21.9.07

எது புண்ணியம்? எது பாவம்?


******************************************************************
விதிப்படிதான் நடக்குமா? - பகுதி 2

எது புண்ணியம்? எது பாவம்?

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப்
பயன்கள் செய்தவனையே சென்றடைவதுதான்
விதி. ஆகவே இப்பிறவியில் ஏற்படும் நன்மை,
தீமைகள் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் -
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்
என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.

அதென்ன இருவினைப் பயன்கள்?

பட்டினத்தடிகள் அதைப் பற்றி நான்கே
வரிகளில் நெற்றியடியாக எழுதி வைத்து
விட்டுப் போயிருக்கிறார்

பாடலைப் படியுங்கள்:

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக
மெத்திய மாந்தரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

இதே பாடலை கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப் படுத்தி ஒரு திரைப்படப்
பாடலின் ஆரம்ப வரிகளுக்குப் பயன் படுத்தினார்

அது மிகவும் பிரபலமான பாடல். தமிழகம்
எங்கும் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கின்ற -
உங்களுக்குத் தெரிந்த பாடல்.
பாடல் வரிகளைப் பாருங்கள்:

"வீடு வரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?"

இந்தப் பாடலை ஒலிப் பதிவுக்கூடத்தில்
பாடுவதற்காக இருந்த பாடகர்
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள்
கவிஞரைப் பார்த்துக் கேட்டார்.

"அப்பச்சி, இந்தப் பாடலின் துவக்க வரிகளை
நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.எந்தப்
பாடலின் உந்துதலில் இதை எழுதினீர்கள்?"

கவியரசர் பதில் சொன்னார்.

"அது பட்டினத்தார் பாடல் அய்யா"

"எங்கே முழுப் பாடலையும் சொல்லுங்கள்"

கவியரசர் சொன்னார்

"பட்டினத்தார் பாடலின் கடைசி வரியை
ஏன் விட்டுவிட்டீர்கள்?"

"எதை - பாவ, புண்ணியத்தையா? அதைச்
சொன்னால் நமது மக்களுக்குப் புரியாதையா!
அதனால்தான் யாரோ என்று எழுதினேன்.
புரிகிறவன் புரிந்து கொள்ளட்டும்
புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்!"

என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?
மக்களின் நாடி தெரிந்தவர் அவர்.
அதனால்தான் அவர் கவியரசரானார்.
மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

இதே பாடலை நான் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த காலத்தில், நானும், சகமாணவர்களும்
சேர்ந்து இப்படித் திரித்துப் பாடுவோம்.

"வீடுவரை லைஃபு (Life)
வீதிவரை ஒய்ஃபு (Wife)
காடுவரை சன்னு (Son)
கடைசிவரை மண்ணு"

இது உப செய்தி - தொடரின் சுவாரசியத்திற்காக.
அதை விடுங்கள் - இருவினைப் பாவ, புண்ணி
யத்தைப் பார்ப்போம்.

பாவம் எது என்பதும், புண்ணியம் எது என்பதும்
உங்களுக்குத் தெரியாததா என்ன?
இருந்தாலும் கட்டுரைக்காக ஒரு சிறு உதாரணம்
மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை
அவர்களுடைய வயதான காலத்தில்
வீட்டில் வைத்து அவர்களுடைய மனம்
மகிழும்படியாக பிள்ளை பார்த்துக் கொண்டால்
அது புண்ணியக் கணக்கில் வரும் :
மனைவியின் பேச்சைக் கேட்டு அல்லது
தொல்லை என்ற சுய சிந்தனையுடன் அவர்களைக்
கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டால்
அது பாவக் கணக்கில் வரும்

அமெரிக்காவில் வேலைக்குப் போகும் தம்பதிகள்
அதிகம் - 90% அவர்கள் தங்கள் குழந்தைகளைப்
பேணி வளர்க்காமல் விடுதிகளில் (Hostel) விட்டு
விடுவார்கள். அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகி
ஒரு நிலைக்கு வரும்போது தங்களுடைய பெற்றோர்
களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள்.
கேட்டால், நமது கவுண்டமணி பாணியில்
"அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா...!"
என்று சொல்லி விடுவார்கள்.

ஒரு ரூபாயோ அல்லது கோடி ரூபாயோ
இறைப் பணிக்குச் செலவழித்தால் அல்லது
ஏழை, எளியவர்களுக்குச் செலவழித்தால் அது
புண்ணியம். பொதுச் சொத்தையோ அல்லது
கோவில் சொத்தையோ கொள்ளையடித்தால்
அது பாவம்

இன்னும் சிறப்பாக விளக்க ஒரு கதை
சொல்கிறேன். சுவாரசியமான கதை. கொஞ்சம்
பொறுமையோடு படியுங்கள்.

ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம்
ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்
இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது.
வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத
காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன்
கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார்
சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம்
செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார்.

வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய
பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான
ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை
மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார்.
கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத் திறந்து
கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன்
வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை
வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித்தூக்கம் அவன்
கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்," என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும்,
எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு
உண்வு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக," இதற்குத்
தான் தட்டினீர்களா - சனியன் பிடித்தவர்களே - என்
தூக்கத்தைக வேறு கெடுத்துவிட்டீர்களே - போய்
வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி விட்டுத்
திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று படார் என்று
கதவை அறைந்து சாத்தி விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய
கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக்
கட்டுப்படுத்தைக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக
நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே
இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு செலவத்தைக்
கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான்.
குருவின் தவவலிமை அவனுக்குத் தெரியும்.
அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும்.
ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின்
நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது
அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி
நடந்தார். சீடனும் தொடர்ந்தான். கண்ணில்
பட்டது ஒரு குடிசை வீடு. முன் பக்கம்
திண்ணை. அருகில் உள்ள கொட்டகையில்
நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

" வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?"
என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று
முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக்
கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது.ஆளுக்கு ஒரு
செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன்
வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில்
அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற
சுவையுடன் மோர் வந்தது. வாங்கி அருந்தினார்கள்
பசி அடங்கிய பிறகுதான் இருவரும் ஒரு
நிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில்
விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு
வயதில் ஒரு பேத்தி - ஆக மூன்று பேர்கள். நான்கு
பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர்
விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா
பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,
இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்." உன் பேத்திக்கு
சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும்
அனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம்
நான்கு மடங்கு பெருகட்டும் என்று
சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு
அற்புதமான மோர் கொடுத்த இந்த
மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும்
என்கிறாரே - எதற்காக இப்படி சொல்கிறார்?
என்று புரியாமல், குழப்பத்துடன் தன்
குருவைத் தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி
அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி
அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம்
இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும்
பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம்
நான்கு மடங்கு பெருகினால் - அவன் பாவமும்
நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை
அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன்
ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக
இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து
இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு
மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும்
போது இரண்டு மடங்காக மாறும். அத்னால்தான்
இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"

புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும்,
என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு
தெரிவு படுத்தியிருக்கிறேன்.

வேறு ஒரு உப தலைப்புடன் (Sub Title) மீண்டும்
சந்திப்போம்

(தொடரும்)

11 comments:

  1. எட்டுக்கட்டின பாட்டு தான் ஜோராக இருக்கு என்று பார்த்தால் அதற்கு கீழே கொடுத்துள்ள கதையும் அருமை ஐயா>

    ReplyDelete
  2. அருமையாகச் செல்கிறது.
    தொடர்ந்து எழுதுங்கள், ஐயா!

    ReplyDelete
  3. ///வடுவூரார சொல்லியது: எட்டுக்கட்டின பாட்டு தான் ஜோராக இருக்கு என்று பார்த்தால் அதற்கு கீழே கொடுத்துள்ள கதையும் அருமை ஐயா> ///

    இதுபோல இன்னும் பல கதைகளும் சம்பவங்களும் உள்ளன. அடுத்தடுத்து அவைகள் வரும். தொடர்ந்து படியுங்கள்
    வடுவூராரே!

    ReplyDelete
  4. ///ஜீ.வி அவர்கள் சொல்லியது:அருமையாகச் செல்கிறது.
    தொடர்ந்து எழுதுங்கள், ஐயா!///

    நீங்கள் சொன்னால் சரிதான் கவிஞரே!
    தொடர்ந்து எழுத உள்ளேன்.நீங்களும் தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  5. ரொம்ப நாள் கழித்து இன்றுதான் உங்கள் பதிவினை தேன்கூட்டில் பார்த்தேன்....மிக அருமை.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, நலமா? நான் விக்னேஸ்வரன். மலேசியாவில் வசிக்கிறேன்.

    நீண்ட நாட்களாக உங்களுடன் பேச முயற்சிக்கிறேன். அன்று சிபி நண்பரிடம் சொல்லி உங்களை கேட்டதாக சொல்ல சொன்னேன். நீங்கள் பிசியாக இருப்பதாக கூறினார்.

    ஐயா இந்த கேள்வி இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லாதது. இருந்தாலும் பதில் எழுதுவீர்கள் என பெரிதும் எடிர்பார்கிறேன்.
    கால சர்ப தோசம் மற்றும் கால சர்ப யோகம், இவற்றிற்கான வித்தியாசங்கள் என்ன. இந்த தோசத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றும் நீசம் பெற்றும் அமைந்தால் எப்படி அமையும். ராகு அல்லது கேதுவில் யாரவது ஒருவரின் தசை முடிந்தால் தோசம் முடிந்துவிடுமா? அன்று கால சர்ப தோச நிவர்த்திகாக கல்வெட்டில் இருந்ததற்கான அட்டவனை ஒன்று என்னிடம் உள்ளது. உங்களுக்கு அனுப்பி வைக்கலாமா? பதில் அளிப்பீர்கள் என பெரிதும் எதிர் பார்க்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  7. ///மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: ரொம்ப நாள் கழித்து இன்றுதான் உங்கள் பதிவினை தேன்கூட்டில் பார்த்தேன்....மிக அருமை.///

    அடடே, வாருங்கள் நண்பரே!
    நானும் நெடுநாள் கழித்து இன்றுதான் பதிவில் சந்திக்கிறேன். தொடர்ந்து படியுங்கள். நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  8. அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு. தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டம் எப்போவாவது தான் கொடுக்க முடியுது. இதுவும் என்னோட விதிதான்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. ///திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்லியது: அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு. தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டம் எப்போவாவது தான் கொடுக்க முடியுது. இதுவும் என்னோட விதிதான்னு நினைக்கிறேன்.///

    பின்னூட்டத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் சகோதரி!
    மாற்றுக் கருத்து இருந்தால் மட்டுமே பின்னூட்டம் கொடுத்தால் போதும்
    அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும் - என் பதிவுகளின் நோக்கம் அதுதான்.

    எத்தனை பேர் வந்து செல்கின்றார்கள் என்பதை பதிவில் உள்ள
    web counter மூலம் தெரிந்து கொள்வேன் (அது ஒரு ஆத்ம திருப்திக்காகத்தான்)

    ReplyDelete
  10. இது உங்கள் பதிவில் முதல் முறை. நல்ல பதிவு.

    கதைப்படி ஒருவர் எவ்வளக்கெவ்வளவு வருந்தி நல்லது செய்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு புண்ணியம்? சரி இதற்கும் "தனக்கு மிஞ்சினால்தான் தானமும் தர்மமும்" என்ற கூற்றுக்கும் முரண்பாடு உள்ளதே.. அது குறித்து உங்கள் கருத்து?

    ReplyDelete
  11. //புபட்டியன் அவர்கள் சொல்லியது: கதைப்படி ஒருவர் எவ்வளக்கெவ்வளவு வருந்தி நல்லது செய்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு புண்ணியம்? சரி இதற்கும் "தனக்கு மிஞ்சினால்தான் தானமும் தர்மமும்" என்ற கூற்றுக்கும் முரண்பாடு உள்ளதே.. அது குறித்து உங்கள் கருத்து?///

    உண்மைதான். தனக்கு மிஞ்சினால்தானே தானம். தனக்கே பற்றாக்குறை என்ற நிலையில் எப்படிதானம் செய்ய முடியும்? அந்த நிலையிலும் ஒரு பிடி சோற்றை காகத்திற்குக் வைத்துவிட்டுச் சாப்பிடலாமே! என்ன குறைந்துவிடும்?

    வருந்திச் செய்வது என்பது வேறு!

    இல்லாத ஏழைகளுக்கு உணவு வழங்குவது தானம். அதையே பொருள் இல்லாதவன் இரண்டு குடம் தண்ணீரை வாசலில் வைத்து தெருவில் தாகத்துடன் செல்பவர்களுக்கு வழங்கினால் அதுவும் தானம்தான்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com