மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.11

பறவையால் கிடைத்த பாடம்

தில்லான மோகனாமபாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த  சமயம் (1968 ஆம் ஆண்டு), படப்பிடிப்பு  அரங்கிற்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், ஏ.பி.என் இன் அனுமதியோடு படப்பிடிப்பு நடப்பதை ஒரு சில நிமிடக் காட்சிகளாகப் படமெடுத்திருக்கிறார். அதை உங்கள் பார்வைக்குக் கீழே கொடுத்துள்ளேன்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
----------------------------------------------------------------------------------
பறவையால் கிடைத்த பாடம்
-----------------------------------------------
பறவை ஒன்று தாழப்பபறந்து கொண்டிருந்தது. அதீதமான குளிர்காலம். குளிரைத் தாக்குப்பிடிக்காத பறவை, ஒரு பெரிய சமவெளியில், தரையில் விழுந்துவிட்டது.

அதே சமயம் அந்தப் பக்கமாக வந்த பசுமாடு ஒன்று சாணமிட அது பறவையை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தது. ஆனாலும் பறவை தலையைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்து, தனது உயிரைத் தக்க வைத்துக்கொண்டது.

மாட்டுச் சாணம் சற்று சூடாக இருந்ததால், பறவைக்கு அது இதமாக இருந்தது. குளிர் போன இடம் தெரியவில்லை.

மிக்க மகிழ்ச்சியடைந்த பறவை, குரல் கொடுத்து..லல..லல்லல்லா....என்று பாடத்துவங்கியது.

அதுதான் போதாத நேரம் என்பது!

அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த பூனை ஒன்று, பறவையின் குரல் கேட்டுத் தேடத்துவங்கி, பறவை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டது.

அப்புறம்?

அப்புறம் என்ன, சாணத்தைக் கிளறி, பறவையை ஒரே அமுக்காக அமுக்கித் தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டுவிட்டது.

கதையில் இரண்டு திருப்பங்கள் பாருங்கள்.

வாழ்க்கையும் அப்படித்தான்.

1. உங்கள் மீது சாணமிடுபவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல
2. சாணத்தில் இருந்து உங்களை விடுவிப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல!
3. சாணத்தில் (சிக்கலில்) மாட்டிக்கொண்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிங்கள்!
---------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு! மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.
--------------------------------------------
பூமிக்குப் பகையானேன்; தனிமைக்குத் துணையானேன்!
------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து 7 நாட்கள் வகுப்பறையில் பாடம் நடந்துள்ளது. வாத்தியார் தன் சொந்த வேலையாக 2 நாட்கள் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு 1.12.2011 வியாழக்கிழமையன்று நடைபெறும்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

27.11.11

நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?

மாணவர் மலர்!

இன்றைய மாணவர் மலரை ஐந்து ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++
 வீழ்வதை உணராத மாக்கள்
-------------------------------------------
கவிதை: தனூர் ராசிக்காரன், ப்ருனெய்!



காலச்சக்ரமே  சுழலும் உன் கால்களை
கட்டுபடுத்த ஆளில்லை என்பதால்
கட்டுப்பாடு இன்றிச் சுழலாதே - எமது
கலாச் சாரத்தையும் மாற்றாதே!

காதல் நெறி மாறி விட்டது
கற்பு நெறியும் கரைந்து விட்டது
கன்னியருக்கும் காளையருக்கும்
கட்டுப்பாடு குலைந்து விட்டது!

அன்னையருக்கும் தந்தையருக்கும்
தம்மக்கள் நலம் முதலாய் பட்டது - அவர்
தம் அன்னையருக்கும் தந்தையருக்கும்
காப்பகங்கள் அடைக்கலம் தந்தது.
 .
காசுக்கும் பணத்துக்கும் கஷ்டமில்லை -அதனை
முறையாய் தேட இஷ்டமில்லை
சந்தையிலும் மந்தையிலும் ஒரேவிலை
உடன் பிறந்த பந்தத்திடம் அதே நிலை
 
வாய்மொழிச் சொல்லில்  நிறையும் குளுமை
மெய் மொழி அசைவில் குறையா  இனிமை
ஈவிற்கும்  ஈகைக்கும் வந்ததொரு பஞ்சமே;
இரக்கதிற்கு இப்போது இல்லை இடமே.

வேர்களை வெறுக்கும் விழுதுகள்
தாம் வீழ்வதை உணராத எருதுகள்
வழிவழி வந்த வாழ்க்கையைத் தொடர
காலச்சக்ரமே கட்டுப்பாடோடு சுழல்க!

- தனூர்ராசிக்காரன்,  Brunei 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
குன்றக்குடி அடிகளார்
இவர்களைத் தெரிந்து கொள்வோம்
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர் 



வகுப்பறையில் பல தரப் பட்ட பதிவுகள், இந்தக் கணணி உலகில் தேடிக் கிடைக்காத, அதற்கு நேரமில்லாத போது புதுப் புது தகவல்களை அறியமுடிகிறது அந்த வரிசையிலே இதுவும் ஓன்று. என்னை கவர்ந்த நான் வாசித்த சில விசயங்களையும் இங்கே கூறிக் கொள்ள விளைகிறேன்...

அறிவாளி=> இலக்கியவாதி=> நேர்மையாளி=>கல்விமான்=>அரசியல்வாதி=>சமூகத் தொண்டு செய்யும் நல்லக் குடிமகன். இவைகள் தாம் அந்தக் கால அரசியல் வாதிகளின் லட்சணங்கள்...

அதில் ஒரு சிலரே இன்றும் இன்றையச் சூழலில் வேறு வழியில்லாமல் சமூகத் தொண்டு என்னும் உயரிய செயலை விடவும் முடியாமல் இன்றைய அரசியலில் அவதிப் பட்டுக் கொண்டு /உழன்று கொண்டு இருக்கிறார்கள். காரணம் என்ன? அவர்களின் பதில் என்ன? அவர்களை சந்திக்க நேர்ந்தால் கேட்கலாம்.

கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்கள் என்ற ஒரு அபிப்ராயம் என்றும் இருக்கிறது. நான் பார்த்த கம்யூனிச அரசியல் வாதிகள் காந்தியத்தை / இந்தியத்தை காயப் படுத்தாது, கடமை புரிந்தவர்களே. அதை வரலாறு ஒரு போதும் மாற்றி எழுத முடியாது.

தாடி வைத்துக் கொண்டு, கெண்டைக் காலுக்கு மேலே கைலியை கட்டி இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதும், காவி உடை உடுத்திய யாவரையும் களவாணிகளாகப் பார்ப்பதும் காலக் கொடுமை.

வன்முறையாளர்களும், தீவிரவாதிகளும், களவாணிகளும் தங்களுக்கு அரணாக இருக்க நுழைந்துக் கொள்ளும் கோட்டைகள் இவை.

தன்னை காப்பாற்றிக் கொள்ள கயவர்கள் கொள்ளும் வேஷம்.

நான் அறிந்தவரை, சுதந்திர இந்தியாவின் சோசலிஸ்டுகள் வன்முறையால், தீவிரவாதத்தால் அல்லது கோவில்களையோ, ஆலங்கலையோ, தர்காக்கலையோ இடித்து விட்டு நீதி மன்றங்களில் வாய்தா வாங்கித் திரிவதாக இல்லை. காந்தியை, இந்திராவை சுட்டதும் அவர்கள் இல்லை. நானும் வேறு பாதைக்கு போக விரும்பாமல் இத்தோடு நிறுத்துகிறேன்.

செக்கிழுத்தும், கல்லுடைத்தும் கொண்ட கொள்கை மாறாது நாட்டுக்கு உழைத்த நல்லோர்களை நினைவில் நிறுத்துவோம். எதுவாயினும், இருந்தும் சற்றே யோசித்து முடிவு செய்வதே  கற்றோனின் கடமை.

இங்கே, கொள்கைகளை விவாதம் செய்ய விரும்பவில்லை. இருந்தும் சில கொள்கை வாதிகளின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான செய்தியை தர விளைகிறேன்.

நான் ஓராண்டுகளுக்கு முன் வாசித்த இந்த புத்தகத்தின் சில பக்கங்களை நமது வகுப்பறையில் அனைவரும் வாசிக்க கிடைத்த இந்தத் தருணத்தில் (ஓராண்டாகவே வகுப்பறையில் வெளியிட எண்ணியும் இப்போது நிறை வருகிறது)…

"நினைத்துப் பார்கிறேன்" என்ற அந்தப் புத்தகத்தை எழுதி வெளியிட்ட கல்வியாளர், இலக்கியவாதி, வழக்கறிஞர், சமூகச் சேவகர், அரசியல்வாதி என்று பலரால் அறியப் பட்ட தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கும், நமது வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

ஆசிரியரையும், உண்மைக் கதையில் வரும் நாயகரையும் எனது பதின்ம வயதில் நேராகக் கண்டும், அவர்களின் சொற்பொழிவுகளில் மூழ்கி யும் இருக்கிறேன்.

அதிலும் அடிகளாருக்கு எங்கள் ஊர் பாரதி மன்றத்தின் சார்பாக பொன்னாடைப் போர்த்தி மகிழ்ந்திருக்கிறேன். அதற்கும் மேல், அதே மேடையில் பாரதி பற்றிய எனது சொற்பொழிவையும் நடத்தி இருக்கிறேன்.

ஆனால், அது அடிகளார் அவர்கள் மேடைக்கு வரும் முன்னமே அமைந்தது என்றாலும் அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மேதைகளின் பெயர்களுக்கு இடையே எனது பெயரும் இருந்தது என்பதை நினைத்து என் குழந்தைகளிடம் இன்றும் கூறி சந்தோசப் பட்டும் கொள்கிறேன்.

நான் சிறுவனாக இருந்தபோது வானொலி தான். தொலைக் காட்சிகள் நகரங்களிலும், செல்வந்தர்கள் வீட்டிலும் தான் (பஞ்சாயத்து தொலைக் காட்சிக்கு முந்தியது). ஆக, எனது இலக்கிய அறிவு ஓரளவேனும் மேம்பட காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய பட்டி மன்றங்களும், எங்கள் ஊரில், பள்ளியில் நடந்த இலக்கியக் கூட்டங்கள் தான்.

இதிலே குறிப்பிட்டு சொல்ல நிறைய பேர் இருந்தும். காரைக்குடி கம்பன் கழகத்தாரும்; சரஸ்வதி ராமநாதன், சத்திய சீலன், தா.பா. போன்றோர்களே என்னைக் கவர்ந்தவர்கள் எனலாம். அதிலே தா.பா வின் குரல் கணீரென்று வெண்கலத்தை போன்று ஒலிக்கும். இன்றும் அந்தக் குரலை பேட்டிகளில் காணொளிகளில் கேட்க முடிகிறது. சிங்கம் கிழடானாலும் கர்ஜனை ஒலி மட்டும்  குறையவில்லை.

இது போன்ற பலத் தருணங்கள் உண்டு. அதில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தொடர்புடையது என்னால் மறக்கவே முடியாது. சமீபத்தில் நாமக்கல் வெ. ராமலிங்கம் அவர்களின் குடும்பத்தார் அவரின் பேத்தியின் திருமணம் தொடர்பாக எங்களைத் தொடர்பு கொண்டு உரையாடியதும் அந்த வகையிலே சாரும். பெரிய மனிதர்களின் தொடர்பு பேரானந்தம் தரும்.

ஆக, வாழ்வின் சிறந்த தருணங்கள் என்று பலருக்கும் பல உண்டு... இப்போது நமது தா. பா. அவர்களின் "நினைத்துப் பார்கிறேன்" ல் இருந்து சிலப் பக்கங்கள்.

தொடர்ந்து படியுங்கள்.

குன்றக்குடி அடிகளார்

ஜீவாவுடன் இருந்த உறவு, நடந்த சம்பவங்களை "ஜீவாவும்-நானும்" என்ற நூலில், ஒரு பகுதியை எழுதியுள்ளேன்.

நான் பட்டப் படிப்பை முடித்தவுடன், அதே கல்லூரியில் துணை ஆசிரியராக, ஆங்கில மொழித் துறையில் சார்ந்தேன். காரைக்குடி தமிழ் இலக்கியச் சிந்தனை ஆறு ஓடும் பூமியாக அப்போது இருந்தது. புகழ்மிக்க கம்பன் விழாவை மிகச் சிறப்பாக சா.கணேசன் நடத்தி வந்தார். அங்கு வந்த தமிழ்ச் சான்றோர், புலவர்களைக் காணும், அவர்களது பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அப்போதுதான் குன்றக்குடியில் புதிதாக ஆதீனப் பட்டம் சூட்டப் பெற்று அருணாச்சல தேசிக சுவாமிகள் பொறுப்பு ஏற்றிருந்தார். பிற்காலத்தில் அவரைப் பார்த்த பலர் இருக்கலாம் அவர் பதவி ஏற்ற போது மிகவும் இளவயதினராக இருந்தார். சரீரம் கட்டுடன் இருந்தது. பருமன் தெரியாதிருந்த நல்ல உடல் வாகு. வளையல் மாதிரி இரு காதுகளிலும் தங்கக் குண்டலம் ஆடும்... கருந்தாடி, முடி இது தோற்றம்.

பேச்சின் குரல் ஈர்ப்பதாக இருந்தது. தமிழ்ச் சொற்கள் அழகுபட ஒலித்தன. கேட்க கேட்க இனிமையாக இருந்தது.

நல்ல மேடைத் தோற்றம். நல்ல தமிழ்ப் பேச்சு... ஆனால், ஆன்மீக விளக்கம் தான்... பல பெரிய ஆதீனங்களின் சம்பிரதாய பேச்சு நடையிலிருந்து இவரது பேச்சு மாறுபட்டு ஒலித்தது. நேரடியாக அல்லாமல் சாடை மாடையாக சில சீர்திருத்தக் கருத்துக்களையும் அடுக்குவார். அவரது பேச்சில் தமிழின் அழகே மேலோங்கி நின்றது.

அழகப்பா கல்லூரியில், தமிழ் துறையில் புகழ்மிக்க பேராசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்களில் வ.சு.ப. மாணிக்கனாரும் ஒருவர். அவருடன் ப.நமசிவாயம், குழந்தை நாதன் ஆகிய தமிழ் விரிவுரையாளர்களும் இருந்தனர்.

நாங்கள் பெரும்பாலும் அடிகளாரைக் கிண்டலடித்து, விமர்சனம் செய்பவர்களாகத் தான் இருந்தோம். காரைக்குடியில் ஒரு இலக்கிய விழா நடந்தது. அதில் தமிழ்கடல் ராய.சொ., சொ.முருகப்பா, சா.கணேசன், அடிகளார், வாரியார் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ராய.சொ. பேசும்போது மடாதிபதிகள் தங்க அணிகலன்கள் அணிவதைக் கடுமையாகக் கண்டித்து, "ஊனைச் சுருக்கி, உள்ஒளி பேருக்கும் அழகா இது?" எனக் கடுமையாகப் பொழிந்து தள்ளினார். மறுவாரம் மேடையில் குன்றக்குடி அடிகளாரின் காதுகளில் தொங்கிய தங்க வளையல்களைக் காணோம்... ராய.சொ. சொன்னதாலோ? அடிகளாரே முடிவு எடுத்தாரா? தெரியவில்லை...

சில மாதங்கட்குப் பிறகு காரைக்குடி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவிற்கு அடிகளார் தலைமை தாங்கி பரிசுகள் வாங்குவதாக இருந்தது. கூட்டம் தொடங்கும் நேரம் நெருங்கியும் அவரைக் காணோம்... வாயிலில் பிரமுகர்கள், பெரும் வணிகர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். அவர் கார் கண்ணில் தென்படவே இல்லை... லேசான முணுமுணுப்பு இருந்தது.

சைக்கிளை ஓட்டிக் கொண்டு திடீரென்று வது சேர்ந்தார் அடிகளார். வரும் வழியில் கார் பழுதுபட்டதால், வாடகைச் சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு வந்ததாகச் சொன்னார். "ஒரு மனிதன் காலம் தாழ்த்தி வருவதால் பல நூறு பேரின் மதிப்பிட முடியாத நேரத்தைப் பாழடிக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டார் கைவிடவேண்டும்" என்ற முன்னுரையை பலத்தக் கைத் தட்டலுக்கு இடையே தொடங்கியவர், பாரதியின் புதுமைப் பெண்ணைப் படம்பிடித்துக் காட்டிவிட்டு விடை பெற்றார்.

நாங்கள் எங்கள் விமர்சனக் கருத்தை மாற்றிக் கொண்டு, அவரை மதிக்க, புரிந்துக் கொள்ளத் தொடங்கினோம். "இவர் புதுமைச் சாமியார்... இவருடன் பழகுங்கள்" என ஜீவாவும் சொன்னார். "அவர் இருக்கும் இடம், தரித்துள்ள உடை, அவரது தனிப்பட்ட அக வாழ்க்கைப் பற்றி எதுவும் பேசாதீர்கள். அவர் வெளியிடும் கருத்துக்களை மட்டும் வைத்து அவரோடு உறவாடுங்கள்" என ஜீவா அறிவுரை கூறினார். அதை நான் பின்பற்றினேன்.

முதல் சந்திப்பு.

அடிகளார் பேசியதைக் கேட்பவர்களில் ஒருவனாக மட்டுமே இருந்து கேட்டு வந்த என்னை ஒரு இலக்கிய விழாவில், பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கூட்டம் நடக்கும் நாளன்று அவரது காரே நமசிவாயம், குழந்தை நாதன் ஆகியோருடன் என்னையும் அழைத்துச் செல்ல வந்தது. குன்றக்குடி போனவுடன் அடிகளார் காரில் முன்வரிசை இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.

மறுநிமிடமே எங்களுடன் நெடுநாட்கள் பழகியவர் மாதிரி எங்கள் பெயரைச் சொல்லி, ஒவ்வொருவரிடமும் பேசத் தொடங்கினார்.

பொதுவாக மடாதிபதிகள் சமமாகப் பேசவும் மாட்டார்கள், தங்களது வண்டியில் பிறரை ஏற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்.

இவரது நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

என் பக்கம் திரும்பியவர், "நீங்கள் எப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தீர்கள்?" எனக் கேட்டார். பின்னர், "எதற்காகச் சேர்ந்தீர்கள்?" என்றவர், பொதுவுடமைச் சிந்தனை சைவ சித்தாந்தத்திற்கு முரண்பட்டது அல்ல" என்றவர், "தமிழர் சிந்தனையில் இது ஆதிமுதல் இருந்து வந்துள்ளது. நடக்கத்தான் இல்லை" என்றார். அன்றையக் கூட்டத்தில் அவரது உரை அது பற்றியதாகவே இருந்தது...

மரியாதையும் கூடியது, நெருக்கமும் வளர்ந்தது...

அவரது மடத்தில் அவர் தங்கியிருக்கும் அறைக்கருகில், அவர் படிக்கும் நூலகம் அமைந்திருக்கிறது. ஒருநாள் அங்கு சென்று நூலகத்திற்குள் நுழைந்தேன்... ஆச்சரியம்.

ஏராளமான மார்க்சீய - லெனினீய நூல்கள் ஒரு வரிசையில்...

தமிழ் இலக்கிய மூல நூல்கள் பலவும், திரு.வி.க. வின் நூல்கள் தனி வரிசை. பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் கதைத் தொகுதிகள் என வரிசை வரிசையாக இருப்பதையும், பல நூல்களில் அவர் படித்துக் கோடு போட்டு, குரிஎஈடுகள் போட்டிருப்பதையும் பார்த்து வியந்தேன்.

அவர் இருந்த இடம், தரித்த ஆடையை மட்டும் வைத்து மதிப்பிட்டு இருந்தால் தவறு செய்திருப்போம். ஆகா, ஒன்றை மறந்துவிட்டேன் அந்தச் சிவப்பழம், சைவ மடத் தலைவர், பெரியாரின் எழுத்துக்களையும், அவரது படத்தையும், 'மடத்தில்' வைத்திருந்தார்.  

"இவரது படம் எப்படி... மடத்தில்?" என்று ஒருமுறை நான் இழுத்தபோது,

"எங்களது மடத்துக்கே, இழந்த மரியாதையை மீட்டுத் தந்தவர் அவர்" என்றவுடன் சிரித்து அங்கீகரித்து மகிழ்ந்தேன்.

அதேபோலப் பெரியாரும் அடிகளாரைப் பாராட்டுவதோடு, அவர் மேடைக்கு வந்தால், எழுந்து வணக்கம் தெரிவிப்பார். இதைக் கண்ட சில தி.க. நண்பர்கள் பெரியாரிடம், "நீங்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க வேண்டுமா?" எனக் கேட்டபோது, "அவர்கள்தான் அவரை மதிப்பதில்லை. நாமும் மதிக்காவிட்டால், அது சரியாகுமா?" என்றார்.

நாளொரு வண்ணமாக இந்த உறவு வளர்ந்து வந்தது.

எட்டயபுரம் பாரதி விழா.

'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்' நடத்தி வரும் பாரதி விழாவிற்கு அடிகளார் தவறாமல் பங்கேற்று வந்ததை நாடறியும். ஒருமுறை அவர் வந்திருந்த போது, வேறு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

"இந்த நிகழ்ச்சி முடிந்து, நமது நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரம் ஆகும். அதற்குள் போய் சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம்" என்றார்... அவருடன் காரில் போர்ப்பட்டேன். எட்டயபுரத்தை விட்டு காட்டு வழியில் வண்டி வெகு தூரம் போய்க் கொண்டிருந்தது. 'இங்கே எங்கே சாப்பிட?' என வியந்து கொண்டிருந்தேன்.

ஒரு வெட்டவெளிக் காட்டருகில் கார் நின்றது, ஒரு விரிப்பை கட்டாந்தரையில் பரப்பிய பின்னர் அவர் உட்கார்ந்தார். அவரது துணையாளர்கள் சாப்பிட்டுப் பாத்திரங்களை இறக்கி பண்க்டத் தொடங்கினார். அவருக்கு அவரது சாப்பாடு" என்றார்... அவருக்கு வழங்கிய உணவில் புளிப்பு, உறைப்பு, இனிப்பு எதுவும் இருக்காதாம். எனக்கு வேறுவகை என்று வாங்கியிருக்கிறார்கள்...

"உங்கள் உணவில் என்ன வித்தியாசம்?" என்று கேட்ட போது, "அதில் காரம், புளிப்பு சேர்ப்பதில்லை" என்றார். "கொஞ்சம் கொடுங்கள்" என்று ஒரு கரண்டி வாங்கிச் சாப்பிட்டேன்... மழுமழு என்றிருந்தது. நான் முகத்தைச் சுளிப்பதைக் கண்டவர்.

"சுவைக்கு அடிமை ஆகலாமா?" என்றார்.

"இல்லாமல் சாப்பிடுவது எப்படி?" என்றவன், "அப்படி இயற்கை தரும் சுவைகளையும் நிராகரித்து ஏன் வாழ வேண்டும்?" என்றேன். "இது பல நூற்றாண்டாக நடக்கும் விவாதம். நாம் வேலைக்குப் போகலாம்" என எழுந்து விட்டார்.

குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் பல.

அரசமரம் பிள்ளையார் கோவில்.

மதுரை அரசமரம் பிள்ளையார் கோவிலில் ஆண்டு தோறும் இரவு முழுக்க ஒரு இலக்கிய விழா, பட்டிமன்றம் நடப்பது வழக்கம்.

ஒருமுறை "மனிதகுலச் சிக்கல்களைத் தீர்க்கப் பெரிதும் வழி காட்டுவது மார்க்சீயமா? வள்ளுவமா? காந்தீயமா?" என்ற மூன்று அணிகளைக் கொண்ட பட்டிமண்டபத்திற்கு அடிகளார் தயார் செய்து, கலந்து கொள்வோர் பட்டியலையும் த்யாரித்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரை ஆற்றியவர் மார்க்சிஸ்டுக் கட்சியின் தலைவர் என். சங்கரையா. நடுவர் அடிகளார்... மார்க்சீய அணிகுழுவிற்கு என் தலைமை... இன்னொரு அணிக்கு புலவர் கீரன் என்றும், இன்னுமொரு அணிக்கு பேராசிரியர் பாலுச்சாமி என்றும் நினைக்கிறேன். பல்லாண்டுகள் கழிந்ததால் பெயர்கள் சரிவர வரவில்லை.

அன்று திரண்டிருந்த மாபெரும் மக்கள் திரளை, வேறு எங்கும் நான் கண்டதே இல்லை. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி காலை ஆறு மணிக்கு முடிந்தது.

"காந்தீய நெறிகளில், குறள் அமுதம் கலந்த மார்க்சீயமே மனிதகுலச் சிக்கலைத் தீர்க்கும்" என்று தீர்ப்புக் கூறியவர், மார்க்சீயத்தின் கூறுகளைத் திறம்பட, அழகு தமிழில் விளக்கினார். "இது தான் நடைமுறைக்கு உகந்தது" என்றும் கூறினார். திருக்குறள் நீதிபோதனை நூலாகவே நின்றுவிட்டதே என்றக் கவலையைத் தெரிவித்தார், காந்தீயம் - காந்தியடிகளுடன் எரியூட்டப் பட்டுவிட்டதோ? என்ற ஐயத்தையும் எழுப்பினார். இருப்பினும் இது உயிர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கூறி நிறைவுரை செய்தார்.

மறக்க முடியாத நிகழ்ச்சி; மறக்க கூடாத நல்லுரை.   
ஆக்கம்
ஆலாசியம்,
சிங்கப்பூர்
---------------------------------------------------
3

சிறுகதையும் தொடர்கதையும்

உணர்வுகள் தொடர்கதையாக ஆகலாம்
உறவுகள் சிறுகதையாக ஆகலாம்
----------------------------------------------
ஆக்கம்: தேமொழி

 சமீபத்தில் படித்த இந்த செய்தி மனதைத் தொட்டது.  இந்த சம்பவம் ரஷ்யாவில் நடந்ததாக படித்தேன். அது உறவுகளைப் பற்றி நாம் பொதுவாக கொண்டுள்ள எண்ணங்களை மாற்றுகிறது.  திருமண வாழ்வைத் தொடர முடியாத தம்பதியினர் விவாகத்தை ரத்து செய்ய முடிவெடுக்கின்றனர்.  அப்பொழுது தன் மகள் வளர்ப்பிற்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று கணவன் மறுக்கிறான்.  அவன் கூறிய காரணம், அந்த மகள் தன் சாயலில் இல்லை, அவள் அவன் மகளாக இருக்க வாய்ப்பில்லை, அதனால் உதவ முடியாது என்பதே.  முன்னாள் மனைவி நீதி மன்றத்தில் முறையிடுகிறாள்.  நீதிபதி வழக்கை விசாரித்து மரபணு சோதனைக்கு ஆணையிடுகிறார்.  வந்த முடிவுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த மகள் தாய், தந்தை இருவருக்குமே மகள் அல்ல என்பதை உறுதிப் படித்தியது மரபணு சோதனை.  தாய் குழம்பினாள், நினைவுகளை பின்னோக்கி செலுத்தி அவள் காரணம் தேடிய பொழுது, மகள் பிறந்த நாளில் அதே மருத்துவமனையில் இன்னொரு பெண்ணுக்கும் மகள் பிறந்தது நினைவுக்கு வந்தது.  மருத்துவமனைக்கு படையெடுத்து தகவல்களை சேகரித்து துப்பு துலக்கினாள்.  அந்த குடும்பம் அவள் வீட்டிற்கு அருகாமையில்தான் வசித்தனர், குழந்தை மாற்றம் சந்தேகத்தின் பேரில் மீண்டும் மரபணு சோதனை நடத்தப் பட்டது.  சோதனை முடிவு தாயின் சந்தேகத்தை நீக்கியது, பிறந்தபோதே குழந்தைகள் மாற்றப் பட்டு விட்டனர்.  சிறுமிகள் வெவ்வேறு தாய் தந்தையுடன் இதுநாள் வரை வளர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இதன் பின் நடந்ததுதான் என் மனதை நெகிழ வைத்தது.  முடிவைக் கேட்ட சிறுமி பதறினாள்.  என்னை அனுப்பிவிடாதீர்கள் என்று அழுதாள்.  தாய் சொன்னாள், அழாதே என்றும் நீ என் மகள்தான், உன் முடிவுக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டேன் என்று ஆறுதல் சொன்னாள்.  மற்ற குடும்பமும் அவர்கள் சிறுமியின் முடிவுக்கே விட்டு விட்டனர்.  அந்த சிறுமியும் வளர்த்தவர்களையே தாய் தந்தை என தேர்ந்தெடுத்து விட்டாள்.  சிறுமிகளின் முடிவுக்கு கட்டுப் பட்டனர் பெற்றோர்கள்.  வளர்த்தாலும் உணர்வில் தான் தாய்தான் என நிரூபித்தாள் அந்த தாய்.  ஆனால் வளர்த்த தந்தைக்கோ குழந்தை வளர்ப்பிற்கு உதவ மனமில்லை.

குடும்பம் என்பது நாம் மனதில் வளர்க்கும் உறவுகள்.  ரத்த சம்பந்தம் மட்டும்தான் என்பது இல்லை.  ஜெயகாந்தன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.  ஜெயகாந்தனின்  "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" கதையும், அதில் வந்த ஹென்றியின் குடும்பமும் மிகவும் உன்னதமானது.  துரோகம் செய்த மனைவியை விட்டுப் பிரிந்த ஆண், வெள்ளைக்கார தம்பதியருக்கு நண்பனாகிறார்.  போர் காலத்தில்  உயிர்  துறக்கும் வெள்ளையர் மனைவியை தன் நண்பர் வசம் ஒப்படைத்து துணையாய் இருக்க வேண்டிக்கொண்டு உயிர் துறக்கிறார்.  நெஞ்சில் ஓர் ஆலயம் முத்துராமன் போன்ற மனம் அவருக்கு.  வெள்ளைக்காரப் பெண்ணும், இந்த மனிதரும் சேர்ந்து போர் காலத்தில் அனாதையாகிவிட்ட வெள்ளைக்கார சிறுவன் ஹென்றியை மகனாக்குகிறார்கள்.  இதில் இருப்பது காந்தி சொன்ன மனித நேயம்.  தந்தை இழந்த குழந்தைக்கு வாழ்வளி, கைம்பெண் ஆனவளை மணந்து கொள் என்பதைப் போன்ற அறிவுரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  இந்த குடும்பம் மத, ஜாதி, மொழி, இனம் எதையும் தாண்டியது.  உணர்வுகளின் அடிப்படையில் உருவான குடும்பம் இது.

வேளாங்கண்ணியில் சுனாமியில் மனைவி மக்களைப் பறிகொடுத்த ஒருவர், அடுத்த ஆண்டே திருமணம் செய்து ஒரு பேட்டி வெளியிட்டார்; தன் இறந்த மனைவியின் பெயரில் சமூகப் பணி செய்வதாக.  அவர் மணந்ததோ தன்னைப்போல் அந்த பேரிடியில் கணவனைப் பறிகொடுத்த பெண்ணை அல்ல, சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளையும்  தத்தெடுக்கவில்லை.  முன்னே  திருமணமாகாத பெண்ணை மணமுடித்தது அவர் சொந்த விருப்பம்.  அந்த துன்பத்தை அனுபவித்தவரே அது போன்ற துன்பத்தை அனுபவிப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில்லை, அவர்கள் துயர் துடைக்க நினைப்பதில்லை  என்பதுதான் என் மனதில் ஓடிய எண்ணம்.

எழுத்தாளர் சாவியின் மகள் திருமணம் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும்.  அந்த இளவயதுப் பெண்ணின் கணவர் விமான விபத்தில் மரணம். அது போல அதே விமான விபத்தில் மனைவியைப் பறி கொடுத்தவர் சாவியின் மகளை மணந்து கொண்டார்.  அந்த திருமணத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடிய மணமகனின் தாயை இழந்த மகன், விபத்தே ஆகாத விமானம் கண்டு பிடிக்கப்  போவதாக சொல்லிக்கொண்டிருந்தான்.  அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மனம் எவ்வளவு நிறைந்திருக்கும்.  துணையை இழந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை.  தாயை இழந்த சிறுவனுக்குத் தாய்.  இந்த நிகழ்சியை நான் ஒரு வாரப் பத்திரிக்கையில் பல ஆண்டுகளுக்கு முன் படித்தேன், சிறு வயதில் மனதில் பசுமரத்தாணியாக இறங்கிவிட்டது.

இப்படித்தான் மறுமணங்கள் நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.  காதல் என்று வந்தால் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வதே சரி.  ஆனால் நம் சமுதாயத்தில் நடக்கும் தீர்மானிக்கப் பட்ட திருமணங்களில் இது போன்று நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  அதிலும் துயர சம்பவங்களில் மனைவியை இழந்து மறு திருமணத்திற்கு தயாராகும் எத்தனை பேருக்கு அதே துயர சம்பவத்தில் கணவனை இழந்த கைம்பெண்ணை மணக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.  ரிதம் என்ற படத்தில் அர்ஜுன், மீனா, அவர்கள் மகன் என்று காண்பிக்கப் படும் குடும்பம் ஜெயகாந்தனின் ஹென்றியின் குடும்பம் போன்றது.  வாழ்வளிப்பது என்ற பதம் எனக்கு உடன்பாடில்லாததால், பெற்றோரைத் தவிர யாரும் யாருக்கும் வாழ்வளிப்பது என்ற செயலுக்கு அருகைதையற்றாதல், அந்த சொல்லைத் தவிர்த்திருக்கிறேன்.  கைகொடுத்த தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம்  காலத்தில் வளர்ந்தவர்களுக்கு இது உடன்பாடில்லை என்பதற்கு நான் பொறுப்பல்ல.

எந்த வயதிலும் திருமணம் செய்வது, அல்லது மறுமணம் செய்வது அவரவர் சொந்த விருப்பம்.  வாழ்க்கைத் துணை இழந்த சிலருக்கு தன் வாழ்க்கைத் துணை இருந்த இடத்தில மற்ற ஒருவரை இருத்திப் பார்க்க முடியாது.  சிலர் அதை மறைந்த துணைக்கு செய்யும் துரோகமாகவோ, அல்லது தங்கள் இருவருக்கும் இருந்த அன்பு பிணைப்பில் தான் மட்டும் தரம் குறைந்து போகும் செயலாகவோ எண்ணுவார்கள்.  இது ஆண் பெண் இருவருக்கும் பொது.  பெண் என்ற முறையில் என் போல் இருப்பவர்கள் நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆண்களின் மனநிலை எனக்குப்  புரிவதாக காட்டிக் கொள்ள நான் தயாராக இல்லை.  எனவே, என்னை முன்னிறுத்தி சொல்கிறேன்...என் மகன் வயது உள்ள அவன் தோழர்களைப் பார்த்தால் அவர்களையும் என் மகனாகவே நினைக்கத் தோன்றுகிறது.   ஆனால், ஆண்களுக்கு ஏனோ அந்த மனப்பாண்மை இல்லை என்பதும் புரிகிறது.  அதை வயதானபின் மறுமணம் செய்யும் பொழுது அவர்கள்  வெளிப்படுத்துகிறார்கள்.  மறுமணம் செய்ய விரும்பும் வயோதிக ஆண்களுக்கு தன் வயதை ஒத்த பெண்களையோ, அல்லது தன் போன்றே துணையை இழந்த பெண்களோ ஏன் கண்ணிற்கு தெரிவதில்லை என்பது இதற்கு ஆதாரம்.  அந்த பெண்ணிற்கும் தன் மேல் காதல் அதனால் தவறில்லை என்பது தன்னை ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்தனம்.  அந்த இளம்மனைவி விரும்புவது அவர் செல்வம் என்பதை உணராத அறியாமை அல்லது அதைப் பொருட்படுத்தாத போக்கு.

வயதான ஆணிடம் ஒரு பெண்ணிற்கு காதல் ஏற்படும் என்பது இயற்கைக்கு மாறானது.  முதிர்ந்த வயதில் உள்ளவர்கள் ஆராய்ந்து பார்க்கும் அறிவை உபயோகப் படுத்த வேண்டும்.  பதிவர் ஒருவர் குறிப்பிடிருந்தார் தனது பதிவில், ஒரு பள்ளி வயது பெண்ணின் புத்தகத்தில் "களவாணி" பட கதாநாயகனின் படம் இருந்ததாக.  அவள் தோழிகளுக்கும் அந்த நாயகனைப் பிடிக்குமாம்.  பதின்ம வயதுப் பெண்கள் ஏன் கமல், ரஜினி படங்களை வைத்துக் கொள்ளவில்லை? அதை விட ஏன் அஜீத், விஜய் படங்களை வைத்துக் கொள்ளவில்லை?  அட ...நம்ம சிம்பு, தனுஷ் படங்கள் கூட வைத்துக் கொள்ளவில்லை.  பாசாங்கற்ற வயதுக் கோளாறு அந்த வயதில் யார் மீது நாட்டம் வரும் என்பதைக் காண்பிக்கிறது.  மறுமணம் செய்ய எண்ணும் வயதான ஆண்கள் இதை உணரவேண்டும்.  வாழ வழியற்ற பெண்கள் நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது தவறு.  இது மணவாழ்க்கை இல்லை, இது வெறும் வாழ்க்கைத் துணை என்பது பசப்பு வார்த்தை.  தனக்கு உதவியதற்கு ஈடாக குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போவது தன் கடமை, தன்னால் இயன்ற செயல் என அந்தப் பெண் எண்ணலாம்.  குடும்ப வாழ்கைக்கு இணங்காதது நன்றி கெட்ட செயல் என்ற குற்ற உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டு தானே முன்வரவும் செய்யலாம்.

தங்களை "வாழ்வளிக்கும்" தியாகச் செம்மல்களாக நினைத்து இளவயது பெண்களை மணப்பதற்கு முன், அந்த பெண்ணை மகளாக தத்தெடுத்து தன் செல்வத்தை அவள் அனுபவிக்க வழி செய்யலாம்.  அத்துடன் சுய சம்பாத்தியத்தை யாரும் யாருக்கும் எழுதி வைக்கலாம்.  தன் பிள்ளைகள் மேல் கோபம் கொண்ட சிலர் கோவில்களுக்கு சொத்தை எழுதி வைப்பதும் உண்டு.  இந்த செயல்கள் அவர்கள் உண்மையான தியாகிகள் என்பதைக் காண்பிக்கும். அவர்களை மேன்மையானவர்கள் என்றும் சமுதாயம் போற்றும்.  அதைத் தவிர்த்து இவ்வளவு பணம் கொடுக்கிறேனே, அதில் எனக்கு என்ன பயன்? what is in for me? என்பவர்கள் மனசாட்சியை விற்றுவிட்டு திருமணமும் செய்து கொள்ளலாம், அதற்கு பெண்ணே சம்மதிக்கும் பொழுது வேறு என்ன செய்ய முடியும்?  சுருக்கமாக சொன்னால் வியாபார நோக்கத்தில் உள்ள உறவு இது, முறையான அங்கீகாரம் இல்லாவிட்டால் சமூகத்தில் இந்த உறவுக்கு வேறு பெயர்.  இந்த உறவுகள் தொடர்கதையாகப் போகாமல் இனி சிறுகதையாகப் போக வேண்டும்.
- தேமொழி
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

 நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?
 
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
------------------------------------------------------------------------


"நிங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கீ"என்று ஒரு மலையாள நாடகமோ, நாவலோ, என்னமோ ஒன்று. பெயர்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாள மொழி தெரியாதலால் படிக்கவில்லை.

அந்தத் தலைப்பு தமிழில் "நீங்கள்தான் என்னை கம்யூனிஸ்டாக மாற்றினீர்கள்!"

அதில் வரும் 'நீங்கள்' அந்தக் கதாசிரியர் வளர்ந்த சமூகததைக்குறிக்கும்.அவர் கம்யூனிஸ்டு ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு கம்யூனிஸ்டு
ஆனவரில்லை என்று தோன்றுகிறது. சமூகமோ அல்லது ஒரு தனி மனித எதிரியோ செய்த அக்கிரமத்தால் இவர் கம்யூனிஸ்டு ஆகி விட்டாராம்.

கம்யூனிஸ்டு ஆனால் சமூகக் கொடுமைகளைத் தீர்த்து விட முடியுமா? கம்யூனிசம் அப்படியென்ன துஷ்ட நிக்ரஹம் செய்ய வந்த பகவானேவா?

அந்தத் தலைப்புக்கு எதிர்வினை:

"நீங்கள்தான் என்னை கம்யூனிஸ்டு ஆக்கவில்லை!"

'என்னை' என்றால்? என்னையேதான். கே எம் ஆர் கே தான்.

நல்ல மனிதாபிமானம் இருந்தும், ஓரளவு கம்யூனிசம் படித்தும் நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?

ஒரு பிற்போக்குப் பழமொழி: 'இருபது வயதில் நீ பொதுவுடமை பேசாவிட்டால் உனக்கு இதயம் இல்லை.அறுபது வயதில் நீ பொதுவுடமை பேசினால் உனக்கு மூளையில்லை."
=========================
என் தந்தையார் சுதந்திரப் போராட்டக்காரக் காலத்தில் இருந்த அனைத்துத் தரப்பு மக்களுடனும் , சமூகத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். கம்யூனிஸ்டுகளும் அப்பாவிடம் வருவார்கள்.

சிவப்புத் துண்டும் கசங்கிய சட்டையுமாக அவர்கள் அப்பாவிடம் கையைக் காலை ஆட்டிப் பேசுவார்கள். அப்பா பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு,"நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இலட்சியவாதிக்கு நீங்கள் சொல்வது எல்லாம் பொருந்தும்.மக்கள் எல்லோரையும் லட்சிய வாதிகளாக‌ இருக்க வைக்க முடியாது. நாம் நினைப்பதைவிட மிக நுண்ணிய உணர்வுகளால் இந்த சமுதாயம் பிணைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் சொல்லும் ஒரே பாதைதான் புரட்சிக்கு என்பதை என் பூர்சுவா மூளை ஏற்க முடியவில்லை. நீங்கள் வாசித்துள்ள சமூக விஞ்ஞானம் மாற்றம் பெறும் என்றே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.எந்த ஒரு கொள்கை மாற்றம் அடையாமல் தேங்கி நிற்கிறதோ அது அழுகி அழியும். இந்திய பொதுபுத்தி மாற்றங்களை உள் வாங்கி எப்போதும் முன் நகரும் திறன் படைத்தது.இது ஒரு வெளி நாட்டுக்காரர் எழுதிய கொள்கை பிர‌கடனத்தால் அனுமானிக்கப் பட முடியாத‌து." அப்பா பேசுவதை அவர்களைப்போலவே வாய்திறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். ஒன்றும் புரியாது.
=====================
கொஞ்சம் வயது கூடின பின்னர் நானாகத் தனியாக ஊர் சுற்ற ஆரம்பித்தபோது சேல‌ம் ரோட்டரி சங்கத்தில் சி பி எம் தலைவர் பி.ராமமூர்த்தி பேசுவதைக் கேட்கப் போனேன். "மக்கள் அனைவரும் தியாக புத்தி உள்ளவர்கள் என்றும்,அவர்கள் மற்றவர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தங்கள் உயிரையும் கூட பொது நன்மைக்காக விடுவார்கள்" என்றும் பேசினார்.பேச்சின் ஊடே,"பெண் விஷயத்தில் தான் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆனால் அதிலும் கூட ஐந்து பேர் ஒரே பெண்ணுடன் பகிர்ந்து வாழ்ந்தது நம் நாடு அல்லவா?" என்றார்.

அப்போது அது கவர்ச்சியாக இருந்தது. அது கம்யூனிசம் பற்றி எல்லாவற்றையும் தெளிவு படுத்தி விட்டடதாக எண்ணி எல்லாம் அறிந்தது போல கதைக்க ஆரம்பித்தேன். அப்பா ஒன்றும் பேசாமல் மஹாபாரதத்தில் இருந்தே ஆதாரம் காண்பித்து, அந்த வழக்கம் அந்த ஐவர் மட்டுமே கடைப் பிடித்தினர். மற்றவர்கள் அவ்வாறு அல்ல என்பதைத் தெளிவு படுத்தினார்.
========================
எனக்கு நிரந்தர‌ வேலை உறுதி செய்யப்பட்டு அதற்கான கடிதம் கொடுத்தார்க‌ள். கொடுத்தது ஒரு காம்ரேட். அவர் அந்த செக்ஷன் எழுத்தர். Received with thanks என்று எழுதி கையெழுத்திட்டேன்.

"இது என்ன காம்ரேட் புது வழக்கம்? இப்படியெல்லாம் எழுதக்கூடாது..."

"ஏன்?"

"ஏன்னா? நாம ரிலாக்சா இருக்கிற மாதிரி நிர்வாகத்திற்கு ஒரு எண்ணம் வந்துடும் அதனால் எப்பவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொள்ளனும்."

"என்னால 'ரிலாக்ஸா'தான் இருக்க முடியும்''

"அப்ப சங்க வேலைல ஆர்வம் காட்ட மாட்டிங்க?'

"சங்க வேலையை சிரித்துக் கொண்டே செய்யக்கூடாது என்று எங்கே சொல்லி இருக்கிறது?"

"காம்ரேட்! நாம சீரியசா பேசினால்தான் தொழிலாளியும் சீரியசா இருப்பான்.கொஞ்சம் லூசுல விட்டாலும் இங்கே தொழிற்சங்கம் கைவிடப்ப‌ட்டு,
மன மகிழ் மன்றம் ஆகிவிடும்."

"எனக்கு அப்ப சங்கம் சரியா வரும் என்று தோணலையே. நா எப்பமும் இளிசுச்க்கிட்டு இருக்கிற டைப்பு..."

"அன்று சிகாகோ வீதியில் ரத்த‌ம் சிந்திய தொழிலாளியினை எண்ணிப் பார்த்துமா உங்க‌ளுக்கு சிரிப்பு வருகிறது, தோழரே? கைகள் எல்லாம் காய்ச்சுப்போகும்வரை கனமான சுத்தியலால் ஓங்கி ஓங்கி அடிக்கிறானே அந்தத் தொழிலாளியின் புடைத்த‌ நரம்பைப் பார்த்துமா உங்களுக்கு சிரிப்பு வருகிறது..."

அவருடைய ஆவேசப் பேச்சும் அவர் அற்புதமான நடிப்பும் மிகவும் பிடித்து இருந்தது.சிரிக்கலாம என்று யோசித்தேன்.அவர்முன்னால் சிரித்தால் அவர் அழுது விடுவார் போல இருந்தது.உடனே அங்கிருந்து அகன்றேன்..முகம் மறைந்தவுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
========================
என்னுடைய பணி நிரந்தரம் ஆனதற்காக எல்லோருக்கும் ஏதாவது இனிப்புக் கொடுக்க முடிவு செய்தேன். என்ன செய்யலாம் என்று அடுத்த இருக்கை காம்ரேட்களைக் கேட்டபோது வழ்க்கமாக கேன்டீனில் சொல்லி சேமியா பால்பாயசம் தருவார்கள் என்றார்கள்.நானும் அவ்வாறே அலுவலகம் முழுமைக்கும் 350 பால்பாயசம் ஆர்டர் கொடுத்துவிட்டேன்.

பாயசம் தயாரித்துக் கொண்டு வந்து வைத்து விட்டு கேன்டீன் நாயர், "எந்தா சாரே!பிரதமன் சப்ளை ஆரம்பிக்கலாமா?' என்றார். நான் 'சரி' யென்று சொல்லுமுன், 'நிறுத்து' என்று குரல் கேட்டது. தாலி கட்டும் நேரத்தில் சினிமாவில் வருமல்லவா அதே போன்ற அதிகாரமான குரல்.

திரும்பிப் பார்த்தேன்.காம்ரேட் விவாஹ சுந்தரமும், காம்ரேட் ராகவாச்சாரியும்!

"காம்ரேட் கொறைச்சு இவ்விட வரி!"

சென்றேன்.

காம்.ராகவாச்சாரி தோழமை உணர்வுடன் தோளின் மீது கை போட்டுக் கொண்டார்.

"அந்த ஆபீசர் வேலாயுதம் யூனியனுக்கு எப்பவும் எதிராவே இருக்கான். இப்போ நம்ம 'ஓ டி' விஷயத்தில ரொம்ப கடுமையா இருக்கான். அதனாலெ அவனை 'சோஷல் பாய்காட்' செய்துள்ளோம்.அவனுக்கு மட்டும் பாயசம் கொடுக்கக் கூடாது"

"அதெப்படி நான் ஒருவரை மட்டும் ஓரங்கட்ட முடியும்? என்னால அப்படியெல்லாம் செய்ய முடியாது! நாயர் எல்லோருக்கும் சப்ளை பண்ணுங்க!"

நாயர் 'சுருசுரு'ப்பாக சப்ளையை ஆரம்பித்தார். ஒரு 60 டம்ப்ள‌ர் சப்ளை ஆகியிருக்கும். அவர்கள் சொன்ன அதிகாரி வேலாயுதத்திற்கும் ஒரு டம்ப்ளர் வைக்கப்பட்டது.அதற்காகவே காத்து இருந்தது போல எல்லா காம்ரேடுகளும் கையில் டம்ப்ளருடன் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். வரிசையாக என் மேசைக்கு ஊர்வலம் போல் வந்து என் மேசையின் மீது பாயசக் கோப்பைகளை 'ட்க் டக்' என்ற ஒலியுடன் வைத்துவிட்டு திரும்பிப் போயினர் மேசை நிரம்பி வழிய, இடமில்லாதவர்கள் என் மேசையைச் சுற்றி பாயசத்தினை அடுக்கினர். நான் மேசையை விட்டு எழுந்து வரமுடியாதபடி பாயசத்தால் 'கெரோ' செய்யப் பட்டேன்.

இதுதான் தொழிலாளர் ஒற்றுமையா? இதுதான் தொழிற்சங்க ஒற்றுமையா?

இந்த சோஷியல் பாய்காட் தானே அந்தக் கால சேரிகளை உருவாக்கியிருக்க வேண்டும்? மார்க்ஸீயமும் ஒரு வகை மதமா?

ஏன் இவர்களால் தனிமனித நட்பையும் அலுவலக நடைமுறையையும் பிரித்துப்பார்க்க முடியவில்லை?

தனிமனிதனின் எல்லா உணர்வுகளும் பொதுக்கருத்து என்ற ராட்சனின் கோரப்பல்லில் மாட்டி அரை படத்தான் வேண்டுமா?

மனதில் கேள்விகளோடு நீண்ட நேரம் அமர்ந்து இருந்தேன்.
==================================
'சிந்தாபாத்' அடிச்சா பெரியகோவில் கோபுரம் கீழே விழுந்துவிடுமோ என்று eல்லோரும் பதரும் குரலில் கோஷம் போடும் காம்ரேட் ஒருவர்
இருந்தார். பிறப்பால் பிராமணர்தான். நான் ஒரு நாள் விடுப்பு எடுத்து இருந்தேன்.

மறுநாள் அலுவலகம் சென்றபோது "என்ன நேற்று வரலை?" என்று ஆரம்பித்தார்.

நான் என் வாக்கில் சனீஸ்வரன் இருக்கிறர் என்று உணர்ந்து ஆதியில் இருந்தே கூடியவரை நானாகப் பேசுவதைத் தவிர்த்து விடுவேன்.  ஆனால் விடாது கருப்பு என்று என்னை யாராவது பேச இழுத்து விடுவார்கள்.அப்படித்தான் ஆயிற்று அன்று.

"பாட்டிக்கு அப்பா திவசம் கொடுத்தார்.அவர் வயதானவராகையால் அவர் அருகில் இருந்து சேவை செய்தேன். அதனால் வரவில்லை" என்றேன்

"இந்த பத்தாம் பசலித்தனம் நம்ம சமுதாயத்தில் இருந்து எப்போதுதான் ஒழியுமோ?!"

"ஏன், நீங்கள் திவசம் கொடுப்பதில்லையா?"

"ஒரு 'கார்ட் ஹோல்ட'ராக்கும் நான். அந்த தப்பல்லாம் பண்ணினா கட்சி சும்மா இருக்காது"

"அப்போ உங்களுக்கு திவசம் கொடுக்கணும்னு ஆசை மனசுல இருக்கு. கட்சிதான் தடை. இல்லையா?"

"அதெப்படி நானே அந்த மூடப்பழக்கத்தை எதிர்க்கிறேன்"

"காரணம்?"

"காரணங்கள் பல உண்டு. ஆனாலும் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது என்னவென்றால், திவசம் அன்று பிராமணர்கள் சாப்பிடும் வரை மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது; வெறும் பிச்சை கூடப் போடக் கூடாது என்பதுதான். இது அவர்கள் தந்திரமாகச் செய்த சுயநல‌ விதி"

"சரி அது சுய நல விதியாகவே இருக்கட்டும்.அதன் பின்னணியெல்லாம் விளக்கப் புகுந்தால் வெற்றுக் கூச்சல் ஆகிவிடும்.உம்முடைய வயதுக்கு நீர் ஒரு 20 திவசமாவது கொடுத்து இருக்கணும்.கொடுத்துள்ளீரா?"

"இல்லை.எனக்கு செய்யும் விருப்பமும் இல்லை; வசதியும் இல்லை"

"வசதி இல்லை என்று சொல்லாதேயும். மனம் இல்லை என்பதே சரி! என் தகப்பனார் தன் 50 வயது வரை முறையாக திவசம் கொடுக்காமல், சாஸ்திரியை அழைக்காமல் மந்திரம் இல்லாமல், திதி அன்று சாதி, மத, அந்தஸ்து வித்தியாசம் இன்றி அனைவரையும் அழைத்தது உணவிட்டு இருக்கிறார்..கடந்த‌ 10 ஆண்டுகளாகதான் வைதீகரைக் கூப்பீட்டு செய்கிறார். நீரும் அதுபோலவே செய்து இருக்கலாமே!"

"அதெல்லாம் கூட புரட்சியைத் தள்ளிப்போட 'பூர்சுவா'க்கள் செய்யும் தந்திரம். ஒரு வேளை சோறு போட்டவனை, சோற்றுக்கு உப்பு கொடுத்தவனை மறக்கக்கூடாது என்றெலாம் எழுதி வைத்து மக்களைப் புரட்சிப்பாதையில் இருந்து திசை திருப்புவது."

"சரி .என் அப்பாவுக்கெல்லாம் முன்பே, சிறந்த வைதீகப் பிராமணனாக விளங்கிய ஒருவரே திவசத்து அன்று தானம் கொடுத்துள்ளார் தெரியுமா?"

"யார் அது?"

"திருவிசை நல்லூர் கேள்விப்பட்டுள்ளீரா? கும்பகோணம் அருகில் உள்ளது. அங்கே அக்கிரஹாரத்தில் ஸ்ரீதர ஐயா என்று ஒருவர் வாழ்ந்துள்ளார். பெரிய வேத விற்பன்னர். வேதம் படித்துள்ளோம் என்ற செருக்கு சற்றும் இல்லாதவர்.பகவானிடம் பக்தியானவர்.கவிதா ஞானம் மிக்கவர். அவர் இல்லத்தில் திதி வருகிறது. வேத பண்டிதர்களை அழைத்து திவசம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அவர்களும் வந்து, 'காவேரியில் சென்று ஸ்நானம் செய்து வருகிறோம்' என்று சென்று இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் புழக்கடையில் இருந்து குரல் கேட்கிறது.'ஐயா! சாப்பாடு கொடுங்கள்.ரொம்பப்பசி' ஏழையின் குரல் கேட்டு நெஞ்சம் பதைத்த ஸ்ரீதர ஐயர் திவசத்திற்காகத் தயார் நிலையில் இருந்த உணவுப் பண்டங்களை எடுத்து அந்தப் பரம ஏழைக்கு அளிக்கிறார்.

அதைப்பார்த்துக் கொண்டே வந்த வைதீகர்கள்,'அபசாரம்!பாவம் செய்துவிட்டீர்.திவசம் செய்ய முடியாதே!' என்கிறார்கள்.

'இது பாவம் என்றால், நான் என்ன செய்தால் இந்தப் பாவம் போகும்?" என்று கேட்டார் ஸ்ரீதரர். கங்கையில் குளிக்க வேண்டும் என்றனர். அவர் மனமுருகி கங்காஷ்டகம் பாட அவர் வீட்டிலேயெ கங்கை பெருகி ஊரெல்லாம் ஓடியதாம். இதில் கங்கை பெருகியது என்பதை நீர் நம்பாவிட்டாலும், உணர்ச்சி வயப்பட்டு சாஸ்திர விதிமீறல்  உமக்கு வெகு காலத்திற்கு முன்பே நடந்துள்ளது. உமக்கும் ஐயாவாளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் நீர் ஏதோ பெரிய புரட்சி செய்வதாக நினைத்து விதியை மீறுகிறீர். அவர் தானம் பண்ணிவிட்டு, அகங்காரம் இல்லாமல் பேசுகிறார். நீர் தானம் செய்யாமலயே பெரிய சாதனை செய்ததுபோல் ,புரட்சிக்காக முற்போக்காக நடந்து கொள்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்.

சரி நீர் நினைத்தபடி சாஸ்திரியைக் கூப்பிடாமல், என் அப்பாவைப்போல அந்த நினைவு நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமேன் என்றால் அதற்கும் புரட்சியை அது ஒத்திபோடும் என்று சித்தாந்தம் பேசுகிறீர்." நான் வெடிப்புறப் பேசியதை பல ஊழியர்களும் செவி மடுத்தனர்.சிலர் வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.

காம்ரேடுக்கு அவமானமாகப் போய்விட்டது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் போய்விட்டார்.

என்னை விட மூத்தவரான ஒரு நண்பர் "வீணா சங்கத்தின் பகையை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்.பாரும் வேடிக்கையை இனிமேல்" என்றார்.

அவர் சொன்னது சரிதான் என்று தொடர்ந்து நடந்த சம்பவங்கள் உறுதி செய்தன.
===================================
அச்சுதன் நாயர் எங்கள் நிறுவனத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் காவலர்.

 நான் முதன் முதலில் சந்திக்கும் போதே அவருக்கு 75 வயது இருக்கும்.முதுமை முகத்தில் மட்டும்தான் தெரியும்.அதுவும் வெள்ளிக் கம்பிகளாய் முளைத்து இருக்கும் தாடிதான் அவருடைய முதுமையைப் பறை சாற்றும்.அப்புறம் பொடிப் பழக்கத்தால் பெரிதாக வீங்கிப் போன 'பல்பஸ்' மூக்கு.

ஒரு பெரிய பித்தளை தூக்குச் சட்டி முழுதும் சாதமும் குழம்பும் சுமந்துகொண்டு சைக்கிள் ஸ்டாண்டுக்குள் காலை 8.30 மணிக்கு
நுழைந்துவிட்டால்  மாலை 6.30 வரை தன்னுடைய போஸ்டை விட்டு அகலாத ராணுவ வீரனைப் போல அங்கேயே இருப்பார். தினமும் ஸ்டாண்டைக் கூட்டி சுத்தமாக வைப்பார்.

அவரெல்லாம் நிறுவனம்  தேசியமயமாவதற்கு முன்பே ஓய்வு பெற்றவர்.

'நானெல்லாம் ஓரியென்டல் பென்ஜினராக்கும்மே! இம்பேரியல் பாங்க் மாதிரியல்லோ ஓரியென்டலும்; அத்தரை வலிய மானேஜ்மென்டு. இப்பம் மாதிரியா? யூனியன் கொடி பிடிச்சு சிந்தாபாத் அடிச்சு,  சுலபமாயிட்டு சம்பளம் எடுக்க...?'

தீபாவளிக்கு எல்லோரிடமும் இனாம் வசூல் செய்வார். ஒரு நோட்டுப் புத்தகத்தினையும் பேனாவையும் கையில் வைத்துக் கொண்டு தீபாவளி மாததிற்கு முதல் மாத‌ சம்பள சமயத்திலேயே ஆரம்பித்து விடுவார்.

சென்ற வருடத்தில் யார் அதிகம் எழுதியுள்ளார்களோ அந்த வரிசைப்படி ஆட்களை அணுகுவார். அப்படி அவர் கணிப்பில் நான் தான் முதல் ஆளாக நோட்டை ஆரம்பித்து வைக்க வேண்டும்.

"என்ன நாயர்!நானோ சாதாரண குமாஸ்தா! எத்தனை பெரிய ஆபீசர்மாரெல்லாம் இருக்கா. அவாளை முதலில் கேட்கப்படாதோ" என்றால்

"எந்தா சாரே! எந்தா பெரிய ஆபீசர்மார்!? பெரிசு சிறிசு என்னுவ‌தெல்லாம் பதவில இல்ல சாரே!இங்க இருக்கணும், கேட்டோ!" என்று  இதயத்தைச் சுட்டிக் காண்பிப்பார்.

"சரி! சங்கத் தலைவர்களிடம் முதலில் காட்டுமேன் நாயர்! அவர்கள்தானே எது ஒன்று  என்றாலும் ஓடி வந்து ந‌ம்மைக் காப்பாறுபவர்கள்?"

"ஆரு? ஆரு காப்பாதரதுன்னு பறையரது சாரே! அந்த சங்கத்துக்காரனையும் என்டே குருவாயுரப்பன் அல்லோ ரக்ஷிக்குன்னு சாரே!"

அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது.

என்னுடைய சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகத் துவங்கியது.சேர்ந்தார் போல ஓரிரு முறை மாலையில் வந்து பார்க்கும் போது சைக்கிள் டயர் ஃப்ளாட் ஆகியிருந்தது. மூன்று முறை பஞ்சர் ஒட்டியும் நானகவது நாளும் அப்படியே ஆயிற்று. பஞ்சர் போடும் கடைக்காரர், இந்த முறை "சார் இது யாரோ வேணும்னு உங்க சைக்கிளை பஞ்சர் செய்யராப்புல இருக்குது" என்றார்.

நாயரிடம் விஷயத்தை சொன்னேன். "என்னைக் குறி வைத்து யாரோ ஒருவர் தினமும் ஊசியால் குத்தி என் சைக்கிளைப் பஞ்சராக்குவது போலத் தோன்றுகிறது."

"நான் கவனம் வைக்குறேன் சாரே!"

அதன் படியே இரண்டாம் நாள் மாலை என‌க்காகவே என் சைக்கிள் அருகிலேயே காத்து
இருந்தார் நாயர்.

"எல்லாம் அந்தக் கரடிதான் சாரே!"

எனக்கு உடனே புரிந்துவிட்டது. கரடி என்ற 'நிக்நேம்' உடையவர் யூனியனில் இரண்டாம் வளையத்தில் உள்ள ஒரு குட்டித் தலைவர்.

எதற்காக இது? 'பின் ப்ரிக்ஸ்'என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அதாவது சிறு குடைச்சல் அது இதுதானோ?

ஏன்? ஏன் ? ஏன்?

நாயரை சாட்சிக்கு அழைத்து பஞ்சாயத்து வைக்க‌  முடியாது.  நாயர் உண்மையைச் சொல்லக் கூடியவர்தான். உண்மையைச் சொன்னதற்காக அவருடைய போஸ்டிங் ஆட்டம் காணலாம்.

அவரை உண்மையைப் பேச வைத்து இந்தக் கண்ணாமூச்சி ஆட்டதில் நான் வெற்றி பெற்று ஆகப் போவது என்ன?

நாயருக்கும் சேர்ந்து குடைச்சல் கொடுப்பார்கள். தள்ளாத வயதில் இவர்களுடைய நரித் ததிரங்களையெல்லாம் அவரால் தாங்க முடியுமா?

சைக்கிள் நிறுத்த வேறு ஏற்பாடு செய்து கொண்டேன்.

தன் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்கு, நடைமுறையில் சங்கம் செய்யும் காரியம் இப்படித்தான் இருக்கும்.பலருக்கும் அப்படி நட்ந்துள்ளது.

கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள மாட்டார்கள்.

கூண்டில் அடைக்கப்பட்டுப் படியாத யானையையோ, சிங்கத்தயோ, புலியையோ எப்படித் தண்டனைகளால் படிய வைக்கிறார்களோ அதுபோன்ற நடவடிக்கைதான் சங்கம் செய்யும்.

வயதில் மூத்தவர்களிடம் கலந்து ஆலோசித்தேன்.

"நீ நேரடியாக அவர்களைப் பகைக்கிறாய். அவர்களுக்கு எப்போதும் சுற்றி புகழ் பாடுபவர்களையே பார்த்துப் பழகி விட்டது.கேள்வி கேட்காமல் லாயலாக இருப்பவர்களே யூனியனில் வெற்றி பெற முடியும்"

தொழிற் சங்கமும், கம்யூனிசமும் என்னைவிட்டு நன்கு விலகிப்போவதை உணர்ந்தேன்.

ஆக்கம்.
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5
 
இந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடல்:
நமக்கு அதை எடுத்து வழங்குபவர்
தேமொழி


ஏ.... ஆராரோ....ஆரிரரோ
என் கண்ணே ஆராரோ ஆரிரரோ
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே
சரிஞ்சு படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு

ஆ....ஆ ....ஆ...ஆ ...ஆ...ஆ

நிலவே தூங்கும் வேளை, நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேளை, நீயேன் தூங்கவில்லை
ஆத்தங்கரை காற்றினிலே அன்பே கண்ணுறங்கு
ஆத்தங்கரை காற்றினிலே அன்பே கண்ணுறங்கு

காணொளியாக இங்கே காண்க:
http://youtu.be/iZqD_-vydfw
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவர் மலரில் உள்ள ஆக்கங்களுக்கான உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. படித்தவர்கள், மனதைத் தொடுபவற்றைப் பற்றி ஒரு வரி எழுதுங்கள். படைப்பாளிகளுக்கு அதுதான் டானிக்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.11.11

வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!

----------------------------------------------------------------------------------------
வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!
நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம். ஒட்டு மொத்த இந்தியாவும் புண்ணிய ஸ்தலம்தான். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்னும்போது எல்லா இடங்களும் புண்ணிய ஸ்தலம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும். பணம் படைத்தவர்கள் பணத்தை வைத்து பல அறச் செயல்களைச் செய்யலாம். பணவசதி இல்லாதவர்கள். உடல் உழைப்பால் பல தர்மச் செயல்களைச் செய்யலாம். வலிமையான மனம் மற்றும் அறிவு படைத்தவர்கள் அதைவைத்துப் பல அறச் செயல்களைச் செய்யலாம்.

வலைப்பதிவில் என் அரிய நேரத்தைச் செலவழித்து ஆறு ஆண்டுகளாக நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்! பாடம் நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்!

நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!

எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------------------
சரி, இனி இன்றைய கட்டுரைக்குப் போவோம்.

வாரணாசியைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் வாரணாசிக்குத்தான் முதல் இடம். வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.

1. அயோத்யா (உத்திரப்பிரதேசம்)
2. மதுரா (உத்திரப்பிரதேசம்)
3. ஹரித்துவார் (மாயா - உத்திரகாண்ட் மாநிலம்)
4. காசி (வாரணாசி - உத்திரப்பிரதேசம்)
5. காஞ்சி (தமிழ்நாடு)
6. உஜ்ஜெயின் (அவந்திகா - மத்தியப்பிரதேசம்)
7. துவாரகை (ஜாம்நகர் மாவட்டம், குஜராத்)

ஏழு இடங்களுக்கும் சென்றால்தான் மோட்சம் என்றில்லை. அவற்றில் ஒரு இடத்திற்குச் சென்றாலும் அந்தப் பலன் உண்டு!

செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.

டாஸ்மாக் பார்ட்டிகள், அஜால்-குஜால் பார்ட்டிகள், ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள், எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது.

தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்

கங்கா தேவிக்கு ஆராதனை நடைபெறுகிறது Ganga Arti
 ------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பார்த்துவிட்டீர்கள். அடுத்து என்ன?



வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு ராமபிரானின் ஜென்ம பூமியான அயோத்திக்குச் சென்றுவரும் ஆசை இருக்கும். வாரணாசியில் இருந்து
அயோத்யா 180 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 4 மணி நேரப் பயணம்.

அயோத்தியாவின் இணையதள முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அதிலேயே அயோத்தியாவைப் பற்றிப் படித்துவிடுங்கள் போதும். அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். ராமர் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார். அங்கே அநியாயத்திற்குக் கெடுபிடி என்று கேள்விப்பட்டேன்.  Security check. 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களாம்.

அவர்களில் 2 பேர்கள், செல்லும் வழியில் 3 அல்லது 4 இடங்களில் உங்கள் சட்டைப்பைகளில் கை விடுவார்கள். இடுப்பு, அக்குள் பிரதேசங்களில் தடவிப்பார்ப்பார்கள். பெண்கள் என்றாலும் தப்பிக்க முடியாது. பணியில் பெண்காவலர்கள் உள்ளார்கள். ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!

அத்தனை சிரமங்களுக்கிடையே சென்று எதைப் பார்க்கப்போகிறீர்கள்? 200 அடி தூரத்தில் இருந்து, இராமர் - பாபர் மசூதி தகராறில் இடிபட்ட கட்டட மிச்சங்களைப் பார்த்துவரலாம். அவ்வளவுதான்.

வேஸ்ட். அதனால் செல்லாதீர்கள். இருந்த இடத்தில் (அதாவது வாரணாசியில்) இருந்தே ராமரை நினைத்துக்கொள்ளுங்கள் போதும்!

URL for the Article on Ayodhya: http://en.wikipedia.org/wiki/Ayodhya

அதெல்லாம் முடியாது சென்று வருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக அயோத்தியாவில் உள்ள நகரத்தார் விடுதியின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். தாராளமாகச் சென்று, தங்கி, அதிகாலையில் எழுந்து திவ்யமாக ராமஜென்ம பூமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!

Nattukkottai Nagara Satram
Natkot Sri Ram Mandhir
Baboo Bazar
Ayodhya - 224123
Faizabad
Uttar Pradesh
Phone No: 05278 - 232703
-------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?
காயாவில் உள்ள ஃபல்கு நதி!

வாரணாசியில் இருந்து கயா 210 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்துக்கள், பெளத்தர்கள் என்று இரு சாராருக்குமே கயா ஒரு புனித ஸ்தலம். கயாவைப் பற்றிய விவரங்களுக்கான சுட்டியைக் கீழே படித்துப் பாருங்கள்.

URL for the Article on Gaya: http://en.wikipedia.org/wiki/Gaya,_India

கயாவில் நகரத்தார் விடுதி உள்ளது. அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
No.171, Chand Chowra
Gaya - 823 001
Bihar State
Telephone No: 0632 - 2226480
-----------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?


மூன்று நதிகள் சங்கமிக்கும் அலாகாபாத்!

வாரணாசியில் இருந்து அலாகாபாத் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 3 மணி நேரப் பயணம்.

அலகாபாத் முப்புறமும் யமுனை, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிகளால் சூழப்பெற்ற ஊர். எங்கே சென்றாலும் வழியில் பிரமாண்டமான, நீண்ட பாலங்கள் உள்ளன.

யமுனை, கங்கை மற்றும் ஊற்றாக உள்ள சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும், அதாவது ஒன்றுடன் ஒன்று சேரும், கலக்கும் இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். படகில் அழைத்துச் செல்வார்கள். சுற்றிலும் பார்ப்பதற்கு நம்மியமாக இருக்கிறது. அவசியம் சென்று வாருங்கள்.

அலாகாபாத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான இடம். இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிறந்த மாளிகையான ஆனந்தபவனம். ஆமாம் திரு.ஜவஹர்லால் நேரு மற்றும் அவருடைய அன்பு மகள் திருமதி.இந்திரா பிரியதர்சினி ஆகியோர் பிறந்த மாளிகை அது. இப்போது அந்த மாளிகை நாட்டிற்கு அர்ப்பணிக்கபெற்று, தேசிய வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.

பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது. அதையும் பார்த்து வாருங்கள்

Bharadwaja was one of the greatest Hindu sages (Maharshis) descendant of rishi Angirasa, whose accomplishments are detailed in the Puranas. He was one of the Saptarshis (Seven Great Sages Rishi) in the present Manvantara; with others being Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni, Kashyapa. Bhardwaj Rishi was father of Guru Dronacharya and grandfather of Ashwatthama. Bhardwaj Maharishi, a sage of the Vedic period, is renowned for his thirst for knowledge. He attained extraordinary scholarship and the power of meditation.

அனுமார் கோவில் ஒன்று உள்ளது. சிறப்பானது. அதையும் பார்த்து வாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Allahabad

அலாகாபாத்தில் நகரத்தார் விடுதி உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. 200 பேர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதியானது. 3 வேளை உணவு வசதியும் அங்கே உள்ளது. ஆனால் முன் கூட்டியே வருகையைத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்! அதுதான் நல்லது.அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
149, Mori, Daraganj,
Allahabad - 211 006 (U.P)
Telephone No: 0532 - 2501275
----------------------------------------------------------------------
வாரணாசியில் இருந்து இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வர வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கும். 4 பேர்கள் வரை செல்வதென்றால் இண்டிகா கார் கிடைக்கும், 8 பேர்கள்வரை சென்று திரும்புவதென்றால் டாடா சுமோ வண்டி கிடைக்கும். அதற்கும் மேலான எண்ணிக்கை என்றால் அவற்றிற்குத் தகுந்தார்ப் போல பெரிய வேன்கள் மற்றும் பேருந்துகள் கிடைக்கும்.

வாரணாசி நகர விடுதியில் சொன்னால் ஏற்பாடு செய்து தருவார்கள்.

செலவு: வாரணாசியில் இருந்து அலாகாபாத்திற்கு நாங்கள் 7 பேர்கள் சென்று வந்தோம், தலைக்கு 300 ரூபாய்கள் ஆயிற்று

வாரணாசியை முழுமையாக சுற்றிக் காட்டவும் வாகனங்கள் கிடைக்கும்

உங்களுக்காக Travels  நடத்தும் அன்பரின் முகவரியைக் கொடுத்துள்ளேன். அவர் பெயர் ‘பிமல்’. தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆகவே பிரச்சினை இல்லை. அவர் மூலமாகவும் நீங்கள் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசியில் வாங்க வேண்டிய சாமான்கள்

1. ருத்திராட்சம்
ஐந்துமுக, ஆறுமுக உத்திராட்சங்கள் நிறையக் கிடைக்கும். ஒரு உத்திராட்சத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே!

2. மாலையாக அணிந்து கொள்ள 108 சிறு உத்திராட்சங்கள். ஒரு செட்டின் விலை ரூபாய் நூறு மட்டுமே. பெரிய சைஸ் உத்திராட்சமும் கிடைக்கும் ஒரு செட்டின் விலை இருநூறு ரூபாய். அவற்றை வாங்கிக் கொண்டு வந்து செப்புக்கம்பி அல்லது வெள்ளிக் கம்பியில் கட்டி, கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

3. காசித் திருநீறு & குங்குமம். சின்னச் சின்ன கவர்களில் அழகாகக் கிடைக்கின்றது. 10 சின்ன பாக்கெட் அடங்கிய செட்டின் விலை பத்து ரூபாய்கள் மட்டுமே!

4. கையில் அணியும் காசிக்கயிறு. 50 கயிறுகள் கொண்ட செட்டின் விலை பதினைந்து ரூபாய்கள் மட்டுமே

5. காசித் தீர்த்தம். சிறு செம்புகளில் அடைக்கப்பெற்ற கங்கை நீர். பல அளவுகளில் கிடைக்கின்றது. விலை 15ல் துவங்கி 120 வரை செல்கிறது
விருப்பம்போல் வாங்கிக் கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்தும் நகரத்தார் விடுதியில் கிடைக்கும்.

அங்கேதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெருக்களில் பல கடைகள் உள்ளன. பார்த்து, பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.

பிறகு பித்தளையில் அன்னபூரணி பதுமைகள், பசுமாடு-கன்றுக்குட்டி பதுமைகள், காப்பர் தட்டுக்கள், சின்னச் செம்புகள், சின்னச் சின்ன விளக்குகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். மனதை அள்ளும் விதமாக இருக்கும் பார்த்து வாங்கி வரலாம். நான் வாங்கிய இடம் ஒரு மொத்த வியாபார ஸ்தலம். விடுதியின் அருகில் உள்ளது. அதன் முகவரியைக் கொடுத்துள்ளேன்.



தேனில் ஊறிய நெல்லிக்கனி கிடைக்கும். சுவையாக இருக்கும் ஒரு கிலோ வாங்கினால் 20 முதல் 22 கனிகள் இருக்கும் விலை கிலோ 100 ரூபாய்.
அதை விற்கும் கடைகளில் ஒன்றின் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.

----------------------------------------------------------------------------
வாராண்சியில் தடுக்கி விழுந்தால் சேலைகள், சுடிதார்கள் விற்கும் கடைகள்தான். விடுதிக்கு  அருகில் உள்ள கடை ஒன்றின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்

--------------------------------------------------------------------------------

மேற்கூரிய ஐயிட்டங்கள் அனைத்தையுமே அல்லது உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு வந்தால், வாராணசிக்குச் சென்று திரும்பிவுடன், உங்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்குச் செளகரியமாக இருக்கும்.

அவர்கள் மகிழ்வார்கள். கொடுப்பதால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்
---------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்





காசி பயணக்கட்டுரை நிறைவுறுகிறது

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------------





வாழ்க வளமுடன்!

25.11.11

வாரணாசியில் இட்லி சாம்பார்!



வாரணாசியில் இட்லி சாம்பார்!

ஒரு பழைய திரைப்படத்தில் எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்:

“அவனவன் நீராவியில கப்பல் விடுறான், ரயில் விடுறான். நீங்க இட்லி, புட்டு விடுறீங்களாடா? விடுங்கடா!!!!!!”

யார்தான் என்னதான் கலாய்த்தாலும் இட்லி சாம்பாருக்கு இணை ஏதும் கிடையாது. சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்கள். அதன் அருமை தெரியும்.

தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இந்த இட்லி & சாம்பார்!

யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாததால் அதற்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை!

எங்கே சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் கெடுதி செய்யாத உணவு இந்த இட்லி சாம்பார்! வயிற்றிற்கு ஆதரவான உணவு. வயது முதிந்தோர்க்கும், நோயில் படுத்திருப்போர்க்கும் அதன் அருமை சற்றுக் கூடுதலாகத் தெரியும்!

சரி, வாரணாசியில் இட்லி சாம்பாருக்கு என்ன செய்வது?

அதைச் சொல்லத்தான் இன்றையப் பதிவு. தொடர்ந்து படியுங்கள்
--------------------------------------------------------------------------------------------------
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater  உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரணசியில் மட்டும்தான் இந்த வசதி உள்ளதா?

இல்லை. அலகாபாத், அயோத்தியா, கயா, நாசிக் ஆகிய 4 ஸ்தலங்களிலும் இந்த வசதி உள்ளது. அது பற்றிப் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்

தமிழ் நாட்டில்?

திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் போன்று சுமார் 20 ஸ்தலங்களில் இந்தத் தங்கும் வசதி உள்ளது. அது பற்றியும் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடுதியைப் பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டு வந்தேன். மொத்தம் 100 படங்கள். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பற்றி இன்னும் செய்திகள் உள்ளன. அவற்றை நாளை தருகிறேன். நாளையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறும்!

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விடுதியின் முபுறத் தோற்றம்
அறிவிப்புப் பலகை!

நுழை வாயிலில் ஒரு பக்கம் படிக்கட்டு, ஒருப்க்கம் லிஃப்ட்,  
                                        இரவு பகலாக டூட்டியில் இரண்டு காவல்காரர்கள்
3 தளங்களுக்கும் போய்வருவதற்கான லிஃப்ட்

நுழைவாயிலில் உள்ள நீண்ட நடை பாதை
                          உங்கள் செருப்புக்களைப் பாதுகாக்க உள்ள ஸ்டாண்டுகள்


நடை பாதையின் உட்புறத்தோற்றம்

முகப்புப் பகுதியில் உள்ள நிலைக் கதவு
விடுதியின் உட்புறம் உள்ள ஈஸ்வரன் கோவில்
 விடுதிக்கோவிலின் உட்புறம்

 விடுதிக்கோவிலின் உட்புறம்
 விடுதிக்கோவிலின் உட்புறம் - படம் 2
உள்ளே விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், முருகர்
ஆகியோருக்குக் கருவறை உள்ளது. அவற்றைப் படம் எடுக்கவில்லை
இதுபோன்று தங்கும் மண்டபங்கள் பல உள்ளன.
முதல் தளத்தின் முகப்புப் பகுதியில் இருந்து  வெள்யே தெரியும் தெருவின் தோற்றம்
ஆயிரம் சதுர அடி வளாகத்தில் நிர்வாக அலுவலகம்
நிர்வாக அலுவலகத்தில் இருந்து உணவுக்கூடத்திற்குச் செல்லும் வழி
இரண்டாவது தளத்தில் உள்ள தங்கும் அறைகளில் ஒன்று


விடுதிக்குள் இருக்கும் கோவிலின் கோபுரத்தை வளைத்து விரிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது

வாரணாசியில் நிறைந்திருக்கும் குரங்குகள் விடுதிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி
முதல் தளத்தில் துவக்க காலத்தில் கட்டப்பெற்ற தங்கும் அறைகள் உள்ள பகுதி
இரண்டாவது தளத்தின் ஒரு பக்கக் காட்சி


இரண்டாவது தளத்தில் இருந்து மேல் பகுதிக்கான காட்சி
உள் மண்டபங்களுக்கான் நுழைவிடம்

நிர்வாக அலுவலத்திற்குச் செல்லும் படிக்க்ட்டுப் பாதை
அந்தத் தளத்தில் மற்றுமொரு கோணம்

அந்தக் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அறையின் தோற்றம்
நிர்வாக அலுவலகத்தில்  பணி செய்யும் அறுவரில் ஒருவர்

வருகைப் பதிவேட்டில் வாத்தியார் தன் கையெழுத்தை இடும் காட்சி
மண்டபங்களில் தங்கள் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள உதவும் லாக்கர்கள். சூட்கேஸ்களோடு அப்படியே உள்ளே வைக்கலாம்
லாக்கர்களின் அளவைப் பாருங்கள்


இன்னுமொரு தங்கும் மண்டபம்

அந்த மண்டபத்தில் உள்ள லாக்கர்களின் அணிவகுப்பு


ஒவ்வொரு காலகட்டத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் பொருட்செலவில் விடுதியை மேம்படுத்தியுள்ளார்கள். 2004 - 2007 ஆம் ஆண்டு இருந்த குழுவினர் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் செலவில் பணிகள் செய்துள்ளார்கள். அதைக் காட்டும் படம். இது போன்ற விவரங்கள் அங்கே காணக் கிடைக்கின்றன


காசி அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கிய பெரியவர்களின் படம் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளது. நிறைய உள்ளன.  இடது பக்கம் முதல் படம் தேவகோட்டை ஜமீன்தார் திரு. AL.AR. சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் படம். அவர் லால்பகதூர் சாஸ்திரியின் நண்பர். ராமேஷ்வரம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்

படத்தில் இருப்பவர் தேவகோட்டை திரு. AR.SM. சோமசுந்தரம் செட்டியார் (அவருடைய காலம் 1861 - 1923) கல்கத்தாவில் பெரிய அளவில் வணிகம் செய்தவர். ஹூக்ளி நதிக்கரையில் ஹெளரா பாலத்தின் அருகே உள்ள எர்சா தெருவில் இடம் வாங்கி, மிகப் பெரிய சத்திரம் ஒன்றைக் கட்டியவர். அதன் இன்றைய மதிப்பு நூறு கோடி ரூபாய். அதை காசி அறக்கட்டளைக்கு அன்றே தானமாகக் கொடுத்துவிட்டார். அவர் சத்திரம் சோவன்ன மானா என்று அனைவராலும் அறியப்பெற்றவர். இலங்கைப் பேராசான் அறுமுக நாவலரின் நண்பர்.

தங்கள் பெற்றோர்களின் பெயரில் ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள், காசியில் நிறையத் தர்மம் செய்துள்ளார்கள். சிலர் இதுபோன்ற தங்கும் அறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்கள். அப்படி ஒரு குடும்பத்தார் கட்டிக் கொடுத்த டீலக்ஸ் அறையின் தோற்றம். கதவிற்கு மேற்புறம் அதை அளித்த குடும்பத்தாரின் பெயர் உள்ளது!

விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளை செல்லும் போது உடன் செல்லும் பூஜைப் பாத்திரங்கள்

நாளொன்றுக்கு மூன்று வேளைகள். ஒரு வேளைக்கு 30 லிட்டர் பால் விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளையாகச் செல்கிறது. அதற்கான காட்சிப் படம்
காசித் தீர்த்தம் சிறு செம்புகளில் பல அளவுகளில் தாயாராகின்றது. அவைகள் உங்களுக்கு விடுதி வளாகத்திலேயே விலக்குக் கிடைக்கும்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உணவுக்கூடம்


உண்வுக்கூடத்தில் உங்களை வரவேற்கும் அன்னபூரணி


சாப்பிடும் கூடம் (Dining Hall)


சாப்பிடும் கூடம் (Dining Hall) இன்னும் ஒரு கோணத்தில்

சாப்பிடும் கூடம் (Dining Hall) மேலும் ஒரு கோணத்தில்






காய்கறிகள் நறுக்குவதற்கென்றே தனியாக ஒருவர் உள்ளார்

சமையல்காரர் திரு. வீராச்சாமி, வேந்தன்பட்டிக்காரர்

சமையல் அறையில் உள்ள சாதனங்கள்

சமையலறைக்குத் தேவையான எரிபொருள் தொகுப்பு



உணவு பறிமாறும் பணியாளர்கள் (உள்ளூர்க்காரர்கள்)




Man made Panana Leaf
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அருள்பழுத்த காசியிலே அகிலேசன்றன்
    அடிபரவ நகரத்தார் அமைத்த தர்மம்
இருள்நீக்கி ஒளிபரப்பும் இரவிபோல
    என்றென்றும் நீசில்பெற்று வளமிக்கோங்க
மருள்நீக்கி உலகையெல்லாம் காக்கும் அன்னை
    விசாலாட்சி விசுவேசன் மலர்ப் பதத்தை
பொருள்வழங்கித் தினம் மூன்று காலம் போற்றும்
    புண்ணியராம் தனவணிகர் பொலிந்து வாழ்க!

- என்ற பாடல் எக்காலத்தில் எழுதப்பெற்றதோ! இன்றும் காசியில் காட்சியளிக்கிறது. அதன் படத்தை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!