20.8.25

Astrology: யோகங்கள்

Astrology: யோகங்கள்
ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்!

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்! 

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

முன்பு வகுப்பறையில் புதிர் எண்.95ல் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்! பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம். இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி மூன்று நிலைப்பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்) இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.

இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆகவே யோகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்றுள்ளேன். யோகங்களைப் பற்றிய சில பாடங்களைப் படிக்கும்போது முன்பே படித்ததாகத் தோன்றலாம். புதிதாக நிறையப் பேர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். முன்பே படித்த நினைவு வந்தால், தவறில்லை, மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================

16.8.25

Astrology: விபரீத ராஜயோகம்

Astrology: விபரீத ராஜயோகம் 

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் 
அதை விபரீதம் என்போம். அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் 
கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி,சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது  வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?




மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் 
என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் 
திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக்
கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் 
எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு
துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை 
உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் 
கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.25

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு
5ஆம் அதிபதி இருக்கும் இடம்
காரகன் குரு இருக்கும் இடம்
ஆகிய மூன்று வீடுகளும்
28 பரல்களுக்கு மேல் இருக்கவேண்டும்
இருந்தால் உடனே குழந்தை பிறக்கும்

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகார ஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.25

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம். 

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Yes, the native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப்

பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும்

கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.

அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார். 

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில்

நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே

வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்? 

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்? 

The native is self equipped to stand in any situation! 

அது முக்கியம். 

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர்

லக்கினத்தைத் தன் கண்பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது

ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார். 

நீ பாதி; நான் பாதி கண்ணேஎன்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான்

(திருமணத்திற்குப் பிறகுதான்) 

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான்.

5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர்

தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம்

பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார். 

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள்

கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான்.

(Guru is the authority for keen intelligence).

 கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம்

இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அன்புடன்

வாத்தியார்

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.25

Astrology: ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம். 

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.25

Astrology - ராசி எத்தனை ராசி ?

Astrology -  ராசி எத்தனை ராசி ?

நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். 
இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்

நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் (அதாவது 10ம் வீடாகப் பெற்றவர்கள்) நெருப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கும் வாய்ப்பு உண்டு.
------------------------------
நில ராசிகள்:(Earth)
ரிஷபம்,கன்னி, மகரம்  Taurus, Virgo Capricorn, ஆகியவை மூன்றும் நில ராசிகள் எனப்படும். 
இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல்படக் கூடியவர்களாகவும், எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். Take it easy policy காரர்கள். சிக்கனவாதிகள். இவர்களிடம் காசு கேட்டு வாங்குவதற்குள் அடுத்தவனுக்குப் பிராணன் போய்விடும் வாய்ப்பு உண்டு:-))) உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குக்கூட கவலை கொள்ளக்கூடியவர்கள்.

பத்தாம் வீடு  நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான தொழில்கள், வேலைகள், விவசாயம் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.
------------------------------------------
காற்று ராசிகள் :(Air) 
துலாம், கும்பம், மிதுனம், Libra, Aquarius, Gemini ஆகியவைகள் காற்று ராசிகள்எனப்படும்.
நிறைவான, நல்ல குணங்களை உடையவர்கள் இவர்கள். புத்திசாலிகள். ஆர்வம் மிகுந்தவர்கள். 

பத்தாம் வீடு காற்று ராசியாக இருந்தால், ஜாதகன் கணக்காய்வாளர், வழக்குரைஞர், ஆசிரியர் போன்ற தொழில்களைச் செய்தால் வெற்றி பெறலாம். மேன்மையடையலாம்.
--------------------------------------
ஜலராசிகள்:(Water)
கடகம், விருச்சிகம், மீனம் Cancer, Scorpio, Pisces ஆகியவைகள் ஜலராசிகளாகும் 
இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்கள். கற்பனை வளம் உடையவர்கள். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப்பட்ட தொழில், கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகியவறறில் ஒன்றைச் செய்தால், சிறப்பாகச் செய்து பொருள் ஈட்டக்கூடியவர்கள்
----------------------------------------
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்கள் எல்லாம் பொது விதிகள். உங்களுக்கு அப்படி அமையவில்லை என்றால், ஜாதகப்படி அதற்கு வேறு காரண காரியங்கள் இருக்கும். ஆகவே குழப்பம் அடைந்து மண்டையைப் பிய்த்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.25

Astrology - தோஷம் எத்தனை தோஷம்?

Astrology -  தோஷம் எத்தனை தோஷம்?

சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத்திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!
காசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?
ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள்
அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.8.25

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப்படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்றவர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப்படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலையமாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஆமாம். ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன் பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!
ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?

அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.25

Astrology - யாருக்கு ஜோதிடம் வரும் ?

Astrology -  யாருக்கு ஜோதிடம் வரும்  ?

”செந்தமிழ் தேன் மொழியாள்  
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!

என்னவொரு வர்ணனை பாருங்கள்.

அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!

உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.

அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?

தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை

இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!
அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.8.25

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

”காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை” 

என்று, பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர் கண்ணதாசன், பாடலின் முடிவில் இப்படி எழுதியிருப்பார்:

”காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!”

உண்மையிலேயே, காதலிக்கும் யோகத்தை, நல்ல காதலி கிடைக்கும் யோகத்தை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? அதற்கு உரிய வீடுகள் என்ன? அதற்கு உரிய கிரக அமைப்புக்கள் என்ன?

அதை  இன்று பார்ப்போம்!
----------------------------------
ஜோதிடப்படி லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீடு, அன்பு, நேசம், காதல், மெல்லிய உணர்வுகளுக்கும் உரிய வீடாகும். ஏழாம் வீடு கணவன் அல்லது மனைவிக்கு (spouse) உரிய வீடாகும். அந்த இரண்டு வீட்டு அதிபதிகளின் மேன்மையான கூட்டணி (Association) காதலை உண்டாக்கும். நல்ல காதலி கிடைப்பான் அல்லது பெண்ணாக இருந்தால் நல்ல காதலன் கிடைப்பான். கிறங்க வைக்கும் காதல் உணர்வில் காதலர்கள் திகட்டும் வரை (திகட்டாது. காதல் திகட்டியதாக சரித்திரம் இல்லை) திளைப்பார்கள்.

அதாவது, அந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அல்லது இருவரும் பார்வையால் ஒன்று பட்டிருக்க வேண்டும். அல்லது சேர்க்கையால் ஒன்று பட்டு, கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காதல் திருமணம்!

அந்த கிரகங்களின் தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்
-----------------------------------
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அப்படி நடைபெறும் திருமணம் நிலைத்து நிற்குமா? அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்பதற்கு வேறு அமைப்புக்கள் உள்ளன. அதை இன்னொரு நாள் பார்ப்போம். 

மேலும், இன்றே அதை எழுதி, காதலர்களைக் கலங்க அடிக்க வேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.25

Astrology - கோச்சாரம் என்ன செய்யும் ?

Astrology -  கோச்சாரம்  என்ன செய்யும் ?

கோள்சாரம் அல்லது கோச்சாரம் என்பது இன்றைய தேதியில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும்! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து, அதாவது உங்களுடைய சந்திர ராசியை வைத்து அதைப் பார்க்க வேண்டும். எண்ணும்போது ராசியையும் சேர்த்து எண்ண வேண்டும்.

கோச்சார கிரகங்கள் என்ன செய்யும்? தீய கோள்சாரங்கள் தொல்லைகளைக் கொடுக்கும். சிரமங்களைக் கொடுக்கும். சனீஷ்வரன் கோச்சாரத்தில் 8ம் இடம், 12ம் இடம், 1ம் இடம் இரண்டாம் இடங்களில் இருக்கும் காலங்களில் (மொத்தம் 10 ஆண்டு காலம்) தீமையான பலன்களையே கொடுப்பார்.

அப்படி ஒவ்வொரு கிரகமும் கோச்சாரத்தில் அதிகமான தொல்லையைக் கொடுக்கும், அதாவது ஜாதகனுக்கு அதிக அளவில் தீமையான பலன்களைக் கொடுக்கும் இடத்தைப் பற்றி முனுசாமி அதாங்க நம்ம முனிவர், பாடல் ஒன்றின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார்

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
கேளப்பா குரு மூன்றில் கலைதானெட்டு
   கேடுசெய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
   சீறிவரும் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
   அப்பனே திசையினுடைய வலுவைப்பாரு
மாளப்பாகுற்றம் வரும் கோசாரத்தாலே
   குழவிக்குதிரியாணங் கூர்ந்து சொல்லே!
              - புலிப்பாணி முனிவர்

குரு - 3ம் இடம்
கலை (சந்திரன்) 8ம் இடம்
சனி - 1ல்
புந்தி (புதன்) - 4ல்
சேய் (செவ்வாய்) - 7ல்
கதிரோன் (சூரியன்) 5ல்
கரும்பாம்பு - நிதியில் - 2ல்
அசுர குரு - சுக்கிரன் - 6ல்
இருக்கும் காலத்தில் அதிகமான தீமைகளைச் செய்வார்களாம்.
அக்காலத்தில் ஜாதகனுக்கு நல்ல தசா/புத்திகள் நடந்தால் ஜாதகனுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் இருக்காது. தசா நாதர்கள்/புத்தி நாதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.25

Astrology - போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Astrology -  போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

மனிதர்களுக்கு கிடைக்கும் வேலையில்தான் எத்தனை வகைகள்?

சிலர் சேரும் வேலையிலேயே, அது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ, கடைசிவரை அதிலேயே  உழன்று விடுவார்கள்.அதாவது இருந்து விடுவார்கள்.

சிலர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியில் சேர்ந்து பணியாற்றத் துவங்கிவிடுவார்கள். அதே வங்கியில் 35 வருடங்களோ அல்லது 38 வருடங்களோ தொடர்ந்து பணியாற்றிவிட்டு, பணி ஓய்வு பெறும் வரை அந்த வங்கியிலேயே பணியாற்றுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து பணி செய்துவிட்டு இப்போதுதான் பணி ஓய்வு பெற்றார்.

ஆனால் சிலர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக,  சட்டையை மாற்றுவதுபோல அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.

ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

அதற்குக் காரணம் என்ன?

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.  
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். 
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். 
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். 
இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்

Mesha, Kataka, Thula and Makar are movable astrology signs, 
Rishaba , Simha ,Vrischika and kumbha are fixed signs. 
Mithuna, Kanya, Dhanu and Meena are known as common signs.
-------------------------------------------------------
1. பத்தாம் அதிபதி (10th Lord) உபய ராசியில் (common signs) அமர்ந்திருப்பதோடு,  சனி, அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், வேலையில் மாற்றங்கள் இருக்கும்.

2. அதே போல 12ஆம் அதிபதி (12th lord) பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒரே வேலையில் இருக்க விடமாட்டான்.

மேலே கூறியுள்ள இரண்டு அமைப்புக்களும், சுப கிரகங்கள் ஏதாவது ஒன்றின் பார்வையைப் பெற்றிருந்தால், அது விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.25

Astrology - மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Astrology -  மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் திரைப்பட நாயகிகளைப் பற்றி எழுத உள்ளேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது ஜோதிடத்தில், முக்கிய மறைவிடங்களான ஆறாம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீட்டைப் பற்றியது.

அவற்றிற்கு தீய இடங்கள் என்று பெயர் (innimical places)

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோர் அங்கே சென்று அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உரிய விதத்தில், உரிய காலத்தில் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!

அதைவிட முக்கியமாக அந்த இடங்களுக்கு வேறு சூட்சமங்களும், வேறு முக்கிய செயல்களும் உள்ளன.

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
மறைவிடங்களின் முக்கியத்துவம்!

1.எட்டாம் வீடு ஒரு மனிதன் வாழும் காலத்தையும், அவனுக்கு மரணம் ஏற்படும் விதத்தையும் சுட்டிக்காட்டும்.

2.ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதிகளின் (Owners) நிலைப்பாட்டை வைத்து மரணம் ஏற்படும் காலத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

3. ஆறாம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் தீய கிரகங்கள் இருந்தாலும், அதாவது அங்கே சென்று அவர்கள் குடியிருந்தாலும், ஆறாம் வீட்டு அதிபதியும், எட்டாம் வீட்டு அதிபதியும் தீயவர்களாக இருந்தாலும், அவர்களில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடைய தசாபுத்திக் காலங்களில் ஜாதகன் போர்டிங் பாஸ் வாங்கிவிடுவான். மேலே போய்விடுவான். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

4. எட்டாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் (That is the planets aspecting the eighth house) மரணம் இயற்கையாக இருக்குமா அல்லது இயற்கையில்லாமால் துன்பம் நிறைந்ததாக இருக்குமா என்று தெரியவரும்.

5. எட்டாம் வீட்டைத் தங்கள் பார்வையில் வைத்திருக்கும் சுபக்கிரகங்கள் ஜாதகனுக்கு இயற்கையான மரணத்தைக் கொடுக்கும். இயற்கையான மரணம் என்பது உடற்கோளாறுகளை வைத்தோ அல்லது மூப்பின் காரணமாக (old age) உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை இழந்தோ வருவதாகும்

மரணத்தில், சாலை விபத்து, தீ விபத்தில் துவங்கி 28ற்கும் மேற்பட்ட மரணங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துப் பத்துப் பக்கங்களுக்கு விரிவாக எழுதலாம். தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.25

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

Astrology -   தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:

”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”

 அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்

”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”

தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.

1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.70,000/-
94  ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

19ஆம் ஆண்டில்  கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.25
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.35

அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.1000/-
அதே விகித்ததில் பார்த்தால் பல மடங்கு உயர்ந்துள்ளது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 40,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு பவுன் காசுகூட இல்லை) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது

அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய மதிப்பு 74 லட்ச ரூபாய்கள்

எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்

தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?

செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை சரியத் துவங்கும்

”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.

பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும் முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.

தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள் சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.25

Astrology - பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

Astrology -  பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

அவை என்னென்ன?

விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல் நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.

ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow

அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1.  செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்
2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்
4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தில்     சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.
5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ    பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

இதெல்லாம் பொது விதி. 

விதிவிலக்கு உண்டா? 

உண்டு!

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!