சிறுகதை:
நம்பிக்கையும், இறையுணர்வும்!
அடியவன்
எழுதி, சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை உங்களுக்குப் படிக்கத் தருவதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்
அன்புடன்
“சாவியில்லாத
பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!
உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை,
இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு
ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண்
337 என்று எப்படி வரும்? இங்கே
தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும்
எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக்
கொடுத்துவிட்டு வந்தவனுக்கும்
மதிப்பெண் 337தான்!
ஆகவே சாவி உங்களிடம்தான்
இருக்கும் .அதைத் தேடி எடுங்கள்.
பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும்,
பண வரவிற்கான வேறு அமைப்பு
நன்றாக இருக்கும். இல்லாவிட்டால்
ஜீவனம் எப்படி நடக்கும்?கர்மகாரகன்
சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த
அவலத்திற்கான மாற்று
ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பார்கள். அல்லது சுகாதிபதி
சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள்
மூலம் ஜீவனத்திற்குக் கொடி
காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி
இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது
நல்லதாகவே நடக்கட்டும்”
கையில் இருந்த புத்தகத்தில்
இருந்த அந்த அசத்தலான வரிகளை
சிகப்பி ஆச்சி எத்தனை முறைகள்
படித்தாரென்று தெரியவில்லை. அதையே அவர் மனது
அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. தனது பிரச்சினைக்கான சாவியை
அவர் தேடிக்கொண்டிருந்தார்.
என்ன பிரச்சினை?
அவருடைய ஒரே மகள்
சாலா என்ற விசாலாட்சி தனக்கு
திருமணமே வேண்டாம். தனக்காக
மாப்பிள்ளை தேடும் முயற்சியை விட்டுவிடுங்கள்
என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
சொந்தக்காரர்கள், சுற்றத்தார்கள் எல்லாம் வேறு மாதிரிப்
பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் யாரையோ விரும்புகிறாள்
போலும், அதனால்தான் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக்
கழிக்கிறாள் என்று பேசத் துவங்கி
விட்டார்கள்.
சாலாவிற்கு வயது 27ஐ தொட்டுவிட்டது.
திரைப்பட நட்சத்திரம்போல அழகாக இருப்பாள். கடந்த
5 ஆண்டுகளாக பெங்களூரில்தான் வசிக்கிறாள்.
கிண்டி பொறியியல் கல்லூரியில்
படித்த காலத்தில் படித்துத் தங்கப் பதக்கத்துடன்
பொறியாளராக தேர்வு பெற்றவள்.பன்னாட்டு
நிறுவனம்
ஒன்றில் நல்ல வேலை.
தற்போது வேலை பார்ப்பது மூன்றாவது
நிறுவனம். மூன்று முறைகள் தாவியதில்
(By Jumping) சம்பளம் மாதம் லட்ச ரூபாயைத்
தாண்டிவிட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
பெங்களூருக்கு வந்த புதிதில் பி.ஜி
(Paying-Guest-Accommodation-For women) ஒன்றில் தங்கி வேலைக்குச்
சென்று வந்து கொண்டிருந்தாள், சனி மற்றும் ஞாயிறு
என்று வாரம்
இரண்டு நாள்
விடுமுறைக்கும் சென்னைக்குச் சென்று தன்
பெற்றோர்களுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை காலை பெங்களூருக்குத் திரும்பி
விடுவாள்.
அவ்வாறு சிரமங்கள் இன்றி
இருக்க அவளுடைய தந்தையார் அவள்
வேலை பார்த்து வந்த பக்மானே டெக்
பார்க் ஏரியாவின் அருகில் இருந்த
பைரசந்திரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை
வாங்கிக் கொடுத்து விட்டார், 3 படுக்கை அறைகள் கொண்ட
குடியிருப்பு.
அவளுக்கு சமைத்துப் போட்டு துணையாக இருக்க
அவளுடைய தாயாரும் பெங்களூருக்கே வந்துவிட்டார். வந்தவர் சும்மா இருக்காமல்
அவளைத்
தினமும் திருமணம் குறித்துப்
பேசி நைத்துக் கொண்டிருந்தார்.
அவள் அதைக் காதுகொடுத்துக்
கேட்கமாட்டாள். “அம்மா, நான்தான் உன்னிடம்
பலமுறை சொல்லிவிட்டேனே!
எனக்குத் திருமணம் வேண்டாம். வேண்டாம்....... வேண்டாம், அதைப்பற்றி இனி என்னிடம் பேசாதே!!”
“நானும்
அதைபோல சொல்லியிருந்தால், என்ன நடந்திருக்கும்? நீ
பிறந்திருப்பாயா? உன் முடிவை மாற்றிக்கொள்
ராஜாத்தி! எங்களுக்குப் பிறகு
உனக்கு ஒரு துணை
வேண்டாமா?”
"துணையே வினையாகிப் போனால்
என்ன செய்வது? கணவன்,
அவருடைய பெற்றோர்கள் என்று எல்லோரும் என்னைக்
கட்டுப் படுத்துவார்கள்.
எனது சுதந்திரத்தை நான்
இழக்க வேண்டியதாக இருக்கும். அதில் எனக்கு உடன்பாடில்லை!
நான் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றின்
வரிகளைப் போல நான் சுதந்திரமாக
இருக்க விரும்புகிறேன்.”
“என்ன எழுதினார் கண்ணதாசன்?”
“சிட்டுக்குருவிக்கென்ன
கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து
பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
”
“மரத்தில்
படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு
படரவிட்டார்
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த
பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள்
உலகு
இந்த வழிதான் எந்தன்
கனவு”
இதற்கு மேல் சிகப்பி
ஆச்சி அவளுடன் வாதிடுவதை நிறுத்திக்
கொள்வார்
சிகப்பி ஆச்சியின் கணவர்
சின்னையாவிற்கு சாலா செல்லப்பிள்ளை. ஆகவே
அவர் அவளைக் கடிந்து ஒன்றும்
சொல்ல மாட்டார். சிகப்பி ஆச்சிக்குத்தான்
கடுமையான சோதனையாகி விட்டது. பழநி அப்பனைப் பிரார்த்திப்பதைத் தவிர
அவருக்கு வேறு வழியொன்றும் தோன்றவில்லை.
“மயில்நட
மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண
பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா
சரணம்
சரணம் சரணம் சண்முகா.........
சரணம்!”
என்று கந்த சஷ்டிக்
கவசத்தைத்தான் அனுதினமும் பாராயணம் செய்து கொண்டிருந்தார்.
கார்த்திகை மைந்தன் கைகொடுத்தாரா?
கைகொடுக்காமல் இருப்பாரா?
என்ன செய்தார்? சாலா
எப்படி மனம் மாறினாள்?
வாருங்கள் அதைப் பார்ப்போம்!!
இறைவன் நேரில் காட்சி
கொடுத்து யாருக்கும் உதவ மாட்டார். சக
மனிதர்கள் மூலமாகத்தான் உதவுவார். சிகப்பி ஆச்சிக்கும் அவருடைய
இளைய
சகோதரி சாரதா ஆச்சி
மூலமாக அந்த உதவி வந்து
சேர்ந்தது.
சாரதா ஆச்சியும் அவரது
கணவரும் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிப்பவர்கள். சாரதா
ஆச்சி 18 நாட்கள் விடுப்பில் இந்தியாவிற்கு
வந்தவர்,
தன் சகோதரியைப் பார்ப்பதற்காக
பெங்களூருக்கு வந்திருந்தார்.
சிகப்பி ஆச்சி தன்
மனக்குறையை அவரிடம் கொட்டித் தீர்த்தார்.
அவரைச் சமாதானப் படுத்திய சாரதா ஆச்சி, சாலாவுடன்
நான் பேசுகிறேன் என்று
சொல்லிவிட்டு, அவளைத்
தனியே அழைத்துப் பேசத்துவங்கினார்.
நான் பேசி முடிக்கும்வரை
பொறுமையாகக் கேள். குறுக்கே பேசாதே!
பேசி முடித்த பின் உன்
சந்தேகங்களைக் கேள் என்று சொல்லி
விட்டுத்தான் பேசத்துவங்கினார்:
“சாலா, உலகில் எதுவுமே தனித்து
இயங்காது. ஒன்றை ஒன்று சார்ந்து
தான்இயங்கும். பதினெட்டு வயது வரை பிள்ளைகளுக்கு
தாய் வேண்டும்.
அறுபது வயதிற்குமேல் தாய்க்கு
அவளை அரவணைக்க பிள்ளைகள் வேண்டும். விவசாயத்திலிருந்து விமானப் போக்குவரத்துவரை எல்லா
இயக்கமும் அவற்றின் பின்னணியில் பலரை, பலவற்றைச் சார்ந்துதான்
இருக்கும்.
ஒரு பொருளின் மதிப்பு
அதன் விலையை வைத்து அல்ல!
கொலுசு என்ன விலை என்றாலும்
அதைக் காலில்தான் அணிந்து கொள்கிறோம். இரண்டு
ரூபாய்க்குக் கிடைக்கும் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்கிறோம். அது
போல உலகில் உள்ள ஒவ்வொன்றும்
தனித்தன்மை வாய்ந்தது. ஒரு
பெண்ணின் முழு மதிப்பு அவள்
தாய்மை ஸ்தானத்தை அடைந்த பிறகுதான் அவளுக்குக்
கிடைக்கும்.
“ஆனான படிப்பு நீ படித்தாலும்
அதுக்கது துணை வேண்டும்” என்று பெண்களுக்காக நீ
போற்றிப் புகழும் கவியரசரே சொல்லியிருக்கிறார்,
“உலகத்தோடு
ஒட்ட ஒழுகல், பல கற்றும்,
கல்லார் அறிவிலாதார்.” என்று
வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். பலவற்றைக் கற்றிருந்தும், உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும்
ஒழுகுதலைக் கல்லாதவர் அறிவில்லாதவர் என்பது
அதன் பொருளாகும்.
உலகில் உள்ள செயல்கள்
அனைத்திற்கும் விதிமுறைகள் உள்ளன. நிறுவனங்களுக்கு விதிமுறைகள்
உள்ளன. அவற்றின்படிதான் அவைகள்
செயல்படும். விளையாட்டுக்களுக்கும் விதிமுறைகள் உள்ளன. கால் பந்தாட்டத்தில்
உள்ள இரண்டு கோல் போஸ்ட்டுக்களையும்
நீக்கி விட்டு
விளையாடுங்கள் என்று சொன்னால் எப்படி
விளையாட முடியும்?
வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் அடிப்படை. உன் அன்னைக்குக் கிடைத்த
கணவரைப் போல அல்லது எனக்குக்
கிடைத்த கணவரைப் போல உனக்குக்
கிடைப்பார் என்று நம்பிக்கை வைத்து
திருமணம் செய்து கொள்!!!!
நாளைக்குக் காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான்
அனைவரும் இரவில் படுக்கின்றோம். எழுகிறோம்.
எழுவோம் என்பதற்கு யாராவது
கியாரண்டி தர முடியுமா? தர
முடியாது. எல்லாம் இறைவனின் கருணையினால்
நடக்கிறது.
“நாளைப்
பொழுது என்றும் நமக்கென வாழ்க
- அதை
நடத்த
ஒருவன் உண்டு கோவிலில் காண்க!!!”
என்று கவியரசர் அற்புதமாக
எழுதினார். ஆகவே நம்பிக்கையும், இறையுணர்வும்
இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும்,
நிம்மதியாகவும் இருக்கும்”
என்று சாரதா ஆச்சி
அவர்கள் தொடர்ந்து பேசியவுடன், சாலாவின் மனதில் ஒரு தெளிர்ச்சி
ஏற்பட்டது!!!
“ஏதாவது
விளக்கம் வேண்டும் என்றால் கேள்!”
“ஒன்றும்
வேண்டாம் சித்தி, நீங்கள் இருவரும்
பார்த்து எனக்கு ஒரு நல்ல
மாப்பிள்ளையை ஏற்பாடு செய்யுங்கள்” என்று தழுதழத்த குரலில்
சாலா
சொன்னாள்
அப்புறம்?
அப்புறம் என்ன? அடுத்து வந்த
ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் சாலாவின்
திருமணம் சிறப்பாக நடந்தது!
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!