை வழக்கம்போலவே நல்லா வந்துருக்கு..ஆனாலும் மேனாவின் மேங்கோப்பை இப்படிப் பிரிச்சு மேய்ந்திருக்க வேணாம்..
கதைலே திடீர்னு 'மேனா'ன்னு சொன்னது செட்டிநாட்டு ஸ்டைல் பழக்கமானவுங்களுக்கு புரிஞ்சுடும்..மெய்யப்ப செட்டியாரைப் பத்தி சொல்லிய அடுத்தடுத்த பாராவிலே திடீர் 'மேனா' பிரசுரம்... கொஞ்சம் நிதானித்து ரிவர்ஸ் கியரில் போயி 'யாரு அந்த மேனா?' ன்னு துழாவ வேண்டியதாப் போச்சு../////
நல்லது மைனர். உங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
////kmr.krishnan said...
ReplyDelete/// "நகரத்தார்கள் என்றால் ஆக்கபூர்வமான தொழிலைத்தான் செய்ய வேண்டும். அழிக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது."///
ஆகா!என்ன ஒரு தர்ம சிந்தனை!நம் நாட்டில் "தொழில்" என்று சொல்லாமல்,
'தர்மம்'என்று சொன்னார்கள்.ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த திறமைகளைச் சமூகத்திற்கு தர்மமாகக் கொடுக்க வேண்டும்.சமூகம் அவர்களுடைய தேவைகளைப் பார்த்துக் கொள்ளும்.இப்படி ஒரு அமைப்பு இருந்தது. இல்லாவிட்டால் இவ்வளவு அழகான கோவில்கள் வந்து இருக்க முடியுமா? 'லாபம்' என்ற எண்ணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாமல்
சமூக சேவை முன்னிறுத்தப்பட்டது.
ராங்கியம் தெய்வத்திரு.சுப்ரமணியம் செட்டியார்(லக்ஷ்மி சீவல்=பாக்கு)அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என்னுடைய 36 வயது முதல் 45 வயதுவரை கிடைத்தது.மரபுகளை அவர் கடைப் பிடித்ததையும், குணம், பணம் இரண்டிலும் அவர் காட்டிய விசேட கவனத்தையும் உள் வாங்கிக் கொண்டேன்.என் ஆளுமையை(personality) வெகுவாக மாற்ற அவருடைய தொடர்பு காரணம்.அவர் இருந்த போது தஞ்சையில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும்,முதல் நன்கொடை ரசீது அவர் பெயரிலேயே எழுதப்பட்டது.துன்பம் அவருக்கு வந்த போது,சொந்தங்கள்,பந்தங்கள், நட்புக்கள் எல்லோரும் விலகிக் கொண்டனர்.
நான் அப்போதும் அவருடன் கூடவே நின்றேன்.தன் கடைசி மூச்சு இருந்தவரை என்னை பார்க்கும் போதெல்லாம் நன்றியுடன் நினைவு கூர்வார்.இப்படியும் ஒருவரா என்று வியக்க வைத்தவர்.////
உங்களின் கருத்துப்பகிர்விற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
//////vprasanakumar said...
ReplyDeleteமிக அருமையான கதை.
கருத்து உள்ள கதை.
சிறுகதை with a message super sir.////
உங்களது பாராட்டிற்கு நன்றி பிரசன்னகுமார்
சார்,
ReplyDeleteபிரமாதமான கதை. தொய்வில்லாத நடையில் சிறப்பாக எழுதியிருந்தீர்கள்.
மைனருக்கு தோன்றியதுபோல் தான் எனக்கும் பட்டது. என்னஇருந்தாலும் ஆண்டவன் அவரை இப்படி பிரித்து
மேயந்திருக்ககூடாது. ஆனாலும் அதிலும் ஆண்டவன் கருணையைப் பாருங்கள். செட்டியாரோ மேங்கோப்பை பிரித்து விற்று கொண்டே வந்தார். ஆண்டவனோ அவர் மேங்கோப்பை பிரித்ததோடல்லாமல் மேய்ந்தும் வேறு கொடுத்திருக்கார். என்னே அவன் கருணை.
தெய்வம் நின்றூ கொல்லும்
ReplyDeleteவீட்டில் சமையல் செய்பவர்கள் கையில் ருசியுடன் அவர்களின் அன்பும் இருக்குமாம். அதனால் தான் ஹோட்டல் உணவை விட வீடு உணவை பலர் ருசித்து உண்பார்கள். (சில பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்காது - அது அவர் அவர் வங்கி வந்த வரம்). அது போல நாம் செய்யும் தொழிலும் நமது வாழ்வை பிரதிபலிக்கும். நல்ல கருத்துள்ள கதை அய்யா.
ReplyDelete///"மைனருக்கு தோன்றியதுபோல் தான் எனக்கும் பட்டது. என்னஇருந்தாலும் ஆண்டவன் அவரை இப்படி பிரித்து மேயந்திருக்ககூடாது."///
ReplyDeleteஆச்ச்சியின் கூற்றாக ஆசிரியர், 'ஆண்டவன் தண்டித்துவிட்டதாகக்' கூறினாலும் நம் தத்துவப்படி ஆண்டவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் கிடையாது.
நமது இறைக் கொள்கைப்படி அவரவர் செய்யும் நல்ல,தீய செய்கைகளுக்கு
ஏற்ற பலன்கள் இயற்கையாக ஏற்படும்.
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"====வள்ளுவம்
இக்குறளில் திருவள்ளுவர் "தாமே"என்று அழுத்தம் கொடுத்து இறைவனை
தண்டிப்பவர் என்ற நிலையில் இருந்து கழட்டி விட்டு விடுகிறார்.
"தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினைஅறுப்பான்"
"விரை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?"
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.."
இவையும் இன்னும் பலவும் சொல்ல வருவது, நம் நற்செயலோ தீச் செயலோ
அதனதன் விளைவுகளை ஏற்படுத்துகின்றனவே அன்றி இதில் ஆண்டவன் தலையிடுவதில்லை.
துன்பம் வரும்போது பெரியவர்கள் ஆறுதலாகச் சொல்லுவார்கள் "பட்டுத் தீர்த்துவிடு.பாவம் தொலையட்டும்"
நமது தத்துவப்படி,சொர்கம், நரகம் என்பது முடிவான கொள்கையல்ல.
செய்த நன்மைக்காக சொர்க வாசமும் அதே நபருக்கு செய்த பாவத்திற்காக
நரக வாசமும், மீண்டும் பூமியில் பிறப்பும் உண்டு.
"சர்வ தர்மான் பரித்யச்ச மாமேகம் சரணம் வ்ரஜ"
முற்றிலும் சரணாகதி செய்து எல்லா செயல்களையும் தியாகம் செய்யும்
மன்ப்பக்குவம் அடைந்து விட்டால்,இறைவனோடு கலந்துவிடலாம் (அத்வைதம்)அல்லது அவன் திருப்பாதங்களுக்கு அருகில் சென்று அவனுக்குச் சேவை செய்யலாம்(துவைதம்).அந்நிலையில் சுவர்கம், நரகம் புனர் ஜன்மம் எதுவும் வராது.
நன்மை, தீமை; இன்பம் துன்பம்; வெப்பம்,குளிர் போன்ற எந்த இரட்டையும்
ஆண்டவனுக்கு இல்லை. அவன் 'வேண்டுதல் வேண்டாமை' இல்லாதவன்
எல்லாவற்றிற்கும் அவன் மெளன சாட்சியாக இருக்கிறான்.அவன் நீதிபதி அல்ல.
அப்ரஹாமிக் மதங்களில் அவன் நீதிபதியாக உருவகிக்கப் படுகிறான்.ஒருநாள்
நீதிநாளாக வரப்போகிறது. அன்று அவன் எல்லா பாவிகளையும் தண்டிப்பான்.
சுவர்கம் கிடைத்தவர்களுக்கு இந்த உலகைப் போலவே எல்லா செளகர்யங்களும் கிடைக்கும்.என்ன, இங்கே 4 பெண்கள் தான் திருமணம் செய்து கொள்ளலாம்.
சுவர்கத்தில் 72 பளிங்குச்சிலை போன்ற கன்னிப் பெண்கள் கிடைப்பார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteKMRK சார்,
ReplyDeleteநீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. பூர்வ ஜென்ம வினைதானே கிடந்து
அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடாமல் வேண்டிக்கொண்டுவிட்டாளே ஆச்சி
என்பதற்காக மேய்ந்து கொடுத்த ஆண்டவனின் கருணைதான் என் மனக்கண் முன் நிற்கிறது.
என்னைப்பொறுத்தவரை ஆண்டவனின் கருணை அளப்பரியது.
miga nandraaga erukku sir .
ReplyDeleteநன்றாக இருந்தது ஐயா.
ReplyDelete