
ஜோதிடக் கட்டுரைத் தொடர்
நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள். நன்றாக வேலை செய்யக்கூடியவர்.
அதற்கான கல்வித் தகுதியும், திறமையும் உங்களிடம் இருக்கிறது.
ஆனால் உங்கள் வேலைக்கான பாராட்டும், அதைவிட முக்கியமாக அதற்குரிய
ஊதியமும் உங்களுக்குக் கிடைத்தால்தானே - உங்களுக்கு ஒரு சந்தோசமும்,
உற்சாகமும் இருக்கும்?
இல்லையென்றால் என்ன ஆகும்?
சலிப்புத்தான் மிஞ்சும்.
அல்லது இப்படி வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அமைப்பில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கான அங்கீகாரமும், பதவியும் இல்லையென்றால் உங்கள் செயல்பாடு
எப்படி இருக்கும்?
நீங்கள் ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராக இருக்கிறீர்கள். உங்கள்
மூளையைக் கசக்கி நீங்கள் சொல்லும் திரைக்கதையோ, காட்சி அமைப்போ
சூப்பராக இருந்து, அது படத்திலும் வெளிப்பட்டு, அதன் பாராட்டு முழுவதும்
இயக்குனருக்கே போய், உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தால்
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
அல்லது நீங்கள் ஒரு வியாபாரம் செய்கிறீர்கள். தொழிலின் நுணுக்கமெல்லாம்
உங்களுக்கு அத்துபடி. இருந்தாலும், போட்டி காரணமாக அல்லது நீங்கள்
இருக்கும் ஊரின் மக்கள் வாங்கும் திறன் காரணமாக, உங்கள் தொழிலில்
தேக்கம் ஏற்பட்டு அல்லது நஷ்டம் ஏற்பட்டு, ஒரு சோக நிலைக்கு (கடனுக்கு)
நீங்கள் தள்ளப்பட்டால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்?
இப்படிப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
உங்கள் நேரம் நன்றாக இருந்தால், நடப்பவை நன்றாக இருக்கும்.
இல்லையென்றால், இல்லை!
கிராமங்களில் சொல்வார்கள்:
”தரித்திரம் தந்தியில் வரும்; அதிர்ஷ்டம் தபாலில் வரும்”
அது உண்மை.
கஷ்டங்கள் ஒரு நொடியில் வந்து விடும்.
சரி, அது எப்போது போகும்? எப்படிப்போகும்?
நல்ல கிரகத்தின் திசை அல்லது புக்தி (Major Dasa or Sub Period) ஆரம்பமானவுடன்
அது போக ஆரம்பிக்கும். அந்த திசை அல்லது புக்தி முடிவதற்குள் எல்லாம் சரியாகி
விடும்.
உதாரணமாக குரு திசை, சனி புக்தியில் (30 மாதம்,12 நாட்கள்) ஒருவன் பல
விதமான சோதனைகளைத் துன்பங்களை அனுபவித்தான் என்றால், அதைத்
தொடர்ந்து வரும் குரு திசை புதன் புக்தியில் (27 மாதங்கள் 6 நாட்கள்)
சரியாகி விடும். பொதுவாக குருவும், புதனும் சேரும் போதெல்லாம் மாற்றங்களைக்
கொடுப்பார்கள். நல்லதைச் செய்வார்கள்.
அதற்காக குரு திசை புதன் புக்தி ஆரம்பித்த அன்றே ஸ்விட்ச் போட்ட மாதிரி
ஒரே நாளில் எல்லாம் சரியாகி விடாது. ஒவ்வொரு பகுதியாகச் சரியாகி, அந்தக்
குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் எல்லாம் சரியாகி விடும்.
மொத்த நட்சத்திரங்கள் 27
மொத்த கிரகங்கள் 9
ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சத்திரங்கள் சொந்தமாகும் அல்லது 3 நட்சத்திரங்களுக்கு
ஒவ்வொரு கிரகமும் அதிபதியாகும்
உங்கள் நட்சத்திரத்திற்கு யார் அதிபதி என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
உதாரணமாக நீங்கள் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிறந்திருந்தால்
உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது. உங்களுடைய ஆரம்ப திசையும் கேது திசைதான்
அடுத்த நட்சத்திரமான பரணி என்றால் உங்களுடைய அதிபதி சுக்கிரன்.உங்களுடைய
ஆரம்ப திசையும் சுக்கிர திசைதான்
இப்படியே வரிசையாக வரும். முன் பாடங்களில் இதையெல்லாம் தெளிவாகச் சொல்லி
இருக்கிறேன். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது முக்கியம்.
மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் 9 புக்திகள்(sub periods) ஆக மொத்தம்
81 புக்திகள் (sub periods) அவற்றின் மொத்தகாலம் 120 ஆண்டுகள்
நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா என்றால் இல்லை!
முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் போதிய மருத்துவ வசதி
இன்மையால் ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.
ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது
ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி நடக்கும் பொதுப் பலன்களைப்
பழைய நூல் ஒன்றிலிருந்து எடுத்து முன் பதிவுகளில் (ஜோ.பாடம் எண் 23 - 25)
கொடுத்திருந்தேன்
அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு
பெரிய முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!
அவருடைய பெயர் 'புலிப்பாணி'.
ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி
அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு
செய்து, வரிகளின் அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட் எடுத்து, Scan
செய்து பதிவிட்டிருந்தேன்
எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான். மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை
வாத்தியார் கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்
பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருந்தேன்.
அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும். யாரையும் கேட்க வேண்டாம்.
உங்களுக்கு நீங்களே நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று தெரிந்து அதற்குத்
தகுந்த மாதிரி வாழ்க்கையின் இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்
சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள் அதில் உள்ள மாதிரிதான் இருக்கும்.
மீதமுள்ள 25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின்
மேம்பாட்டைப் பொறுத்து பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில் (எண்22) நான்
சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக் கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க
வேண்டுகிறேன்
ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும்
சம்பவங்களை வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம் உள்ளது என்று தசா
புத்தி (sub periods) சொல்லும் போது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?
வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த மூன்று வருடத் துன்பங்களைத்
தெம்புடன் ஏற்றுக் கொள்வோமா - மாட்டோமா?
அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.
வேறு சுலபமான வழி இல்லையா?
ஏன் இல்லை? இருக்கிறது.
அஷ்ட வர்கத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சுய வர்க்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதன்படி, உங்கள் ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படி ஒவ்வொரு கிரகமும் என்ன
வலுவுடன் (Strength) என்று பாருங்கள் அதன்படி பலன் இருக்கும்.
உதாரணமாக ஒருவருக்குப் புதன் திசை நடக்கிறது.
அவருடைய ஜாதகத்தில் புதனின் சுய வர்க்கத்தில் உள்ள கிரகங்கள் அந்தக் குறிப்பிட்ட
கட்டத்தின் படி எத்தனை பரல்களுடன் இருக்கிறது என்று குறித்துக் கொண்டு
புக்திகளுடன் வைத்துப் பலன்களை பாருங்கள்
உதாரணத்திற்குக் கீழே உள்ள படிவத்தைப் பாருங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------
இதன்படி உங்களுக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மகிழ்வுடன் இருங்கள்.
இதே வரிசையில் (அஷ்டகவர்க்கத்தில்) அடுத்த பாடம் இன்னும் சுவையாக இருக்கும்.
அது அடுத்த திங்கட் கிழமையன்று (19.5.2008)
அதுவரை, பழைய படங்களை எல்லாம் புரட்டிப் பாருங்கள். பல செய்திகள் தெரிய
வரும்!
(இது: ஜோதிடக் கட்டுரை 2 உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப
மலரும்? பகுதி: 3)
அன்புடன்
வாத்தியார்
(தொடரும்)