11.9.08

சிட்டுக்குருவியின் முத்தமும் கிணற்றுத் தவளையின் சத்தமும்!

தொண்டி கடற்கரை அருகே ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு கிணறு இருந்தது.
அதிக பராமரிப்பின்றி இருக்கும் தெருவோரக் கிணறு.

அதில் தவளை ஒன்று பிறந்ததில் இருந்து வசித்து வந்தது. மேலே ஏறி தப்பிச்
சென்று, வெளியுலகைக் காண முடியாத தவளை அது.

அது எட்டடி விட்டமுள்ள கிணறு. முப்பதடி ஆழம். மழைகாலத்தில் பத்தடி
உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் மற்ற காலங்களில் வற்றி மூன்று அல்லது நான்கடி
ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் இருக்கும். கிணற்றின் உள் வட்டத்தில் ஆங்காங்கே
அரை அடி அகலத்திற்குப் புல் முளத்த திட்டுக்கள் இருக்கும். அங்கே கிடைக்கும்,
பூச்சி புழுக்களைச் சாப்பிட்டு விட்டு, தேமே என்று கிணற்றிலேயே வாழ்ந்து
கொண்டிருந்தது அந்தத் தவளை.

அது பெண் தவளை (இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்)

ஒரு நாள் கடற்கரைப் பகுதியில் இருந்து வழி தவறி வந்து விட்ட புதிய தவளை
ஒன்று, அந்தக் கிணற்றுக்குள் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்க, தவறிக் கிணற்றின்
உள்ளே விழுந்து விட்டது!.அது ஆண் தவளை!

அதுவும் உள்ளே மாட்டிக் கொண்டு விட்டது.

ஆனால் உள்ளே இருந்த பழைய தவளையைக் கண்டதும், பேச்சுத் துணைக்கு
ஒரு நண்பி கிடைத்துவிட்டாளே என்று இதுக்கு ஒரு மகிழ்ச்சி.

பழைய தவளை புதிய தவளையிடம் பேச்சுக் கொடுத்தது:

"எங்கே இருந்தே இதுவரைக்கும்?"

"பக்கத்துக் கிராமத்துல!அது கடல் ஓரம் இருக்கிற கிராமம்"

"கிராமம்னா?"

"அதெல்லாம் உனக்குச் சொன்னா விளங்காது!"

"நீ சொன்னா சரிதான். ஆனா, ஒன்னை மட்டும் நீ எனக்குச் சொல்லணும்.
தினமும் காலையிலேயும், மாலையிலேயும், கீச், கீச்சுன்னு பயங்கரமா
சத்தம் கேக்குதே. அது என்ன?"

"அதுவா, பக்கத்தில நிறைய ஆலமரங்கள் இருக்கு, அங்க இருக்கிற
குருவிங்கதான் அப்படி சவுண்ட் விடுதுங்க!"

"ஆமா, கிணத்துக்கு மேல தினமும் இங்கேயும் அங்கேயும் அதுக பறந்து
போறபோது பார்த்திருக்கேன். அதுங்க பேரை, நீ சொல்லித்தான் இப்ப
தெரிஞ்சுகிட்டேன்"

".................................."

"அதுங்க ஏன் சிலசமயம் அதிகமா சவுண்ட் விடுதுங்க?"

"அதுங்களுக்கு லவ்ஸ் வந்துட்டா, அப்படித்தான் சவுண்ட் விடும்.
அப்பாலிக்கா ஒன்னுக்கு ஒன்னு முத்தம் கொடுத்து, லவ்ஸ் மேட்டர்
முடிஞ்சுதுன்னா சத்தம் போடுறதை நிறுத்திடுங்க!"

"முத்தம்னா என்ன?"

குஷியான ஆண் தவளை, முத்தத்தின் இலக்கணத்தைச் செயல் முறையில்
சொல்லிக் கொடுத்தது.

பெண் தவளை மிகவும் மகிழ்ந்துபோய்க் கடைசியில் சொன்னது:

"நீ கில்லாடியான ஆளுதான்! பேசாம நீ இங்கே என்னோடயே தங்கிடு!"

"வேற வழி? அதைத்தான் செய்யனும் நான்"

"இன்னொரு சந்தேகம். வெளியே இது போன்ற நீர்நிலைகள் (கிணறுகள்) இருக்கின்றனவா?"

"அதெல்லாம், படா படா சைசில இருக்கு. பெரிய பெரிய பெரிய ஏரிகளெல்லாம்
இருக்கு. நான் ஓரளவு சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஏன் பக்கத்தில பெரிய கடல்
இருக்கு. அதைப் பார்த்தீன்னா நீ அசந்து போயிடுவே?"

"கடல்னா?"

"அதெல்லம் விளக்கிச் சொல்ல முடியாது.பார்த்தாக்கத்தான் புரியும்!"

"அங்கே தண்ணி நிறைய இருக்குமா?"

"ஆகா, பயங்கரமா இருக்கும், காலை வைச்சீன்னாக்கா - அவ்வளவுதான்
- உன்னை உள்ள இழுத்துப் போட்டு முழுங்கிடும்!"

"எவ்ளோவ் தண்ணி இருக்கும்? இவ்வளவு தண்ணி இருக்குமா?" என்று கேட்டு
தன் கைகள் இரண்டையும் முடிந்த மட்டும் நீட்டிக் காட்டியது.

பதிலுக்கு நம்ம ஆளு வெறுமனே சிரித்தது. வேறு என்ன செய்ய முடியும்?

உடனே கிணற்றுத்தவளைக்குக் கோபம் வந்து, ஆத்திரத்துடன் கிணற்றின்
ஒரு பக்கக் கரையில் இருந்து தாவி மறுகரையில் குதித்துவிட்டு, மீண்டும்
அங்கிருந்து தம் பிடித்துத் தாவி இந்தக் காரைக்கு வந்து, கேட்டது.

"இப்போ நான் தாவிய தூரத்திற்குத் தண்ணீர் இருக்குமா?"

அதாவது இதைப்போல இரண்டு மடங்கு தண்ணீர் இருக்குமா என்று கேட்டது.

அதற்கு நம்ம ஆளு புன்னகைத்துவிட்டுச் சொன்னது." இதைப் போல பல கோடி
மடங்கு தண்ணீர் இருக்கும்"

உடனே அது கேட்டது." கோடீன்னா என்ன?"

"உனக்கு அதை வேறு விளக்க வேண்டுமா? தாவு தீர்ந்து விடும். நீ பேசாமல்
உன் அறிவு ஞானம் ஆகியவற்றை இந்தக் கிணற்றோடு நிறுத்திக் கொள்.
என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்"

(முற்றும்)
-------------------------------------------------------------------------------------
"யோவ் வாத்தியார், எதற்காக இந்தக் கதை?"

"புரிந்தவர்களுக்குப் புரியட்டும். புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்.
எல்லாம் ஈசன் படைப்பு. எதற்கு என்று என்னால் பிரித்துச் சொல்ல முடியாது.
எதற்கு வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்!"

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

29 comments:

  1. ஆறு மனமே ஆறு ...


    ஆறுமனமே ஆறு - அந்த
    ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
    தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு! (ஆறு)

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி!

    சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
    துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
    இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
    உயரும்போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்!

    உண்மை என்பது அன்பாகும் - பெரும்
    பணிவு என்பது பண்பாகும் - இந்த
    நான்கு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

    ஆசை, கோபம், களவு கொள்பவன்
    பேசத் தெரிந்த மிருகம்

    அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
    மனித வடிவில் தெய்வம் - இதில்
    மிருகம் என்பது கள்ளமனம் - உயர்
    தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
    ஆறு கட்டளை அறிந்த மனது
    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)

    ReplyDelete
  2. அய்யா கோபமாய் இருக்கிறீர்கள் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது !

    ReplyDelete
  3. /////thenkasi said...
    ஆறு மனமே ஆறு ...
    ஆறுமனமே ஆறு - அந்த
    ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
    தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு! (ஆறு)////

    வாங்க தென்காசி! எனக்குப் பிடித்த பாடலைப் போட்டு அசத்திவிட்டீர்கள்!

    ReplyDelete
  4. /////ARUVAI BASKAR said...
    அய்யா கோபமாய் இருக்கிறீர்கள் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது !////

    எனக்குக் கோபமே வராது ராஜா! நான் மிகவும் ஜாலியான ஆசாமி!

    ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி!
    அதுதான் என்றைக்கும் என்னுடைய பாலிஸி!

    கதை எதற்கு என்பதை நமது வகுப்பறைக் கண்மணிகளில் யாராவது ஒருவர் கண்டு பிடித்துச் சொல்வார்கள். பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  5. அறியாமையே பேரின்பம் . . .

    ReplyDelete
  6. ////வெங்கட்ராமன் said...
    அறியாமையே பேரின்பம் . . .///

    உண்மை: அதனால்தான் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன!

    ReplyDelete
  7. ஆசானே ! என்ன ஆச்சு. இன்று கதை மட்டும் தானா?

    "புரிந்தவர்களுக்குப் புரியட்டும். புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்." எது? சோதிடமா!!!!!!!

    ReplyDelete
  8. இது ஜோதிடம் தெரிந்த தவளையும் தெரியாத தவளையும் பேசுவது போல் உள்ள

    ReplyDelete
  9. //////அணுயோகி said...
    ஆசானே ! என்ன ஆச்சு. இன்று கதை மட்டும் தானா?
    "புரிந்தவர்களுக்குப் புரியட்டும். புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்." எது? சோதிடமா!!!!!!!/////

    நான் நினைத்தது சரியாக உள்ளது. ஜோதிடம் பற்றியதல்ல இந்தக் கதை. இறைவனின் பிரம்மாண்டத்தை உணர்த்தும் கதை.
    அதை நினைவில் கொண்டு மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

    ReplyDelete
  10. /////தமிழன் said...
    இது ஜோதிடம் தெரிந்த தவளையும் தெரியாத தவளையும் பேசுவது போல் உள்ளது///////

    இல்லை. இது இறைவனை உணர்ந்தவனும், இறை மறுப்பாளனும் பேசிக் கொள்ளும் கதை. அதைக் கதையிலேயே சொல்லியிருப்பேன். எதற்காகச் சொல்லவில்லை என்றால் எத்தனை பேர்கள் கண்டுபிடிக்கிறீர்கள் பார்ப்போம் என்று இருந்தேன்.
    ஹீம்,.......ஒருத்தர் கூட கண்டுபிடிக்கவில்லை. மாறாக "இது ஜோதிடம் தெரிந்த தவளையும் தெரியாத தவளையும் பேசுவது போல் உள்ளது" என்று எழுதி உள்ளீஈர்கள்.ஜோதிடம் ஒரு கலை; எல்லோருக்கும் அது எப்படித் தெரிந்திருக்க முடியும்? ஒரு காலத்தில் நானும் அது பற்றித் தெரியாமல் இருந்தவன்தானே? இறைவன் அப்படியா? இந்த பூமியின் ஒழுங்கான சுழற்சியையும், பூமியில் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் இயற்கை ஆதாரங்களையும் (நிலம், நீர், காற்று, பயிர்கள், கனிகள் போன்ற எண்ணற்றவை) பார்த்து ஒவ்வொரு மனிதனும் அதை உணரவேண்டாமா? உணராதவர்கள் அனைவரும் கிணற்றுத் தவளைகளே! அவர்களுக்கு எதைச் சொல்லிப் புரிய வைப்பீர்கள்? கேள்வி மேல் கேள்வி (அந்தக் கிணற்றுத் தவலையைப் போல) கேட்டுக் கொண்டிருப்பார்களே!
    இதை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை படியுங்கள். புரியும்!

    ReplyDelete
  11. கதை அருமை,நீங்கள் எதைச் சொன்னலும் ரசிக்கமுடியுதே அது எப்படி?இந்த வித்தைய எங்கே கத்துகிட்டிங்கே?...புதன் உங்களுக்கு பலமாய் இருக்கரோ?அன்னை சரஸ்வதி என்றும் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    >>ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி!
    அதுதான் என்றைக்கும் என்னுடைய பாலிஸி!<<

    இப்படி இருந்தால் தான் வாழ்கையை அனுபவிக்க முடியும் ஐயா.

    >>கதை எதற்கு என்பதை நமது வகுப்பறைக் கண்மணிகளில் யாராவது ஒருவர் கண்டு பிடித்துச் சொல்வார்கள். பொறுமையாக இருங்கள்!<<

    யோசிச்சிகிட்டு இருக்கேன்.....(ஒருசமயம் ஆச்சியால இருக்குமோ....)

    ReplyDelete
  12. //////மதி said...
    கதை அருமை,நீங்கள் எதைச் சொன்னலும் ரசிக்கமுடியுதே அது எப்படி?இந்த வித்தைய எங்கே கத்துகிட்டிங்கே?...புதன் உங்களுக்கு பலமாய் இருக்காரோ?அன்னை சரஸ்வதி என்றும் உங்களுக்கு அருள் புரியட்டும்.//////

    ஆமாம் புதன் ஏழில் லக்கினத்தை எந்நேரமும் லக்கினத்தைப் பார்த்துக் கொண்டு.அதோடு ரசனைக்கு உரிய கிரகமான சுக்கிரன் உச்சம்!

    அடிப்படையில் நான் ஒரு சிறந்த வாசகன். அதனால் ரசிக்கும்படி எழுதும் பலரின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
    அந்தத் தாக்கம் என் எழுத்துக்களில் இருக்கலாம்.
    ----------------------------------------------
    >>ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி!
    அதுதான் என்றைக்கும் என்னுடைய பாலிஸி!<<

    இப்படி இருந்தால் தான் வாழ்கையை அனுபவிக்க முடியும் ஐயா./////

    ஆமாம் அதொடு,"வந்ததை வரவில் வைப்போம்; சென்றதைச் செலவில் வைப்போம்" என்கின்ற எனது ஆசானின் வரிகளும் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன
    -----------------------------------------------------
    >>கதை எதற்கு என்பதை நமது வகுப்பறைக் கண்மணிகளில் யாராவது ஒருவர் கண்டு பிடித்துச் சொல்வார்கள். பொறுமையாக இருங்கள்!<<
    யோசிச்சிகிட்டு இருக்கேன்.....(ஒருசமயம் ஆச்சியால இருக்குமோ....)/////

    பாவம் சாமி அந்த இளம் பெண்.கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஆர்வமும், பதிவுகளைப் படிக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் வந்ததே பெரிய காரியம். அதை இறையருள் என்று வைத்துக் கொள்ளலாம் (இப்போது அவருடைய வயதுடைய மற்றவர்கள் எல்லாம், 'விஜய் டி.வியில் கலக்கல் ஜோடி - சீசன் நம்பர் இரண்டையல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்) இவர் போன்று படிக்கும் (இந்த வயதில்) ஆர்வமுடையவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும்!

    ReplyDelete
  13. >>பாவம் சாமி அந்த இளம் பெண்.கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஆர்வமும், பதிவுகளைப் படிக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் வந்ததே பெரிய காரியம். அதை இறையருள் என்று வைத்துக் கொள்ளலாம் (இப்போது அவருடைய வயதுடைய மற்றவர்கள் எல்லாம், 'விஜய் டி.வியில் கலக்கல் ஜோடி - சீசன் நம்பர் இரண்டையல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்) இவர் போன்று படிக்கும் (இந்த வயதில்) ஆர்வமுடையவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும்!<<

    நீங்கள் சொல்வது சரிதான்,மன்னிக்க வேண்டுகிறேன்.

    >>ஆமாம் அதொடு,"வந்ததை வரவில் வைப்போம்; சென்றதைச் செலவில் வைப்போம்" என்கின்ற எனது ஆசானின் வரிகளும் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன<<

    இதை தாங்கள் எனக்கு சொன்ன பொன்மொழிகளாகவே எடுத்துகொள்கிறேன்..

    (ஐயா சிறிய வேண்டுக்கோள்... தங்கள் ஜதகத்தை தெரிவிதால்.... எங்கள் ஜோதிட அறிவை வளர்க்க உதவியாக இருக்கும்... ஆய்வுக்காகதான் கேட்கிறேன்...)

    தயவு செய்து இதை பரிசிலிக்க்கவும்...

    நன்றி.

    ReplyDelete
  14. மதி said...
    ஐயா சிறிய வேண்டுக்கோள்... தங்கள் ஜாதகத்தை தெரிவித்தால்.... எங்கள் ஜோதிட அறிவை வளர்க்க உதவியாக இருக்கும்... ஆய்வுக்காகதான் கேட்கிறேன்
    தயவு செய்து இதை பரிசிலிக்க்கவும்...
    நன்றி.////

    பாடங்கள் முடியட்டும் சாமி! தொடர்ந்து அடுத்த கட்டத்தில் அலசல்கள் உண்டு. பல சிறப்பான (நூற்றுக் கணக்கில்) ஜாதகங்கள்
    என்னிடம் உண்டு. ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன். முதலில் பாடங்கள் முடியட்டும். அனைவரும் தேர்ச்சி அடையட்டும். பிறகு வைத்துக் கொள்வோம் கச்சேரியை!:-))))

    ReplyDelete
  15. கதை அருமை. எத்தனை பின்னூட்டங்களை நீங்கள் நீக்க வேண்டி இருக்குமோ?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  16. ஹலோ சார்,

    ஆஹா, அருமையான கதை, நான் படிச்சுட்டே இருக்கும் போது ஒரு இடத்தில இந்த கிணத்துல இருக்குற தவளை குதிச்சு குதிச்சு வெளியே போயிடும் னு நினிஅச்சேன், ஆனா எங்க வீட்டுல சிலசமயம் சில விஷயங்களை புரிஞ்சுக்க முடியலைன்னா இப்படித் தான் கிணத்து தவளையா இருக்காதே னு சொல்லுவாங்க. சோ அந்த ஞாபகம் வந்தது இத படிக்கும் போது.
    நல்ல கதை ஆசானே.

    இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது போன்ற கேள்விகளுக் கெல்லாம் தவலை சொல்வது போல
    //"உனக்கு அதை வேறு விளக்க வேண்டுமா? தாவு தீர்ந்து விடும். //பதில் தான் இந்த கதை. சரியா ஆசானே?

    ReplyDelete
  17. ;////Rajagopal said...
    கதை அருமை. எத்தனை பின்னூட்டங்களை நீங்கள் நீக்க வேண்டி இருக்குமோ?
    அன்புடன்
    இராசகோபால்///

    பெட்டி திறந்துதான் இருக்கிரது. அப்படிப்பட்ட பின்னூட்டம் எதுவும் வரவில்லை!
    அனானி ஆஃப்சன் இருந்தால் வரும். இங்கே அது கிடையாது!

    ReplyDelete
  18. ////Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா, அருமையான கதை, நான் படிச்சுட்டே இருக்கும் போது ஒரு இடத்தில இந்த கிணத்துல இருக்குற தவளை குதிச்சு குதிச்சு வெளியே போயிடும் னு நினிஅச்சேன், ஆனா எங்க வீட்டுல சிலசமயம் சில விஷயங்களை புரிஞ்சுக்க முடியலைன்னா இப்படித் தான் கிணத்து தவளையா இருக்காதே னு சொல்லுவாங்க. சோ அந்த ஞாபகம் வந்தது இத படிக்கும் போது.
    நல்ல கதை ஆசானே.
    இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது போன்ற கேள்விகளுக் கெல்லாம் தவலை சொல்வது போல
    //"உனக்கு அதை வேறு விளக்க வேண்டுமா? தாவு தீர்ந்து விடும். //பதில் தான் இந்த கதை. சரியா ஆசானே?////

    எங்கள் பகுதிகளிலும் (காரைக்குடி) சொல்வார்கள். "கிணற்றுத்தவளையாக எத்தனை நாளைக்குடா இருப்பே?"
    கதை நீங்கள் சொன்ன காரணத்திற்காகத்தான். அதைப்பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன் சகோதரி!

    ReplyDelete
  19. கடவுள் இல்லை என்போரும் (மேற்கொண்டு ஆராய மறுப்பதால்) கிணற்றுத் தவளைகளே. கடவுள் உண்டு என்போரும் (அது சக்தி மட்டுமே, அதனால் உணர முடியாது என்பதை ஏற்க மறுப்பதால்‌) கிணற்றுத் தவளைகளே.

    ReplyDelete
  20. திரு.மணிவன்னன் அவர்கள் கூறுவதை நான் வழிமொழிகிறேன்.
    என்ன ஆசானே! சரி தானே?

    ReplyDelete
  21. Present Sir!

    //அதெல்லாம், படா படா சைசில இருக்கு. பெரிய பெரிய பெரிய ஏரிகளெல்லாம்
    இருக்கு. நான் ஓரளவு சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஏன் பக்கத்தில பெரிய கடல்
    இருக்கு. அதைப் பார்த்தீன்னா நீ அசந்து போயிடுவே?"
    //

    I understood Sir!

    ReplyDelete
  22. /////Manivannan said...
    கடவுள் இல்லை என்போரும் (மேற்கொண்டு ஆராய மறுப்பதால்) கிணற்றுத் தவளைகளே. கடவுள் உண்டு என்போரும் (அது சக்தி மட்டுமே, அதனால் உணர முடியாது என்பதை ஏற்க மறுப்பதால்‌) கிணற்றுத் தவளைகளே./////

    அந்த சக்தி இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?
    "நமக்கும் மேலே ஒருவனடா
    நாலும் தெரிந்த தலைவனடா"
    என்று கவையரசர் கவிதையில் சொன்னாரே - அதை எதற்குச் சொன்னார் என்று
    உணர வேண்டாமா?
    அப்படி உணராதவர்களுக்குத்தான் இந்தக் கதை நண்பரே!

    ReplyDelete
  23. /////அணுயோகி said...
    திரு.மணிவன்னன் அவர்கள் கூறுவதை நான் வழிமொழிகிறேன்.
    என்ன ஆசானே! சரி தானே?////

    சரிதான்! ஆனால் காலதேவன் உணரவைத்துத்தான் போர்டிங் பாஸ் கொடுப்பான். அது போவதற்கு முன்பு ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியவரும்!

    ReplyDelete
  24. //////நாமக்கல் சிபி said...
    Present Sir!
    //அதெல்லாம், படா படா சைசில இருக்கு. பெரிய பெரிய பெரிய ஏரிகளெல்லாம்
    இருக்கு. நான் ஓரளவு சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஏன் பக்கத்தில பெரிய கடல்
    இருக்கு. அதைப் பார்த்தீன்னா நீ அசந்து போயிடுவே?"
    //
    I understood Sir!////

    நன்றி சிபியாரே!

    ReplyDelete
  25. ஒரு சிலர் அருமையான கேள்விகளைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு கேள்விகளை அடுக்கும் போதெல்லாம் இந்தக் கதையை நினைத்துக் கொள்வதுண்டு வாத்தியார் ஐயா. :)

    இந்தக் கதையை இவ்வளவு விவரமாகச் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  26. ////குமரன் (Kumaran) said...
    ஒரு சிலர் அருமையான கேள்விகளைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு கேள்விகளை அடுக்கும் போதெல்லாம் இந்தக் கதையை நினைத்துக் கொள்வதுண்டு வாத்தியார் ஐயா. :)
    இந்தக் கதையை இவ்வளவு விவரமாகச் சொன்னதற்கு நன்றி.////

    இரண்டு வரிக் கதைதான். அதை என் பாணியில் ஊதிப் பெரிதாக்கியிருக்கிறேன் குமரனாரே!:-))))

    ReplyDelete
  27. //மதி said...
    யோசிச்சிகிட்டு இருக்கேன்.....(ஒருசமயம் ஆச்சியால இருக்குமோ....)//

    நானும் என் பாடுமாக ஒரு மூலைல சமத்தா இருகே‌ன். என்னை ஏ‌ன்பா இழுக்கின்றீர்கள்.

    கிணற்றுத்தவளை பிறந்ததில் இருந்து கிணத்திலேயே வசித்ததால் அதற்கு வெழி உலகம் தெரியவில்லை.
    வெளியே இருந்து வேறு தவளை வந்ததும், அதன் மூலம் வெ‌ளி உலகத்தை தெரிந்து கொள்ள கேள்வி கேட்டது..கேட்டால் தானே தெரிந்து கொள்ள முடியும்..
    இர‌ண்டு தவளைகளுக்கும் கிணற்றிற்குள் சாபிடுவதையும் தூங்குவதையும் தவிர வேறு என்ன வேலை.

    ReplyDelete
  28. //////Aachi said...
    //மதி said...
    யோசிச்சிகிட்டு இருக்கேன்.....(ஒருசமயம் ஆச்சியால இருக்குமோ....)//
    நானும் என் பாடுமாக ஒரு மூலைல சமத்தா இருகே‌ன். என்னை ஏ‌ன்பா இழுக்கின்றீர்கள்./////


    "நீங்கள் சொல்வது சரிதான்,மன்னிக்க வேண்டுகிறேன்."அவர்தான் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டுவிட்டாரே சகோதரி. அதைக் கவனிக்கவில்லையா?

    ReplyDelete
  29. I didnot understand while reading the story, but after reading comments I got...though it was not pushy...to be honest,there is something missing(flow of thought may be)

    Thanks.
    Shankar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com