28.9.07

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

விதிப்படிதான் நடக்குமா? பகுதி 4

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர்
அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ;
He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம்
காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு எப்படி
ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது?
உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால்
ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால்
தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதான் உணர்வு
ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப்
புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான்
அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவதுதான்
நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை
என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி
எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்;
உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும்
அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு
மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு,
ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள்.
அப்போதுதான் தெரியும் சிகரெட்டின் மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும்
உள்ள ஜோடிப் பொருத்தமும் அப்போதுதான்
தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு
அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்?
சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த்
தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு மிகவும்
ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு
அனுபவித்தவனுகுத்தானே தெரியும்?
சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும்
அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட
நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச்
சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு
இருக்கிறார்; உணராதவனுக்கு இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச்
சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து
வரும்போதுதான் மனிதன் ஒப்புக்கொள்வான்.
அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே
நன்றாக அனுபவித்து வாழந்தவர். அவர் சந்திக்காத
துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா?
நட்பா? பகையா? சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது,
கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்
தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்
போல வாழுங்கள் என்று சொல்லி விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா,
கனகாம்பரம், சம்பங்கி, செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி
என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும்
மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான்
அப்படியிருக்கையில் அவை எப்படி வேறுபடலாம்?
விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ
நிறமோ அல்லது மணமோ கிடையாது. பயிராகிப்
பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக்
கேள்விகளுக் கெல்லாம் எந்தக் கொம்பனாலும்
பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப்
பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டி
ருக்கின்றோம் என்பார்.
We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல்
ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச் சொல்லுங்கள்.
எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம்
இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது
உணராதவன் என்ற பேதம் கிடையாது. இருவரும்
அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே
அவனால் படைக்கப்பட்டவர்கள் அல்லவா?
அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம்
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகிப்
போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்
பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன
அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல
இருக்கலாம். ஆனால் இறைவன் ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய
அத்தனை பேதங்களும் காணாமல் போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா
புத்தபகவான் என்று மற்றவர்களின் பேச்சுக்கள்
எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள்
அது உங்கள் விருப்பம். அது உங்கள் பழக்கப்பட்ட
விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக்
கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால்
அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because
we do not even have one god. We have
only God and he is the ultimate authority
for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர்
ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற
வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக்
கொள்ளுங்கள். அவர்களுடைய சர்வாதிகார
மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை
பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி
காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த
கொடைதான்!
(தொடரும்)

------------------------------------------------

32 comments:

  1. தெளிவான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் வாத்தியார் ஐயா.

    அவரவர் உணர்வும்,நம்பிக்கையும் சார்ந்த விஷயத்தை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாது.அவரவருக்கு அதனால் பலன் கிடைக்கும்போதுதான் உணர முடியும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ///செல்வன் அவர்கள் சொல்லியது: தெளிவான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் வாத்தியார் ஐயா.

    அவரவர் உணர்வும்,நம்பிக்கையும் சார்ந்த விஷயத்தை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாது.அவரவருக்கு அதனால் பலன் கிடைக்கும்போதுதான் உணர முடியும்///

    கருத்துக்களைச் சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் செல்வன்
    நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  4. ///அரவிந்தன் அவர்கள் சொல்லியது: I think it is aavin///

    தட்டசுப் பிழை அது
    திருத்தி விட்டேன்
    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. அது என்னவோ தெரியவில்லை; இந்தப் பகுதி வந்தால் தான் உங்கள்
    எழுத்து சூடு பிடிக்கிறது.
    அதனால் மற்ற பகுதிகள் மாற்று குறைந்தவைஎன்று அர்த்தம் இல்லை; இங்கு எழுத்துக்கள் உணர்வுபூர்வமாக ஒரு வேகப்பாய்ச்சலுடன் இருப்பதால் சொன்னேன்.
    It his problem--துள்ளிக்குதித்து
    வந்த அந்த அர்த்தமுள்ள வார்த்தைகளை புன்முறுவலுடன் ரசித்தேன்.
    என் பதிவில் "இறைவழிபாடு-ஓர் அலசல்" என்னும் பதிவைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  6. அனுபவித்தே அறிவது தான் வாழ்க்கை என்றால் ஆண்டவனே நீ எதற்காக ?? - கேட்டேன்.

    ஆண்டவன் சற்றே அருகினில் வந்து குறுநகையுடன் கூறினான் - அனுபவம் என்பதே நான்தான்.

    இது கவியரசின் ஒரு பாடலில் ரசித்தது

    தெரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் தெரிந்து கொள்ளட்டும். தெரியாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும் - இது கவியரசின் எண்ணம்

    ReplyDelete
  7. ///ஜீவி said... அது என்னவோ தெரியவில்லை; இந்தப் பகுதி வந்தால் தான் உங்க எழுத்து சூடு பிடிக்கிறது.
    அதனால் மற்ற பகுதிகள் மாற்று குறைந்தவைஎன்று அர்த்தம் இல்லை; இங்கு எழுத்துக்கள் உணர்வுபூர்வமாக ஒரு வேகப்பாய்ச்சலுடன் இருப்பதால் சொன்னேன்.
    It his problem--துள்ளிக்குதித்து வந்த அந்த அர்த்தமுள்ள வார்த்தைகளை புன்முறுவலுடன் ரசித்தேன்.///

    சிலரைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம், சந்தோசம் வந்து விடும் இல்லையா? அதுபோலத்தான் இதுவும். என்னையறியாமலேயே
    வந்து விடுகிறது அந்த வேகமும், வீச்சும்!
    விமர்சித்தமைக்கு நன்றி!

    ///என் பதிவில் "இறைவழிபாடு-ஓர் அலசல்" என்னும் பதிவைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.///

    படித்துவிட்டுச் சொல்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  8. ///cheena (சீனா) said... அனுபவித்தே அறிவது தான் வாழ்க்கை என்றால் ஆண்டவனே நீ எதற்காக ?? - கேட்டேன்.
    ஆண்டவன் சற்றே அருகினில் வந்து குறுநகையுடன் கூறினான் - அனுபவம் என்பதே நான்தான்.
    இது கவியரசின் ஒரு பாடலில் ரசித்தது
    தெரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் தெரிந்து கொள்ளட்டும். தெரியாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும் - இது கவியரசின் எண்ணம்///

    ஆமாம், நிதர்சனமான உண்மை. அனுபவம்தான் எல்லாம்!

    ReplyDelete
  9. "God is the noblest creation of Man"
    Robert Ingersoll.

    தன்னம்பிக்கை இல்லாதவனுக்கோ,இழந்தவனுக்கோ ஒரு நம்பிக்கை கடவுள்.

    மதுவும்,காபி சிகரெட்டும் உணர்வது மூளையில் உள்ள அறிவுண்ணிகள்(ரிசெப்டார்ஸ்).கடவுளோ மூளையில் இடப்பட்ட விலங்கு.

    நம்பிக்கை உங்கள் உரிமை.
    நம்பிக்கையைப் போற்றும் நீங்கள் தன்னம்பிக்கையையும் போற்ற வேண்டியது உங்கள் ஆசிரியப் பணியின் கடமை.
    இவற்றை எடுத்துச் சொல்லும் உரிமைதான் இணையத்தின் பெருமை!

    ReplyDelete
  10. //இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா? //

    சுப்பையா ஐயா,

    நம்பிக்கை என்ற பெயரில் நீங்கள் எழுதி இருப்பது நன்றாக இருக்கிறது.

    இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா? என்பதனுடன் சேர்த்து அதைச் சொல்லி பிழைப்பு வாதம் செய்யலாமா ? என்று கேட்டிருந்தால் என்னைப் போன்றவர்கள் மேலும் தெரிந்து கொள்ள முடியும்.
    :)

    நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்கள் யாரும் எனக்கு நம்பிக்கை ஊட்டுங்கள் என்று சொல்வது போல் தெரியவில்லை. அரைகுறை நம்பிக்கையாளர்களுக்குத்தான் அறிவுரை தேவைப்படும் என்பது என்கருத்து.

    சிலபேருக்கு வாசனை திரவியங்கள் என்றால் அலர்ஜ்ஜி தவிர்க்கவே செய்வார்கள். அவர்களிடம் சென்று வாசனை திரவியங்கள் புத்துணர்வுதரும், நான் அனுபவித்திருக்கிறேன் என்று நமது கருத்தை வலியுருத்தினாலும், அவர்களுக்கு அலர்ஜி என்றால் அலர்ஜிதான் தவிர்க்கவே செய்வார்கள்.

    :))

    ReplyDelete
  11. *****
    ஐந்து ஸ்டார் பதிவு.
    நீங்கள் இதுவரை போட்ட பதிவிலேயே மிக மிக அருமையான பதிவு.
    அப்ப இதுக்கு முந்தின பதிவெல்லாம் நன்றாக இல்லையா? என்று கேட்காதீர்கள்.
    என் உணர்வும் & நம்பிக்கையும் இப்படி சொல்ல வைக்கிறது.. இன்று.
    Simply Great.

    ReplyDelete
  12. Thamizhan said...
    "God is the noblest creation of Man"
    Robert Ingersoll.///

    கடவுள் கருணை மிக்கவர். அவர் யாரையும் தண்டிப்பதிலை
    இங்கிலாந்தில் பிறந்து மறைந்த இங்கர்சாலும் அதில் அடக்கம்!

    //// மதுவும்,காபி சிகரெட்டும் உணர்வது மூளையில் உள்ள அறிவுண்ணிகள்(ரிசெப்டார்ஸ்).கடவுளோ மூளையில் இடப்பட்ட விலங்கு.///

    அந்த மொத்தமூளையும் அறிவுண்ணிகள் உட்பட அவன் அளித்த கொடைதான்!
    இல்லையென்றால் மனிதனினுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும் நண்பரே!

    /// நம்பிக்கை உங்கள் உரிமை.
    நம்பிக்கையைப் போற்றும் நீங்கள் தன்னம்பிக்கையையும் போற்ற வேண்டியது உங்கள் ஆசிரியப் பணியின் கடமை.///

    எனது அடுத்த தொடர் அதுதான்!

    //// இவற்றை எடுத்துச் சொல்லும் உரிமைதான் இணையத்தின் பெருமை!////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்! இல்லையென்றால் நீங்களும் நானும் எப்படிக் கலந்துரையாட முடியும்?

    நன்றி அன்பிற்குரியவரே!

    ReplyDelete
  13. கோவி.கண்ணன் said...
    இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா? என்பதனுடன் சேர்த்து அதைச் சொல்லி பிழைப்பு வாதம் செய்யலாமா ? என்று கேட்டிருந்தால் என்னைப் போன்றவர்கள் மேலும் தெரிந்து கொள்ள முடியும். :)///

    இறைவன் கருணையே வடிவானவன். அவன் யாரையும் தண்டிப்பதில்லை
    இறைவனை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்கள் நடத்தி விட்டுப்போகிறார்கள்
    ஏமாறுகிறவன் ஏமாந்து விட்டுப் போகிறான். நீங்கள் ஏமாறாமல் இருங்கள் அது போதும்!

    மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்க்ளை விட (யாரென்று புரிகிறதா?)
    அவர்கள் ஒன்றும் மோசமானவர்கள் இல்லை

    /// அரைகுறை நம்பிக்கையாளர்களுக்குத்தான் அறிவுரை தேவைப்படும் என்பது என்கருத்து.///

    சரி, அவர்களூக்காக கண்ணதாசனின் பாட்டு ஒன்றைப் போட்டு விடுகிறேன்.

    வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

    உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன்
    கண்கள் எனும் வாசலை தந்து வைத்த்வன்
    கன்ணில் வரும் பாதையைக் காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்

    கண்கள் அவனை காண்க
    உள்ளம் அவனை நினைக்க
    கைகள் அவனை வணங்க
    கைகள் அவனை வணங்க

    ReplyDelete
  14. //சிலபேருக்கு வாசனை திரவியங்கள் என்றால் அலர்ஜ்ஜி தவிர்க்கவே செய்வார்கள். அவர்களிடம் சென்று வாசனை திரவியங்கள் புத்துணர்வுதரும், நான் அனுபவித்திருக்கிறேன் என்று நமது கருத்தை வலியுருத்தினாலும், அவர்களுக்கு அலர்ஜி என்றால் அலர்ஜிதான் தவிர்க்கவே செய்வார்கள்.//

    ஆம்.அலர்ஜி எனும் நோய் வந்தவர்களிடம் வாசனை திரவியத்தை பற்றி சொன்னால் அதன் மகத்துவம் அவர்களுக்கு புரியவா போகிறது. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து நெய்சோறு ஊட்டினாலும் அது வேறெதையோ தானே தேடும்?

    ReplyDelete
  15. ///வடுவூர் குமார் said...

    *****
    ஐந்து ஸ்டார் பதிவு.
    நீங்கள் இதுவரை போட்ட பதிவிலேயே மிக மிக அருமையான பதிவு.
    அப்ப இதுக்கு முந்தின பதிவெல்லாம் நன்றாக இல்லையா? என்று கேட்காதீர்கள்.
    என் உணர்வும் & நம்பிக்கையும் இப்படி சொல்ல வைக்கிறது.. இன்று.
    Simply Great.///

    நான் வெறும் கருவிதான் I am only a tool - என்னை எழுத வைப்ப்து
    என்னுள் கலந்துவிட்ட இறையுணர்வு - அவ்வளவே!

    நன்றி மிஸ்டர் குமார்!

    ReplyDelete
  16. ///வல்லாளகண்டன் has left a new comment on your post "இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?":
    ஆம்.அலர்ஜி எனும் நோய் வந்தவர்களிடம் வாசனை திரவியத்தை பற்றி சொன்னால் அதன் மகத்துவம் அவர்களுக்கு புரியவா போகிறது. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து நெய்சோறு ஊட்டினாலும் அது வேறெதையோ தானே தேடும்? ///

    யார் சாமி நீங்கள்- வல்லாளகண்டன் என்ற பெயரில்?
    கருத்தைச் சொல்லுங்கள்
    சொற்களில் கடுமை வேண்டாம்!

    எனக்கு எல்லாப் பதிவர்களும் இனிய நண்பர்கள்தான்
    அதனால்தான் அனைவரும் இங்கே வந்து போகின்றார்கள்

    கருத்து வேறுபாடுகள் உண்டு
    ஆனால்
    கருத்து மோதல்கள் இங்கே கிடையாது

    தயவு செய்து அதை நினைவில் வையுங்கள்!

    யார் எதைத் தேடினாலும் அதைக் கொடுப்பதற்கு அவன் இருக்கிறான்
    தட்டுங்கள் திறக்கப்படும்
    கேளுங்கள் கொடுக்கப்படும்
    என்று மறை நூலகளூம் அதைத்தான் சொல்கின்றன!

    ReplyDelete
  17. //ஆம்.அலர்ஜி எனும் நோய் வந்தவர்களிடம் வாசனை திரவியத்தை பற்றி சொன்னால் அதன் மகத்துவம் அவர்களுக்கு புரியவா போகிறது. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து நெய்சோறு ஊட்டினாலும் அது வேறெதையோ தானே தேடும்?//

    நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சரி, நாயை கோவிலில் வைத்து பைரவர்வர் என்று வழிப்பட்டாலும் சரி எனக்கு ஒன்றும் இல்லை.

    வெறும் நம்பிக்கைகே இந்த ஆட்டம் என்றால் 'அருள்வாக்கு/சாபம்' கொடுக்க சக்தி இருந்தால் நிலமை இதைவிட மோசமாக கண்டபடி கடித்துவைப்பார்கள் என்பதற்கு மேற்கண்ட பின்னூட்டம் இட்ட நண்பரே சாட்சி.

    //மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்க்ளை விட (யாரென்று புரிகிறதா?)
    அவர்கள் ஒன்றும் மோசமானவர்கள் இல்லை//

    மோசடி சாமியார்களை நீங்கள் சொன்னவர்கள் மக்களை பிழைக்கவும் வைத்திருக்கிறார்கள் என்பதால் என்னைப் பொறுத்தவரையில் மிக மோசமானவர்கள் அவர்கள் அல்ல.
    பட்டைப் போட்டு / குங்குமம் வைத்தவனும் தான் மக்களை வைத்து உணர்வுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறான். அவனுக்கும் நம்பாதவனுக்கும் என்ன வேறுபாடு.

    நம்பிக்கை கொண்டு எவர்காலிலும் விழலாம் என்பது அவரவர் விருப்பம். அதைவிடுத்து நம்பிக்கை இல்லை என்பதால் காலில் விழவிலாதவன் மோசமானவன் என்று சொல்வது அறிவீனம்.

    நம்பிக்கை என்ற பெயரில் அறைகுறையாளர்களுக்கு சொல்லப்படவேண்டிய அறிவுரையன்றி, நம்பத் தேவையே இல்லாதவர்களுக்கு அல்ல அவைகள்

    உங்கள் நம்பிக்கையை உயர்வாக சொல்லுவது உங்கள் விருப்பம். ஆனால் அதே சமயத்தில் நம்பாதவர்களை இடித்துறைத்தால் அதற்கான எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்.
    :(

    ReplyDelete
  18. அருமையான பதிவிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. ///கோவி.கண்ணன் said...
    நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சரி, நாயை கோவிலில் வைத்து பைரவர்வர் என்று வழிப்பட்டாலும் சரி எனக்கு ஒன்றும் இல்லை.
    வெறும் நம்பிக்கைகே இந்த ஆட்டம் என்றால் 'அருள்வாக்கு/சாபம்' கொடுக்க சக்தி இருந்தால் நிலமை இதைவிட மோசமாக கண்டபடி கடித்துவைப்பார்கள் என்பதற்கு மேற்கண்ட பின்னூட்டம் இட்ட நண்பரே சாட்சி.///

    கடிக்கும் சக்தியுள்ளவர்களுக்கு, இறைவன் அதற்குரிய பொருட்களைப் படைத்திருக்கிறான். அருள்வாக்கு சொல்லும் சக்தியெல்லாம் சாதாரணப் பிறவிகளூக்குக் கிடைப்பதில்லை. தெய்வப்பிறவிகளுக்கு மட்டுமே அது
    கிடைக்கும். எனக்குத் தெரிந்து தெய்வப்பிறவிகள் இருவர் இருந்தார்கள்
    அவர்களைப் பற்றிப் பின் ஒரு சமயத்தில் பதிவிடுகிறேன்.

    ///நீங்கள் சொன்னவர்கள் மக்களை பிழைக்கவும் வைத்திருக்கிறார்கள் என்பதால் என்னைப் பொறுத்தவரையில் மிக மோசமானவர்கள் அவர்கள் அல்ல.
    பட்டைப் போட்டு / குங்குமம் வைத்தவனும் தான் மக்களை வைத்து உணர்வுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறான். அவனுக்கும் நம்பாதவனுக்கும் என்ன வேறுபாடு.///

    இறைவனை நம்பாதவனும் நல்லவன்தான். அவன் வழி அவனுக்கு!
    நம்பியவன் தலையில் மிளகாய் அரைப்பவன் தீயவன். அரைப்பதற்குத் தலையைக் கொடுத்துக் கொண்டு நிற்பவன் ஏமாளி. அவர்கள் இருவரின்
    வலையிலும் சிக்காதவன் புத்திசாலி. இதில் இறைவனின் பங்கு ஒன்றுமில்லை
    எல்லோரையும் படைத்தவன் அவன். அவர்களூடைய நடத்தைக்கு அவன் பொறுப்பில்லை. பிள்ளைகள் செய்யும் நல்லது கெட்டதற்குத் பெற்ற தாய் எப்படிப் பொறுப்பாவாள். அப்படித்தான் இதுவும்!

    ///நம்பிக்கை கொண்டு எவர்காலிலும் விழலாம் என்பது அவரவர் விருப்பம். அதைவிடுத்து நம்பிக்கை இல்லை என்பதால் காலில் விழவிலாதவன் மோசமானவன் என்று சொல்வது அறிவீனம்.///

    யார் அப்படிச் சொன்னது? யார் அந்த அறிவிலி?

    ///நம்பிக்கை என்ற பெயரில் அறைகுறையாளர்களுக்கு சொல்லப்படவேண்டிய அறிவுரையன்றி, நம்பத் தேவையே இல்லாதவர்களுக்கு அல்ல அவைகள்///

    நம்பாதவர்களை விட்டுவிடுங்கள் என்று பதிவிலேயே சொல்லிவிட்டேன்
    கண்ணனாரே! நீங்கள் தான் இன்னும் விடவில்லை!

    ///உங்கள் நம்பிக்கையை உயர்வாக சொல்லுவது உங்கள் விருப்பம். ஆனால் அதே சமயத்தில் நம்பாதவர்களை இடித்துறைத்தால் அதற்கான எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்.
    :(///

    இத, இதைத்தான் எதிர்பார்த்தேன். எதிர்வினைகள் இருந்தால்தான் உலகம் இயங்கும். சாதாரண மின் இணைப்புக்குக் கூட Positive & Negative என்ற இரண்டு அமைப்பு வேண்டும். பதிவிற்கும் அப்படித்தான். ஆகவே நீங்கள் வாருங்கள்.
    Bouncer ஆகப் பந்தைப் போட்டு தூள் கிளப்புங்கள். அப்போதுதான் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்

    ReplyDelete
  21. ///மதுரையம்பதி said...
    அருமையான பதிவிற்கு நன்றி ஐயா...///

    நன்றி நண்பரே - உங்கள் வருகைக்கு!

    ReplyDelete
  22. //நம்பியவன் தலையில் மிளகாய் அரைப்பவன் தீயவன். அரைப்பதற்குத் தலையைக் கொடுத்துக் கொண்டு நிற்பவன் ஏமாளி. அவர்கள் இருவரின்
    வலையிலும் சிக்காதவன் புத்திசாலி. இதில் இறைவனின் பங்கு ஒன்றுமில்லை
    எல்லோரையும் படைத்தவன் அவன். அவர்களூடைய நடத்தைக்கு அவன் பொறுப்பில்லை. பிள்ளைகள் செய்யும் நல்லது கெட்டதற்குத் பெற்ற தாய் எப்படிப் பொறுப்பாவாள். அப்படித்தான் இதுவும்!
    //

    மிளகாய் அரைப்பவன் தீயவன் என்றால் நம்பியவர்களை ஏமாற்றுபவன் கயவன் தானே ?
    மிளாகய் அறைப்பவனில் அறைகுறையானன் தான் அதிக அளவில் இருக்கிறான் என்று புரிந்தால் சரி.

    திருச்சந்தூர் வைரவேல் களவு போனதற்கும், மரகத லிங்ககள் களவு போனதற்கும், கோவில் உண்டியல்கள் உடைவதற்கும், கோவில் சொத்துக்களை தின்று அழிப்பதிலும் நம்பாதவன் இருப்பது போன்று தெரியவில்லை.

    உங்கள் பதிவில் அனானி 'திறந்திருப்பதால்' அங்கு பெயரில்லாமல் 'நுழைந்த' ஒருவர் என்னைக் குறித்து 'நாய்' என்று சொன்னதாலேயே பதிலுரைத்தேன்.

    இனிமேல் அப்படி 'நுழையும்' பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்தாலும் நான் அதெற்கெல்லாம் மறுமொழியிடப் போவதில்லை.

    ReplyDelete
  23. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
    கருத்து மோதல்கள் இருக்கக்கூடாது

    வகுப்பறைக்குள் பாடம் மட்டும்தான்
    சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை!

    அனானி'ப் பெட்டியைப் பூட்டிவிட்டேன்
    இன்மேல் வலைப்பதிவு கணக்கு
    வைத்திருப்பவர்கள்
    மட்டுமே பின்னூட்டமிடலாம்

    வலைப்பதிவு கணக்கு வைத்திருப்பவர்களை
    விட - தனிப்பட்ட பார்வையாளர்கள் /
    வாசகர்களே வகுப்பறைப் பதிவிற்கு
    அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

    அவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்:
    நீங்கள் உங்கள் கருத்துக்களை/விமர்சனங்களை/கேள்விகளை/ மின்னஞ்சலில்
    தெரியப்படுத்துங்கள். என் மின்னஞ்சல் முகவரி:
    classroom2007@gmail.com

    ReplyDelete
  24. வாத்தியாரே..

    அனுபவமே நம்பிக்கை.. அவனே இறைவன்..

    நம்பியோருக்கு அவன் இறைவன்.. நம்பாதவர்க்கு அவன் கல்..

    பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலேயே இருப்பான் ஒருவன்.. அவன்தான் இறைவன்..

    எத்தனையோ வழிகளில் அனுபவத்தைக் கொடுத்து தன்னை நிரூபிக்கிறான் இறைவன்.. புரிந்து கொள்ள மறுப்பவர்களைப் பற்றி அவன் எப்போதும் கவலைப்படுவதில்லை..

    மிக மிக அருமை வாத்தியாரே.. மிக எளிமையாக அளித்துள்ளீர்கள்..

    புரிந்து கொள்பவர்களுக்கு இறைவன் அருள் பாலிப்பான்..

    புரிந்தாலும் ஏற்க மறுப்பவர்களை அவன் வெறுக்கவும் மாட்டான்..

    புரியாதவர்களுக்கு புரியவும் வைப்பான்..

    ReplyDelete
  25. //அனானி'ப் பெட்டியைப் பூட்டிவிட்டேன்
    இன்மேல் வலைப்பதிவு கணக்கு
    வைத்திருப்பவர்கள்
    மட்டுமே பின்னூட்டமிடலாம்
    //

    ஐயா,
    அனானி பெட்டியை மூடவேண்டும் என்பதற்காக மேலே சொல்லவில்லை. ப்ளாக்கரில் கணக்கு இல்லாதவர்கள் அனானி கமெண்ட் வழியாகத்தான் பின்னூட்டம் போட முடியும். ஆனால் அதையே சிலர் விஷமத்தனங்களுக்கும், அடுத்தவர்களை 'நாய்' என்று விளிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவதுகிறார்கள். மட்டுறுத்தல் இருக்கும் போது நன்றாக படித்துவிட்டு பின்னூட்டங்களை அனுமதிக்கலாம். உங்களுக்கு வேறு வகை பின்னூட்டம் வந்ததால் இப்படி செய்தீர்களா ? அல்லது நான் குறிப்பிட்டதற்காக இந்த முடிவெடுத்தீர்களா என்று தெரியாது. என்பொருட்டு என்றால் திறந்தே வைத்திருங்கள் என்று வேண்டி விரும்பிகேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  26. ///உண்மைத்தமிழன் அவர்கள் சொல்லியது: எத்தனையோ வழிகளில் அனுபவத்தைக் கொடுத்து தன்னை நிரூபிக்கிறான் இறைவன்.. புரிந்து கொள்ள மறுப்பவர்களைப் பற்றி அவன் எப்போதும் கவலைப்படுவதில்லை..///

    பதிவு உங்கள் வசப்படுத்தியிருக்கிறது!
    எழுதியதன் நோக்கமும் அதுதான்
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. மதிப்பிற்குரிய திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பதற்காக அல்ல இப்பின்னூட்டம். ஏனெனில், கடவுள் நம்பிக்கைக்கும், கருத்துக்களுக்கும் எதிராக ஒரு முழு புத்தகம் எழுதினால் கூட கடைசியில் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதுதான் இதன் முடிவாக இருக்கும். இது தனிமனித உரிமை, தரும் ஒரு வசதி மேலும் அது தவறல்ல ஏனெனில் அது அடுத்தவரை பாதிப்பதில்லை.

    இறைவன் என்ற நம்பிக்கை அல்லது உணர்வு, தனிமனிதரான ஒருவரது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது அன்றாடப் பணிகளை சிறப்பாகச் செய்ய உதவிபுரியுமாயின் அதைப்பற்றி ஒருவர் கருத்து தெரிவிப்பதே தவறுதான்.


    கடவுள் இருக்கிறான் என்று 24 மணிநேரமும் அவனையே தொழுகின்ற யோகியும் நம்புகிறான், அடுத்த வேளை உணவிற்கு வேறு வழியேயில்லையே என்பவனும் நம்புகிறான். இதிலே மரண பயமோ அல்லது கைமீறிய செயலோ நடக்கும் போதுமட்டும் ஒரு சிலருக்கு நம்பிக்கை பிறக்கிறது. மேலும், ஒரு சிலருக்கு அறிவியல் சிந்தனையின் எல்லையிலே கடவுள் அமர்ந்திருக்கிறான், அறிவியல் வளர்ச்சிக்குத் தகுந்தார்போல் கடவுளுக்கும் அவனுக்கும் இருக்கும் தூரம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

    ஓரிடத்திலிருந்து அமர்ந்து, படைத்தல், காத்தல், சோதித்தல், போன்ற கடவுள் பற்றிய கருத்துக்கள் ஒரு நொடியில் பொய்த்துப் போகச் செய்யும் அளவிற்கு இன்றைக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. ஆதலால் அதைவிடுத்து நம்பிக்கை, உணர்வு இவற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளைப் பற்றி மட்டும் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.

    முன்னர் கூறியது போல் கடவுள் இருக்கிறான் என்று நம்புகிற அல்லது உணர்கிற இருநபர் கடவுளை ஒரே செறிவுடன் நம்புகிறாரா அல்லது உணர்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இருவருமே இருக்கிறான் என்று நம்புகிறார்கள் அல்லது உணர்கிறார்கள். இந்தக் கூற்று இல்லை என்று சொல்பவருக்கும் பொருந்தும், ஏனெனில் இல்லை என்று சொல்பவர்கள் கூட ஒரே செறிவுடனும் ஒரே புரிதலுடனும் அதைக் கூறுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆதலால் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு உணர்வு வெளி இருப்பதாகக் கொள்வோமானால் அந்த வெளிகளில், ஒவ்வொன்றும் ஒரு புள்ளிகள், ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம், இருத்தலியல்.... ஏனெனில் ஒவ்வொன்றும் ஒரு நம்பிக்கை. இந்த அனைத்து நம்பிக்கைகளிலும் பரந்துபட்டவர்கள் உண்டு, உணர்வின் செறிவு அல்லது நம்பிக்கையின் செறிவு ஒரே அளவினதாக இல்லாமல் மாறுபட்டிருக்கும் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று "நம்புகிறேன்".

    ஆதலால் இருக்கிறானோ இல்லையோ நம்பிக்கை அல்லது உணர்வின் செறிவு ஒரு தனிமனிதனின் அளவுகோளாகிவிடுகிறது இதையே தான் உங்களது, காப்பி, சிகரெட், புலாவு போன்ற உதாரணங்களும் முன்வைக்கிறது.

    இப்படி அந்த உணர்வு தனிமனிதனின் உரிமை என்ற புள்ளியில் முடியும் போது, எல்லா மதங்களும் கடவுள் என்கின்ற ஒருவனைச் சென்றடைய உதவும் வழிகள் அல்லது, ஒரு உணர்வு நிலைக்கு இட்டுச் செல்லும் அல்லது நம்பிக்கை வளர்ச்சிக்கான பாதைகள் என்றால் அனைத்து வழிகளையும் நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா. ஒரு குழந்தை இந்துக் குழந்தையாக இருப்பதற்கு அக்குழந்தை காரணமல்ல.

    இது எந்த மதத்தைச் சேர்ந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி அது பொருந்தும். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு என் நம்பிக்கை எனக்கு என்கின்ற தனிமனித உரிமையை நாம் மதிப்பதானால் நாம் நமது சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து மதங்களையும், பகுத்தறிவும், நாத்திகமும் உட்பட அறிமுகப் படுத்தவேண்டும். பெரிய அளவில் கடினமான கொள்கைகள் இல்லாத அரசியல் கட்சிகளைப் புரிந்து கொண்டு தம்மை யார் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கே 18 ஆண்டுகள் தேவப்படுகிறது.

    பல ஆண்டுகள் இறை உணர்வோடு வாழ்ந்து கடைசியில் அதை உணர்ந்துவிட்டேன் என்று கூறி மரிக்கும் வேளையில் கூட தான் உணர்ந்துவிட்டேன் என்று கூறியதால் அதை உணராதவராகிப் போகிறார் என்ற ஆன்மீகக் கூற்றை நம்புகிறவர் யாரும் தங்களுடைய குழந்தைகளுக்கு கடவுள் என்ற நம்பிக்கையை அல்லது உணர்வைப் பயிற்றுவிக்கக் கூடாது. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்றால் அதை அவர்களாகவே உணரவேண்டும் இல்லையெனில் அவர்களது தனிமனித உரிமையில் தலையிட்ட குற்றத்தை ஓவ்வொரு பெற்றோரும் புரிகின்றனர்.

    ஆனால் கடவுள் மற்றும் மதத்தின் (எந்த மதமாயிருந்தாலும் சரி) பெயரால் நிகழும் சமுதாயக் கயமைகளைக் குறை கூறுவது தனிமனித உரிமை மீறல் ஆகாது என்பதை நான் தனியாக விளக்கத் தேவையில்லை அதைப் பற்றி நீங்களே சாடியிருக்கிறீர்கள்.

    நீங்கள் ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப் படாமல் இருந்திருந்தால் பதிவைப் படித்துவிட்டு சென்றிருப்பேன்.

    (இனி கூறப் போவது இல்லாமலும் இருக்கலாம், உங்களது எழுத்துக்கள் மூலம் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டதனால் இருக்கலாம், அப்படியாயின் மன்னித்துவிடுங்கள்)
    பின் எதற்காக இப்பின்னூட்டம், புகைப்படத்தில் மிகவும் இளமையானவராகத் தெரிவதால், இணையம் மட்டுமன்றி நேரடியாகவும் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருப்பீர்கள். அதனால்தான் இப்பின்னூட்டம்.
    ஒருவேளை நாளை உங்களது வகுப்பறைகளில் கடவுள் பற்றிய சித்தாந்தமல்லாத பாடங்களில், கடவுளையோ அல்லது எல்லாம் அவன் செயல் என்று மேற்கோல் காட்டினால், நம்பிக்கை மற்றும் உணர்வு வெளியில் அவரவர் அனுபவம் மற்றும் புரிதலில் இருக்கும் ஒரு மாணவரை ஆளுமைப் படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

    ந் + ஈஈஈஈஈ ண்ட பின்னூட்டத்திற்கும் மன்னிக்கவும்..

    ReplyDelete
  28. ///கோவியார் அவர்கள் சொல்லியது: திறந்தே வைத்திருங்கள் என்று வேண்டி விரும்பிகேட்டுக் கொள்கிறேன்.///

    உங்கள் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்து விட்டேன்
    அனாவசியமான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்!

    ReplyDelete
  29. ///காஈயேடு அவர்கள் சொல்லியது:கடவுள் நம்பிக்கைக்கும், கருத்துக்களுக்கும் எதிராக ஒரு முழு புத்தகம் எழுதினால் கூட கடைசியில் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதுதான் இதன் முடிவாக இருக்கும் ///

    அது தெரிந்துதான் பதிவிலும் அவ்வப்போது அதைக் குறிபிடத் தயங்குவதில்லை!
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ஐயா பெரியவரே!

    சோதிடம் தெரிந்துகொண்ட அளவுக்கு, உலகத்தில் அவ்வப்ப்போது என்ன என்ன புடிய விடையங்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று படித்தீர்களா?

    அறிவியலையும் கொஞ்சம் படித்தீர்களென்றால், இன்னு உங்கள் வலைப்பதிவை சிறந்ததாக மாற்றமுடியும்..

    உயிரினங்கள், பூமியை கடவுள் படைப்பு என்று சொல்கின்றீர்களே, விஞ்ஞானம் தெரியாதவரா நீங்கள்.

    இந்த வலைப்பூ முறை, விஞ்ஞானத்தின் உச்சக்கட்டம் அதையே நீங்கள் பாவித்துக்கொண்டு, விஞ்ஞானத்துக்கு முரணாகப்பேசுகின்றீர்களே?

    Creationisn, ID (Inteligent Design) யாவும் விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களால் தகர்த்தெறியப்பட்டுவிட்டதைக்கூடவா நீங்கள் அறியவில்லை.

    கிறிஸ்தவ திருச்சபைகள் கூட அவற்றை ஏற்றுக்கொண்டுல்ல நிலையில், நீங்கள் இன்னும் கிணற்றுத்தவளையாக இருப்பது கவலையளிக்கின்றது...

    பரிணாமம் (evolution) என்பதைப்பற்றி படித்திருக்கின்றீர்களா? அது தானே இப்பூமியில் உயிர்கள் தோன்றீய விதம்... இப்பிரபஞ்சம் கூட எவ்வாறு தோன்றியது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் உள்ளதல்லவா?

    //ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா,
    கனகாம்பரம், சம்பங்கி, செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி
    என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
    அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும்
    மணமும் ஏன் வேற்படுகின்றன?

    நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான்
    அப்படியிருக்கையில் அவை எப்படி வேறுபடலாம்?
    விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ
    நிறமோ அல்லது மணமோ கிடையாது. பயிராகிப்
    பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
    நிறமும் எங்கிருந்து கிடைத்தது?

    அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக்
    கேள்விகளுக் கெல்லாம் எந்தக் கொம்பனாலும்
    பதில் சொல்லமுடியாது!

    ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப்
    பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டி
    ருக்கின்றோம் என்பார்.
    We are exploring it என்பார்.

    அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல்
    ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச் சொல்லுங்கள்.
    எவனாலும் முடியாது!

    செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம்
    இறைவன் இல்லையென்று!//

    இந்த உங்கள் பகுதி என்னத்தை காட்டுகின்றது என்றால், நீங்கள் எத்தனையோ தசாப்தங்கள் பின் தள்ளிய சிந்தனையில் உள்ளீர்கள்...


    இல்லை நான் கேட்கின்றேன், உண்மை ஒன்று இருந்தால் அது எல்லோருக்கும் உண்மை தானே

    உ-ம்
    மனிதனுக்கு இரண்டு கால், மனித்னுக்கு இரண்டு கைகள். மனிதன் உயிர்வாழ்வாதற்கு உணவு உண்ணவேண்டும், போன்றன, எம்மதத்தவருக்கும் உண்மை.

    மிகப்பெரிய ஊண்மைகள் எல்லோருக்கும் உண்மையே..

    ஆனால் பாருங்கள், கடவுள் என்ற ஒரு விடயம் உண்மையானால் அது எல்லா மதத்தவருக்கும் உண்மையாகவல்லவா இருக்கவேண்டும்.. அப்படியில்லையே

    பௌத்த மதத்துக்கும், ஜெயின் (jainism) மதத்துக்கும் கடவுள் என்றொரு விடயம் இல்லையே! அவை கடவுளை சுற்றியமைக்கப்பட்ட மதங்கள் இல்லையே! இவற்றை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?

    கடவுள், என்பத் ஒரு நிரூபிக்கப்பட்ட மூடநம்பிக்கையே. வேண்டுமானால், அதை என்னால் நிறுவ முடியும்.

    உங்களுக்கு தெரியுமா, அண்மையில் சுவீடன் நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளார்கள்.

    அந்த சட்டம் சொல்கின்றது 'சுவீடன் நாட்டில் மதசம்பந்தமான (புனித நூல்களிலுள்ள) விடயங்களை உண்மையென்று பாடசாலைகளிலோ, ஏனை நிறுவனங்களிலோ கற்பிக்கக்கூடாது' என்று.

    அந்த அரசாங்கம் என்ன பைத்தியக்காரர்களா?

    காரணம், இந்த மதவாத சிந்தனைகள், மக்களிடையேஅடிப்படைவாததினையே தோற்றுவிக்கின்றன. ஆகவே அவை கற்பனைக்கதைகள்ளாகவே போதிக்கப்படவேண்டும் என்கின்றன...

    இது சம்பந்தமாக இங்கே பாருங்கள்
    http://commentisfree.guardian.co.uk/andrew_brown/2007/10/gods_honest_truth.html


    என்னால் இன்னும் நிறையவே எழுத முடியும், அளவு கருதி இத்துடன் இப்போத்தைக்கு முடிக்கிறேன்..


    நீங்கள், நிறையவே அறிவியல் விடயங்களை படிக்கவேண்டும் என்பது எனது ஆலோசனை..

    RELIGION DOES MORE HARM THAN GOOD IN THIS WORLD!

    மதங்கள் நன்மையை விடம் தீமையையே அதிகம் செய்கின்றன!

    வாமன் (I am a HINDU)

    ReplyDelete
  31. ///மதங்கள் நன்மையை விடம் தீமையையே அதிகம் செய்கின்றன!
    வாமன் (I am a HINDU)///

    இந்த இரண்டுவரிகளில் உள்ள முரண்பாட்டிற்கு என்ன சொல்வீர்கள்?
    அதைச் சொல்லுங்கள் நண்பரே!

    முதலில் உங்களை நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளூங்கள்!

    மதங்கள் தீமை பயக்கும் எனும்போது உங்களை நீங்கள் ஏன் ஒரு இந்து என்று சொல்லவேண்டும்?

    மதங்களைத் தூக்கிக் கடாசிவிட்ட மனிதன் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

    ஏன் இந்த முரண்பாடு?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com