24.10.07

JL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

JL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின்
பெயர் நினைவில் இல்லை. ஆனால் காட்சி நினைவில் இருக்கிறது

நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில்
இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.

"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"

அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள
குரலில் பதில் சொல்வார்.

"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"

"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"

"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம்
நாற்பது வயசு வரைக்கும்தான்னு சொன்னாரு!"

"அதுக்கப்புறம்?"

"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"

கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும்
பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்

ஏன் அப்படி?

குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக்
கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்
(It these three planets are not placed in the right places)
அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி
வரை போராட்டங்கள் மிகுந்ததாகவே இருக்கும்.

அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள்
நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.

ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில்
இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய
நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும்
கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!

கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி
வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும்,
ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே
வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக
வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ
ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை
வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில் Light Boy
Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில்
ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும்,
நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.

Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக
இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார்.
அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது
படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும். இரண்டே ஆண்டுகளில்
பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா,
பென்ஸ் கார் என்று வாழ்க்கை தடபுடலாகிவிடும்

அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?

அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும்.
இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு
அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!

எப்படி?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது
நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில்
நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும்
நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும்
விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும்
ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச்
சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.

கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக
சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை
அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு
என்றாகி விடும்.

இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில்
அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன்
என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது
புரியும் என்பதால்.

இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச்
சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர்
கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த
போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:

"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"

அவர் பதில் சொன்னார்:

"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார்
போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க்
கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில்
போக வைப்பார்.போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு
ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன்
வேடமல்ல; குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார்.
மீண்டும் பல வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில்
நடிக்கத் தேடி வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில்
இருக்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை
எல்லாம் விட்டு விடுங்கள்.

நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்க்கை
முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை
மத்தியானம் ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று
பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு
செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து
சேரும்.

அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை
யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவ
தில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும்
யாரிடமும் கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது.
உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள் கொடுப்பார்.
ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power confered by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.

ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப்
பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன்,
ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம்
மேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன்
பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன்.
என்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.

"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.

பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை
யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்

ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.

"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்
பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்
உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக
மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள்
உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!"
என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.

பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார்
வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.

ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!

ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி
கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்?
மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால்
தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்

காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை
யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத்
தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக்
கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.

"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம்
அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன்
ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம்.
சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர்
நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக்
கண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும்
இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை
உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும்
வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும்
ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"

இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப்
பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க
ஆரம்பித்தார்.

ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.

என்ன சோதனை?

இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு
ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.

மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!

சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து
கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.

அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.

இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு
கேட்டார்.

"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம்
என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"

அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:

"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
தெரிந்து கொள்வாய் பக்தனே!"

(தொடரும்)
---------------------------------------------------------------------------
என்னுடைய தொழில் வேறு. I am a marketing agent
ஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல - இதைப் பல
முறைகள் சொல்லியிருக்கிறேன்.

தீவிரமாகப் படிப்பதும் எழுதுவதும் என்னுடைய
பொழுது போக்கு!

ஒரு ஆர்வத்தில் வலையில் எழுதுகிறேன்.
அடுத்தவர்களுக்கு நான் படித்தவைகள் பயன்
படட்டும் என்ற நல்ல நோக்கில் எழுதுகிறேன்

குறுகிய காலத்தில் பல்சுவை - வகுப்பறை என்னும்
என்னுடைய இரண்டு வலைப் பதிவுகளிலும் சேர்த்து
இதுவரை 260 பதிவுகளுக்கு மேல் பதிந்திருக்கிறேன்.

அதோடு தலா 15,000 முதல் 20,000 வாசகர்களைக்
கொண்ட இரண்டு குறு மாத இதழ்களில் கடந்த நான்கு
வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
40ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட
மனவளம், மற்றும் கவிதை ஆய்வுக் கட்டுரைகளையும்
எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்

என்னுடைய ஒரே பிரச்சினை, நேரம் இன்மைதான்
கடவுள் என் முன் தோன்றினால் - நாள் ஒன்றிற்கு
48 மணி நேரம் என்று எனக்கு மட்டும் மாற்றிக் கொடுங்கள்
என்றுதான் அவரிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுப்பேன்

அவ்வளவு நேர நெருக்கடி!

பல அன்பர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள். "சார் நாங்கள்
வேண்டுமென்றால் தட்டச்சு செய்து தரட்டுமா?" என்கிறார்கள்

அவர்களுக்கு என் நன்றி!

நான் கையால் எழுதி Scan செய்து அனுப்பினால்தானே
அவர்கள் தட்டச்ச முடியும்?. அதே நேர அளவில் நான்
நேரடியகவே - மிகவும் வேகமாக Notepad'ல் தட்டச்சி விடுவேன்

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் -
வாரம் இரண்டு பதிவுகள் மட்டுமே பதிய முடிகிறது
பின்னூட்டங்களுக்கு முடிந்த நேரத்தில் மட்டுமே பதில்
அளிக்க முடிகிறது. சில சமயங்களில் அது தாமதமாகி
விடுகிறது. ஆகவே வாசக அன்பர்கள் யாரும் தவறாக
எதையும் நினைக்க வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்

21 comments:

  1. Guruve,

    Mikavum Arumaiyana Kathai.

    Anbudan
    Rajagopal

    ReplyDelete
  2. ஆசிரியர் அய்யா, தங்களால் ஒலி(ப்)பதிவு செய்ய இயலுமா ? ஆனால் இணைக்கப்படும் கோப்பின் அளவுதான் சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. Sir,
    we totaly understand your situation. When ever you can do your best ( which, you are already doing)

    Swetha.

    ReplyDelete
  4. கதை சூப்பர். முன்பே கேட்டதுதான் என்றாலும் உங்க வார்த்தைகளில் படிக்கும்போது இன்னும் நல்லாவே இருக்கு.

    ஏங்க அண்டவன் வரும்போது இப்படி சுநலமா இல்லாம எங்க எல்லாருக்கும் 48 மணி நேரம் கொடுக்கும்படிக் கேளுங்க.

    அவர்வேற இனிமேல் 30 நிமிஷம்தான் ஒரு மணின்னு சொல்லிட்டார்ன்னா?

    ReplyDelete
  5. ///Anonymous said..
    Mikavum Arumaiyana Kathai.
    Anbudan
    Rajagopal////

    நன்றி மிஸ்டர் ராஜகோபால்

    ReplyDelete
  6. ////பாலராஜன்கீதா said...
    ஆசிரியர் அய்யா, தங்களால் ஒலி(ப்)பதிவு செய்ய இயலுமா ? ஆனால் இணைக்கப்படும் கோப்பின் அளவுதான் சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.///

    உங்கள் யோசனைகூட நன்றாக இருக்கிறது. ஆனால் வலையில் ஒலி பரப்பியை நுழைப்பதற்கும் - அதில் அவ்வப்போது என்னுடைய உரையைச் சேர்ப்பதற்கும் நமது நண்பர்களில் யாராவது ஒருவர் சொல்லிக் கொடுத்தால் நல்லது. முயன்று பார்ப்பேன்

    ReplyDelete
  7. ////Anonymous said...
    we totaly understand your situation. When ever you can do your best ( which, you are already doing)
    Swetha.///

    Thanks Ms Swetha

    ReplyDelete
  8. ////துளசி கோபால் said...
    கதை சூப்பர். முன்பே கேட்டதுதான் என்றாலும் உங்க வார்த்தைகளில் படிக்கும்போது இன்னும் நல்லாவே இருக்கு./////

    எனக்குன்னு ஒர் வார்த்தை அல்லது நடையிருக்குன்னு பாராட்டினதிற்கு நன்றி டீச்சர்

    //// ஏங்க ஆண்டவன் வரும்போது இப்படி சுயநலமா இல்லாம எங்க எல்லாருக்கும் 48 மணி நேரம் கொடுக்கும்படிக் கேளுங்க.
    அவர்வேற இனிமேல் 30 நிமிஷம்தான் ஒரு மணின்னு சொல்லிட்டார்ன்னா?////

    உங்களுக்கு எவ்வளவு நேரம் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை, ஆண்டவன் உங்களிடம் கேட்டுக் கொடுப்பதைவிட, உங்கள் Better Half இடம் கேட்டுக் கொடுப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.நீங்கள் சொன்ன சொல்கிறீர்கள் டீச்சர்?:-))))))))))))))

    ReplyDelete
  9. நல்ல குட்டிக்கதைகள் மற்றும் விளக்கங்களும்.
    நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete
  10. Anbu aiyya,
    It is your simplified teaching that made us understand such an hard and useful art easily. I hope, its due to much anxiety in applying them on our birth charts we trouble you. Take your own time and give us more classes. It might be a good idea as Ms.B.Geetha suggested to add them in audio. But in web audio will not survive for a long, I think. Don't worry. Amidst your tight schedule engalayum konjam kavanichchu kollungal.

    Regards,
    Sara
    CMB.

    ReplyDelete
  11. ஏனய்யா?
    தலைசிறந்த கலைஞர் நாகேஷ் அய்யாவை பேரை போட்டு உங்க நீட்டு பதிவை படிக்க வைக்கலாம்னு ஏமாத்த பாத்தீங்களா?

    ;-D

    நாகேஷ் சிரிப்பு மட்டும்தானுங்க படிக்க முடிஞ்சுது. நல்லாவே இருக்கு.

    உங்க பதிவு ரொம்ப நீளம்க.
    அந்த அளவுக்கு பொறுமை இல்லீங்க.
    மன்னிக்கனும்.

    :-D

    ReplyDelete
  12. ///வடுவூர் குமார் said...
    நல்ல குட்டிக்கதைகள் மற்றும் விளக்கங்களும்.
    நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஐயா./////

    நிச்சயமாகச் செய்கிறேன் குமார்!

    ReplyDelete
  13. /////sara said...
    Anbu aiyya,
    It is your simplified teaching that made us understand such an hard and useful art easily. I hope, its due to much anxiety in applying them on our birth charts we trouble you. Take your own time and give us more classes. It might be a good idea as Ms.B.Geetha suggested to add them in audio. But in web audio will not survive for a long, I think. Don't worry. Amidst your tight schedule engalayum konjam kavanichchu kollungal.
    Regards,
    Sara, CMB./////
    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. ////மாசிலா said...
    உங்க பதிவு ரொம்ப நீளம்க.
    அந்த அளவுக்கு பொறுமை இல்லீங்க.
    மன்னிக்கனும்./////

    மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்
    பதிவு சிறியதாக இருந்தால் மொக்கை என்கிறார்கள்
    நீளமாக இருந்தால் படிக்கமுடியவில்லை என்கிறார்கள்

    என்ன செய்யலாம்? கொஞ்சம் விளக்குங்கள் மாசிலா!

    பேசாமல் எழுதுவதை நிறுத்தி விடலாமா?:-))))))))))))))

    ReplyDelete
  15. உள்ளேன் ஐயா..

    அருமையான கதையும், கருத்தும்.

    ReplyDelete
  16. ஐயா இன்று பதிவுகள் அத்தனையும் படிக்க நேரம் கிடைச்சது. ஒரு வாசகனாய் உங்களுக்கு அறிமுகமாகிறதுல ரொம்ப சந்தோசங்க.

    ReplyDelete
  17. //படத்தின்
    பெயர் நினைவில் இல்லை. //
    படத்தோட பேரு புன்னகை. எது மறந்தாலும் அந்த காகிதம் சுத்தி சுத்தி போற மாதிரி உவமை மறக்க முடியுங்களா?

    ReplyDelete
  18. ////Thangs said..
    உள்ளேன் ஐயா..
    அருமையான கதையும், கருத்தும்.////

    நன்றி தங்ஸ்!

    ReplyDelete
  19. ////ILA(a)இளா said...
    ஐயா இன்று பதிவுகள் அத்தனையும் படிக்க நேரம் கிடைச்சது. ஒரு வாசகனாய் உங்களுக்கு அறிமுகமாகிறதுல ரொம்ப சந்தோசங்க.///

    வாங்க விவசாயி! உங்களைப் பற்றி நான் அறிவேன். உபயம் நாமக்கல் சிபி.
    உங்கள் பதிவுகளையெல்லாம் படிப்பதுண்டு. நேரமின்மையால் பின்னூட்டம் இட முடிவதில்லை!

    நன்றி இளா!
    அடிக்கடி வகுப்பறைக்கும், பல்சுவை அரங்கத்திற்கும்(எனது மற்றொரு வலைப்பூ) வாருங்கள்

    ReplyDelete
  20. ////ILA(a)இளா said...
    படத்தோட பேரு புன்னகை. எது மறந்தாலும் அந்த காகிதம் சுத்தி சுத்தி போற மாதிரி உவமை மறக்க முடியுங்களா?////

    வலையில் இதுதான் வசதி. உங்களைப் போன்ற நண்பர்கள் யாராவது ஒருவரிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும். வாழ்க வலைப் பதிவு உலகம்! வளர்க அதன் சேவை!

    ReplyDelete
  21. //"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
    நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
    இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
    உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
    ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
    விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
    இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
    தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
    தெரிந்து கொள்வாய் பக்தனே!"//

    :))

    அருமையான கதை.... கலங்க வைக்கிறது..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com