மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.8.13

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!

 

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!
விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள் அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே
மாட்டார்கள். அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின் முடிவில் உள்ள அதிகாரம் திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.
ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை
ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)


"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப்
பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு
பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.


இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி  அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.    The Almighty will give withstanding power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார். அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம் (அதைப் பற்றி
வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும்
பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து, வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின்
துகள்களைத் தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது

எப்படி இயங்குகிறது? உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்
ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப் பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே
வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச்

சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக்
கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய  வைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப் படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக

இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம். வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித் தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps called friends, caution lights called family, and you will have flats called jobs.

But, if you have a spare called determination, an engine called perseverance, insurance called faith, and a driver called God,you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the storms of time can never destroy.

---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா? ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும். ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது! காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா? அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வாத்தியார்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

  1. ஹெலென் கெல்லர் தன் காது, கண்,பேசும்திறன் ஆகியவற்றினை விதியால் இழந்தார்.ஆனால் தன் விடா முயற்சியால் உலகம் புகழும் மாற்றுத் திறனாளியாக,அவர்களுக்கான போராளியாக ஆனார்.

    இப்போது நம் கண் முன்னால் ஆய்க்குடி அமர்சேவாசங்க நிறுவனர் ஸ்ரீராமகிருஷ்ணன் இருக்கிறார்.தன் வாலிப வயதில் விதியால் விபத்தில் தன் கைகால்கள் இயங்கா நிலையை அடைந்தார்.விடாமுயற்சியால் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார்.

    சேலத்தில் ஆதவ் அறக்கட்டளை நடத்திவரும் சகோதரிகள் வானவன் மாதேவி,
    இய‌லிசை வல்லபி இருவருமே தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
    த்ங்கள் நோயினைப் பொருட்படுத்தாமல், அவர்களைப் போலவே தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அறக்கட்டளை நடத்துகின்றனர்.

    'முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'என்பதும் குறள்தான்.

    விதியை மதியால் வெல்ல முடியாது என்பது சரிதான். கடவுள் பக்தியாலும்,முயற்சியாலும் விதியென்னும் தடையைத் தாண்டிச் செல்லலாம்.

    நல்ல நீண்ட கட்டுரையை வழங்கிய ஐயாவுக்கு நன்றி

    ReplyDelete
  2. குறுகிய இடைவெளிக்குப்பின் இன்றுதான் வகுப்புக்கு வருகிறேன். புதிய பாடங்கள் துவங்கியுள்ளது மகிழ்சிக்குறியது.

    இன்றைய பதிவும் விதி விதி தான் என்று சொல்கிறது. பதிவின் கடைசியில் நமிதா நயந்தாரா வந்துள்ளார்கள், எப்போதும் இந்த இடத்தை சமீராரெட்டிதானே பிடிப்பார்.

    ReplyDelete
  3. வாதிக்க அழைப்பு தந்து இப்பதிவு
    விதியை பற்றி விலாசிஉள்ளது

    பெட்ரோல் பங்கில் வேலைசெய்தவர்
    பங்கு மேனேஜராகவா ஆசைப்பட்டார்?

    ஒழுக்கம் எனப்படுவது யாதெனில் என
    வள்ளுவம் எங்கும் சொல்லவில்லை

    விதி பெரியது என்றவரும்
    விதிக்கு வரைவிலக்கணம் சொல்லலை

    பிறப்புஒக்கும் என்ற வள்ளுவம்
    வரையறுக்க வில்லை விதியை?

    "எற்று என்று இரங்குவ "
    என்ற குறளை சொல்லலையே ஐயா

    துன்ப இன்பங்களை கூறுபோட்டால்
    தெளிவாகும் இந்த விதி

    விதி ஏற்பட்ட சூழ்நிலையே
    விதி வலிது என்றவர் வெல்லமுடியாது

    என எந்த இடத்திலும் சொல்லவில்லை
    என விதிப்படித்தான் எல்லாம் என்பது

    பொருத்தமற்றது மட்டுமன்றி
    பொறுப்பற்ற பேச்சும் என்றே

    பொறியின்மை யார்க்கும் பழியன்றென
    பொய்யாமொழி உரைக்கின்றது

    ஊழை பற்றி உரைக்கும்
    ஊர் மக்கள் ஏனோ

    ஊழையும் உப்பக்கம் காண்பர் என
    ஊழ் அதிகார குறளை பார்ப்பதில்லை

    மனப்பாண்மையை-தாழ்வுஉயர்வுகளை
    மனவியலார் இப்படி சொல்வார்கள்

    Destiny is decided
    Destiny can be created

    இப்படி சொல்வதினால் பதிவின்
    இந்த கருத்துக்கு ஆதராவுமில்லை

    எதிப்பும் இல்லை..
    ஏனெனில் உங்கள் கருத்து உங்களுக்கு

    மற்றவர்கள் கருத்து
    அவர்களுக்கு..

    எது சரியோ
    அதுவே சரி..

    ReplyDelete
  4. ///kmr.krishnan said...
    விதியை மதியால் வெல்ல முடியாது என்பது சரிதான். கடவுள் பக்தியாலும்,முயற்சியாலும் விதியென்னும் தடையைத் தாண்டிச் செல்லலாம்///

    தடையை தாண்டுவது என்பது
    விதியை வென்றதாக தானே பொருள்

    தோழர் லால்குடியார் விளக்கினால்
    தோழமையுடன் அறிந்துகொள்கிறோம்

    ReplyDelete
  5. ///ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.///

    துன்பங்களை தாங்குவதே
    துன்பங்களை வென்றதாகதானே பொருள்

    இடும்பைக்கு இடும்பை படுப்பர் என
    இதை தானே வள்ளுவம் சொல்கிறது

    விதியை பற்றி சொல்லும் முன்னர்
    வெற்றியை பற்றி சொல்லி இருந்திருக்கலாம்

    விளக்கமாக சொன்னால்
    விவரம் அறிந்து கொள்கிறோம்

    ReplyDelete
  6. ஆஹா அற்புதப் பதிவு....

    எல்லையில்லா பிரபஞ்சத்தைப் படைத்தவன்
    எல்லைகளைக் கடந்தவன் அவன் செய்த

    விதி=சட்டம் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கான ஒரு ஒழுங்கு முறை...

    எல்லாவற்றையும் கடந்தவன்.. எல்லாவற்றிலும் இயங்குபவன் அவானால் ஏற்படுத்திய விதி!!!

    ஆகவே, அவ்விதியை அவனே மாற்ற வல்லவனும்.

    அதனாலே அவனை காதலால் கனிந்து கசிந்துருகி பணிந்தால் எந்த விதியும் மாறும், மாறி இருக்கிறது, மாற்றப் படும் என்பதே பெரியோரின் வாக்கு.

    விதி என்பது சில நியதிக்கு கட்டுப் படுத்தல் என்பதால்.. அந்த விதி நாம் செய்த, செய்கின்ற பாவ புண்ணியங்களே அதை நிர்ணயிப்பதால்... விதிப்படி அனுபவிக்கனும்.. இருந்தும் எங்கும் நிறைந்தவனை இடைவிடாது தொழுதால்!!!

    எங்கிருந்து எழுந்தருள்வாய் நீயே என்று அடியார் கூறுவதைப் போல் இருக்க சிக்கனெப் பிடித்து கொண்டு வணங்க வேண்டும்...

    என்னதான் முயன்றாலும் இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது... அனைத்திலும் அவனே உறைகிறான் என்பதே மறை கூறுவதும்.

    கவியரசரும் கடுமையான உழைப்பை தந்தாலும் அதை வெற்றிப் பெறச் செய்தது இறையருளே என்றே அவரும் கூறுகிறார்

    விதியே என்று இருக்க வேண்டாம்!!!
    மதியால் மாற்றுகின்றேன் என்று முயலுங்கள், அந்த முயற்சி அதனுள் இருக்கும் இறை சக்தி! அது படைத்தவனை சென்றடையும், அப்போது அவனால் அது அவனின் கருணையால் வெற்றியையும் பெற்றுத் தரும்.

    என்பது எனது தாழ்மையான அபிப்ராயமும் கூட...

    நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    கற்றதனால் நீ யாவையும் பெற்றதானால்
    கொற்றவனவனை தொழாது பயனில. - என்பது புதிய திருக்குறள் :)

    ReplyDelete
  7. ////பதிவின் கடைசியில் நமிதா நயந்தாரா வந்துள்ளார்கள், எப்போதும் இந்த இடத்தை சமீராரெட்டிதானே பிடிப்பார்.////

    நண்பரே அது வாத்தியாரின் கவி நயம்.. எதுகையில் வந்து விழுந்தது...
    நரசிம்மன் => நமீதா => நயன்தாரா என..

    சரிதானே ஐயா!

    ReplyDelete
  8. 'எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
    எது கிடைக்கவில்லையோ
    அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!'

    இந்த தெளிவு இல்லையென்றால் கிடைத்ததையும் அனுபவிக்க முடியாமல் வாழ்க்கை வீணாகிவிடும்.

    ReplyDelete
  9. Blogger kmr.krishnan said...
    ஹெலென் கெல்லர் தன் காது, கண்,பேசும்திறன் ஆகியவற்றினை விதியால் இழந்தார்.ஆனால் தன் விடா முயற்சியால் உலகம் புகழும் மாற்றுத் திறனாளியாக,அவர்களுக்கான போராளியாக ஆனார்.
    இப்போது நம் கண் முன்னால் ஆய்க்குடி அமர்சேவாசங்க நிறுவனர் ஸ்ரீராமகிருஷ்ணன் இருக்கிறார்.தன் வாலிப வயதில் விதியால் விபத்தில் தன் கைகால்கள் இயங்கா நிலையை அடைந்தார்.விடாமுயற்சியால் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார்.
    சேலத்தில் ஆதவ் அறக்கட்டளை நடத்திவரும் சகோதரிகள் வானவன் மாதேவி,
    இய‌லிசை வல்லபி இருவருமே தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
    த்ங்கள் நோயினைப் பொருட்படுத்தாமல், அவர்களைப் போலவே தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அறக்கட்டளை நடத்துகின்றனர்.
    'முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'என்பதும் குறள்தான்.
    விதியை மதியால் வெல்ல முடியாது என்பது சரிதான். கடவுள் பக்தியாலும்,முயற்சியாலும் விதியென்னும் தடையைத் தாண்டிச் செல்லலாம்.
    நல்ல நீண்ட கட்டுரையை வழங்கிய ஐயாவுக்கு நன்றி/////

    நல்லது, உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  10. ////Blogger thanusu said...
    குறுகிய இடைவெளிக்குப்பின் இன்றுதான் வகுப்புக்கு வருகிறேன். புதிய பாடங்கள் துவங்கியுள்ளது மகிழ்சிக்குறியது.
    இன்றைய பதிவும் விதி விதி தான் என்று சொல்கிறது. பதிவின் கடைசியில் நமிதா நயந்தாரா வந்துள்ளார்கள், எப்போதும் இந்த இடத்தை சமீராரெட்டிதானே பிடிப்பார்./////

    வாத்தியாரின் லிஸ்ட்டில் அனுஷ்கா சர்மாவில் இருந்து தீபிகா படுகோனே வரை நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். எழுத்தின் வீச்சிற்கு
    தகுந்தாற்போல சிலர் தலை காட்டுவார்கள். இதைக் கவனித்த நீங்கள் பாடத்தையும் நன்றாகக் கவனித்துப் படிப்பதுதான் முக்கியம்.!

    ReplyDelete
  11. /////Blogger Thiru Mahes said...
    Kalai vanakam sir.
    Mahes/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vankam sir/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger வேப்பிலை said...
    வாதிக்க அழைப்பு தந்து இப்பதிவு
    விதியை பற்றி விலாசிஉள்ளது//////

    இதை விளாசி என்று திருத்திக்கொள்ளலாமா?

    ////பெட்ரோல் பங்கில் வேலைசெய்தவர்
    பங்கு மேனேஜராகவா ஆசைப்பட்டார்?
    ஒழுக்கம் எனப்படுவது யாதெனில் என
    வள்ளுவம் எங்கும் சொல்லவில்லை//////

    ஒழுக்கத்திற்காக ஒழுக்கமுடைமை என்னும் தனி அதிகாரம் உள்ளது குறள் எண் 131 முதல் 140 வரை பத்துக் குறள்கள் உள்லன. முதலில் அதைப் படித்துவிட்டு பிறகு குறைகளைச் சொல்லுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    /////ஏனெனில் உங்கள் கருத்து உங்களுக்கு
    மற்றவர்கள் கருத்து
    அவர்களுக்கு..
    எது சரியோ
    அதுவே சரி../////

    சரிதான். இத்தோடு விட்டதற்கு நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  14. /////Blogger வேப்பிலை said...
    ///ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.///
    துன்பங்களை தாங்குவதே
    துன்பங்களை வென்றதாகதானே பொருள்/////

    துன்பங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் துன்பங்களை வென்ற கணக்கில் வரும்!

    ReplyDelete
  15. /////Blogger கலையரசி said...
    Present sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger G Alasiam said...
    ஆஹா அற்புதப் பதிவு....
    எல்லையில்லா பிரபஞ்சத்தைப் படைத்தவன்
    எல்லைகளைக் கடந்தவன் அவன் செய்த
    விதி=சட்டம் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கான ஒரு ஒழுங்கு முறை...
    எல்லாவற்றையும் கடந்தவன்.. எல்லாவற்றிலும் இயங்குபவன் அவானால் ஏற்படுத்திய விதி!!!
    ஆகவே, அவ்விதியை அவனே மாற்ற வல்லவனும்.
    அதனாலே அவனை காதலால் கனிந்து கசிந்துருகி பணிந்தால் எந்த விதியும் மாறும், மாறி இருக்கிறது, மாற்றப் படும் என்பதே பெரியோரின் வாக்கு.
    விதி என்பது சில நியதிக்கு கட்டுப் படுத்தல் என்பதால்.. அந்த விதி நாம் செய்த, செய்கின்ற பாவ புண்ணியங்களே அதை நிர்ணயிப்பதால்... விதிப்படி அனுபவிக்கனும்.. இருந்தும் எங்கும் நிறைந்தவனை இடைவிடாது தொழுதால்!!!
    எங்கிருந்து எழுந்தருள்வாய் நீயே என்று அடியார் கூறுவதைப் போல் இருக்க சிக்கனெப் பிடித்து கொண்டு வணங்க வேண்டும்...
    என்னதான் முயன்றாலும் இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது... அனைத்திலும் அவனே உறைகிறான் என்பதே மறை கூறுவதும்.
    கவியரசரும் கடுமையான உழைப்பை தந்தாலும் அதை வெற்றிப் பெறச் செய்தது இறையருளே என்றே அவரும் கூறுகிறார்
    விதியே என்று இருக்க வேண்டாம்!!!
    மதியால் மாற்றுகின்றேன் என்று முயலுங்கள், அந்த முயற்சி அதனுள் இருக்கும் இறை சக்தி! அது படைத்தவனை சென்றடையும், அப்போது அவனால் அது அவனின் கருணையால் வெற்றியையும் பெற்றுத் தரும்.
    என்பது எனது தாழ்மையான அபிப்ராயமும் கூட...
    நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
    கற்றதனால் நீ யாவையும் பெற்றதானால்
    கொற்றவனவனை தொழாது பயனில. - என்பது புதிய திருக்குறள் :)/////

    நல்லது, உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  17. ////Blogger G Alasiam said...
    ////பதிவின் கடைசியில் நமிதா நயந்தாரா வந்துள்ளார்கள், எப்போதும் இந்த இடத்தை சமீராரெட்டிதானே பிடிப்பார்.////
    நண்பரே அது வாத்தியாரின் கவி நயம்.. எதுகையில் வந்து விழுந்தது...
    நரசிம்மன் => நமீதா => நயன்தாரா என..
    சரிதானே ஐயா!//////

    நீங்கள் சொல்வதும் சரிதான். எழுதும் வேகத்தில் வருவது அது. பழகிவிட்டது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. ////Blogger விசயக்குமார் said...
    'எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
    எது கிடைக்கவில்லையோ
    அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!'
    இந்த தெளிவு இல்லையென்றால் கிடைத்ததையும் அனுபவிக்க முடியாமல் வாழ்க்கை வீணாகிவிடும்./////

    உண்மைதான். உங்களின் கருத்திற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  19. //தடையை தாண்டுவது என்பது
    விதியை வென்றதாக தானே பொருள்

    தோழர் லால்குடியார் விளக்கினால்
    தோழமையுடன் அறிந்துகொள்கிறோம்//

    'விதியை வெல்கிறோம்' என்பது அக‌ம்பாவத்தினால் வருவது.தடை நீங்காது.
    ஆனால் இறை பக்தி செய்யும் போது இறையருளால் தடை நீங்கும். அது வெல்வது ஆகாது. இறைக் கருணையால் நடைபெறுவது.

    'விட்டேனா பார்' என்று கிளம்பினால் விதியை வெல்ல முடியாது.(ஹுமிலிடியுடன்) தன்னடக்கத்துடன் தடையை நீக்கச் சொன்னால் இறையருள் நீக்கும்.

    ReplyDelete
  20. ///kmr.krishnan said...
    ஆனால் இறை பக்தி செய்யும் போது இறையருளால் தடை நீங்கும். அது வெல்வது ஆகாது. இறைக் கருணையால் நடைபெறுவது.///

    இதனை
    மணிவாசகர் சொல்லும்
    மணியான இந்த வாக்கியத்துடன்

    எப்படி சேர்த்து பொருள் கொள்வது
    என்பதனையும் சொன்னால் மகிழ்ச்சி

    "வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ"

    ReplyDelete
  21. "வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ"

    வேண்டிய பொருளது யாதென்று யானுனக்கு
    கூறவும் வேண்டுமோ விதிமாற்றவல்லோனே
    வேண்டுதல் வேண்டாமை இலானே நினது
    தீண்டுதல் இல்லாமல் எனது
    வேண்டுதலும் நிகழுமொ ஆதலால் நின்னை
    தீண்ட என்னைத் தூண்டிய அன்பே
    அன்பில் ஊரும் அமுதே உயிரே
    உயிரினில் பெருகும் உள்ளொளியே
    உன்னையல்லால் இனி வேறெதுவும் வேண்டுமோ
    அல்லல் அறுப்பானே ஆருயிரானவனே
    ஆலவாய் உறை பெருமானே! ஆனந்தக் கூத்தனே
    சிந்தையில் நின்றொளிரும் பேரொளியே!
    போக்குவாய் புலைத் தளை தனையே
    ஆக்குவாய் ஆனந்தப்பெருவெள்ளம் பொங்கிப் பெருகவே
    நோக்குவாய் நொடிப் பொழுதேனும் எந்தன் நோதலை
    நாயே நெனக்கு காட்டுவாய் கூட்டுவாய் கூடிக் களித்திடும்
    போக்கிடமதை புறம் மறந்த அகமதை
    அண்டசராசரம் கடந்த ஆனந்தமதையே!

    நமசிவாயம் வாழ்க! நாதன் தாழ் வாழ்க!

    ReplyDelete
  22. அன்புடன் வணக்கம் புதிய கீதை ..
    வழங்கியது எனது இணைய வாத்தியார் திரு சுப்பையா வீரப்பன் ..அவர்கள் நன்றி அய்யா ...

    எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது..
    எது கிடைக்கவில்லையோ அது உன் நன்மைக்கே ...
    எது கிடைக்க வேண்டுமோ அது அந்த நேரத்தில் கிடைக்கும் ...
    எது இன்று கிடைத்ததோ அது நாளை உனக்கு அலுத்து விடும் ...
    அடுத்த நாள் அது வெறுத்து விடும்
    கிடைப்பதன் அருமை ஆசை அது கிடைக்கும் வரைதான் !!!
    கிடைத்தபின் ..அடுத்ததற்கு மனம் ஆசைபடும்..

    ஆகவே கேட்காமல் இரு ....இருப்பதை கொண்டு சந்தோஷ படு...
    உன் விதி நீ பிறக்கும் போதே எழுதப்பட்டு விட்டது..
    இறைவழிபாடு . துன்பங்களை தாங்கும் சக்தி கிடைபதற்கே !!!வாத்தியார் அய்யா முக நூலில் தங்களது கீதை வெளி இட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  23. Blogger G Alasiam said...
    "வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ"
    வேண்டிய பொருளது யாதென்று யானுனக்கு
    கூறவும் வேண்டுமோ விதிமாற்றவல்லோனே
    வேண்டுதல் வேண்டாமை இலானே நினது
    தீண்டுதல் இல்லாமல் எனது
    வேண்டுதலும் நிகழுமொ ஆதலால் நின்னை
    தீண்ட என்னைத் தூண்டிய அன்பே
    அன்பில் ஊரும் அமுதே உயிரே
    உயிரினில் பெருகும் உள்ளொளியே
    உன்னையல்லால் இனி வேறெதுவும் வேண்டுமோ
    அல்லல் அறுப்பானே ஆருயிரானவனே
    ஆலவாய் உறை பெருமானே! ஆனந்தக் கூத்தனே
    சிந்தையில் நின்றொளிரும் பேரொளியே!
    போக்குவாய் புலைத் தளை தனையே
    ஆக்குவாய் ஆனந்தப்பெருவெள்ளம் பொங்கிப் பெருகவே
    நோக்குவாய் நொடிப் பொழுதேனும் எந்தன் நோதலை
    நாயே நெனக்கு காட்டுவாய் கூட்டுவாய் கூடிக் களித்திடும்
    போக்கிடமதை புறம் மறந்த அகமதை
    அண்டசராசரம் கடந்த ஆனந்தமதையே!
    நமசிவாயம் வாழ்க! நாதன் தாழ் வாழ்க!/////

    அடுத்த வரியை ஏன் விட்டுவிட்டீர்கள் ஆலாசியம். அதுதான் முக்கியமானது:

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாழ் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க!

    ReplyDelete
  24. /////Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம் புதிய கீதை ..
    வழங்கியது எனது இணைய வாத்தியார் திரு சுப்பையா வீரப்பன் ..அவர்கள் நன்றி அய்யா ...
    எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது..
    எது கிடைக்கவில்லையோ அது உன் நன்மைக்கே ...
    எது கிடைக்க வேண்டுமோ அது அந்த நேரத்தில் கிடைக்கும் ...
    எது இன்று கிடைத்ததோ அது நாளை உனக்கு அலுத்து விடும் ...
    அடுத்த நாள் அது வெறுத்து விடும்
    கிடைப்பதன் அருமை ஆசை அது கிடைக்கும் வரைதான் !!!
    கிடைத்தபின் ..அடுத்ததற்கு மனம் ஆசைபடும்..
    ஆகவே கேட்காமல் இரு ....இருப்பதை கொண்டு சந்தோஷ படு...
    உன் விதி நீ பிறக்கும் போதே எழுதப்பட்டு விட்டது..
    இறைவழிபாடு . துன்பங்களை தாங்கும் சக்தி கிடைபதற்கே !!!
    வாத்தியார் அய்யா முக நூலில் தங்களது கீதை வெளி இட்டிருக்கிறேன்.////

    நல்லது நண்பரே1 தெரிவித்தமைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com